பாத்திர விளக்கம் -2  பாத்திரம் அறிந்து பணிபுரி

பாத்திரத் துணைகள். ( துணைப் பாத்திரம் அல்ல !) –தேய்ப்பான்கள்

நான் பாத்திரம் தேய்க்கத் துவங்கி எட்டாம் நாளன்று ( அஷ்டமத்தில..) சோப்பு. தேய்க்கற பிரஷ் ,(ஷாம்பு பாட்டில் போல ஒண்ணு இருந்ததே அது என்ன ஆச்சு ?) ஸ்க்ரப்பர், ஸ்பான்ஞ், போன்ற இத்யாதி சாமான்கள் கரைந்தும், குறைந்தும் போய்விட்டன. இது பற்றி மனைவியிடம் சென்று முறைத்தேன்…..சரி சரி..! முறையிட்டேன்..

“ என்னாது..? ஒரு மாசம் வர சோப்பையும் “ஸ்க்ரப்பரையும்” எட்டே நாள்ல தீத்துத்டீங்களா ? அப்படி என்னா தேச்சுப்புட்டீங்க..செம்பைத் தங்கமாவா ஆக்கிட்டீங்க…ஐய்யய்யே ! வேலைக்காரியே தேவல. அவ இருவது நாள் ஓட்டிடுவா..”

“ அட! ஆமாம் ! வேலைக்காரியே தேவல..அவளையே கூப்பிடேன்” என்றேன்.

கோவிட் வைரஸே கும்பிடு போட்டு ஓடிவிடும் அளவுக்கு அவள் கண்களில் கோபம் மூண்டது,

”இல்ல இல்ல..நானே கண்டின்யூ பண்றேன்.. அதான் இன்னும் லாக் டவுன் முடியலயே” என்று “வீக்”கான வாய்ஸில் சரணடைந்தேன்.

“ஆமாம் ..இதெல்லாம் தேவை என்றால் ஆன் லைன்ல ஆர்டர் பண்ணிக்கோங்க” என்று சொல்லிவிட்டுக் கிச்சனை விட்டு நீங்கி டிவி பக்கம் படர்ந்தாள்.

“ம்.. பண்ணலாம் ..ஆனா இதெல்லாம் நீதானே பண்ணனும்..”

“ என்ன நானா ? நீங்கதானே “வாஷிங்” பூரா பாத்துக்கறேன்னு ஒத்துக்கிட்டீங்க..அப்பறம் நான் எதுக்கு ? இது எல்லாம் ஒங்க டிபார்ட்மெண்ட்..புரிஞ்சுதா? நான்தான் இந்தப் பக்கமே எட்டிப் பாக்கலையே ! ( அது என்னமோ உண்மைதான் என மனதுக்குள் நினைத்தேன்)

“ஐயோ ! எனக்கு இதும் பேரு, ப்ராண்ட் நேம் எதுவுமே தெரியாதே ”

“தெரிஞ்சுக்குங்க” என்று ஒரே வார்த்தையில் பேச்சு வார்த்தையை முறித்துவிட்டு அவள் காணாமல் போய்விட்டாள்.

ஆகவே பா.க. நட்பூக்களே ! நாம் பாத்திரம் கழுவ ஒப்புக் கொண்டால், கழுவுவது ஒன்றுதான் வேலை என்று ஏமாறாதீர்கள். அப்படி இருந்தால் “வீடு” நம்மைக் கழுவி ஊத்திவிடும்.
எனவே “தேய்ப்பான்கள்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய காலமாக இருந்தால், சாம்பல், புளி, தேங்காய் நாருன்னு “ஈகோ ஃப்ரெண்ட்லி” விஷயங்கள் இருந்திருக்கு,

இப்போ அப்படி இல்லை. எந்த “டிபார்ட்மெண்டல்” ஸ்டோருக்குப் போனாலும் இந்தப் பொருட்களுக்கே தனி டிபார்ட்மெண்ட் இருக்கு. கையில போடற கிளவுஸ்லேந்து கடைசில போடற குப்பைத் தொட்டி வரை கலர் கலரா பல இருக்கு. வாஷிங் சோப்புல பல ப்ராண்ட்ஸ் ( எனக்குத் தெரியும் ஆனா இங்கே காசு வாங்காம விளம்பரம் பண்ணக் கூடாது).

இது தவிர லிக்விட் சோப்; இப்ப அதுக்குப் பேரு “டிஷ் வாஷ் கான்செண்ட்ரேட்” ( ஒரு காலத்தில ஜூஸுக்குத்தான் இப்படி எல்லாம் பேரு வச்சாங்க..ம்..)
இன்னொரு பக்கம் “ஸ்க்ரப்பர்” வகையறாக்கள்.

சோப் வாங்கினா அப்படியே யூஸ் பண்ணக் கூடாது. ரெண்டா வெட்டிப் பாதி பாதியா யூஸ் பண்ணனும்; இல்லேன்னா மொத்த சோப்பும் ஒரே வாரத்துல கொழகொழத்துப் போயிடும்.

“கான்செண்ட்ரேட்” வாங்கினா கொஞ்சம் தண்ணி கலந்து யூஸ் பண்ணனும்; ஸ்க்ரப்பர் எப்படி ஆனாலும் ஒரு மாசம் ஓட்டியாகணும். இந்த “எகனாமிக்ஸ்” தெரியலைன்னா ஒருவாரத்துக்கு அப்பறம் விரலையும் நகத்தையும்தான் யூஸ் பண்ணனும் ஜாக்கிரதை !

ஆக பா.க. நட்பூக்களே பாத்திரம் கழுவுவது பெரிசில்ல; சரியான துணைக் கருவிகளோடு தொடர்பில் இருக்கவேண்டும். பழைய டூத் ப்ரஷ், தகர ப்ளேட், கத்தி, கோணி ஊசி போன்ற பொருட்களையும் பதுக்கி வைத்துக் கொண்டு சில “விடாப்பிடி” கறைகளையும், அழுக்குகளையும் நீக்கும் வழிமுறைகளுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

”தோழர் ! இதுல இவ்வளவா இருக்கு?

“தோழர் ! இதுல இன்னும் நெறைய இருக்கு. இது ஒரு மெகாத் தொடர் – படியுங்கள் –பாத்திரம் கழுவுங்கள்’
( டிஸ்கி: இது எனது சொந்த அனுபவம் என்று நினைப்பவர்கள் கண்ணாடி முன் நிற்பவர்கள்)
“பளிச்” குறிப்புகளுடன்)

பாத்திரமும் பக்குவமும்
பாத்திரங்களைக் கழுவுவதற்கு ஒரு தனி மனப்பாங்கு தேவை.

ஏதோ அழுக்கு, எச்சில் பாத்திரங்களைக் கழுவுகிறோம் என்ற கீழ்மையான எண்ணம் கூடாது. சுத்தம் செய்கிறோம் என்ற தூய்மையான எண்ணம் தேவை.

எல்லாப் பாத்திரங்களையும் ஒரே மாதிரி எண்ணக் கூடாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை. ஆம் ! மனிதர்களைப் போலத்தான்; அவரவர்க்கு ஏற்றபடி “டீல்” செய்ய வேண்டும். வெறும் தண்ணீர், ரசம் ( இரண்டும் சில வீடுகளில் ஒன்றுதான் !) வைத்த பாத்திரங்களை வறட் வறட் என்று தேத்துக் கொண்டிருக்கக் கூடாது..அதாவது தேவையில்லை.

சோறு சமைத்த பாத்திரம், குக்கர் ஆகியவைகளுக்குத் தனிக் கவனம் தேவை. எல்லாம் வாஷ் செய்து வைத்த பிறகு மனைவி ஒரு பருக்கை ஒட்டிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுவாள் ( திரௌபதிக்கு கிருஷ்ணன் உதவிய பாரதக் கதை நினைவு வந்தால் உங்களுக்கு நீங்களே மதிப்பெண் கொடுத்துக் கொள்ளுங்கள்.
பால் பாத்திரங்கள் அடிபிடித்திருக்கும். தேய்ப்பான்களில் இரண்டு வகைகளைக் கொண்டு கொஞ்சம் போராட வேண்டும். சரியாகத் தேய்க்கவில்லை என்றால் மறுநாள் பால் திரிந்து காப்பிக்கு தடை உத்தரவு வந்துவிடும்.

எண்ணெய்ப் பாத்திரங்களைத் தேய்ப்பது ஒரு கலை. பெரிய கடாய்ப் பாத்திரங்களை வழுக்காமல் பிடித்துக் கொண்டு தேய்க்கவேண்டும். இவற்றைக் கடைசியாகத் தேய்ப்பது அறிவாளிகள் செய்வது. செங்கல் , சாம்பல்பொடி, புளி என்று பலதரப்பட்ட பலசரக்குகள் இதற்கு துணைநிற்கும் ( மூக்குப் பொடி தவிர எல்லாப் பொடிகளையும் பயன்படுத்தலாம்)

இவைதவிர “ஸ்பெஷல் அட்டென்ஷன்” கொடுக்க வேண்டிய பல பாத்திரங்கள் உண்டு. காபி ஃபில்டர், மிக்ஸியின் ஜார், ஆப்பக்கூடு, மைக்ரோ ஓவன் பாத்திரங்கள், போர்ஸலீன் கப்புகள் என்று தனிக் கவனம் கொடுத்து அலம்பி வைக்க வேண்டியவை உண்டு. இவற்றில் ஏதாவது உடைந்தோ, உருமாறியோ போனால், ஒரு வருட நற்சான்றிதழும் உடனே பறிக்கப்படும்.

இவ்வளவு கடினமான வேலையா எனக் கலங்காதீர்கள். அதுதான் முதலிலேயே சொன்னேனே; ஹாவ் அ ரைட் ஆட்டிட்யூட்.. மனப்பாங்கு அது முக்கியம். ஒவ்வொரு பாத்திரத்தையும் சொந்தக் குழந்தை போல் எண்ணிக் குளிப்பாட்டுங்கள்..சாரி ! தேய்த்து வையுங்கள்.
மொத்தத்தில் பாத்திரம் தேய்ப்பதிலும் ஒரு பக்குவம் தேவை. சமையல் செய்வது போல…..
கை நிறைய வேலையுடன்

(தொடரும்)