“காதலாகி.. கசிந்து.. கண்ணீர் மல்கி….நமச்சிவாயவே”

என்று பூஜை அறையில் கண்ணீர் பெருக மோகனா பாடி, வேண்டிக்கொண்டிருந்தாள்.

வாசுவும் அவள் அருகில் சென்று நின்று இறைவனை வணங்கினார்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொள்வதே அடிக்கடி நிகழ்வாகியது.

ஆஆம். மோகனாவிற்கு குழந்தை செல்வம் தங்காமல் பல காலங்கள் கழிந்தன. உறவினர்கள், பொது இடங்களில் நட்பு வட்டாரங்கள் ஏளனத்திற்கும், அவப்பெயர் சூட்டி அடையாளம் காட்டி பேசுவதும், மோகனா காதில் விழாமல் இல்லை.

இரண்டு முறை கருத்தரித்தும் பிள்ளை பெற்றும், ஆனால் மூன்றாவது நாள் ஏதாவது காரணத்தால் பிள்ளை மாய்ந்து விட்டது.

அதற்குள் 10 வருடங்கள் உருண்டு ஓடிவிட்டன.

இப்போது மோகனாவிற்கு மூன்றாவது முறையாக பிள்ளைப்  பேறு.

நல்ல படியாகப்  பிள்ளை பிறந்தது. உறவினர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் மோகனா, வாசுவால் சந்தோஷப்பட முடியவில்லை. வாசுவிற்கு வயிற்றில் புளி கரைத்தது. 

“இறைவா இந்த குழந்தை எங்களுக்கு தங்கணுமே. ஆயுள் ஆரோக்யத்துடன் எங்கள் குடும்பத்தில் வாரிசாக வளரணுமே” வேண்டிக்கொண்டார்.

 பின்னங்கால் இரண்டும் மண்டி இட்டு தவழ்ந்து வந்த ராசா- செல்ல ராசுக்குட்டிக்கு ஒரு வயது ஆனது.

“நான் தான் ராசா முதல் அடி எடுத்து வைத்து நடந்ததை பார்த்தேன்..இதோ போட்டோ பிடித்துள்ளேன்..” என்று மோகனா வாசுவிடம் காட்டினாள். கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.

“ம்ம்..ம்ம்ம்….மம்மு..மம்மு சாப்பிடலாம் வா ராசா”  “ஆஆ..காட்டு..ஆஅ..ம..ம்ம்மு..அ..அ..”

என்று ராசாவை வாரி அணைத்து மடியில் உட்கார வைத்து சோற்று அமுது ஊட்டினாள் மோகனா.

“ம்ம்ம்…ம்ம்ம்மம்ம்மு…ம்ம்ம்மா…தா..ம்ம்மா..தா..”

“அ….ம்ம்…மா…” “அ…ம்ம்ம்…மா..” என்றான் ராசா.

மோகனாவிற்கு உடல் சிலிர்த்தது. பரவசமானது. இனம் புரியாத மகிழ்ச்சி.

“ராசா… என்ன… சொல்ல்லு…”

“ம்…மா..அ…..ம்…மா….”

“ராசா .. திருப்பி சொல்லு..”

“ம்…மா…அ..ம்..மா…” கிளிப்பிள்ளை போல் சொன்னான் ராசா.

“என்ன பெத்த ராசவே..ராசா..என்னய அம்மா சொல்லி கூப்பிட்டாயா கண்ணே..என்னங்க…இங்க வந்து கேளுங்க… ராசாகுட்டி என்ன அ…ம்….மா…..சொன்னான்…அ..ம்…மா..”

மோகனாவால் பேச முடியவில்லை. குரல் தழுதழுத்தது.

வாசு ஒடி வந்தார். மனைவியையும் குழந்தையையும் சேர்த்து அனைத்துக்கொண்டார். 

பிறகு மோகனா ஆனந்த கண்ணீருடன்..”என்னங்க.. எனக்கு அம்மா பட்டம் கொடுத்துட்டான் ராசா..என்னைய சிம்மாசனத்தில் ஏற்றி விட்டான். நான் அம்மா.. நான் அம்மா… ஆயிட்டேன்..”

“மோகனா சற்று பொறுமையாக இரு..பதட்டப்படாதே..”

“என்னங்க…. மலடி.. மலடி..ன்னு ஊரார் சொல்லக்கேட்டு கேட்டு பழகின காது..இப்போ கேளுங்க..அ..ம்..மா..அ..ம்..மா.. சொல்றான் ராசா.. காதுக்கு இனிமையா இருக்கு..”

“என்ன பெத்த ராசா…  “நான் உன்னய பிள்ளை பேறாக பெற்றேனா..  இல்ல ராசா..

நீ தான் என்னைய அம்மாவாக பெற்று எடுத்த.. …”