கண்ணதாசன் அவர்கள் கவிதைகளைப் படிக்க படிக்க புதிய ஊற்றுக் கிளம்புவதுபோல் மகிழ்ச்சியும் ,புத்துணர்ச்சியும் பொங்கி வரும். கம்பரின் சில பாடல் வரிகள் அவரை ஈர்த்து, அப்படியே தன் பாணியில் உள் வாங்கி நமக்கு விளங்கும்படி அளித்தார்.சில கவிஞர்களின் பாடல்களின் பொருள் ஈர்த்ததால் அந்த பாடல்களின் பொருள்களை தன்னுடய பாடல்களின் புகுத்தினார்.அவர் சங்க இலக்கியங்களையும் கையாண்டு உள்ளார்.
சேக்கிழார் எழுதிய பெரிய புரணத்தில் இடம் பெற்ற 63 நாயன்மார்களில் ஒரு சிவ தொண்டரின் பாடல் வரிகள்
அவரை எப்படி ஈர்த்தது என்று பார்ப்போமா.!
கடலுரில் குயவர் குடியில் பிறந்த ஒருவர் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தானிடம்
மிகுந்த பக்திக் கொண்டு ,சிவனடியார்களுக்கு மண்ணில் ஆன திரு ஓடுகள் செய்து வாழ்ந்து வந்தார்.
ஆலகால விடத்தைப் பருகிய அந்த ஈசனின் பெயரான ‘ நீலகண்டத்தை’ எப்பொழுதும் உச்சரித்து வந்ததால் எல்லோரும் அவரை’ திரு நீலகண்டர்’ என்றே அழைத்து வந்தனர்.
இறைவனின் அருளால் நல்ல மனைவியைப் பெற்ற அவர் ,அவருடன் சேர்ந்து சிவ தொண்டு
செய்து வரும்பொழுது ஒரு நாள் பரத்தையின் வீடு சென்று வர, அவர் மனைவி, மனைவிக்குரிய
தொண்டுகள் சரிவர செய்து வந்தாலும் ,அவரை விட்டு சிறிது ஒதுங்கியே இருந்தாள். ஒரு நாள் ,மனைவியுடன் ஏற்பட்ட ஊடலை தவிர்க்க ,அழகிய ஆபரணங்கள் அணிந்தவளும் ,மென்மையானவளுமான தன் மனைவியை , அவளுடைய கோபத்தை தணிக்கும் பொருட்டு இதமாக பேசி ,பணிவான வார்த்தைகளைக் கூறி அவளை அணைக்க முற்படும் பொழுதில்,
‘ மூண்ட அப்புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இறமென் சமயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இறைந்து கூறி மெய்யுற அடையும் போதில்
தீண்டுவர் ஆயிற்று எம்மை திரு நீலகண்டம் என்றார்’.
‘ நீர் கூறும் நீலகண்டத்தின் மீது ஆணை ,எம்மை ‘ நீர் தீண்டுவீராயின் என பன்மையில் மற்ற எந்த ஒரு மாதரையும் தீண்டலாகாது என்ற பொருள் பட கூறினார்.
‘ எம்மை தொடாதே’ என்ற ஒரு வார்த்தை நம் கவி தாசனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர,
‘ சவாலே சமாளி ‘என்ற படத்தில் கணவன் ,மனைவி ஊடலில் மனைவி ‘ என்னைத் தொடாதே’ என்று கூறும் ஒரு சூழலில் இந்தக் கருத்தை தன் பாடலில் இப்படி துவங்குகிறார்,
‘ நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத்தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே’
என்று துவங்கி சரணத்தில்,
‘புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது’..
என்று முடிக்கிறார்.
இதில் இரண்டு பொருள் பட எழுதி உள்ளார்.
ஒன்று, ‘நீ சொல்லிய வார்த்தை ஒன்றும் புதிது அல்லவே,அன்றே திரு நீலகண்டரின் மனைவி சொல்லி விட்டார்.ஆகையால் இது இரவல் வாங்கிய சொல்லே! சொந்தமாக் சொன்ன
வார்த்தை இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார்.
இன்னொன்று ‘ நீ மட்டும் இரவல் வாங்கவில்லை ,நானும்தான் அவரது பாட்டால் ஈர்க்க பட்டு
என்னுடைய பாட்டில் தகுந்த இடத்தில் சேர்த்து எழுதி விட்டேன். நானும் இரவல் தான் .நான் ,நீ இருவருமே இரந்தவர்கள்தான் என்று பொருள் கொள்ளலாம்.சொன்ன வார்த்தை ,எழுதிய வார்த்தை இரண்டுமே இரவல் தான் என்று தன்னுடய நேர்மையை வெளிப் படுத்துகிறார்.அதுதான் கண்ணதாசன்.
இப்பொழுது ,மனைவியின் ஆணைக்கு திரு நீலகண்டரின் பதில் என்னவென்று பார்ப்போமா!
‘ ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன் என்றார்’.
நீலகண்டதின் மீது தான் கொண்ட ஆழ்ந்த பக்தியாலும் ,மனிவியார் நீலகண்டதின் மீது ஆணை என்று சொன்னதாலும் ,எம்மை ( எம்மை = பன்மை .எல்லா மாதர்களுக்கும் என்று பொருத்தி பார்க்க வேண்டும்) என்றும் சொன்னதால் ,இனி ஒரு மாதரை மனதினும் தீண்டேன் என்று பதிலுக்கு உரைத்தார். ஏன் மனது?
மனதுதான் ,எந்தவித குற்றத்திற்கும் முதல் காரணி.மனது ஏற்றுக் கொண்டதைதான் உடல் செயல் படுத்துகிறது. உடல் ஒரு கருவி தான்.
அதைதான் வள்ளுவர்,
‘ மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்திறன்
ஆகுல நீற பிற ‘ என்கிறார்.
நீலகண்டர் வாழ்க்கை வரலாறு கண்ணதாசன் மனதில் எவ்வள்வு ஆழமாக பதிந்து இருந்தால்
தன்னுடய மற்றொரு பாட்டில்,வசந்த மாளிகை என்ற திரைப் படத்தில் ,
‘மயக்கமென்ன கலக்கமென்ன மணி மாளிகைதான் கண்ணே!
என்று துவங்கிய பாடல் சரணத்தில்
‘ உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தாலும் தொட மாட்டேன்
உன் உருவம் அது இருப்பது என்னிடமே உயிர் போனாலும் தரமாட்டேன்’.
அதே பொருள் தான் .மனதாலும் வேறு ஒரு பெண்ணைத் தீண்டேன் .எப்படி தீண்ட முடியும்? அதுதான் என் மனது; அதில் மாசு மறுவில்லாத நீ ; என் மனதில் நீ உள்ள வரை என் மனது என்னைத் தீங்கு செய்ய விடாது.
ஏனெனில் மனதிர்க்கண் மாசிலன் ‘ மாசு இல்லாத மனது தவறு செய்ய விடாது .என்ற
பொருள் பட இரண்டு நீலகண்டரின் பாட்டையும் தன்னுடைய பாட்டில் தனிதனியாக இரு வேறு சூழ் நிலையில் சேர்த்து எல்லோருக்கும் புரியும்படி அழகாக எழுதி உள்ளார்.
நன்றாக சிந்தித்து பார்த்தால் ஆதி கால புலவர்கள் தொட்டு இக்கால கவிஞர்கள் வரை எல்லோரும் கூறும் வாழ்க்கைத் தத்துவமும்,நெறி முறைகளும் ஒன்றேதான்.
கண்ணதாசன் அவர்கள் எளியவர்க்கு புரியும்படி கூறியுள்ளார்.
கண்ணதாசனின் தத்துவார்த்தமான பாடல்கள் மிகவும் சுகமனவை.
அடுத்து கண்ணதாசனை யார் ஈர்த்தார்! பார்ப்போமா !.