‘உங்களுக்கு ஏதாவது மன கஷ்டம் இருந்தால் இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்கள், நான் இருக்கிறேன் உங்களுக்காக’
வீட்டு வாசலில் இருந்த துண்டு சீட்டைப் பார்த்து ராகவன் கொஞ்சம் சலனப்பட்டார், கொஞ்சம் சபலப்பட்டார். இதுவரை கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி. ஆகவே இந்த சீட்டைப் பார்த்தவுடன் அவருக்கு ஒரு சிறு சபலம்.
‘ஒருவேளை அந்த மாதிரி இருக்குமோ! ஃபோன் பண்ணலாமா, சரியாக வருமா, எங்கேயாவது மாட்டிக் கொள்வோமோ! ஆசையாகவும் இருக்கிறது, ஆனால் பயமாகவும், தயக்கமாகவும் இருக்கிறது’
சீட்டை வைத்து விட்டார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தார்.
‘ஏன் ஃபோன் பண்ணி பார்த்தால்தான் என்ன! ஏதாவது வில்லங்கமாக இருந்தால் உடனே வைத்து விடலாம், ஒருவேளை மனதுக்கு சந்தோஷமாகக் கூட இருக்கலாம்’
ஐந்தாவது நாள் தயங்கியபடியே அந்த நம்பருக்குப் ஃபோன் செய்தார். ஓர் ஆண் குரல். ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் நிராசையாகவும் இருந்தது.
‘இது என்ன இப்படி உங்கள் நம்பரை எல்லோருக்கும் விநியோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்?;
‘ஃபோனில் சொல்ல முடியாது, உங்களால் நேரில் வர முடியுமா, நான் அட்ரஸ் தருகிறேன்’
‘மறுபடியும் ஒரு தயக்கம், பணத்தைப் பறிக்கும் வழியோ! வேறு ஏதாவது வலையோ! ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது, பார்க்கலாம்’
இரண்டு நிமிடத்தில் அட்ரஸ் வந்துவிட்டது. ஆனாலும் தயங்கிக் கொண்டே இன்னும் இரண்டு நாட்களைப் போக்கிவிட்டு மூன்றாவது நாள் ஆசையாகவும், ஆர்வமாகவும் அந்த இடத்துக்குச் சென்றார். தூரமாக தான் இருந்தது, ஆனால் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. கதவை தட்டியதும்
‘உள்ளே வரவும்’
பேசியதை வைத்து இளைஞனாக இருக்குமோ என்று நுழைந்தால் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். எதிரில் நாற்காலியில் உட்காரச் சொல்லி பிஸ்கட்டும், பழமும் உள்ள தட்டை நீட்டி சாப்பிடச் சொன்னார்.
‘என் பெயர் ராமமூர்த்தி. நான் தனியாத்தான் இருக்கிறேன், எனக்கு ஒரு பெண் சமையல் செய்து விட்டு செல்வாள், அவள்தான் டீ போட்டு இந்த பிளாஸ்கில் வைத்துவிட்டு சென்றுள்ளாள்’
முதல் தடவை அவரைச் சந்திக்கிற மாதிரியே தோண்றவில்லை ராகவனுக்கு. பல நாள் பழக்கமான மாதிரி இருந்தது. வெகு நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நாட்களாகவே ராகவனுக்கு ஆபீசில் வேலை ஜாஸ்தி. வீட்டிலும் தனியாய் இருப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு புது சம்பந்தம்.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ராமமூர்த்தி போன் பண்ணி
‘ராகவன் நேரமிருந்தால் இங்கு வர முடியுமா?’
ராகவனுக்கும் அவருடன் பேசிக் கொண்டிருந்தது நன்றாக இருந்தது. அதனால் அவனும் சரி என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதுதான் என்று கூறமுடியாத அளவுக்கு இரண்டு பேரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அன்று அவர் அங்கேயே ரொட்டியும் சப்ஜியும் சாப்பிடச் சொன்னார். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள். சமயத்தில் நாலு நாட்கள் கூட நடந்தது. நாட்கள் செல்ல செல்ல ராகவனுக்கு அவரிடம் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு தூரத்தையும் பொருட்படுத்தாமல் சென்று இதோ இப்பொழுது ஒரு வாரம் ஆயிற்று.
ஆபீஸ் வேலையில் ராகவன் இதைப் பொருட்படுத்தவில்லை. ஒரு வாரத்துக்கு மேலாகியும் போன் வராது போகவே ஆபீசிலிருந்து நேரே அவர் வீட்டுக்குச் சென்றார். கதவு மூடி பூட்டு போட்டு இருந்தது. இவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கீழே குடியிருப்பவரிடம் விசாரித்தார்.
‘யாரைக் கேட்கிறீர்கள், ஓ ராமமூர்த்தியா? ஆமாம் மாடியில் குடியிருந்தார், அவர் காலமாகி மூன்று நாட்கள் ஆகின்றன, நீங்கள் யார்?’
ராகவன் விக்கித்துப் போய்விட்டார். சொல்ல முடியாத துயரம். இந்த பாசத்திற்கு பெயர் என்ன? இல்லை இதற்கு எந்த ஒரு பெயரையும் சூட்டி களங்கப்படுத்த வேண்டாம். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
வீட்டிற்கு வந்தால் ஒன்றும் சாப்பிட பிடிக்கவில்லை. ராமமூர்த்தியையே நினைத்துக் கொண்டிருந்தார். முதன் முதலில் சந்தித்த நாளிலிருந்து இன்று வரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றி விசாரித்தது இல்லை, யாரையும் பற்றி குறை கூறினது இல்லை, மற்றவர்களைப் பற்றி எந்த ஒரு விமர்சனமும் இல்லாமல் இருவரும் சகஜமாக பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர், அந்த நட்பு, அன்பு எங்கு கிடைக்கும்?
சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று ராகவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. முன்பின் தெரியாத ராமமூர்த்தி நமது தனிமையை எப்படி போக்கினாரோ, அதே மாதிரி ஏன் நாம் மற்றவர்களின் மனதை கேட்கக்கூடாது? தன்னுடைய போன் நம்பரை விநியோகம் செய்ய ஆரம்பித்தார்!

