இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரோமானியக் கவிஞர் ஓவிட் எழுதிய மெட்டமார்போசிஸ்  (METAMORPHOSES) உலக இதிகாசங்கள் வரிசையில் மின்னும் இன்னொரு வைரம்.

“உரு மாற்றம்” என்பதே இதன் மையக் கருத்து. இதில் மனிதர்கள் தேவர்கள், தேவதைகள்,தெய்வங்கள் அனைவரும் ஒவ்வொரு சமயத்தில்  மரங்களாகவும், விலங்குகளாகவும், நட்சத்திரங்களாகவும் மாறுகிறார்கள்.  கிட்டத்தட்ட   250 உருமாற்ற நிகழ்வுகள்  இந்த ஓவிட்  எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.  இந்த  உலகமே கூட ஒரு மாற்றத்தின் விளைவாக உருவாகிறது என்பதையும் விளக்குகிறார் ஓவிட். நமது ராமாயணத்தில் – மகாபாரதத்தில் இது போன்ற உருமாற்றங்கள் நிறைய நிகழ்கின்றன. அகலிகை கல்லாக மாறுவது, பின்னர் ராமன் காலடிபட பெண்ணாக மாறுவது, கங்கை நதி பெண்ணாக வருவது,   அர்ஜுனன் பிருஹன்னளையாக மாறுவது , மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் எல்லாம் உருமாற்றத்தின் விளைவுகள்  தானே!

ஆக,  ”மாற்றம் ஒன்றுதான் மாறாதது” என்ற தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் ,  இந்த இதிகாசம் பிறந்திருக்குமோ என்ற எண்ணமும்  தோன்றுகிறது. மெட்டமார்போசிஸ்  என்ற தலைப்பின் பொருளே உருமாற்றம்தான்.

முதலில் உலகம் உருவான கதையைப் பார்ப்போம்.

பிரபஞ்சம்

பிரபஞ்சம்  (UNIVERSE) என்பது விண்மீன்  கூட்டம், (GALAXY)   நட்சத்திரங்கள், கிரகங்கள், சிறுகோள்கள், விண்கற்கள்,   மற்றும் விண்வெளியில் உள்ள அனைத்துக்  கூறுகளையும் கொண்டது. சுருக்கமாகச்  சொல்லப்போனால், நாம் உணரக்கூடிய அனைத்துமே, இந்த பிரபஞ்சத்துக்குள்தான் வரும். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது  என்று இன்றளவும் விஞ்ஞானிகள் ஆய்வுகள் பல நடத்தி வருகின்றனர்.

முதலில் ஒரு சூடான பந்து போல இருந்த வடிவம் வெடித்து (BIG BANG THEORY) பிரபஞ்சம் உருவானதாக அறிவியல் கூறுகிறது.  இந்தப் பிரபஞ்சத்தில் பல கேலக்சிகள். அதில் நாம் இருப்பது  பால்வெளி என்ற கேலக்சி. அதில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களில் சூரியன் ஒன்று. ஒவ்வொரு நட்சத்திரத்தைச் சுற்றி எண்ணற்ற கோள்கள். நமது சூரியக் குடும்பத்தில்  9  கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.    அவை , புதன் (Mercury), வெள்ளி (Venus), பூமி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் / குரு (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune),  புளூட்டோ(Pluto).  2006 இல்  புளூட்டோவை கிரகம் என்று அழைப்பது தவறு என்று , அது ஒரு குறு கிரகம் என்று தீர்மானித்து  அதனைக்  கோள்களிலிருந்து நீக்கிவிட்டார்கள்.  ஆக இப்போது நமது சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. நாம் இருக்கும் பூமியைச் சுற்றிவரும் உப கிரகம் சந்திரன்.

இதை ஓவிட் தனது உருமாற்றம் புத்தகத்தில் எப்படிக் கூறுகிறார் என்று பார்ப்போம்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி இருந்தது தெரியுமா?

எங்கும் இருள். எங்கும் குழப்பம். நிலம், கடல், ஆகாயம் என்று எதுவும் தனித்தனியாக இல்லை. எல்லாம் ஒன்றோடொன்று கலந்திருந்தன. இந்த நிலையை கிரேக்கர்கள்  “கேயாஸ்” (Chaos) என்று அழைத்தனர்.

ஒரு ஒரு மர்மமான தெய்வீக சக்தி ( கடவுள்) அந்தக் குழப்பத்தை ஒழுங்குபடுத்தியது. கனமான பொருட்கள் கீழே சென்று பூமியாகின. இலகுவானவை மேலே சென்று வானமாகின. நீர் தனியாகக் கடலாகப் பிரிந்தது.

மலைகள் எழுந்தன. ஆறுகள் ஓடின. காடுகள் வளர்ந்தன. நட்சத்திரங்கள் வானில் ஒளிர்ந்தன.

பிறகு உயிர்கள் தோன்றின.

இறுதியில் மனிதன் உருவானான்.

மனித குலத்தின் நான்கு யுகங்கள்

மனித சமுதாயம் வளர்ந்த விதத்தை ஓவிட் நான்கு யுகங்களாகக் கூறுகிறார்.

முதலில் வந்தது பொற்காலம்.

அப்போது சட்டங்கள் தேவையில்லை. நீதிபதிகள் தேவையில்லை. மக்கள் அனைவரும் நேர்மையாகவும் அன்பாகவும் வாழ்ந்தனர். பூமி தானாகவே பயிர்களை வழங்கியது.

ஆனால் அந்த இனிய காலம் நீடிக்கவில்லை.

அதற்குப் பிறகு வெள்ளிக் காலம் வந்தது. பருவநிலைகள் தோன்றின. மக்கள் வீடுகள் கட்டத் தொடங்கினர்.

பின்னர் வெண்கலக் காலம் வந்தது. மனிதர்கள் போர்க்குணம் கொண்டவர்களாக மாறினர்.

இறுதியில் இரும்புக் காலம் வந்தது.

அதுவே பேராசை, பொய், ஏமாற்று, வன்முறை ஆகியவற்றின் காலம். மனிதர்கள் இயற்கையையும் சக மனிதர்களையும் சுரண்டத் தொடங்கினர்.

(நமது ஹிந்து மதக் கோட்பாட்டின்படி நாமும்  கிருத யுகம், திரேதா யுகம்(இராமர் அவதரித்தது)  , துவாபர யுகம் (கிருஷ்ணன் அவதரித்தது) மற்றும் கலியுகம் என்ற  நான்கு யுகங்களை  அறிவோம்.)

இனி  நாம் ஒவிட்டின் கதைக்குள் செல்வோம்.

1.  லைகாவோன் – ஓநாய் 

இரும்பு உலகத்தைக் கண்டு வானத்தின் அரசனான ஜூபிடர் (கிரேக்கர்களின் ஜீயஸ்) கவலையடைந்தார்.

மனிதர்கள் எவ்வளவு மோசமாக மாறிவிட்டார்கள் என்பதை நேரில் காண ஜூபிடர் மனித உருவில் பூமிக்கு வந்தார்.

ஒரு நாட்டின் அரசன் லைகாவோன். அவன் மிகவும் கொடூரமானவன். ஜூபிடர் உண்மையில் தெய்வமா என்பதைச் சோதிக்க நினைத்தான். ஒரு கைதியைக் கொன்று, அவனது இறைச்சியைச் சமைத்து ஜூபிடருக்கு உணவாகப் பரிமாறினான்.

இந்த அரக்கத்தனத்தைப் பார்த்த ஜூபிடர் கொதித்தெழுந்தார். அந்தக் கேடுகெட்ட அரசனை ஓநாயாக உருமாற்றினார்.

அவனுடைய கொடூரமான குணமே அவனுடைய புதிய உருவமாக மாறியது. மனித குலம் அனைத்துமே கொடூரமாக மாறிவிட்டதை உணர்ந்து அனைவரையும் அழிக்க முடிவு கட்டினார்.

அவர்களை அழிக்கத் தீயைப் பயன்படுத்த நினைத்தார். ஆனால் அதனால் வானமும் எரிந்துவிடும் என்ற பயம் ஏற்பட்டது.

எனவே நீரைத் தேர்ந்தெடுத்தார்.

மேகங்கள் கிழிந்தன. மழை கொட்டியது. ஆறுகள் கரைபுரண்டன. கடல்கள் நிலத்தை விழுங்கின.

(நாம் கூறும் பிரளயம் என்பது இதுதானோ? )

சில நாட்களில் உலகமே ஒரு பெருங்கடலாக மாறியது.

மலைச் சிகரங்கள் மட்டும் நீருக்கு மேல் தெரிந்தன.

மனித குலம் கிட்டத்தட்ட அழிந்தது.

2. கல்லிலிருந்து மனிதர் 

ஆனால்  ஒரே ஒரு நல்ல தம்பதியினர் மட்டும் உயிர் பிழைத்தனர்.

டியூகாலியன் மற்றும் அவனது மனைவி பீரா.

அவர்கள் ஒரு மலை உச்சியில் தஞ்சமடைந்தனர்.

யாருமற்ற உலகத்தைப் பார்த்து அவர்கள் மனம் உடைந்தனர்.

“மனிதர்கள் மீண்டும் தோன்ற வேண்டும்” என்று தெய்வங்களிடம் வேண்டினர்.

அவர்களுக்கு ஒரு புதிரான கட்டளை அசரீரியாகக்    கிடைத்தது.

“உங்கள் தாயின் எலும்புகளை உங்கள் பின்னால் எறியுங்கள்.”

முதலில் அவர்கள் குழம்பினர்.

பிறகு அதன் பொருள் பூமித் தாயின் எலும்புகள் – அதாவது கற்கள் – என்று புரிந்துகொண்டனர்.

அவர்கள் கற்களைத் தங்கள் பின்னால் எறிந்தனர்.

டியூகாலியன் எறிந்த கற்கள் ஆண்களாக மாறின.

பீரா எறிந்த கற்கள் பெண்களாக மாறின.

இவ்வாறு மனித குலம் மீண்டும் பிறந்தது.

3. ஐயோ – பசு 

புதிய உலகம் உருவாகிக் கொண்டிருந்தபோது ஜூபிடரின் கவனம் ஒரு அழகான இளம்பெண்ணின் மீது விழுந்தது.

அவள் பெயர் ஐயோ. ஜூபிடர் அவளை மிகவும் நேசித்தார்.

ஆனால் அவரது மனைவி ஜூனோ மிகவும் பொறாமைக்காரி. ஐயோவை அழிக்க நினைத்தாள். 

ஜூனோவின் கோபத்திலிருந்து ஐயோவை காப்பாற்ற ஜூபிடர் அவளை ஒரு வெண்மையான பசுவாக மாற்றிவிட்டார்.

ஆனால் அதனால் பிரச்சினை தீரவில்லை.

ஜூனோ அந்தப் பசுவையே பரிசாக வாங்கிக் கொண்டாள்.

பின்னர் நூறு கண்கள் கொண்ட அர்கஸ் என்ற காவலனை அவளைப் பாதுகாக்க நியமித்தாள்.

ஜூபிடர் தனது தூதரான மெர்க்குரியை அனுப்பினார்.

மெர்க்குரி தனது இனிய இசையால் அர்கஸைத் தூங்க வைத்துக் கொன்றான்.

ஆனால் ஐயோவின் துயரம் தொடர்ந்தது.

இறுதியில் ஜூபிடர் அவளை மீண்டும் மனித உருவத்திற்கு மாற்றினார்.

4. அழகி டாப்னே- மரம் 

ஒருநாள் காதல் தெய்வமான கியூபிட்டை அப்போலோ  கடவுள் கேலி செய்தார். ( கியூபிட் நமது மன்மதன்) 

“நீ என்ன பெரிய வீரன்? வில்லும் அம்பும் உனக்கெதற்கு?” என்று சிரித்தார்.

கியூபிட் அவமானப்பட்டான்.

அவன் இரண்டு அம்புகளை எடுத்தான்.

ஒன்று தங்க அம்பு – அது காதலை உருவாக்கும்.

மற்றொன்று ஈய அம்பு – அது காதலை வெறுக்கச் செய்யும்.

அப்போலோவின் இதயத்தில் தங்க அம்பை எய்தான்.

அங்கேயிருந்த அழகி டாப்னேயின் இதயத்தில் ஈய அம்பை எய்தான்.

அடுத்த கணம் அப்போலோ டாப்னேயை காதலிக்கத் தொடங்கினார்.

ஆனால் டாப்னே அவரைப் பார்த்தாலே வெறுத்தாள். அவள் சுதந்திரமாக வாழ விரும்பி காட்டுப்பகுதிக்கு  ஓடினாள். 

அப்போலோ அவளைத் தொடர்ந்து ஓடினார்.

டாப்னே ,  தனது தந்தையான நதி தெய்வத்திடம் உதவி கேட்டாள்.

உடனே அவளுடைய கால்கள் வேர்களாக மாறின. கைகள் கிளைகளாகின. முடி இலைகளாக மாறியது. அவள் ஒரு லாரல் மரமாக (புன்னை மரம்) மாறிவிட்டாள்.

அப்போலோ சோகமடைந்தார்.

ஆனால் அந்த மரத்தை அன்போடு அணைத்துக் கொண்டு, “இனி நீ எனக்குப் புனிதமான மரம்” என்றார்.

அன்றிலிருந்து லாரல் மாலை அப்போலோவின் அடையாளமாகவும் வெற்றியின் சின்னமாகவும் ஆனது.

ஒவிட்டின் உருமாற்றம்  வெறும் புராணக் கதைகளின் தொகுப்பு அல்ல. மனித அகந்தை, தெய்வக் கோபம், காதலின் சக்தி, இயற்கையின் மகத்துவம், வாழ்க்கையின் நிலையாமை ஆகியவற்றைப் பேசும் ஒரு கவிதை உலகம் .

குழப்பத்திலிருந்து உலகம் உருவாகிறது. தீமையால் மனித குலம் அழிகிறது. மீண்டும் பிறக்கிறது. காதல் ஒருவரைத் துரத்துகிறது; 

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கதையும் ஒரு மாற்றத்தில் முடிகிறது. இன்னும் சில உருமாற்றங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.