உரைநடை: பசிப்பிணி போக்கிய பாவை ( நாடகம் ) - பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் | Prose: Pasipini pokiya pavai ( Nadagam ) - Term 3 Chapter 2 | 6th Tamil | in Tamil

சர்வதேச அளவில், தினமும் சுமார் 733 மில்லியன் மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடி வருவதாகக் கூறப்படுகிறது. அதில், சுமார் 2.8 பில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவு இல்லாத நிலையில் உள்ளனர்.

காங்கோ ஜனநாயக குடியரசு, மாலி, ஹைட்டி மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளின் மோதல் மற்றும் உள்நாட்டு சண்டைகள் உணவு நெருக்கடிகளை உருவாக்குகின்றன. சில ஆப்பிரிக்க நாடுகள் “அபாயகரமான” பட்டினி உடைய நாடுகள் வகையின் கீழ் உள்ளன. காசா மற்றும் சூடானின் போர்கள் காரணமாகவும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 13-14% பேர் போதிய ஊட்டச்சத்து இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் போதிய வளர்ச்சியின்றி உள்ளனர். மேலும், பெண்களிடையே இரத்த சோகை  பரவலாகக் காணப்படுகிறது.

பசி அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. கடுமையான நோய்களுடன் பல ஆண்டுகள் போராடும் நம்மால் சில மணி நேரம் பசியுடன் போராட முடியாது.உயிர்கள் கருவாய்ப் பதிந்த நாள் தொடங்கி, அவ்வுயிரினது உடம்பின் உள்ளே நிலைபெற்று  இருப்பது பசி ஆகும்.         உணவினை முதலாகக் கொண்டதே உயிர்கள் பெற்றுள்ள உடம்பாகும். இத்தகைய உணவினைப் பெற இயலாது மக்கள் பசியால் வருந்திய பொழுது அவர்களுக்கு வேண்டிய உணவினைக் கொடுத்தவர்கள், உயிரைக் கொடுத்தவராகவே மதித்துப் போற்றப் பெறுவர்.

பசி தீர்த்தல் ஓர் அறமே ஆகும் என்பதனை,

“அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.”

என்னும் திருக்குற்ள காட்டுகிறது.

 

பசியின் கொடுமைக் குறித்து கூற முனையும் மணிமேகலை,

 

“குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்,

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்,

நாண் அணி களையும், மாண் எழில் சிதைக்கும்,

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி”

என்கிறது.

 

பசிநோய் வந்தால் ஔவையார்.

 

“மானம் குலங் கல்வி வண்மை அறிவுடைமை,

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் – பத்தும்

பசிவந்திடப் போம் பறந்து.”  என்கிறார் தனது  நல்வழியில்.

அதியமான் நெடுமான் அஞ்சி  என்னும் வள்ளல், தான் உண்ணத் தொடங்கும் போது சிறிய அளவு சோறாக இருந்தாலும், மிக்க அளவு உடைய சோறாக இருந்தாலும், அதனை மிகப் பல கலங்களிலும் பகுத்து வழங்கிப் பலரோடும் உடனிருந்து உண்பான் எனவும், அவ்வாறு பகுத்து உண்ணுதலாகிய அறத்தினை உடைய அந்த வள்ளல் நம்மைவிட்டுப் பிரிந்தானே எனவும் செயலற்று இரங்கும் நிலையில்,

“சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே

பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே” – (புறநானூறு)

என ஒளவையார் வருந்திப் பாடியுள்ளார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சியில் சோழநாட்டில் உள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலைச் சோழ மன்னன் ஆகிய கிள்ளிவளவன் கேள்வியுற்றான். பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று அவனுடைய நல்லறச் செயல்களைப் பாராட்டி மகிழவேண்டுமென எண்ணினான்.

தானும் ஒரு பரிசிலன் போல் அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச் சென்றான்.பழுத்த மரத்தில் புறவைகள் கூடி ஒலித்தாற் போன்று பண்ணனது மனையில் பெருந்திரளாகக் கூடி உண்ணும் மக்களின்  ஆரவாரம் அவ்வூருக்கு நெடுந்தொலைவிலேயே கேட்டது. மழை பெய்யும் காலத்தை முன்னறிந்து தமது முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு செல்லும் சிறிய எறும்புகளின் வரிசை போன்று, பண்ணன் வீட்டில் பெரிய சுற்றத்தினருடன் கூடியுண்ட சிறு பிள்ளைகள் அடுத்த வேளைக்குப் பயன்படும்படி தங்கள் கைகளிலே சோற்றுத் திரளைக் கொண்டு செல்லும் அழகிய தோற்றத்தினைக் கிள்ளிவளவன் தன் கண்ணாரக் கண்டான். பண்ணன் இரவலர்பால் வைத்த அருளுடைமையை எண்ணி மனமுருகிய மன்னன், “நான் உயிர் வாழும் நாளையும் தனக்கு உரிமையாகப் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக”  எனப் பாராட்டி வாழ்த்திப்  பாடல் ஒன்றைப் பாடினான்.

தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் ஆபுத்திரனும், மாதவியின் மகள் மணிமேகலையும் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் பிச்சை எடுத்தாவது மக்களது பசிப்பிணியைப் போக்கிய செய்திகளைக் காணலாம்.

திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வழிபட்டு இருந்த காலத்தில் உண்டாகிய பஞ்சத்தால், உணவு இன்றி, உணவுப் பொருள்களும் இன்ளி, மக்கள் வருந்திய வருத்தத்தைத் தீர்க்க, மடங்களை அமைத்து, இறைவன் திருவருளால் நாள்தோறும் படிக்காசு பெற்று, நாள்தோறும் மக்களுடைய பசியை, பஞ்சம் தீரும் காலம் வரையில் செய்து வந்தார்கள்.

அருணகிரிநாதப் பெருமான் உண்ணுகின்ற சோற்றில் ஒருபிடியை பசித்து வந்தவர்க்கு இட்டு, அதன்பிறகு நீ உண்டு மகிழ். இது போதும். என்கின்றார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய வள்ளல்பெருமான்  மக்களது பசிப்பிணியினைப் போக்குவதற்கு என்றே, ’சத்திய தருமச் சாலை’யை நிறுவினார். ஏழை எளியவர்களின் பசிதீர உணவு அளிப்பதே இறைபணி என்ற சீரிய சிந்தனையை மக்கள் உள்ளத்திலே நன்கு நிலைபெறச் செய்து அருளினார் அவர்.

அருளின் திருவுருவாய்த் தோன்றிய வள்ளலார் பசியினால் இளைத்து, வீடுதோறும் சென்று பிச்சை எடுத்தும், பசிநோய் தணியப் பெறாது அயர்ந்தவர்களைக் கண்டு உள்ளம் வெதும்பினார். நாள்பட்ட நோயால் வருந்துவோரைக் கண்டு தமது உள்ளம் வருந்தி அவர்களுக்கு மருந்து அளித்துப் பிணிதீர்த்தார். உலகில் ஏழை மக்கள் பசியால் வருந்துகின்றார்கள் எனப் பிறர் சொல்லக் கேட்ட போதெல்லாம் உள்ளம் பகீர் எனத் துடித்தார்.

“வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம்

⁠வாடினேன்; பசியினால் இளைத்தே

வீடுதோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த

⁠வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்;

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

நேர் உறக் கண்டு உள்ளம் துடித்தேன்;

ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தம்மைக் கண்டே இளைத்தேன்” என்கிறது அவரது  திருவருட்பா.

“வயிற்றுக்குச் சோறு இட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்” என்றார் பாரதியார்.

இவை எல்லாம் பண்டைத் தமிழினம், அற்றார் அழிபசியைப் போக்குவதைத் தமது வாழ்வியலாகக் கொண்டு இருந்தது என்பதை விளக்கிக் காட்டுவன ஆகும்.பசியில்லாத பாரத்தைப் படைப்போம்.அதற்கு ஆதாரமான விவசாயத்தை இனியாவது ஆதரிப்போம்.