குருர் தேவோ மஹேஸ்வரஹ:
வாழ்க்கை எனும் ஓடம் நன்றாக ஒழுங்காக ஓட நமக்குக் கல்விகற்றுக் கொடுப்பவர்களில் இன்றியமையாதவர்கள் குரு எனப்படும் ஆசிரியர்கள். நம் அனைவர் வாழ்க்கையிலும் குருவின் இடம் முக்கிய பங்கு வகிக்கும். இன்றும் கூட யாராவது தாம் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேறினோம் எனக் கூறவரும்போது பெரும்பாலானவர்கள், வாழ்வில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தமது ஆசிரியர்களைப் பற்றிக் கூறுவதனைக் காண்கிறோம். எனக்குமே அப்படிப்பட்ட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் சொல்லிக்கொடுத்தவைகள் ஏராளம். இன்றும் அவர்களை நான் நன்றியோடு நினைத்துக்கொண்டு கைகூப்பி அவர்கள் திருவடிகளை வணங்குகிறேன்.
செப்டெம்பர் 1ம் தேதி ஆசிரியர்கள் தினம். அது நமது முந்தைய குடியரசுத்தலைவர் திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். அவர் ஒரு ஆசிரியர் ஆதலால், அந்த நாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றோம். இந்நாளில் சின்னஞ்சிறுவர்களாக இருந்தால் ஆசிரியைகளுக்கு ரோஜா மலர்களும் சாக்லேட்டுகளும் கொடுப்போம். ஆசிரியர்களுக்கு வாழ்த்து அட்டைகள்!
இப்போது இவ்வளவு வயதானபின்பு அவர்களை அவ்வப்போது நினைவுகூர்வதே பெரிய ஆசியாக, நெகிழ்ச்சியாக உள்ளது எனலாம்.
ஆறு வயதில் எனக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுத்த விசாலாக்ஷி டீச்சரும், சாரதா டீச்சரும் கல்விக்கென பலமான அஸ்திவாரத்தைக் அமைத்தார்கள். கணக்கில் கூட்டல் கழித்தலுக்கு அருமையான வழிகளைச் சொல்லிக் கொடுத்தார்கள். கலைமகள் கல்வி நிலையம் ஈரோடில் நான் படித்தபோது 4, 5 வகுப்புகளின் தமிழாசிரியைகள் – தமிழை அதன் சுவையைக் கூட்டி வழங்கினார்கள். பள்ளிக்கூடம் போவதே உற்சாகமான ஒரு செயலாக இருந்தது.
எட்டாம் வகுப்பில் செல்வரங்கராசு எனும் (தமிழ்)வாத்தியார், அருமையாகத் தமிழ்ப்பாடம் எடுப்பார். சில காரணங்களுக்காக நான் பள்ளிக்கூடம் மாறி வேறொன்றில் சேர்ந்தபோது எனது ஆட்டோகிராஃப் புத்தகத்தில் ‘உள்ளத்தனையது உயர்வு!’ என்றெழுதிக் கையெழுத்திட்டுத் தந்தார். இன்றளவும் பலவற்றை சாதிக்க அது எனக்குப் பெரிய உந்துதலாக இருந்து வருகிறது என்றால் மிகையேயில்லை.
11ம் வகுப்பில், எனது வகுப்பாசிரியர் சுந்தரம் வாத்தியார் என்மேல் வைத்திருந்த அசாத்திய நம்பிக்கையின் பிரதிபலிப்பாக பள்ளி முதல் மாணவியாகத் தேர்ச்சிபெற்றது அவரையே நெகிழவைத்து விட்டது. இன்றும் அவரை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
அந்தக் காலத்தில் பி. யூ. சி., பின்பு இளநிலைக் கல்வி கற்ற நாட்களில் எந்தப் படிப்பு படித்தாலும் ஆங்கிலம், தமிழ் இரண்டையுமே நன்கு கற்க வேண்டும். சில மாணவியர் அதிக மதிப்பெண்களுக்காக பிரெஞ்சு, அல்லது சம்ஸ்கிருதம் எடுத்துக் கொள்வார்கள். எது எப்படியோ தமிழாசிரியை திருமதி சந்திரா பார்த்தசாரதி அம்மையாரின் வகுப்பெனில் கொண்டாட்டம்தான், அத்தனை அருமையாக பாடங்களை நடத்திச் செல்வார். மாணவிகளிடம் மிகுந்த பரிவுடனும் அதே சமயம் ஒரு தாயின் கண்டிப்புடனும் அவர் பழகுவது உள்ளத்தை நெகிழவைத்த அனுபவம். கல்லூரியின் ஆண்டு தினத்திற்குக் கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டினையும் பாடக் கூறியிருந்தார். என்ன பாடல் எனத் தேர்ந்தெடுப்பதனை என்னிடமே விட்டுவிட்டார். அத்தனை நம்பிக்கை! முதன்மை விருந்தினர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள். கடவுள் வாழ்த்தாகத் திருக்குறள் முதல் அதிகாரத்தை ராகமாலிகையாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தாகக் ‘காதொளிரும் குண்டலமும்’ என்ற சுத்தானந்த பாரதியார் பாடலை சண்முகப்ரியா ராகத்திலும் பாடினேன். ஆசிரியையின் மிகுந்த மகிழ்ச்சியே எனக்குப் பெருமிதத்தை உண்டாக்கியது. பிற்பாடு ‘முதன்மை விருந்தினரும் அவற்றை மிகவும் ரசித்தார்; உனக்குத் தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்’ எனவும் அவர் வாயிலாகக் கேள்விப்பட்டேன். எப்பேர்ப்பட்ட நாட்கள் அவை. ஆசிரியை நம்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டோம் எனும் பெருமிதம்.
இன்றும் நான் தொடர்பில் இருப்பது எனது இளநிலை உயிரியல் ஆசிரியையான முனைவர் திருமதி மீரா பால் அவர்களுடன்தான். எத்தகைய அன்பு அது! பாடங்களைக் கற்பிப்பதுடன் அவர் நின்றுவிடவில்லை. எனது குடும்பத்தின் சுகதுக்கங்களை விசாரிப்பதிலும், தனதைப் பகிர்ந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் உடைய உயர்ந்த மனிதர் அவர்.
JIPMER-ல் முதுநிலைக் கல்வி ‘மைக்ரோபயாலஜி’ கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே கையெடுத்து வணங்கவேண்டிய தெய்வங்கள். பேராசிரியர் அகர்வால் இந்தியாவின் தலைசிறந்த ஆய்வாளர்களுள் ஒருவர். தனது ஆராய்ச்சியில் மாணவியான என்னையும் பங்கெடுக்க வைத்து, ஆராய்ச்சிக் கட்டுரையை தேசீய அளவிலான அறிவியல் சஞ்சிகையிலும் வெளியிட்டார். இது எல்லாம் அந்தக் காலத்தில் ஒரு பெரிய அரிய வாய்ப்பு! கல்வியிலும் ஆராய்ச்சியிலும் மாணவர்களான எங்களை உற்சாகத்தின் எல்லையில் நிறுத்திப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அவர்கள் அனைவரும்! பேராசிரியர் மாதவனும் அவ்வண்ணமே, தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி கற்பிப்பதில் அவருக்கிணை அவரே! இன்னும் பேராசிரியர் தாஸ்குப்தா, பேராசிரியர் பாட்டியா போன்றோர் எங்களுக்கு வாய்த்த வரப்பிரசாதம். இன்றும் ஒரு நிகழ்வை நினைத்தால் உள்ளம் சிலிர்க்கிறது.
காலரா ஆராய்ச்சி மையம் (CRC) எனும் நிறுவனம் கொல்கத்தாவில் செயல்பட்டு வந்தது. உலகளவில் ஆய்வுக்குப் பெயர் பெற்றது. நானும் என் கணவரும் கொல்கத்தாவில் வேறொரு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைபார்த்த நாட்களில் அந்த நிறுவனத்திற்கு எங்கள் பேராசிரியர் அகர்வால் அவர்கள் இயக்குனராக (Director) இருந்தார். அவ்வப்போது சென்று நாங்கள் அவரைச் சந்தித்து உரையாடி வருவது வழக்கம். நாங்கள் மேலும் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைத்ததும் அதனைக் கூறி, பேராசிரியரிடம் விடை பெற்றுக்கொள்ள அவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவர்கள் அனைவரும் ஒரு திருமண ரிசப்ஷனுக்குச் சென்றிருந்ததனால் சந்திக்க இயலவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டோம். அடுத்த தினம் நாங்கள் கிளம்ப வேண்டிய தினமாகும். வீட்டைக் காலிசெய்து விட்டோம். கட்டிவைத்த சாமான்களுடன் உட்கார்ந்திருந்த எங்களைச் சந்திக்க திடுதிப்பெனப் பேராசிரியர் தமது மனைவியுடன் எவரையெல்லாமோ விசாரித்துக்கொண்டு விரைந்து வந்துவிட்டார். எங்களுக்குக் கையும் காலும் ஓடவில்லை. அவரோ எளிமையாக, எங்களைச் சந்தித்து வாழ்த்தி, வழியனுப்ப வந்திருந்தார். இன்று நினைத்தாலும் அந்த அன்பில் கண்கள் கலங்குகின்றன. இன்றும் நான் தொடர்பிலிருப்பது பேராசிரியர் மாதவனுடன்தான். மிகவும் அன்பானவர், எங்களைத் தனது குழந்தைகள் என அழைப்பார்!! நினைத்தாலே நெகிழவைக்கும் காலங்கள் அவை அல்லவோ!
மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்காலத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் ஒரு குடும்பமாகப் பழகின விந்தைதான் என்னே! ஒருவருடைய பரிசோதனைக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பது, உதவிகள் செய்வது என்பதெல்லாம் சர்வ சாதாரணம். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி தானே? இவ்வாறு ஆசிரியர்கள், பேராசிரியர்களின் அன்பில் இழைந்து வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ?
பின்பு பதவி ஓய்வு பெற்று, தமிழைத் திரும்பப் படிக்கத் தொடங்கிய காலத்தில், பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் அருளாசிகள் என்னைத் தொடர்ந்து வந்தன என்பது ஒரு பெரிய பாக்கியம். பிள்ளைத்தமிழிலான என் ஆய்வைத் தொடர ஒரு நெறியாளரை எனக்குக் காட்டித் தந்தவர். நான் அறிந்திராத தமிழின் பல நயங்களையும் எனக்குக் காட்டித் தந்து உதவியவர். நான் அறிவியல் புலத்திலிருந்து தமிழில் ஆய்வு செய்ய வந்திருப்பதனை அறிந்து உற்சாகத்துடன் எனது தமிழாய்வில் பிள்ளைத்தமிழில் காணும் அறிவியல் சிந்தனைகள் எனும் ஒரு அத்தியாயத்தை இணைத்துக்கொள்ள அறிவுரை வழங்கினார். இப்போது எனது ஆய்வுநூலை அவர் விருப்பப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயன்று கொண்டிருக்கிறேன்.
பின்னர் இசையாசிரியர்கள்: அந்த நாட்களில் பள்ளிக்கூடத்தில் பாட்டு வகுப்புகள் உண்டு. ஓரிரண்டு சம்பிரதாயமான கீர்த்தனைகள் தவிர, சுத்தானந்த பாரதியார், வேதநாயகம் பிள்ளை, பாரதியார், கவிமணி ஆகியோரின் பாடல்கள் சொல்லித்தரப்பட்டன. சில மாணவிகள் (மாணவர்கள் இதில் இல்லையோ?) தனியாக பாட்டுக் கற்றுக்கொண்டார்கள். நானும் அப்படியே! கற்றுக்கொண்டதெல்லாம் இன்றும் நினைவிருக்கின்றன. யார் பாடச் சொல்லிக் கேட்டாலும் உடனே பாடி விடுவேன். சமீபத்தில் ஒரு ஆறேழு வயதுக் குழந்தையைப் பாடச் சொல்லிக் கேட்டபோது மறுத்தாள். ஆனால் அவள் கேட்ட பாடல்களை எல்லாம் நான் பாடிக் காட்டினேன். பின் அவளிடம் சொன்னேன்: “நாங்கள் எல்லாம் யார் கேட்டாலும் பாடிக் காட்டுவோம், கூச்சமே படமாட்டோம்,” என்று. என்ன பதில் சொன்னாள் தெரியுமா? “அது உங்கள் ஜெனரேஷன், எங்கள் ஜெனரேஷன் வேறு,” என்றாளே பார்க்கலாம். என்னுடைய ஏழெட்டு வயதில் நான் இப்படிப் பேசியிருப்பேனா என யோசிக்கிறேன்.
என்னுடைய ஒவ்வொரு இசை ஆசிரியரும் நான் விரும்பி விரும்பிக் கேட்டதையெல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். நான் இசையை முழுநேரப் பணியாகக் கொள்ளப் போவதில்லை என அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் ஒன்றும் சொல்லிக் கொடுப்பதில் குறை வைக்கவில்லை!
ஆசிரியர்கள் எனது வாழ்க்கையை நான் ஆர்வத்துடனும், அழகாகவும், அறிவுத் திறனுடனும், சுவாரசியத்துடனும் அமைத்துக்கொள்ளவும் கற்றுக் கொடுத்தார்கள். உண்மை பேசவும் நல்லநெறியில் வாழவும் எடுத்துக்காட்டாக அமைந்தார்கள். அனைவரின் பாதங்களிலும் பணிந்தெழுகிறேன்.
பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
‘மாதா பிதா குரு தெய்வம் – அவர்
மலரடி தினம்தினம் வணங்குதல் வேண்டும்.’
