சுதந்திர இந்தியாவின் கொடி : எந்த நாடு முதலில் ஏற்றியது தெரியுமா? Australia was first to hoist Independent India's flag in the worldஎண்பதாவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஒட்டி ஒரு பள்ளியில் கொடி ஏற்றி உரையாற்றச் சென்றிருந்தேன். அங்கு இருந்தவர்கள் பெரும்பாலும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். அதாவது சுதந்திரம் கிடைத்து 65 வருடங்களுக்குப் பின் பிறந்த குழந்தைகள். அவர்களிடம் ஓரளவிற்கு மேல், ‘நம் நாடு எப்படி இருந்தது தெரியுமா? எப்படி எல்லாம் பாடுபட்டு சுதந்திரம் கிடைத்தது தெரியுமா?’ என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தால், மூன்று நிமிடங்களில் நெடிளிய ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாகக் கொஞ்சம் தலைவர்களைப் பற்றிப் பேசிவிட்டு, தனி மனித சுதந்திரம் என்று பேச்சைத் திருப்பினேன்.

அந்தப் பேச்சை ஒட்டி என் மனதிலும் பல சிந்தனைகள். நினைத்ததைச் செய்வது, கேட்பது கிடைப்பது, யாரும் எதையும் நிர்பந்தப்படுத்தாத வாழ்க்கை, இவை எல்லாமே இந்தக் காலக் குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கிறது. கஷ்டப்பட்டுப் போராடிப் பெற வேண்டும் என்கிற முறையில் இந்த காலக் குழந்தைகளின் வாழ்க்கை இல்லை என்பதுதான் உண்மை. வீட்டிலும் சரி, பள்ளி, வெளி உலகத்திலும் சரி, தங்களை யாரும் கண்ட்ரோல் செய்யக்கூடாது என்று தான் பிள்ளைகள் நினைக்கிறார்கள்.

இப்படியே வளர்வதால் அவர்களுக்கான ஒரு ஒழுங்குமுறை வாழ்ககை பாதிக்கப்படுகிறது. எழுந்திருப்பது, குளிப்பது, சாப்பிடுவது, படிப்பது, வேலைக்கு போவது, எல்லாமே என் விருப்பம், என் சுதந்திரம், என்றுதான் இருக்கிறது இன்றைய Gen Z வாழ்க்கை முறை.

இதற்கு நடுவில், தன் வீட்டுப் பெரியவர்களை முன் உதாரணமாகக் கொண்டு, ஒழுங்குமுறை வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் வெற்றியே அதை அடையாளம் காட்டிவிடும்

இப்போதெல்லாம் நிறைய இடங்களில் ஒரு வாரம், 18 நாட்கள், ஒரு மாதம் என்றெல்லாம் மன வளப் பயிற்சிகள் நடக்கின்றன. அங்கேயே போய்த் தங்க வேண்டும். பெரும்பாலும் இந்த இடங்கள் ஆற்றங்கரையில் அல்லது மலை வாசஸ்தலத்தில் அமைந்த ஆசிரமங்கள் போன்ற இயற்கை சூழலில் அமைந்திருக்கும். அந்த இடமும், அமைதியும், காற்றும், சூழலும் தான் முதல் பயிற்சி. பிறகு ஒரு நேர அட்டவணை உணவு அட்டவணை, யோகா பயிற்சிகள், ஆன்மீக பயிற்சிகள் என்று பலதும் இருக்கும். பெரும்பாலும் செல்போன் லேப்டாப் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி இருப்பதில்லை. இந்த சூழல், தினசரி ஒழுங்குமுறை, குவிந்த மனம் எல்லாம் சேர்ந்து அவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுத்து விடும். இளைஞர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் இது போன்ற பயிற்சிகள் நிறைய நடக்கின்றன. கட்டணமும் அதிகம்.

இந்த மாதிரியான ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிப்பது அழுத்தம் இல்லாத வாழ்க்கையைக் கொடுக்கும் என்பதுதான் உண்மை. ஸ்டிரெஸ், மன அழுத்தம் என்பது எல்லோருமே சாதாரணமாக சொல்லக்கூடிய வார்த்தையாகப் போய்விட்டது.

நம் குடும்பத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். நம் பாட்டி தாத்தாவெல்லாம் சர்வ சாதாரணமாக எண்பது 90 வயதைக் கடந்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். வசதி குறைவு, பொறுப்புகள் அதிகம், போராட்டமான வாழ்க்கை, என்று இருந்தாலும் எப்படி அவர்கள் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக அத்தனை வருடம் வாழ்ந்திருக்கிறார்கள்? இதற்கு பதில் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

இப்படி இன்று பயிற்சி வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கப்படும் முறைகள்,அன்று அவர்கள் இயல்பான வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது. கோடு போட்டாற் போன்ற ஒழுங்குமுறை வாழ்க்கை, தினசரி காரியங்கள், உணவு, உடை, பழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, இதுதான் அவர்களின் ரகசியம்.

“எங்க அப்பா எல்லா இடத்துக்கும் நடந்துதான் போவார்.”“எங்க தாத்தா கடைசி வரைக்கும் சிரசாசனம் செய்வார்.”

“எங்க அத்தை 80 வயது வரைக்கும் குனிஞ்சு கோலம் போடுவாங்க.”

“எங்க பாட்டி கிராமத்துல 88 வயசுல சாகுற வரைக்கும் தானே தான் அடுப்புல சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.”

“எங்க மாமா எப்பவும் காலையில நீச்சத் தண்ணியும் வெங்காயமும் தான் சாப்பிடுவாங்க.”

“எங்க அம்மா வாரத்துக்கு மூணு நாள் விரதம் இருப்பாங்க. பண்டிகை பலகாரம் எல்லாம் தானே தான் செய்வாங்க.”

இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ கேட்டிருக்கிறோம். இதுதான் அவர்களுடைய ஒழுங்குமுறை வாழ்க்கை.

இப்படி ஒரு வாழ்க்கை வாழும் போது, பல நிர்பந்தங்கள் இருக்கும். கஷ்டங்கள், வலிகள் இருக்கும். ஓய்ந்து உட்கார முடியாது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டி இருக்கும். இவை எல்லாவற்றையும் பார்த்து, ‘அவர்கள் பாவம், அவர்களுக்கு சுதந்திரமே இல்லை, அடிமைகளாக வாழ்ந்தார்கள், கஷ்டப்பட்டார்கள்,’ என்று நாம் நினைத்து விட்டோம்.

அதனால்,’நாம் அப்படியெல்லாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்? என் வாழ்க்கை என் கையில். என் சுதந்திரம் என்னை யார் கேட்பது’ என்று இஷ்டத்திற்கு வாழ ஆரம்பிக்கும் போது, ஒழுங்குமுறை தவறிப் போகிறது. தட்டிக் கேட்க ஆளில்லாத கட்டவிழ்த்து விடப்பட்ட சுதந்திரம், சோம்பேறித்தனத்தை வளர்த்து விடுகிறது. மனிதர்கள் யாரும் தட்டிக் கேட்கக் கூடாது என்றால் தன்னைத்தானே தட்டி கேட்டு ஒழுங்குப்படுத்திக் கொள்ளக்கூடிய ‘சுய பலம்’ இருக்க வேண்டும். எதுவும் இல்லாத சுதந்திரம் ஆரம்பத்தில் இனிக்கிறது. பிறகு போகப் போக, கொஞ்சம் கொஞ்சமாக நேரக் கட்டுப்பாடு தவறுகிறது. உணவுப் பழக்கம் மாறுகிறது. வீட்டு வேலைகள் செய்வது குறைகிறது. அலுவலக வேலை பளுவும் சுமையும் அழுத்துகிறது. ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. உடல் மனம் இரண்டும் சோர்ந்து போகிறது. எங்கே வழி கிடைக்கும் என்று தேடி ஓட சொல்கிறது.

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட வேண்டும்” என்று வள்ளுவர் சொன்னது அடிப்படையில் ஒழுங்குமுறை கொண்ட வாழ்க்கையைத் தான்.

ஒரு காலத்தில் நாட்டுக்கு சுதந்திரம் தேவைப்பட்டது. அந்நியர்களிடமிருந்து விடுதலை வாங்கினோம். இன்று இருக்கும் அதீத சுதந்திரம் நம் வாழ்க்கையை ஒழுங்குமுறை தவறச் செய்கிறது. சுதந்திரத்தைக் கையாளும் மன பலம் பெறுவோம். நம் ஒழுங்கீனங்களில் இருந்து விடுதலை பெற்று கையில் இருக்கும் சுதந்திரத்தை கவனமாக கையாள்வோம்.