புத்தகம் :  வாழ்க்கை ரொம்ப பெரிசு ( சிறுகதைத் தொகுப்பு )

எழுதியவர்:  ரேவதி பாலு

பதிப்பகம்  : விருட்சம்

 பக்கங்கள் : 146

விலை : ரூ. 150

    தமிழிலே சிறுகதைகள் இப்போது கொட்டிக்கிடக்கின்றன. அச்சுப் பத்திரிகைகளிலே இதழ் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று எண்ணிக்கையில் குறைந்து விட்டாலும், இணையத்தில், எண்ணிலடங்கா சிறுகதைகள் வந்து விழுகின்றன. பொறுமை இல்லாத வாசகர்களைக் குறி வைத்து கால் பக்கக் கதைகளும், அரைப்பக்கக் கதைகளும் எழுதித் தள்ளுகிறார்கள். இவற்றில் அரைவேக்காட்டுக் கதைகளே அதிகம். இத்தகைய எழுத்துக்களுக்கு இடையே, நல்ல சிறுகதைகளுக்காக தேர்ந்த வாசகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். “வாழ்க்கை ரொம்ப பெரிசு” என்ற நம்பிக்கை தரும் தலைப்புடன் விருட்சம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ரேவதி பாலுவின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள இந்தக் கதைகள் அத்தகைய வாசகர்களுக்கு அருமையான சிறுகதை விருந்து.

ரேவதி பாலு குவிகம், விருட்சம் ஆகிய இலக்கிய அமைப்புகளில் உள்ளவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். பிரபல எழுத்தாளர் ரசவாதியின் மூத்த புதல்வியான ரேவதி தப்பாமல் பிறந்திருக்கிறார். தரமான படைப்புகள் மூலம் பலவிதமான போட்டிகளில் பரிசுகள் வாங்கித் தள்ளி இருக்கிறார். அனைத்து முன்னணி தமிழ் இதழ்களிலும் 38 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். இச்சிறுகதைத் தொகுப்பு இவருடைய ஒன்பதாவது தொகுப்பு.

பேராசிரியர் இரா. பிரேமா ( மேனாள் முதல்வர், பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரி, கொரட்டூர், சென்னை ) அவர்கள் இந்நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கி ரேவதி பாலுவை கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். இந்த அணிந்துரை இந்நூலைப் பற்றியும், இதிலுள்ள சிறுகதைகளின் சிறப்புத் தன்மையைப் பற்றியும் அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

21 சிறுகதைகள் மட்டுமே அடங்கிய இந்நூல் வாசகர்களுக்கு தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அதை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் லாவகத்தையும் அழகாக, இயல்பாக சித்தரிக்கிறது. இந்தக் கதைகளில் கனவுகளும் கற்பனைகளும் குறைவு. நிஜத்தையே நாம் ரேவதி பாலுவின் கதைகளில் தரிசனம் செய்கிறோம். இயல்பாக கதை சொல்லும் கலையை முழுதாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார் ரேவதி பாலு.

‘வாழ்க்கை ரொம்ப பெரிசு” என்ற இத்தொகுப்பில் உள்ள கதைகள் பெண்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்களைப் புரிந்து கொள்ள நினைக்கும் ஆண்களும் இத்தொகுப்பைப்  படிப்பது அவசியம்.