2/25
செல்ஃபி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
குவிகம் தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது!
ஒரு வருடம் ஒரு டிஜிட்டல் பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவதே ஒரு இமாலய இல்லை ரோகித் சர்மா சாதனை தானே!
மாதம் 25 டிஜிட்டல் பக்கம் . 12 மாதம். 300 பக்கம்! மனதுக்கு நிறைவைத் தருகிறது.
இதை ஆரம்பிக்கும் போது நண்பர் ஒருவர் கேட்டார் -இது குமுதமா? கல்கண்டா? என்று. கல்கண்டு என்று சொன்னேன். அதாவது தமிழ்வாணன் போல எல்லா கதை – கட்டுரை – கவிதைகளை நான் ஒருவனே எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனைவி, மகள்,உறவினர் மற்றும் நண்பர்கள் என்று எழுதுவோர் வட்டம் பெரிதாகிக் கொண்டு வருகிறது. வாசகர் வட்டம் இன்னும் அதிகம் சேரவேண்டும்!
மாதம் முழுதும் செய்வதற்கு ஒரு வேலை! கடைசி வாரத்தில் ஓவர்டைம் போல அதிக நேரம் செலவிடல். 15ம் தேதி காலக் கெடு. கிராபிக்ஸ் செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொள்வது. இவை அனைத்தும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருப்பதிலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதிலும் தலையான பங்கைச் செய்கின்றன.
உங்களின் இந்த வெளிப்பாடு என்னை ஆச்சரியப் படவைக்கிறது- பொறாமைப்பட வைக்கிறது என்று நான் பொறாமைப்படும் நண்பர்கள் கூறும் போது எனக்குள் மகிழ்ச்சி அலை தெறிக்கிறது.
இரண்டாவது வருடத்தில் குவிகத்தை அடுத்த படிக்கு – உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்!
அதைப்பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.