லோடி
தலைப்புச்செய்திகள்: சையது வம்சம் அழிந்தது. லோடி வம்சம், தில்லி சுல்தானகத்தை 1451 முதல் 1526 வரை ஆண்ட ஐந்தாவது ஆப்கானிய வம்சம். சையிது வம்சத்திற்குப் பிறகு பதவியேற்ற இவர்களை பக்லுல்கான் லோடி தோற்றுவித்தான். முக்கிய ஆட்சியாளர்கள்: பக்லுல்கான் லோடி (1451–1489); சிக்கந்தர் லோடி (1489–1517): இப்ராஹிம் லோடி (1517–1526). இவர்களுக்குப் பின், இந்தியாவில் முகலாயப் பேரரசு தொடங்கியது.
இனி விரிவான செய்திகள்:
பஹ்லூல் லோடி:
லோடி வம்சத்தைத் தோற்றுவித்தவன். இவனது வாழ்க்கை ஒரு சாதாரண வீரனாகத் தொடங்கி, ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக உயர்ந்த ஒரு விறுவிறுப்பான கதை. பஹ்லூல் லோடி, கி.பி 1411-ல் முல்தானில் பிறந்தான். இவனது பிறப்பு ஒரு அதிசயம் என்று கூறப்படுகிறது. இவனது தாய், அவள் தங்கியிருந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இறந்து போனாள். ஆனால், அவளது வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் இருப்பதை உணர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் பஹ்லூல் வெளியே எடுக்கப்பட்டான். சிறு வயதிலேயே தந்தையை இழந்த பஹ்லூலை, அவரது சித்தப்பா மாலிக் சுல்தான் ஷா லோடி வளர்த்தான். பஹ்லூல் இளைஞனாக இருந்தபோது, சமானாவில் இருந்த சயீத் அப்பான் என்ற துறவியைச் சந்திக்கச் சென்றான். அந்தத் துறவி, “யாராவது டெல்லி அரியணையை விலைக்கு வாங்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். அங்கிருந்தவர்கள் பஹ்லூலை கேலி செய்தாலும், பஹ்லூல் தன்னிடம் இருந்த 1,300 டங்காக்களைத் துறவியிடம் கொடுத்து அரியணையை “வாங்கினான்”. விளையும் பயிர் முளையிலே தெரிந்தது. இது அவனுக்குப் பெரிய லட்சியத்தைக் கொடுத்தது.
சித்தப்பாவின் மறைவிற்குப் பிறகு, பஹ்லூல் சிர்ஹிந்த் பகுதியின் தலைவனானான். அப்போது டெல்லியை ஆண்ட சையிது வம்ச மன்னர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அலாவுதீன் ஆலம் ஷா சுல்தானாக இருந்த போதிலும், டெல்லியின் அதிகாரத்தை ஹமித் கான் என்பவன் தன் கையில் வைத்திருந்தான். அவன், தனது எதிரிகளை வீழ்த்த பஹ்லூலின் உதவியை நாடி அவனை டெல்லிக்கு அழைத்தான். டெல்லியை ஆக்கிரமிக்க பஹ்லூல் ஒரு விசித்திரமான தந்திரத்தைக் கையாண்டான். அவன் தனது வீரர்களுடன் ஹமித் கானின் விருந்துக்குச் சென்றான். அங்கே அவரது ஆப்கானிய வீரர்கள் முட்டாள்களைப் போல நடித்தனர். சிலர் தங்கள் காலணிகளைத் தலையில் வைத்துக் கொண்டனர்; சிலர் தரை விரிப்புகளைத் தொப்பிகளாகத் தைக்கக் கேட்டனர். இதைப் பார்த்த ஹமித் கான், “இவர்கள் நாகரிகம் தெரியாத நாட்டுப்புறத்தினர், இவர்களால் நமக்கு ஆபத்து இல்லை” என்று நம்பி ஏமாந்தான்.
ஆனால், சமயம் பார்த்து, பஹ்லூல் ஹமித் கானைக் கைது செய்து, 1451 ஏப்ரல் 19 அன்று தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக் கொண்டான். சுல்தானாக அரியணை ஏறினாலும், பஹ்லூல் லோடி மிகவும் எளிமையானவராகவே இருந்தான். மற்ற மன்னர்களைப் போல உயரமான அரியணையில் அமரவில்லை. தனது பிரபுக்களைச் சகோதரர்களாகக் கருதி, அவர்களுடன் தரையிலேயே அமர்ந்து பேசுவான். எப்போதாவது ஒரு பிரபு கோபித்துக் கொண்டால், பஹ்லூல் அவனிடம் நேரில் சென்று, தனது வாளைக் கீழே வைத்து, “நான் தகுதியற்றவன் என்று கருதினால் வேறு ஒருவரை மன்னராகத் தேர்ந்தெடுங்கள்” என்று கூறி அவர்களைத் தனது அன்பால் கட்டுப்படுத்தினான். மத விஷயங்களில் தீவிரமாக இருந்தாலும், பிற மதத்தினரைத் துன்புறுத்தவில்லை. பஹ்லூல் லோடி 38 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, சிதறிக்கிடந்த சுல்தானகத்தை மீண்டும் வலிமைமிக்கதாக மாற்றினான். கி.பி. 1489-ல் மிளௌலி என்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு காலமானான். உடல் டெல்லியில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு அனாதைக் குழந்தையாகப் பிறந்து, தனது தந்திரத்தாலும் பண்பாலும் ஒரு வம்சத்தைத் தோற்றுவித்த பஹ்லூல் லோடியின் கதை இந்திய வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
சிகந்தர் லோடி:
லோடி வம்சத்தின் மிகவும் புகழ்பெற்ற சுல்தானாகக் கருதப்படுபவர் சிக்கந்தர் லோடி. பஹ்லூல் லோடியின் மரணத்திற்குப் பிறகு, 1489 முதல் 1517 வரை டெல்லி சுல்தானகத்தை ஆட்சி செய்தான். இவனது ஆட்சி அமைதி, செழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்குப் பெயர் பெற்றது. பஹ்லூல் லோடி 1489-ல் மரணமடைந்தபோது, அடுத்த சுல்தானைத் தேர்ந்தெடுப்பதில் பிரபுக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பஹ்லூலின் மகனான நிஜாம்கான், ஒரு இந்து பொற்கொல்லரின் மகளுக்குப் பிறந்தவன் என்பதால், சில பிரபுக்கள் அவரை எதிர்த்தனர். இருப்பினும், தனது தாயின் ராஜதந்திரம் மற்றும் சில முக்கிய பிரபுக்களின் ஆதரவுடன், ஜூலை 16, 1489 அன்று ‘சுல்தான் சிக்கந்தர் ஷா’ என்ற பட்டத்துடன் அவன் அரியணை ஏறினான்.
சிக்கந்தர் லோடி அரியணை ஏறியவுடன், சவாலாக இருந்த தனது உறவினர்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கினான். ஜான்பூரை ஆண்ட தனது சகோதரன் பார்பக் ஷாவைத் தோற்கடித்து, அந்தப் பகுதியைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். 1494-ல் ஜான்பூரின் முன்னாள் மன்னன் ஹுசைன் ஷா ஷர்கியைத் தோற்கடித்து, பீகாரைத் தனது பேரரசுடன் இணைத்தான். வங்காள சுல்தானுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தனது எல்லைகளைப் பாதுகாத்தான்.
சிக்கந்தரின் கீழ், லோடி பேரரசு வடக்கே இமயமலை முதல் தெற்கே மாளவம் மற்றும் ராஜபுதனம் வரையிலும், மேற்கே பஞ்சாப் முதல் கிழக்கே வங்காள எல்லை வரையிலும் விரிவடைந்தது. ராஜபுத்திர குறுநில மன்னர்களைக் கண்காணிக்கவும், தந்திரோபாய ரீதியாகச் செயல்படவும் யமுனை நதிக்கரையில், ஒரு புதிய நகரத்தை உருவாக்க சிக்கந்தர் விரும்பினான். இதற்காக ஒரு குழுவை அமைத்து, இடத்தைத் தேர்வு செய்த அவன், 1504-1506 காலகட்டத்தில் ஆக்ரா நகரை நிறுவினான். பின்னர், டெல்லியிலிருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றினான். சிக்கந்தர் லோடி, ஒரு சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தான். விவசாயத்தை மேம்படுத்த ‘சிக்கந்தரி கஸ்’ (Sikandari Gaz) என்ற நில அளவீட்டு முறையை அறிமுகப்படுத்தினான்.
வணிகப் பொருட்களின் விலையைக் குறைத்து, ஏழைகளும் பயன்பெறும் வகையில் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தினான். நீதி வழங்குவதில் அவன் மிகவும் கண்டிப்பானவராகவும் அறிவுக்கூர்மை மிக்கவராகவும் இருந்தான். ஒருமுறை வைரத் திருட்டு தொடர்பான வழக்கில், சாட்சிகளின் பொய்களைக் கண்டறிய மெழுகால் ஆன மாதிரிகளைச் செய்யச் சொல்லி உண்மையை வெளிக்கொண்டு வந்ததாக ஒரு கதை உண்டு. ஒரு திறமையான உளவுத்துறையை வைத்திருந்தான். இது பேரரசின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நடக்கும் நிகழ்வுகளை அவனுக்குத் தெரிவித்தது. கல்வியையும் கலைகளையும் போற்றினான். ‘குல்ருக்’ என்ற புனைப்பெயரில் பாரசீக மொழியில் கவிதைகள் எழுதினான். கல்வி நிலையங்கள் பல கட்டப்பட்டன, பல மருத்துவ மற்றும் அறிவியல் நூல்கள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இசையில் ஆர்வம் கொண்ட அவன், தோடி, கல்யாண் போன்ற ராகங்களை ரசித்துக் கேட்பான். சிக்கந்தர் லோடி ஒரு தீவிரமான முஸ்லிமாக இருந்தான். அவன் சில இந்து கோவில்களை இடித்ததாகவும், மத ரீதியான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. நிர்வாகத்தில் பல இந்துக்கள் உயர் பதவிகளில் இருந்தனர்.
சிக்கந்தர் லோடி 28 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக ஆட்சி புரிந்தான். 1517-ல் கடுமையான தொண்டை நோயால் பாதிக்கப்பட்டு, நவம்பர் 21 அவன் காலமானான். அவனது உடல் டெல்லியில் உள்ள லோடி பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
இப்ரஹிம் லோடி
லோடி வம்சத்தின் கடைசி சுல்தானான இப்ராஹிம் லோடி, தனது தந்தை சிக்கந்தர் லோடியின் மரணத்திற்குப் பிறகு நவம்பர் 22, 1517 அன்று ஆக்ராவில் அரியணை ஏறினான். அவனது ஆட்சியின் தொடக்கத்திலேயே, லோடி பிரபுக்கள் பேரரசை இப்ராஹிமுக்கும் அவரது சகோதரன் ஜலால்கானுக்கும் இடையில் பிரிக்கத் திட்டமிட்டனர். இதன்படி ஜலால்கான் ஜான்பூரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றான். ஆனால், கான்கான் லோஹானி போன்ற பிரபுக்கள் இந்த அதிகாரம் பிரிக்கப்படுவதை எதிர்த்ததால், இப்ராஹிம் தனது சகோதரரை ஆலோசனைக் கூட்டத்திற்காக மீண்டும் ஆக்ராவிற்கு அழைத்தான். ஜலால்கான் வர மறுத்ததால் இருவருக்கும் இடையே போர் மூண்டது. இறுதியில் ஜலால்கான் கல்பியில் இருந்து தப்பியோடி பின்னர் கொல்லப்பட்டான்.
இப்ராஹிம் லோடி மிகவும் கண்டிப்பானவன் மற்றும் “அரச பதவிக்கு உறவுமுறை கிடையாது” என்ற உறுதியான கொள்கையைக் கொண்டிருந்தான். தனது தந்தை மற்றும் தாத்தாவைப் போலல்லாமல், பிரபுக்களைத் தனக்குச் சமமாக நடத்தாமல் அவர்களைத் தனது ஊழியர்களாகவும் அடிமைகளாகவும் கருதினான். தனது அதிகாரத்தை நிலைநாட்ட, அவன் தனது சொந்த சகோதரர்களையே ஹன்சி கோட்டையில் சிறைவைத்தான்.
பிரபுக்களுடன் பழகும்போது மிகுந்த இறுக்கத்தைக் கடைப்பிடித்ததுடன், அவர்கள் அரசவையில் கைகட்டி நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். இந்த அணுகுமுறை சுதந்திர மனப்பான்மை கொண்ட ஆப்கானிய பிரபுக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவனது ஆட்சிக் காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி குவாலியர் கைப்பற்றப்பட்டதாகும். இவன் ஆசம் ஹுமாயூன் ஷெர்வானி தலைமையில் பெரும் படையை அனுப்பி குவாலியரின் வெளிக்கோட்டையான பாதல்பூரைக் கைப்பற்றினான். இருப்பினும், மேவாரின் ராணா சங்காவிற்கு எதிரான போர்களில் அவனுக்குப் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்த மியான் போவா மற்றும் ஆசம் ஹுமாயூன் ஷெர்வானி போன்ற மூத்த பிரபுக்களை அவன் சிறையில் அடைத்துக் கொன்றது பிரபுக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இப்ராஹிமின் கொடுங்கோன்மை மற்றும் பிரபுக்கள் மீதான நம்பிக்கையின்மை காரணமாகப் பேரரசின் பல பகுதிகளில் கலகங்கள் வெடித்தன. பீகாரின் தர்யா கான் நுஹானி மற்றும் ஜான்பூரின் பிற பிரபுக்கள் இவனுக்கு எதிராகத் திரும்பினர். குறிப்பாகப் பஞ்சாபின் ஆளுநரான தௌலத்கான் லோடி, இப்ராஹிமின் தண்டனைக்கு அஞ்சி, காபூலில் இருந்த பாபரை இந்தியாவுக்குப் படையெடுத்து வருமாறு அழைத்தான். பாபர் தனது நவீன பீரங்கிப் படைகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்தான்.
ஏப்ரல் 21, 1526 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பானிப்பட் போர் நடைபெற்றது.
இப்ராஹிம் லோடியிடம் சுமார் ஒரு லட்சம் வீரர்களும் ஆயிரம் யானைகளும் இருந்தன. பாபரின் படை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவனது பீரங்கிப் படைகள் மற்றும் ‘துலுக்மா’ எனப்படும் மின்னல் வேகத் தாக்குதல் முறையாலும் இப்ராஹிமின் படைகள் நிலைகுலையச் செய்யப்பட்டன. போர்க்களத்தில் தனது வீரர்களுடன் இப்ராஹிம் லோடி மிகவும் துணிச்சலாகப் போரிட்டான். அவன் பின்வாங்க மறுத்துத் தனது கடைசி மூச்சு வரை போர்க்களத்திலேயே தங்கிப் போராடினான். இறுதியில் அவன் கொல்லப்பட்டான். பாபர் அவனது உடலைக் கண்டெடுத்து, அவனது வீரத்தைப் பாராட்டி, அவன் விழுந்த இடத்திலேயே அவரை அடக்கம் செய்ய உத்தரவிட்டான்.
இப்ராஹிம் லோடியின் மரணத்துடன் டெல்லி சுல்தானகத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து, இந்தியாவில் முகலாயப் பேரரசு வேரூன்றியது.
சரித்திரம் தொடரும்..
