ஓவிடின் உருமாற்றம்  – புத்தகம் 3

முந்தைய இரண்டு புத்தகங்களில் உலகத்தின் தோற்றம், மனித குலத்தின் அழிவு,  தெய்வங்களின் காதல் என்று பல உரு மாற்றங்களை சிறு கதை வடிவில்  பார்த்தோம்.  இந்த மூன்றாம் புத்தகத்தில் இன்னும் சில சுவாரஸ்யமான  உரு மாற்றங்களைப் பார்ப்போம். 

சகோதரியைத் தேடிச் சென்ற காட்மஸ் 

சென்ற புத்தகத்தில் ஃபீனீசிய நாட்டின் இளவரசி  ஐரோப்பாவை ஜூபிடர் காளை உருவத்தில் கடத்திச் சென்றதைப் பார்த்தோம்.   மகளைக் காணாமல் தவித்த மன்னன், தனது மகன் காட்மஸிடம் அவன் சகோதரியைக் கண்டுபிடித்து அழைத்து வர உத்தரவிட்டார்.

காட்மஸ் உலகம் முழுவதும் தேடினான். சகோதரி  ஐரோப்பாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது ஒரு அசரீரி கேட்டது. 

“ஐரோப்பாவைத் தேடுவதை விட்டுவிடு. காட்டில் நீ காணும் ஒரு பசுவைப் பின்தொடர். அது எங்கு நின்று ஓய்வெடுக்கிறதோ, அங்கே ஒரு நகரத்தை நிறுவு.”

காட்மஸ் அதன்படி செய்தான்.

ஒரு அழகிய பசு அவனுக்கு முன்னால் நடந்தது. நீண்ட தூரம் சென்ற பிறகு அது ஒரு பசுமையான இடத்தில் படுத்துக் கொண்டது.

” ஆஹா இதுதான் நமக்கான இடம்!” என்று காட்மஸ் மகிழ்ந்தான்.

ஆனால் புதிய நகரத்தை அமைப்பதற்கு முன் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது.

அந்த இடத்தில் காவல் இருந்த ஒரு பயங்கரமான நாகம்   காட்மஸின்  நண்பர்களைத் தாக்கிக் கொன்றது.

காட்மஸ் தனியாக அந்த நாகத்துடன் போரிட்டான். நீண்ட போருக்குப் பிறகு அவன் நாகத்தைக் கொன்றான்.

அப்போது அவனுக்கு   “நாகத்தின் பற்களைப் பிடுங்கி நிலத்தில் விதை.” என்ற அசரீரி மீண்டும்  கூறியது. 

காட்மஸ் அப்படியே செய்தான்.

அடுத்த கணமே மண்ணுக்குள் இருந்து ஆயுதம் ஏந்திய வீரர்கள் முளைத்தார்கள்!

அவர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகக் கருதி சண்டையிட ஆரம்பித்தார்கள்.

சில நொடிகளில் பலர் இறந்தனர்.

மீதமிருந்தவர்கள் மட்டும் காட்மஸிடம் வந்து, “நாங்கள் உனக்கு உதவுகிறோம்” என்றார்கள்.

அவர்களுடைய முயற்சியினால்தான்  தீப்ஸ் நகரம் உருவாயிற்று.


ஆக்டேயானின் துரதிர்ஷ்டம்

காட்மஸின் பேரன் ஆக்டேயான் ஒரு சிறந்த வேட்டைக்காரன்.

ஒருநாள் அவன் தனது நண்பர்களுடன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான்.

வேட்டையின் பரபரப்பில் நண்பர்களிடமிருந்து பிரிந்து தனியாகச் சென்றான். அப்போது எதிர்பாராத காட்சி அவன் கண்களில் பட்டது.

அருகிலிருந்த அருவியில்  வேட்டையாடும் தெய்வமான டயானா தனது தோழிகளுடன் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். 

தான குளிப்பதைப் பார்க்கும் மானிடனை  டயானாவும்  பார்த்துவிட்டாள்.

அவள் கோபத்தில், “நான் இங்கே குளிப்பதைப் பார்த்து ரசித்தாயா ? உன்னை என்ன செய்கிறேன் பார் !”  என்று கூறி அவள் கையில் இருந்த தண்ணீரை ஆக்டேயன் மீது தெளித்தாள்.

அடுத்த கணமே அவனுடைய உடல் மாறத் தொடங்கியது.

கைகள் கால்களாகின. முகத்தில் நீண்ட கொம்புகள் முளைத்தன.

அவன் ஒரு மானாக உரு மாறி விட்டான்.

ஆனால் அவனுடைய அறிவும் நினைவும் அப்படியே இருந்தன.

தன்னுடைய  சொந்த  வேட்டை நாய்களே  தன்னை நோக்கிப் பாய்ந்து வருவதைப் பார்த்தான்.

“நான்தான் உங்கள் எஜமான் ! என்னைக் கொல்லாதீர்கள்!” என்று சொல்ல முயன்றான்.

ஆனால் அவனால் பேச முடியவில்லை.

நாய்கள் அவனைத் துரத்தின. அவன் ஓடினான்.

கடைசியில் அவனுடைய சொந்த வேட்டை நாய்களே அவனைத் தாக்கிக் கொன்றன.


செமிலியின் பெருமை

இதற்கிடையில் ஜூபிடர் ஒரு அழகிய பெண்ணான செமிலியைக் காதலித்தார்.

செமிலி கர்ப்பமானாள்.

ஜூபிடரின் மனைவி ஜூனோவுக்கு இது பிடிக்கவில்லை.

அவள் ஒரு வயதான பெண்ணின் உருவத்தில் செமிலியிடம் சென்றாள்.

“உன் காதலன் உண்மையிலேயே ஜூபிடர்தானா?” என்ற சந்தேகத்தை விதைத்தாள்.

செமிலி தன் காதலனிடம் , “நீங்கள் உண்மையில் ஜூபிடர் என்றால், உங்கள் உண்மையான தெய்வீக உருவத்தில் ஒருமுறை எனக்குத் தோன்ற வேண்டும்.” என்று வேண்டிக்கொண்டாள். 

ஜூபிடர்   வேறு வழியின்றி தனது உண்மையான தெய்வீக உருவத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் அவருடைய உடலிலிருந்து புறப்பட்ட மின்னலின்  ஒளியை அவளால்   தாங்க முடியவில்லை.

செமிலி அந்தத் தீப்பொறியில் கருகி இறந்தாள்.

ஆனால் அவள் வயிற்றில் இருந்த குழந்தையை ஜூபிடர் காப்பாற்றினார்.

அந்தக் குழந்தைதான் பின்னாளில் மதுவுக்கும் மகிழ்ச்சிக்கும்  கடவுளாக விளங்கிய டயோனிசஸ்.

ஒரு காதலியின் மரணம், ஒரு தெய்வத்தின் பிறப்புக்கு வழிவகுத்தது.


நார்சிசஸ் – தன்னையே காதலித்தவன்

இப்போது மூன்றாம் புத்தகத்தின் மிக அழகான கதைக்கு வருவோம்.

நார்சிசஸ் என்ற இளைஞன். அழகில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை. அவனைப் பார்த்தவர்கள் அனைவரும் அவனைக் காதலித்தார்கள்.

ஆனால் அவனுக்கு யாரையும் பிடிக்கவில்லை.

அவனிடம் காதலைச் சொன்னவர்களை எல்லாம் அவன் அலட்சியப்படுத்தினான்.

அவர்களில் ஒருத்தி எக்கோ.

எக்கோவுக்கு ஒரு விசித்திரமான சாபம் இருந்தது. அவளால் தானாகப் பேச முடியாது. மற்றவர்கள் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளை மட்டுமே அவள் திரும்பச் சொல்ல முடியும்.

ஒருநாள் காட்டில் நார்சிசஸைக் கண்டாள்.

அவனைப் பார்த்தவுடன் காதலில் விழுந்தாள்.

அவள் தனது காதலை நார்சிசஸிடம்  தெரிவிக்க முயன்றாள். வழக்கம்போல அவனுடைய கடைசி  வார்த்தையைத்தான் சொல்லமுடிந்தது. 

 நார்சிசஸ் அவளை  முற்றிலும் நிராகரித்தான்.

அவள் துயரத்தில் வாடினாள்.

அவளுடைய உடல் மெலிந்து மறைந்தது.

இறுதியில் அவளுடைய குரல் மட்டும் மலைகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அதனால் இன்றும் மலைப்பகுதிகளில் நமது குரல் திரும்பக் கேட்கும்போது அதற்கு எக்கோ—எதிரொலி என்று பெயர்.


நார்சிசஸின் தண்டனை

எக்கோவின் துயரத்தைப் பார்த்த தெய்வங்கள் நார்சிசஸைத் தண்டிக்க முடிவு செய்தன.

ஒருநாள் அவன் ஒரு தெளிந்த நீரூற்றின் அருகே வந்தான்.

தண்ணீரில் தனது முகத்தைப் பார்த்தான்.

அந்த முகத்தின் அழகைக் கண்டு அவனே மயங்கிப் போனான்.

“இவ்வளவு அழகானவன் யார்?” என்று நினைத்தான்.

அது தன்னுடைய பிரதிபலிப்பு என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை.

அதை விட்டுப் பிரிய முடியவில்லை. அவன் தண்ணீரைத் தொட முயன்றால் அந்த உருவம் மறைந்துவிடும். அவன் அசையாமல் இருந்தால் அது மீண்டும் தோன்றும்.

நாட்கள் கடந்தன. அவன் சாப்பிடவில்லை. தண்ணீர் குடிக்கவில்லை. தன் பிரதிபலிப்பை விட்டு நகரவில்லை.

இறுதியில் அவன் அங்கேயே இறந்தான்.

அவன் உடல் மறைந்த இடத்தில் ஒரு அழகான மலர் மலர்ந்தது.

அதுதான் நார்சிசஸ் மலர்.

தன்னைத் தானே காதலித்தவன், இறுதியில் தன் பெயரையே ஒரு மலராக உலகை  விட்டுச் சென்றான்.

தான மிகவும் அழகு என்று நினைக்கும் மனிதரை , தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு மற்றவரை மதிக்காதவரை NARCISSIST என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அது இந்த நார்சிசஸிடமிருந்துதான் வந்தது.


முடிவாக…

மூன்றாம் புத்தகம் முழுவதும் மனிதர்களின் ஆசையும் அகந்தையும் அவர்களுடைய விதியை எப்படித் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

காட்மஸ் ஒரு நகரத்தை உருவாக்குகிறான்; ஆனால் அவனுடைய குடும்பம் பின்னாளில் பல சோகங்களைச் சந்திக்கிறது.

ஆக்டேயான் ஒரு தவறான காட்சியைப் பார்த்ததற்காக மானாக மாறி, தன் வேட்டை நாய்களாலேயே கொல்லப்படுகிறான்.

செமிலி தெய்வத்தின் உண்மையான உருவத்தைக் காண விரும்பி உயிரை இழக்கிறாள்.

எக்கோ காதலால் தன் குரலை இழக்கிறாள்.

நார்சிசஸ் பிறரை நேசிக்க மறுத்ததால், இறுதியில் தன்னையே காதலித்து அழிகிறான்.

இதுதான் ஓவிடின் மாய உலகம். மனிதர்கள் உருவம் மாறுகிறார்கள்; ஆனால் அவர்களை மாற்றுவது பெரும்பாலும் அவர்களுடைய சொந்த உணர்ச்சிகள்தான்.

அதனால்தான் மெட்டமார்போசிஸ் வெறும் பழைய ரோமானியப் புராணங்களின் தொகுப்பு அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், காதல், பொறாமை, அகந்தை, ஆசை, துயரம் போன்ற மனித உணர்ச்சிகள் இன்றும் மாறவில்லை என்பதை அது நமக்குக் காட்டுகிறது.