1. சங்க காலத்தில் வழிபாடு

 

சங்க இலக்கியத்தின் காலம் எது என வரையறை செய்ய இயலாது. இரண்டாயிரம் ஆண்டு என்பது மிகவும் சுருங்கிய தன்மையைக் காட்டும். அதற்கு முன்னர் எப்போது தோன்றியவை என்று கணித்திட இயலாத அளவிற்குப் பழமையான இலக்கியங்கள் அவை. அந்த இலக்கியங்களில் மக்களின் பழக்கவழக்கங்களை உள்ளது உள்ளபடி காட்சிப் படுத்தியுள்ளனர் சங்கப் புலவர்கள். அவற்றில் தெய்வம், கடவுள் முதலான சொற்கள் பல இடங்களில் வந்துள்ளன. கடவுள் தொடர்பாகச் சங்கப்பாடல்கள் தரும் கருத்துகளை எண்ணிப் பார்க்கும்போது நாம் வியப்பின் உச்சத்திற்குச் செல்கிறோம். 

கடவுள் என்னும் சொல், தமிழ் மொழியில் அனைத்தையும் கடந்து நம் உள்ளத்தின் உள்ளே உறைந்து இருப்பவன் என்னும் பொருளைத் தரும். இறைவன் என்னும் சொல், எல்லா இடங்களிலும் பரவி இருப்பவன் என்னும் பொருளைத் தரும். இறைத்தல் என்றால் பரப்புதல் என்று பொருள். இறைவன் என்பவன் எல்லா இடங்களிலும் பரவி நிறைந்து இருப்பவன் என்று உணர்ந்து கொள்ள முடியும். தெய்வம் என்னும் சொல்லானது உருவ வழிபாட்டுடன் தொடர்புடையது. முன்னோர் வழிபாடு, வீரர் வழிபாடு முதலானவை இந்தத் தெய்வ வழிபாட்டில் அடங்கும்.

கடவுள்

மலையில் வாழ்ந்த மக்களைக் குறவர் என்று சங்க இலக்கியம் தெரிவிக்கிறது. மலையையே கடவுளாகப் போற்றி வழிபட்ட பாடலில் கடவுள் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. மலையில் மழை தொடர்ந்து பெய்கிறது. அதிக மழை பெய்த காரணத்தால், ‘மழை போதும்’ என்று குறவர்கள் நினைத்தனர். பெய்யும் மழையை நிறுத்தும் ஆற்றல் தங்களுக்கு இல்லை என்று உணர்ந்த காரணத்தால் மேலே இருக்கும் கடவுளால் இந்த மழையை நிறுத்த முடியும் என்று நம்பினர். மழையும் மேலே இருந்து வருகிறது, கடவுளும் மேலே இருக்கிறார் என்ற நம்பிக்கையில் கடவுளுக்குப் படையல் இடுகிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவடைந்த வேளையில், மழை பெய்வதும் நிற்கிறது. அவர்களின் வேண்டுதலைக் கடவுள் நிறைவேற்றியதாக எண்ணிய அந்தக் குறவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

மலை வான் கொள்க என உயர்பலி தூஉய்

மாரி ஆன்று ‘மழை மேக்கு உயர்க’ எனக்

கடவுள் பேணிய குறவர் மாக்கள்

பெயல்கண் மாறிய உவகையர்… (புறம் 143)

தூஉய் – தூவி, மேக்கு – மேல் பகுதிக்கு, பெயல் – மழை

வையாவிக் கோப்பெரும் பேகனைக் கபிலர் பாடிய பாடலில் இந்தக் காட்சி அமைந்துள்ளது. இந்தக் காட்சியில் உருவ வழிபாடு காட்டப்படவில்லை. கடவுள் மேலே இருக்கிறார் என்னும் நம்பிக்கையில் அவர்கள் மலையில் படைத்து வழிபட்டுள்ளனர்.

‘மழை மேக்கு உயர்க’ என்னும் தொடரில், மழை கீழே பெய்யாமல் மேல் நோக்கிச் செல்லட்டும் என்று வேண்டியுள்ளனர். தண்ணீரின் இயல்பு மேலிருந்து கீழே வருவது. அந்த இயல்புக்கு மாறாக மேலே செல்லட்டும் என்று வேண்டுவதால், மேலே செல்லும் செயலைக் கடவுளால் செய்ய முடியும் என்று நம்பியிருக்கிறார்கள். இவ்வாறு தங்களால் இயலாத செயலை நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவன் கடவுள் என்னும் நம்பிக்கை மக்களுக்குத் தோன்றியுள்ளது.

கடவுள் மரம்

கடவுளுக்கு உருவம் உருவாக்கப்படாத அந்தக் காலத்தில், மரத்தில் கடவுள் உறைந்திருப்பதாக மக்கள் நம்பியிருக்கின்றனர். அதனால் அந்தக் கடவுளை மரத்தில் இருப்பதாகப் போற்றி வணங்கியிருக்கின்றனர். தற்காலத்தில் உள்ள பெரிய ஆலயங்களில் ‘தல மரம்’ என்னும் பெயரில் ஏதோ ஒரு மரம் இருக்கும். இது, பழங்காலத்தில் மரத்தில் கடவுள் உறைந்திருப்பதாகத் தோன்றிய நம்பிக்கையின் நீட்சி என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அந்த மரத்திற்கு அருகிலேயே கட்டுமானங்களை அமைத்து வழிபடத் தொடங்கினர். இத்தகைய கட்டுமானங்கள் வருவதற்கு அடிப்படையாக அமைந்தது உருவ வழிபாடு. உருவாக்கப்பட்ட உருவங்களைப் பாதுகாப்பதற்காக இந்தக் கோவில் கட்டுமானங்கள் தோன்றின. உருவம் இல்லாத வகையில் கடவுள், மரத்தில் இருக்கிறான் என்று நம்பிய காலம் வரையிலும் கோவில் கட்டுமானம் தேவைப்படவில்லை.

கடவுள் மரம் என்று போற்றப்பட்ட மரம், மிகவும் பழமையான மரமாக இருந்திருக்கிறது. அந்தப் பழமையான மரத்தை ‘முதுமரம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய

கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,

தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,

வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! (நற்றிணை 83)

தெண்கண் – இரவில் தெளிவான பார்வை கொண்ட கூகை, அசாஅம் – ஒலிக்கும்

ஊரார் தண்ணீர் அருந்தும் ஊருணி எங்கள் ஊரில் உள்ளது. அந்த ஊருணிக்கு அருகில் உள்ள பழைய மரத்தில் கடவுள் உறைந்திருக்கிறது. அந்த மரத்தின் மேல் ஒரு கூகை அமர்ந்திருக்கிறது. அது வளைந்த வாயையும் எல்லாப் பக்கமும் பார்க்கும் வசதிகொண்ட கண்ணையும் கூர்மையான நகத்தையும் கொண்டது. வாயால் பறை ஒலிப்பதைப் போல் அந்தக் கூகை குழறியது என்று குறிப்பிடும் நற்றிணைப் பாடலில், கடவுள் மரம் என்னும் குறிப்பும் அதற்கு வழிபாடு செய்த மரபும் காணப்படுகிறது.

ஊர்ப் பொது மன்றத்தில் நின்ற பெரிய அடிமரத்தைக் கொண்ட பனை மரத்தில் கடவுள் உறைந்திருப்பதாகவும் நம்பியுள்ளனர். ஆலம்பேரி சாத்தனார் பாடிய நற்றிணைப் பாடலில் (303) தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவியின் தவிப்பை இந்தப் பனைமரத்துடன் இணைத்துக் காட்டியுள்ளார். ஊர்ப் பொது மன்றத்தில் உள்ள மரா மரத்தில் (வெண்கடம்ப மரத்தில்) அச்சம் தரத்தக்க தெய்வம் உறைந்திருப்பதாகவும் நம்பியுள்ளனர் எனக் குறுந்தொகை (87) தெரிவிக்கிறது.

அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும்(309) கடவுள் மரம் பற்றிய குறிப்பு உள்ளது. பகைவர் நாட்டில், வில்லையும் வாளையும் பயன்படுத்தி அவர்களின் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்தனர். அந்த ஆநிரைகளைக் கவர்ந்து வந்தோர், அவற்றைப் பாலை நிலத்தின் வழியாக ஓட்டிக் கொண்டு வந்து, தெய்வம் இருக்கும் வேப்பமர நிழலில் நிறைத்தனர். கொழுத்த பசுவைப் பலி கொடுத்து, அதன் இரத்தத்தை வேப்ப மரத்தின் அடி மரத்தில் பூசி வழிபாடு நடத்தினர். அந்தப் பசுவின் இறைச்சியைச் சமைத்து அருகில் உள்ள பாறையில் அமர்ந்து உண்டனர்.

வேலன் வெறியாடல்

நற்றிணைப் பாடல் ஒன்றிலும் கடவுள் மரம் பற்றிய தகவல் கிடைக்கிறது. தலைவனை நினைத்து, தலைவி வருந்துகிறாள். இதனைக் கண்ட தாய், தனது மகளுக்கு ஏதோ நோய் வந்துள்ளது என்று வருந்தி, வேலனை அழைத்து வந்து முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்துகிறாள். அந்த வெறியாடலில் முருகனுக்குப் பல விதப் பூக்களைப் படைக்கிறாள்.

வெறியாடல் என்பது தற்காலத்தில் நிகழ்த்தப்படும் சாமியாட்டத்திற்கு இணையானது. முருகன் வந்து ஆடுவதாக நினைத்து மக்கள் வேலனை வணங்குகின்றனர். அந்த வேலன், வெறியாடும்போது தன் மகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றித் தெரிவிப்பான் என்னும் நம்பிக்கையில் இந்த வெறியாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. வெறி என்பதைத் தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பொருளுடன் உணர்ந்து கொள்ளாமல் தெய்வம் ஏறி ஆடுவது எனப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். தெய்வம், நம்மை விடவும் வலிமையானது என்னும் நம்பிக்கை தோன்றும் வகையில், இந்த வெறியாடலும் தீவிரமாக இருந்திருக்கிறது.

விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை

கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,

‘முருகு’ என வேலற் தரூஉம் (அகம். 232)

விரவு – பல பூக்கள் கலந்த, பலி – படையல், விரைஇ – மணம் கலந்து, கடி – காவல், வியல் – விரிந்த, கண்ணி – மாலை

கழைதின் யானையார் பாடிய இந்தப் பாடல், குறிஞ்சித் திணைப் பாடல் என்ற காரணத்தால் முருகனுக்கு வழிபாடு செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாகத் தொல்காப்பியம் தெரிவித்துள்ளது. பூம்பலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள காரணத்தால் உயிர்ப் பலி எதுவும் செய்யப்படாமல் பூவை மட்டுமே படைத்துள்ளனர் என உணர்ந்து கொள்ள முடியும். கடியுடை வியல் நகர் என்ற தொடரிலிருந்து இந்த வழிபாடு, பெரிய நகரத்தில் நிகழ்ந்துள்ளது என்றும் அந்நகரம், மன்னனின் காவலுக்கு உட்பட்டிருந்தது என்றும் அறிய முடிகிறது.

கடவுள் ஊருணி

கடவுள் மரம் இருந்த தன்மையைப் போல் கடவுள் ஊருணியும் சங்க காலத்தில் இருந்துள்ளது. நீர் நிலைகளை அந்தக் காலத்தில் பாதுகாக்கும் நோக்கத்துடன் நீர் நிலையைக் கடவுளாகப் போற்றியிருக்கிறார்கள். ஊருணி என்பது ஊரில் உள்ளோர் நீராகப் பயன்படுத்தும் குளத்தைக் குறிக்கும்.

தலைவனைப் பிரிந்திருந்த தலைவியின் மேனி, உள்ள மணிநிறம் மாறிப் பொன்னிறம் பெற்றது. இதனை நோய் என்று கருதிய தாய், கடவுள் வழிபாடு செய்கிறாள்.

நீர்த்துறையின் அருகில் நிலைபெற்றிருந்த கடவுளுக்கு மாலை சாற்றினாள். கள்ளைப் படைத்தாள். உயர்ந்த கொம்புகளைக் கொண்ட பெரிய கிடாவைப் பலிகொடுக்கிறாள். அப்போதும் தலைவியின் மேனியின் பொன்னிறம் மாறாததைக் கண்டு வருந்துகிறாள்.

கள்ளும் கண்ணியும் கையுறையாக

நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி

தணி மருங்கு அறியாள் (அகம். 156)

கோட்டு – கொம்புகள், நால் – தொங்கும், ஓச்சி – பலி கொடுத்து

ஆவூர் மூலங்கிழார் பாடியுள்ள இந்த அகநானூற்றுப் பாடலில் மண்ணால் உருவம் உருவாக்கி அதற்கு மாலை சூட்டியுள்ளனர். மேலும் கள்ளினையும் படைத்துள்ளனர். அதன் பிறகு பெரிய ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து பலிகொடுத்து, சமைத்துப் படைத்துள்ளனர். இந்தப் பாடலில் ‘நால் செவி’ என்பது ஆட்டுக்கடாவின் செவியானது தொங்கும் இயல்புகொண்டது என்பதைத் தெரிவிக்கிறது.

கடவுள் மலை

மலையையே கடவுளாக வழிபடும் தன்மையும் இருந்துள்ளது. கண்ணன் வரலாற்றில் கோவர்த்தன மலையை வணங்கச் செய்த கதையை இதனுடன் பொருத்திப் பார்த்தால் மலையை வணங்கும் பண்பு தெளிவாகும். பிற்காலத்தில் மலையில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டும் வணங்கியுள்ளனர். குறிஞ்சி என்னும் மலைநில மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான மலையைத் தெய்வமாக வழிபடும் தன்மையை நற்றிணைப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க எனக்

கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,

கிளையொடு மகிழும் குன்ற நாடன் (நற்றிணை 165)

அணங்கு – தெய்வம், வான் – மழை, வரை – மலை, பேண்மார் – பேணுவோர், வேட்டு – விரும்பி

என்னும் பாடலில் மலையைக் கடவுளாக வணங்கியதற்கு உரிய ஒரு காரணம் காட்டப்பட்டுள்ளது. காட்டுப் பசுவின் மீது கானவன் ஒருவன் அம்பு எய்தான். அந்த அம்பானது அந்தக் காட்டுப்பசுவின் மேனியில் பட்டு வழுக்கி ஓடிவிட்டது. அதனால் மலையுறை தெய்வம் கோபம் கொண்டது. அந்தக் கோபத்தைத் தணிப்பதற்காக மழை பெய்யட்டும் என்று வேண்டி, கடவுளுக்குப் படையலிட்டனர் என்று சொல்லும் இந்தப் பாடலில் கானவனின் அம்பானது குறிதப்பக் கூடாது, அவ்வாறு தப்புவது அவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் துன்பத்தைத் தரும் என்னும் எண்ணத்தால் மலையுறை தெய்வத்திற்கு வேண்டுதல் செய்துள்ளனர்.

ஐங்குறுநூற்றின் ‘குன்றக் குறவன் பத்து’ (259) என்னும் கபிலர் பாடிய பாடலிலும் மலையுறை கடவுளுக்கு வழிபாடு செய்த தன்மை காணப்படுகிறது.

நடுகல் வழிபாடு

நடுகல் என்பது உருவ வழிபாட்டின் தோற்றமாக அமைந்துள்ளது. போரில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு நடுகல் அமைத்து வழிபட்டுள்ளனர். இந்த வழிபாட்டின் தொடர்ச்சியாக அந்த வீரனின் பெயரையும் புகழையும் அந்தக் கல்லில் பொறிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் உருவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள நடுகல்லை நட்டுள்ளனர்.

ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை

நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;

விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் (புறம். 306)

ஒண்ணுதல் – ஒளி பொருந்திய நெற்றி, அரிவை – பெண், ஒடியாது – இடையில்லாமல், ஐ – தலைவன்

என்னும் அள்ளூர் நன்முல்லையார் பாடியுள்ள புறநானூற்றுப் பாடலில் தலைவி ஒருத்தி, போருக்குப் போயிருக்கும் தன் தலைவன் விரைவில் வெற்றியுடன் திரும்பி வரவேண்டும் என்று தங்கள் மூதாதையரின் நடுகல்லை வணங்கியுள்ளாள். இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள ஒடியாது என்னும் சொல்லானது இடைமுறிவு இல்லாமல் நாள்தோறும் வணங்கினாள் என்பதைக் குறிக்கிறது.

நடுகல்லூக்கு வழிபாடு செய்வதற்கு முன்பாக நீராட்டினர். அதன் பிறகு அதற்கு நெய் பூசிப் பள பளப்பாக்கினர். வீட்டில் வடித்த கள்ளினையும் வேறு படையல் பொருள்களையும் பகல் வேளையில் படைத்தனர். அவ்வாறு படைக்கும்போது வாசனைப் புகையையும் புகைத்துள்ளனர் என்று புறநானூறு (329ஆம் பாடல்) தெரிவித்துள்ளது. நடுகல்லுக்கு மயில் இறகைச் சூட்டி அலங்கரிக்கும் முறையும் துடி என்னும் உடுக்கை அடித்து வழிபடும் முறையும் தோப்பிக் கள்ளைப் படைத்தும் ஆட்டுக்கடாவைப் பலி கொடுத்தும் வழிபாடு செய்யும் முறையும் இருந்துள்ளது எனக் குடவாயில் கீரத்தனார், அகநானூற்றில் (35ஆம் பாடல்) பாடியுள்ளார்.

வீரன் ஒருவன் பகைவருடன் போரிட்டு அவர்களை வீழ்த்தினான். அந்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். ஆனால் அந்தப் போரில் அவன், தன் உயிரை இழந்தான். அந்த வீரனின் வீரத்தைத் தங்கள் வீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த வீரர்கள் அவனுக்கு வழி பிரியும் இடத்தில் நடுகல் நட்டனர். அந்த நடுகல்லில் அவனது பெயரையும் புகழையும் பொறித்தனர் என மலைபடுகடாம் (அடி 386-389) தெரிவிக்கிறது.

இல் உறை தெய்வம்

பெண்கள், தங்கள் வீட்டில் விளக்கேற்றும் வேளையில் தெய்வத்தை வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை நெடுநல் வாடை தெரிவிக்கிறது.

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து   

அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,

மல்லல் ஆவணம் மாலை அயர  (39-44)

மடவரல் – மடமையுடைய, பிடகை – பெட்டி, பித்திகம் – பிச்சிப்பூ,  மல்லல் – வளம், ஆவணம் – கடைத்தெரு

வாடைக்காலத்தில் பொழுதை அறிந்து கொள்ள இயலவில்லை. பூந்தட்டில் போடப்பட்டிருந்த பிச்சிப்பூக்கள் மலர்வதைக் கண்ட பெண்கள், அது மாலைக்காலம் எனப் புரிந்து கொண்டனர். உடனே இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரிபோட்டு விளக்கேற்றினர். அந்த விளக்கிற்கு அருகில் நெல்லையும் பூவையும் தூவி வழிபாடு நடத்தினர். விளக்கேற்றும் செயல் என்பது இருளைப் போக்குவதற்கு ஆனது. ஆனால் மாலை வேளையில் விளக்கேற்றுதல் என்னும் மரபு வழிப் பண்மைக் கொண்டவர்களாக இந்தப் பெண்கள் காட்டப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மரத்தில் உறைந்திருக்கும் கடவுள், நீர்நிலையில் உறைந்திருக்கும் கடவுள், மலையில் உறைந்திருக்கும் கடவுள் என்னும் உருவம் அற்ற கடவுளையும் நடுகல் என்னும் உருவ வழிபாட்டிற்கு முன்னோடியான கடவுளையும் வணங்கிய சங்க கால மக்கள் சிவன், திருமால், முருகன் வழிபாடும் நடத்தியுள்ளனர்.

சிவன்

சிவன் என்னும் பெயரில் சங்க காலத்தில் வழிபாடு நடைபெற்றதாக அறிய இயலவில்லை. ஆனால் ஆலமர் செல்வன் என்னும் பெயரில் வழிபாடு நடைபெற்றுள்ளது. ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் செல்வன் என்னும் பெயரானது தற்காலத்தில் உள்ள தட்சிணா மூர்த்தி வழிபாட்டைக் குறிக்கிறது. எல்லாச் சிவன் கோவில்களிலும் கருவறையை ஒட்டி அமைந்துள்ள விமானத்தின் தென் பகுதியில் கல்ஆல மரத்தின் கீழ், ஆசிரியர் நிலையில் தட்சிணாமூர்த்தி உருவம் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தட்சிணாமூர்த்திதான் ஆலமர் செல்வன் என்று போற்றப்பட்டுள்ளான்.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடலில், ஆலமர் கடவுளைப் போல் பெருஞ்செல்வம் கொண்டவன் நீ எனப் பாடியுள்ளார்.

ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் (புறம். 198)

என்னும் அடியில் ஆலமர் கடவுள் போல் அளவற்ற பொருள் வளம் கொண்டவன் என உணர்த்தப்பட்டுள்ளது. ஆலமர் கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி கல்வியை அளவில்லாமல் பெற்றவன். அதைப் போல் அளவற்ற செல்வத்தைப் பெற்றவன் நீ என்று போற்றியுள்ளார்.

திரிபுரத்தை எரிப்பதற்காகச் சிவன், மலையை வில்லாகவும் பாம்பினை வில்லுக்கு உரிய கயிறாகவும் ஆக்கி, ஒரே அம்பில் மூன்று கோட்டைகளையும் எரித்தான். அப்படிப்பட்ட பெரிய வெற்றி கொண்ட கறைமிடற்று அண்ணலின் நெற்றியில் விளங்கும் ஒரு கண்ணைப் போல் விளங்குபவன் நீ என்று இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனை மருதன் இளநாகனார் (புறம். 55) பாடியுள்ளார்.

பரணர் பாடிய அகநானூற்றுப் பாடலில் (181) சிவனை முக்கண் செல்வன் என்று பாடியுள்ளார். இந்த முக்கண் செல்வனாகிய சிவன், உலகம் முழுவதும் மணம் பரப்பும் புகழ் பெற்ற ஆலமுற்றம் என்னும் ஊரில் நிலைபெற்றுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆய் அண்டிரனுக்கு பாம்பு ஒன்று தன்னிடமிருந்த நீலநிலக் கலிங்கம் என்னும் விலை மதிப்பற்ற ஆடையை வழங்கியது. அந்த ஆடையை அவன் ஆலமர் செல்வனுக்கு வழங்கிவிட்டான் என்று சிறுபாணாற்றுப் படையில் (அடி 95-97) இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியுள்ளார்.

திருமுருகாற்றுப் படையில் முருகன் முழுமையாகப் போற்றப்பட்டுள்ளான். பழநி என்னும் ஆவினன் குடியில் முருகன் உலா வரும்போது அவனுக்கு முன்னராகச் சிவன் சென்ற தன்மையை நக்கீரர் (அடி 151-154) பாடியுள்ளார்.

திருமால்

திருமால் என்னும் பெயர் இடம்பெறாமல் அஞ்சன உருவன் என்னும் பெயரில் திருமாலைப் புறநானூறு குறிக்கிறது.

அவுணர் என்னும் அசுரர்க்கும் தேவர்க்கும் நடைபெற்ற போரில் பகல் வேளையும் இரவு வேளையும் மாறி மாறி வந்து இடையூறு செய்த காரணத்தால் சூரியனை மறைத்தார்கள் அவுணர்கள். அப்போது திருமால், இருள் நிறத்துடன் தோன்றி அந்தச் சூரியனை வெளிப்படுத்தினான்.

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,

சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,

இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்

அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு        (புறம். 174)

அணங்குடை – அச்சம் தரத்தக்க, கணம் – கூட்டம், சேண் – நெடுந்தொலைவு, பருவரல் – பெருந்துன்பம்

என்னும் புறநானூற்று அடிகளில் திருமால் போற்றப்பட்டுள்ளான்.

நீலமணி போன்ற நிறம் கொண்டவன் என்றும் கருடக் கொடி உடையவன் என்றும் வலிமை வாய்ந்தவன் என்றும் நக்கீரர் (புறம். 56) பாடியுள்ளார்.

திருமுருகாற்றுப்படையில் (அடி 148-151) திருமாலை, நஞ்சு கொண்ட நாகத்தின் வலிமையை இல்லாமல் செய்யும் பெரிய சிறகுகளைக் கொண்ட கருடனைக் கொடியில் கொண்டவன் என்றும் நக்கீரர்  பாடியுள்ளார்.

இராமன்

திருமால் பற்றிய குறிப்புடன் இராமன் பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு (புறம். 378)

கடுந்தெறல் – கடுமையாகப் போரிடும், புணர் – சேர்ந்த, வௌவிய – கவர்ந்த, ஞான்று – வேளை, சேர்மதர் – வழியிடை, அணி – அணிகலன்

என்னும் ஊன்பொதி பசுங்குடையார் இயற்றிய புறநானூற்றுப் பாடலில் இராமன், சீதை பற்றிய குறிப்புகளுடன் இராவணன், சீதையைக் கவர்ந்து கொண்டு சென்ற குறிப்பும் வந்துள்ளன.

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் என்னும் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடலில் வில் முனை என்னும் தனுஷ்கோடியில் இராமன், போர் பற்றிச் சிந்தித்த தன்மையைக் காட்டியுள்ளார்.

வென்வேல் கவுரியர் தொல்முது கோடி

முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த

பல் வீழ் ஆலம் போல

ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. (அகம். 70)

வென்வேல் – வெற்றிவேல், கவுரியர் – பாண்டியர், முதுகோடி – பழைய முனை, இரு பௌவம் – பெருங்கடல், மறை – இரகசியம், அவித்த – அடக்கிய, வீழ் – விழுது, ஆலம் – ஆலமரம், அழுங்கல் – குறைகூறும்

‘முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை’ என்பது பெருங்கடலின் ஓரத்தைக் குறிக்கிறது. கரை என்ற காரணத்தால் அலையின் முழக்கம் இருந்துள்ளது. இந்தக் கடற்கரையைக் கவுரியர் என்னும் பாண்டியர்க்கு உரியது என்றும் இந்தக் கடற்கரையில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து போர் முறையைப் பற்றி இராமன் சிந்தித்தான் என்றும் அறிய முடிகிறது. இந்த வேளையில் கடல் அலையோசையுடன் ஆலமரத்தில் உள்ள பறவைகள் ஒலியும் இணைந்து கேட்டதால், அவனது இரகசியப் பேச்சுக்கு இடையூறாக இருந்துள்ளது. அலையை அடக்க இயலாது. எனவே பறவைகளை அடக்கி அவற்றை அமைதியாக இருக்கச் செய்ததாக அறிந்து கொள்ள முடிகிறது.

முருகன்

இவை மட்டும் அல்லாமல் திருமுருகாற்றுப் படை முழுவதும் முருகனே போற்றப்படுகிறான். முருகன், சூரனைக் கடலில் சென்று வீழ்த்தியதைத் திருமுருகாற்றுப்படை எடுத்துரைக்கிறது.

பார்முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்குச்

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல். . . .(45 – 46)

பார் – உலகம், பனிக்கடல் – குளிர்ந்த கடல், சூர் – சூரர், முதல் – குடி

என்னும் அடிகளில் பழங்கடல் என்று திருச்செந்தூர்க் கடலை நக்கீரர் குறிப்பிட்டுப் பண்டைய தமிழ்நாட்டின் பழமையை உணர்த்தியுள்ளார். சூரன் என்பவன் அசுர குலத்தைச் சேர்ந்தவன். தேவர் குலத்தைச் சேர்ந்தோர்க்கும் அசுரர் குலத்தைச் சேர்ந்தோர்க்கும் தீராப் பகை இருந்திருக்கிறது. இந்தப் பகையில் தேவர்களின் பக்கம் நின்று, முருகன் போர் புரிந்துள்ளான். கடலில் உள்ள வீர மகேந்திரப்பட்டணம் என்னும் தீவில் கோட்டை அமைத்து வாழ்ந்த சூரனை வெற்றி கொள்வதற்காக அந்தக் கடலே கலங்கும் வகையில் பெரும்போர் புரிந்துள்ளான் என்று முருகனின் பெருமை பாராட்டப்பெற்றுள்ளது.

பரி பாடலில் செவ்வேள் என முருகனையும், திருமாலையும் கொற்றவையையும் புகழ்ந்து பாடியுள்ள பாடல்களைக் காணமுடிகிறது.   தொல்காப்பியத்தில் திணைக் கடவுள் வழிபாடும் கடவுள் வாழ்த்து என்னும் துறையும் மேலும் பலவும் சொல்லப்பட்டுள்ளது. சங்க காலத்தில் இயற்கை சார்ந்த வழிபாடும் அதே வேளையில் தற்காலக் கடவுளர் தொடர்பான வழிபாடுகளும் இருந்துள்ளன. நடுகல் வழிபாட்டு முறையும் மரத்திலும் நீர்நிலையிலும் மலையிலும் இறைவனை வழிபடும் முறையும் இருந்திருக்கின்றன. நடுகல் வழிபாட்டின் நீட்சியாக உருவ வழிபாட்டு முறை என்னும் சிலை வழிபாட்டு முறை தோன்றியுள்ளது. சிவன், திருமால், முருகன் ஆகியோர் வீரத்தின் அடையாளமாகப் போற்றி வழிபடப்பட்டுள்ளனர். கொற்றவை, பரசுராமன், பலராமன், நான்முகன், இந்திரன் முதலானோர் வழிபாடும் இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் காணப்படும் இராமன் பற்றிய குறிப்புகள், வால்மீகி இராமாயணத்தில் இல்லாதவை என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. கோவில் என்னும் கட்டுமானம், சங்க காலத்தில் உருவாக்கப்படவில்லை என்பதையும் உமை என்னும் பெண் தெய்வத்தின் பெயரை ஆலமர் செல்வனாகிய சிவனுடன் இணைத்துப் போற்றியுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.