கடந்த இதழில் :
நைல் நதியாவது, காணாமப் போறதாவது? நதி மேலத்தானே நம்ம போயிட்டு இருக்கோம் என்றார் ஜானு மாமி.
பக்கத்தில் இருந்த பயணி ஒருவர், எதற்கும் ஒரு முறை பார்த்திடுவோம் என்பது போல, கப்பல் ஜன்னலின் திரைச்சீலையைத் தள்ளி,
“ஆமாம், நதியில்தான் இருக்கிறோம். ஆனா, கப்பல் நகராமல் நிற்கிறது”
“நான் சொல்றதை நம்பலைன்னா மேல்டெக் வந்து பாருங்கள்”
மேல் டெக்கில் நிறைய கூட்டமிருந்தது. விலக்கிக்கொண்டு கப்பலின் முன் முனைக்குச் சென்று பார்த்தோம்.
அதிசயம் ஆனால் உண்மை!
இனி ;
எதிரில் நீரோட்டம் இல்லாமல் ஒரு குளம் தேங்கியிருப்பது போல இருந்தது.
ஆனால் அதைத் தாண்டி சிறிது தூரம் நதி கண்ணுக்குத் தெரியவில்லை. அதன் பிறகு நதி அடிவாரத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.
அதாவது, எங்கள் கப்பல் நின்று கொண்டிருந்த தளத்திற்கும், கீழே நைல் நதி ஓடிக் கொண்டிருந்த தளத்திற்கும் இடையே பெரிய உயர வித்தியாசம் இருந்தது!
இப்படி கற்பனை செய்து பாருங்களேன். குற்றால அருவியின் மேல்வரை கப்பல் பயணித்து வந்துவிட்டது. இனி குற்றால அருவியின் அடிவாரத்திலிருந்து இதே கப்பல் பயணிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்?
அமுன், மேல்டெக் வந்தார், “உங்களுக்கு சர்ப்ரைஸிங்காக இருக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்த விஷயத்தை முன்னமே சொல்லவில்லை. இப்பொழுது இந்த மேட்டில் இருந்து கீழே குழிக்குள் கப்பல் எப்படி இறங்குகிறது? என்று பாருங்கள்” என்றார் புன்சிரிப்புடன்.
நாங்கள் மிகுந்த ஆர்வமானோம்.
எகிப்து நாட்டில் எஸ்னா (ESNA) என்கிற நகரத்தில், நைல் நதி நீரோட்டத்தில், இந்த உயர வித்தியாசம் இருக்கிறது.
எங்கள் கப்பலைப் போல எங்களுக்கு முன்னால் ஒரு கப்பல் மிதந்து கொண்டிருந்தது. அது எப்படி கீழே இறங்கப் போகிறது? என்கிற ஆர்வம் தொற்றிக் கொண்டது.
வேடிக்கைப் பார்க்கக் கூடி நின்ற பொழுது, கீழிருந்து, அதாவது நதியிலிருந்து மேல் சற்றும் எதிர்பாராமல் பிளாஸ்டிக் மூட்டை ஒன்று பறந்து வந்து கப்பல் மேல்தளத்தில் விழுந்தது.
அட! நம்ம ஊரில் நதியில்தான் குப்பையை வீசுவார்கள். இங்கு யாரு நதியிலிருந்து நம் மீது குப்பையை வீசுகிறார்கள்? என்று கீழே எட்டிப் பார்த்தோம்.
பிளாஸ்டிக் பைகளில் வந்து விழுந்தது குப்பையல்ல. புது துணிகள்!!
கீழே, நதியில் சிறு, சிறு படகுகளில் விற்பனையாளர்கள் கையில் மைக் வைத்துக்கொண்டு நதிப்பரப்பில் படகின் மீது நிற்கிறார்கள். படகில் நின்று கொண்டே கைத்தறியால் ஆன புதிய திரை விரிப்புகள், படுக்கை விரிப்பு கார்பெட்டுகள், போன்றவற்றை விரித்து, மேலே கப்பலின் டெக்கின் மேல் இருப்பவர்களிடம் காட்டுகிறார்கள்.
விரல்களைக் காட்டி விலை பேரம், ஜாடையாக நடைபெறுகிறது. பார்த்து விட்டு வாங்க வேண்டுமென்றால் படுக்கை விரிப்பை ஒரு பிளாஸ்டிக் உறையில் இட்டு நீளமான கயிறு கட்டி முடிச்சு போட்டு கீழே படகிலிருந்து மேலே கப்பலின் மேல் தளத்திற்கு குறி தவறாமல் வீசுகிறார்கள்.
அந்த உறையிலிருந்து துணியை எடுத்து பார்த்துவிட்டு விலை படிந்தால், துணியை எடுத்துக் கொண்டு, அந்த பிளாஸ்டிக் பையிலேயே பணத்தை வைத்து கீழே வீச, உறைக்குள் இருக்கும் பணத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒருவேளை படகில் விழாமல், நதியில் விழுந்தாலும், லாவகமாக கயிற்றை இழுத்து பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொள்கிறார்கள். நதியில் துணி நனைந்து விடாமல் இருப்பதற்காக இந்த பிளாஸ்டிக் பையில் போடுகிறார்கள்.
துணி பிடிக்கவில்லை என்று திருப்பி போட்டாலும் கோபித்துக் கொள்வதில்லை. இப்படி தள்ளாடும் படகில் வியாபாரம்! அவர்கள் எடுக்கும் ரிஸ்க் வியப்படைய செய்கிறது. நம் ஊர்களில் கார்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் நடக்கும் வியாபாரம் போல இங்கே கப்பல்கள் காத்திருக்கும் நேரத்தில் வியாபாரம்!
*****
இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எங்கள் முன் இருந்த கப்பல் சிக்னல் கிடைத்து மெதுவாக நகர ஆரம்பிக்க, என்ன நடக்கிறது? என்று ஆர்வமாகப் பார்த்தோம்.
கீழிருந்து ஒரு பிரம்மாண்டமான இரும்பு தொட்டி ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது.
தொட்டியின் முன்புறமும், பின்புறமும், பிரம்மாண்டமான இரும்பு கேட்டுகள். ஏர் டைட் ஆக மூடப்பட்டிருந்தது, அந்த இரும்பு தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டு, மெதுவாக லிஃப்ட் போல மேலே வந்து நின்றது.
இரும்பு தொட்டியில் இருந்த கேட் திறக்க, தொட்டிக்குள் இருந்த நீரும் மேலிருந்த நதிநீரும் சமஅளவிற்கு கலந்தன. எங்களுக்கு முன் இருந்த கப்பல் மெதுவாக நகர்ந்து, அந்த தொட்டியின் மத்தியில் போய் நின்றது.
இப்போது, இரும்பு தொட்டியின் முன், பின் கேட்..டுகள் மூடிக்கொண்டன.
ஒரு கப்பல் மட்டுமே தாங்கும் கொள்ளளவு கொண்ட அந்த நீர் நிறைந்த இரும்பு தொட்டி, மீண்டும் லிஃப்ட் போல கப்பலைத் தாங்கியவாறு மெதுவாக கீழே இறங்கியது.
கீழ்புறத்தில் ஓடும் நதி நீரின் சமஅளவை அடைந்ததும், லிஃப்ட் நின்று இரும்பு கதவு திறக்க, கப்பல் நகர்ந்து மெதுவாக முன்னேறி நதி ஓட்டத்துடன் கலந்தது.
பிறகு அந்த கப்பல் சாதாரணமாக நதி நீரில் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
பொறியியல் அற்புதமான இந்த நிகழ்ச்சியை வியப்புடன் கண்டு களித்தோம்.
இதே முறையில் எங்கள் கப்பலும் மேல் உயரத்திலிருந்து மெதுவாக கீழிறங்கி பிறகு நதியின் நீரோட்ட அளவுடன் கலந்தது. தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தது.
நாங்கள் பயணித்த கப்பல் அடுத்த சில மணி நேரங்களில், எகிப்தின் மற்றொரு பெரிய நகரமான லக்சர் துறைமுகத்தை அடைந்தது. இதுதான் கப்பலின் கடைசி ஸ்டாப்.
அமுன் எங்களைத் தேடி வந்தார். உங்கள் உடைமைகள் கப்பலிலேயே இருக்கட்டும் கப்பல் அறையையும் காலி செய்யவேண்டாம். இன்று இரவும் நீங்கள் கப்பலில்தான் தங்கப் போகிறீர்கள்.
“விடாது கருப்பு, என்கிற மாதிரி இந்த கப்பல் நம்மை விடமாட்டேங்குதே” என்றார் டாக்டர் புன்சிரிப்புடன்.
“மதிய உணவை கப்பலில் முடித்துவிட்டு நாம் கார்னாக் (KARANK) கோயிலுக்குச் செல்வோம் தயாராக இருங்கள்” என்று சொல்லிவிட்டு போனார் அமுன்.
வெங்கட் மாமா டாக்டரிடம், இதுதான் உண்மையான தீர்த்த யாத்திரை. நம்ம ஊரில் காவிரி வடகரை, தென்கரை பாடல் பெற்ற தலங்கள் போல இங்கே நைல் நதி தலங்களும் இருக்கு போல”
“நம்மூர்க் கோயிலை போல இந்த ஊர் கோயில்களை, ஆலயமாகவும் பார்க்கலாம், கட்டிடக்கலையாகவும் பார்க்கலாம், அக்கால எகிப்திய நாட்டின் பொருளாதார செழிப்பாகவும் பார்க்கலாம். எப்படிப்பார்த்தாலும் இந்தியாவிற்கும், எகிப்துக்குமான ஒற்றுமைகள் நிறைய இருப்பது உண்மைதான்” என்றார், டாக்டர்.
கப்பலில் வழங்கிய எல்லா உணவுகளிலும் கபூஸ் என்கிற கோதுமை ரொட்டியும், சாலட்டும், பழவகைகளும், பேரிச்சம் பழமும் தயிரும், பக்லா என்கிற அராபியன் இனிப்பும் தாராளமாக இருந்தன.
பகல் உணவிற்கு பிறகு கார்னாக் கோயில் சென்றோம்
“இந்த கோயிலின் தெய்வத்தின் பெயர் என் பெயரான அமுன் தெரியுமா?” என்றார் கைடு உற்சாகமாக.
“எகிப்திய கடவுள்கள் பலர் இருக்கிறார்கள் போலிருக்கே?” என்று சந்தியா கேட்க,
அமுன் ஆரம்பித்தார்;
எகிப்திய கடவுள்கள் – ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
பண்டைய எகிப்து நாட்டில் வழிபாட்டில் இருந்த முக்கிய தெய்வங்களைப் பற்றி ஒரு பார்வை:

ரா (RA) – சூரியக் கடவுள்:
பண்டைய எகிப்தியர்கள் சூரியன் விண்வெளியில், கிழக்கு திசையில் ஒரு படகில் ஏறி, மேற்கு முகமாகப் பயணிப்பதாகவும், மேற்கே சென்று கீழிறங்கி பாதாள லோகத்திற்கு சென்று மறைந்து, பாதாள லோகத்தின் உள்வழியே பயணித்து மீண்டும் காலை கிழக்கில் எழுவதாகவும் நம்பி இருந்தார்களாம்.
அமுன் : ‘நல்லவனுக்கு நல்லவன்’ என்பது போல, கடவுளுக்கு கடவுள் – அமுன் என்று அழைக்கப்பட்டார். நல்ல குணங்கள் கொண்டவர் என்பதை குறிக்கும் வண்ணம் அமுன் ரா என்றும் அழைக்கப்படுகிறார்
செக்மெட் (SEKHMET) – சூரிய புத்திரி. பெண் போர் கடவுள்
ஓசிரிஸ் (OSIRIS) – பாதாளலோகக் கடவுள். பூமி கடவுளான ஜெப் (GEB) க்கும் வான் கடவுளான நட் (NUT)க்கும் பிறந்தவர் இவர்;
இவருடைய மனைவிதான் ஐஸிஸ் – இவர் கடவுளுக்கெல்லாம் தாய் என்று அழைக்கப்படுகிறார். ஓசிரிஸ் மற்றும் ஐஸிஸ் இவர்களுக்கு பிறந்தவர் ஹோரஸ் (HORUS)
அனுபிஸ் (ANUBIS) : ஓசிரிஸ் கடவுளின், இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர். நரித் தலையும், மனித உடலையும் கொண்டவர். இறந்த பிறகு உடலை மம்மி வடிவம் கொடுக்கும் பொழுது வணங்கப்படும் கடவுள்.
இதைத் தவிர,
சோபெக் (SOBEK) முதலை கடவுள் ; முதலை கடிபட்டு இறந்த மனிதர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததாம்.
பாஸ்டெட் (BASTET) பூனை பெண் கடவுள்.
பிட்டா (PTAH) நம் விஸ்வகர்மா போல, கட்டிடக்கலைக்கான தேவன்.
செட் (SET) சாத்தான் அல்லது போர் போன்ற கிளர்ச்சிகளை உருவாக்குபவர்.
ஒரு நிமிடம் சிந்திக்க தோன்றிய விஷயம் என்னவென்றால் 2000 வருடங்களுக்கு முன்னாள் தினசரி வணங்கப்பட்ட இந்த தெய்வங்களை இப்பொழுது யாரும் வணங்குகிறார்களா? தெரியவில்லை.
கார்னாக் கோயில்
எகிப்து நாட்டின் குறிப்பிடத்தக்க நகரம் லக்சர்.
யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கார்னாக், லக்ஸர் நகரில் அமைந்துள்ளது . கிசா பிரமிடுகளுக்கு அடுத்தபடியாக எகிப்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தலமாக உள்ளது. சுமார் ரெண்டு கிலோமீட்டர் அளவிற்கு பெரிய வளாகத்தின் பிரதான தெய்வம் அமுன். எகிப்திய மக்களின் நம்பிக்கைப்படி, அமுன் இந்த பிரபஞ்சத்தை படைத்த உயர் கடவுள்.
நம்ம ஊர் நூற்றுக்கால் மண்டபம் போல 134 தூண்களைக் கொண்ட மண்டபம் இங்குள்ளது. ஒவ்வொரு கல் தூணும் அகலத்திலும், உயரத்திலும் மிகப் பெரியது.
இவற்றை எந்தவித தொழில்நுட்ப உபகரணம் இல்லாமல் எப்படி தூக்கி நிலை நிறுத்தினார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. இரண்டு தூண்களுக்கு இடையே பிரம்மாண்டமான மனித சிலைகள். தொடர்ந்து, அணிவகுத்து நிற்கும் செம்மறி ஆடுகளின் சிலைகள், அதன் அடியில் மனித உருவங்கள். சுவரில் ஏகப்பட்ட எகிப்திய ஓவிய எழுத்துக்கள், பல தலையில்லாத சிலைகள்.
நம்மூர் கோயில்கள் பலவற்றை பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர பேரரசர்கள், மராட்டிய மன்னர்கள் என பலர், பேணிப் பாதுகாத்தது போல இந்த வளாகத்தில் கோயில்களை முப்பதிற்கும் மேற்பட்ட அரசர்கள் தங்கள் காலத்தில் பராமரித்து வந்துள்ளார்கள். கோயிலுக்கு அருகில் குளம் ஒன்று உள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள மேலும் இரண்டு ஆலயங்கள் மிகவும் பழமையானவை. மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் பார்வையாளர்களுக்கு திறக்கப்படவில்லை.
கார்னாக் கோயில் பார்த்துவிட்டு அடுத்ததாக லக்சர் கோயிலுக்குச் சென்றோம்.
எகிப்திய பழமொழி :
“கடவுளின் தராசில் செல்வம் எடையல்ல. செயல்தான் எடை”

(தொடரும்..)



