இறப்பென்பதுள்ளபோதே
இப்படியா? –மனிதன்
இறவாமை என்றானால்
எப்படியோ !
நிலையாமையை ஒரு தோளில்
சுமந்து கொண்டே
பொறாமையை தன் தலையில்
சுமக்கின்றான்
உறங்கிய பின் கண் விழிப்போ
உறுதியில்லை
நிரந்தரமாய் உலகாளத்
துடிக்கின்றான்
அறுபதாண்டும் அரிதாகும்
வாழ்வதிங்கே –அதில்
அங்கீகாரப் பசியோடு
அலைகின்றான்
அரை நூறு ஆண்டுகளே
வாழ்பவனும்
அவசரமாய் மனிதமுகம்
தொலைக்கின்றான்
தனக்கே தான் சொந்தமில்லை
என்றறியாமல்
அனைத்தையும் சொந்தமாக்க
நினைக்கின்றான்
தான் முடிந்து போகும்
பொருள் என்றுணராமல்
முதலீடுகள் செய்து செய்து
திணிக்கின்றான்
அவிழ்ந்து விடும் சதைச் சட்டை
அணிந்து கொண்டு
இனச் சண்டை மதச் சண்டை
செய்கின்றான்
அழுகிப்போகும் உடலுக்குள்
இருந்து கொண்டே
அகங்காரக் கொக்கரிப்பு
செய்கின்றான்
ஒடிந்துவிடும் எலும்புக்கூட்டில்
ஒளிந்து கொண்டு
தன்னையன்றி பிறரையே
வெல்லுகின்றான்
வந்துபோகும் இந்த கொஞ்ச
நாளுக்குள்ளே
வாழவந்த பூமியையும்
கொல்லுகின்றான்
இறப்பபென்பதுள்ளபோதே
இப்படியா? –மனிதன்
இறவாமை என்றானால்
எப்படியோ?

