ஒரு சங்கடம்.. ஒரு தலைவலி
நடிகை ஸ்ரீவித்யா குமுதம் இதழ் தயாரித்த போது ஒரு சுவாரஸ்ய சங்கடம் நேர்ந்தது.
பொதுவாகவே ஒரு பிரபலம் இதழ் தயாரிக்கும் பொழுது.. குறைந்தது நாலைந்து முறையாவது அவர் வீட்டுக்கு போய் போய் பேட்டிகள் வாங்க வேண்டி வரும். முதல் நாள் முழுக்க திட்டமிடல். அடுத்தடுத்த ட்ரிப்களில் அந்த பிரபலத்தின் பேட்டி… அதன் பிறகு அவர் யாரை பேட்டி காண விரும்புகிறாரோ அவர் சம்பந்தப்பட்ட பேட்டிகள்.. எனப் பல முறை செல்ல வேண்டியிருக்கும்.
தான் யாரைப் பேட்டி காண வேண்டும் என்பது பற்றி ஒவ்வொரு பிரபலமும் வெவ்வேறு விருப்பமும் காரணமும் வைத்திருப்பார்கள்.
நடிகை ஸ்ரீவித்யா அது போல் பேட்டி வாங்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட நபர் பற்றி கூறினார்.
ஒருமுறை என் கணவருடன் நானும் ஸ்ரீவித்யாவை பார்க்கும் ஆசையில் அவர் வீட்டுக்கு போனேன்.. அப்போதுதான் இது பற்றி சொன்னார்.
அவர் பேட்டி காண வேண்டும் என்று விரும்பியது ஒரு வக்கீலை!!
என் கணவர் அதி ஜாக்கிரதை பேர்வழி. ” எதுக்கும் எடிட்டர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்து விடுகிறேனே ” என்றார்
” சார் போட்டோகூட போட வேண்டாம். அவர் சொல்ற விஷயங்களை மட்டும் பிரசுரித்தால் போதும்.. பிரசுரிக்கணும்” என்றார் சற்றே அழுத்தமாக.. இன்னும் கேட்டால் கண்டிப்பாக.
” நீங்கள் அவர் கிட்ட பேசிட்டு எனக்கு அந்தக் கட்டுரை அல்லது பேட்டியைக் குடுப்பீங்களா? என்று என் கணவர் கேட்டார்.
” வேணாம்.. அவர் சொல்றதைக் கேட்டுக்கிட்டு வந்து உங்க கிட்ட சொல்லிடறேன். நீங்க அதை கட்டுரை வடிவில் எழுதிக்கலாம்” என்றார்.
மறுநாள் குமுதம் அலுவலகத்துக்கு போனபோது, அந்த இதழுக்கு பொறுப்பேற்று இருந்த திரு ரா.கி. ரங்கராஜனிடம் நடந்தவற்றை கூறினார்.
பொதுவாக இது போன்ற சிறப்பிதழ்ப் பேட்டிகள் பற்றி ரங்கராஜன் தன்னிச்சையாக முடிவெடுப்பார் தான் என்றாலும் “வெயிட் வெயிட். எடிட்டரிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்.” என்று சொன்னாராம்.
இதற்கு ஒரு காரணம் உண்டு.
வக்கீல்..கோர்ட்.. கேஸ் போன்ற சமாச்சாரங்களை அவ்வளவாக குமுதத்தில் ரிஸ்க் எடுத்து வெளியிட மாட்டார்கள்.
எடிட்டரே ஒரு வக்கீல் என்பதால் சர்வ ஜாக்கிரதையாக இருப்பார்.
” என்ன விஷயமாய் பேட்டி காணப் போகிறாராம் ?”என்று கேட்டார்
” ஏதோ வாழ்க்கைப் பிரச்சினை என்று பேச்சுவார்த்தையில் சொன்னார்” என்று இவர் சொல்லி இருக்கிறார்.
எப்போதுமே எது நடந்தாலும் ஒரு வார்த்தை விடாமல் அதைச் சொல்லி விட்டால் பிற்பாடு பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பது கோபாலனின் கொள்கை.
ரா.கி.ர ஆசிரியர் அறைக்குள் போய் 15 நிமிடங்கள் பேசி விட்டு வந்து, ” வக்கீல் பேசறதை டைப் செய்து கொண்டு வரணும். பேட்டி கட்டாயம் பப்ளிஷ் ஆகும்னெல்லாம் அவங்க கிட்ட கமிட் செய்துக்கக் கூடாது. நாங்க எடிட் செய்துதான் பிரசுரிப்போம்னு அவங்க கிட்ட திட்ட வட்டமா சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டார்.
போன் செய்து ஸ்ரீவித்யாவிடம் விஷயத்தைச் சொன்னது நான்தான்.
” இரண்டு நாள் ஷூட்டிங் இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன். ஆறு மணிக்கு மேல் கோபாலன் சாரை வர சொல்லுங்க” என்றார் ஸ்ரீவித்யா.
அதுபோலவே இவர் போனார்.
கிட்டத்தட்ட 2 மணி நேர காத்திருப்புக்கு பின் அவர் வந்தார்
முகத்தில் களைப்புக்கு பதில் மகிழ்ச்சி.
” சார் குட் நியூஸ் வெளியூர் ஷூட்டிங் ஒரே நாளில் முடிந்துடுத்து. எனவே வக்கீல் பேட்டியை நானே எடுத்துட்டு வந்துட்டேன்” என்றாராம்.
டேப் செய்யவில்லை! கேள்வி கேட்டு பதில் எழுதி தாள்களில் குறிப்புகளாக எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.
ஸ்ரீவித்யா சொல்லச் சொல்ல, பாமா கோபாலன் அதை டேப் செய்து கொண்டார்
இப்போது இவருக்கு கவலை. வாழ்க்கை பிரச்சினை என்று சொன்னது முற்றிலும் உண்மை. சிக்கலான விஷயங்களை விவரித்திருந்தார்.
அவர் யாரைத் திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்குமே தெரியும்
கோர்ட்டில் டைவர்ஸ் வாங்குவது சிரமம். அது பற்றி தான் வக்கீல் விவரித்து இருந்தார்
அதி ஜாக்கிரதையாக என் கணவர் ” அந்தக் குறிப்புகளையும் கொடுத்துடுங்க மேடம் சந்தேகம் இருந்தால் சரி பார்க்க உதவும்.” என்று கேட்டு வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.
அவசரக் கிறுக்கலிலும் அழகாய் இருந்த ஸ்ரீவித்யாவின் ஆங்கில எழுத்தை நான் பார்த்திருக்கிறேன் என்று பெருமையுடன் சொல்வேன்.
” சார் கட்டாயம் இது என் இஷ்யூவில் வந்தாகணும்” என்று திட்டவட்டமான குரலில் சொல்லிவிட்டார் ஸ்ரீவித்யா.
சாதாரணமாகவே குமுதம் பேட்டிகள் பற்றி யாரிடமும் எதுவும் கமிட் செய்து கொள்ளவே மாட்டோம். விளம்பரம் வந்தால் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் தூக்கிவிடுவார்கள். வருமானம் முக்கியமல்லவா?
போதாக்குறைக்கு கமிட் செய்து கொள்ளாதீர்கள் என்று வேறு ரா.கி.ரங்கராஜன் வேறு சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தாரே?
அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு “இதை அப்படியே எடிட்டர் கிட்ட கொடுக்கறேன். அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.” என்று மழுப்பலான குரலில் சொல்லிவிட்டு வந்து விட்டார்.
அதன் பிறகு இ்ஷ்யூ விஷயமாக பலமுறை ஸ்ரீவித்யாவிடம் போனிலும் நேரிலும் பேசிய போதெல்லாம் ” அந்த லாயர் மேட்டர் வந்துடும்ல” என்று கேட்க மறந்ததே இல்லை ஸ்ரீவித்யா.
அதில் சற்று ரிஸ்க்கியான விஷயங்கள்.. மத சம்பந்தப்பட்ட விவரங்கள் இருந்ததால் பத்திரிகை மீது எந்த வழக்கும் வரக்கூடாது என்று யோசித்திருக்கிறார்கள்.
மறுநாள் இதழ் வெளிவரும் கிழமை. “அந்த வக்கீல் சொன்ன விஷயங்கள் பிரசுரமாகிறதுன்னு அவங்க கிட்ட சொல்லிடுங்க” என்று ஆர்.கே.ஆர் சொல்ல, பாமா கோபாலனும் அவ்வாறே செய்தார்.
எனினும் இவருக்கு உள்ளூர உதைப்பு. எந்த விஷயம் பற்றியாவது யாரேனும் வழக்குப் போட்டார்கள் என்றால் எழுதியவர் என்ற முறையில் இவரும் கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்.
நினைத்தாலே நடுக்கம்.
போன் செய்து சொல்லிவிட்டார்.
பிரச்னையை மிக அழகாகச் சமாளித்திருந்தார் ரா கி ர.
இதழ் தயாரிக்கும் சிறப்பாசிரியர்தான் கேள்வி பதில் பகுதியில் பதில் சொல்வார் (அந்த வாரங்களில் அரசு பதில் கட்). ஸ்ரீவித்யாவுக்கென்றே ஏகப்பட்ட கேள்விகளைத் தாங்கிய தபால்கள் வந்திருந்தன.
அவற்றில் ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீவித்யாவே பதில் சொல்கிறமாதிரி அந்தப் பேட்டியில் இருந்த சமாசாரங்களைச் சுருக்கிப் பிரசுரித்து விட்டார்கள்.
அவரே சொன்னதாக வந்ததால், ரிஸ்க்கும் இல்லாமல் போயிற்று. ஸ்ரீவித்யாவுக்கும் திருப்தி. எங்களுக்கும் நிம்மதி,
இது போல் ஹேமமாலினி சிறப்பிதழ் தயாரித்தபோது ஒரு சின்னத் தலைவலி ஏற்பட்டது. ஆமாம். தலைவலியேதான்.
பல சமயங்களில் பிரபல நிறுவனங்கள் குமுதத்தில் விளம்பரம் செய்யும்போது, இலவச இணைப்பாகத் தங்கள் பொருட்களை விநியோகம் செய்யும்படி அளிப்பார்கள். அதற்குச் சற்று அதிகமாக விளம்பரத் தொகை அளிப்பார்கள். நிறைய முறை ஷாம்பூ, சோப், ஹேர் ஆயில் போன்ற பொருட்கள் இது போல் இலவச இணைப்பாக அளிக்கப்பட்டதுண்டு. அது பெரிய அளவில் அவர்களுக்கு விளம்பரமாக அமையும். ஏனெனில் குமுதத்தின் அழகி(ய) அட்டையில் ஒரு புறம் “இந்த இதழுடன் இலவச இணைப்பு.. கேட்டு வாங்குங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். வாசகர் கண்களிலிருந்து தப்ப முடியாது. எனில் சிறந்த விளம்பரம்தானே?
“இந்த இதழுடன் எங்கள் பொருளை அன்பளிப்பாக அளிக்க வேண்டும்” என்று பெட்டி பெட்டியாகக் கொண்டு இறக்கிவிட்டார்கள் அந்தப் பொருளின் தயாரிப்பாளர்கள். (ஆறு லட்சம் இதழ்களுடன் இணைப்பு)
அந்த இதழ் தயாரிக்கப்போவது ஒரு பிரபலம் என்றும் அது யார் என்பதும் அந்த விளம்பர தாரர்களுக்குத் தெரியாது.
அது..
ஹேம மாலினி தயாரித்த இதழ்.
கோ ஆர்டினேட்டர் என் கணவர்.
“நீங்கதான் எப்டியாவது அவங்ககிட்ட விஷயத்தை பிரேக் பண்ணணும்‘’ என்று சொல்லிவிட்டார்கள் ஆபீசில்.
அச்சோ. கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? “என் இதழுடன் ‘அந்த’ அன்பளிப்பைத் தரக்கூடாது” என்றோ ”அந்த அன்பளிப்பு வரும் இதழ் என்னுடையதாக இருக்கக்கூடாது” என்றோ சொல்லிவிட்டால் என்ன செய்வது?
“நேர்ல போய்ச் சொல்லுங்க. போனில் வேண்டாம்” என்றுவேறு சொல்லிவிட்டார் ரா. கி .ர.
அதாவது திட்டு வாங்குவதானால் நேரில் போய் முகத்து நேராக வாங்கு என்று அர்த்தமோ?
மறுநாள் ஹேமமாலினி தங்கியிருந்த சவேரா ஹோட்டலில் போய் அவரைச் சந்தித்து “ஜஸ்ட் ஒரு ஸ்மால் இன்ஃபர்மேஷன்” என்று ஆரம்பித்து “சாதாரணமாவே பிரபலங்கள் தயாரிக்கும் இதழ் அதிகமா விக்கும்.. உங்க இதழ் மி..க அதிகமா விற்கும்னு எதிர்பார்க்கறதால.. பிரபலமான பொருள் உங்க இதழ்ல விளம்பரம் செய்ய விரும்பறாங்க.. இலவச இணைப்பாகவும் தர்றாங்க. இந்த இஷ்யூ மேலும் அதிகமா விற்பனையாகப் போகுது..” என்று படு காஷுவலாக சொல்லியிருக்கிறார்.
“அடடே வெரி ஹாப்பி” என்று சொல்லி “என்ன ஃப்ரீ?” என்று கேட்டிருக்கிறார்.
“அம்ருதாஞ்சன் ஸ்ட்ராங்” என்று அநாயாசம்போல் சொல்லிவிட்டார். “அட்டையில் உங்க போட்டோ பக்கத்தில் அந்த அறிவிப்பு வரும்”
“என்ன நினைச்சீங்க.. என் இஷ்யூ படிச்சா தலைவலி வரும்னு சிம்பாலிக்கா கிண்டல் செய்யறீங்களா? தேவை இல்லை. குடுக்கக்கூடாது”
என்றெல்லாம் சத்தம்போடுவாரோ என்று பயந்த கோபாலனுக்கு நிம்மதி..
“ஓ அப்டியா? இதுக்கு ஏன் பர்மிஷன் கேட்கணும்?”
“எந்த இஷ்யூவோட எந்த இலவசம் கொடுத்தாலும் அவங்க கிட்ட தகவல் சொல்லணும்னு நம்ம குமுதத்தில் ஒரு பிரின்சிபிள்” என்று கதை விட்டுவிட்டு.. வுடுஜூட்.
இப்போது புரிகிறதா நான் ஏன் ’ஹேமமாலினி சிறப்பிதழ் தயாரித்தபோது ஒரு சின்னத் தலைவலி ஏற்பட்டது.” என்ற சொன்னேன் என்று?
ஆக இப்படித்தான் பிரம்மாண்டமாக வெடிக்கும் என்று நினைத்தது புஸ்வாணமாக முடியும். அண்ட் வைஸிவெர்ஸா.


மக்களை சந்தோஷப்படுத்தவும் வேண்டும், அதில் அவர்களுக்கு ஆதாயமும் வேண்டும், கலைஞர்கள் பாடு கஷ்டம்தான்.
LikeLike