‘ அய்யா அய்யா’ வாசலில் யாரோ என்னைத்தான் அழைக்கிறார்கள். வேக வேகமாக வீட்டின் வாயிலுக்கு வந்தேன்
. ‘யாரு’
‘வெங்கடேசம்பிள்ளை வந்துருக்கேன்’
‘கத்தாழைப்பிள்ளையா வாங்க வாங்க’ கத்தாழை, எனது பூர்வீகம் தருமங்குடிக்கு அண்டைக் கிராமம். பிள்ளை என் வீட்டுக்கு ரொம்ப நாட்களாக பால் வழங்குகிறார். நான்கு எருமைகளை வைத்துக்கொண்டு மணியம் பண்ணுகிறார். பிள்ளைக்கும் எனக்கும் அப்படி சிநேகிதம்.
‘காலிங்க் பெல் இருக்கே. அமுத்தி இருக்கலாமே’
‘அததான மொதல்ல செஞ்சேன். ஒன்னும் கத ஆவுல’
‘ஏன் என்னாச்சி புள்ள’
‘கரண்டு இருக்கணும்ல’
‘ஆமாம் கரண்டு இல்லே. அதான்’ மெயின் சுவிட்சுக்குப் பக்கத்தில் இருக்கும் மின்சார இருப்பு அறிவிக்கும் இண்டிகேட்டர் உறக்கத்தில் கிடந்தது.
வாயில் முன் பகுதியில் கிடந்த பெஞ்சில் பிள்ளை உட்கார்ந்தார். நான் என் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்.
‘நீங்க விசயம் இல்லாம என் வீட்டுக்கெல்லாம் வரமாட்டிங்களே. இப்ப வந்துருக்கிங்க என்ன சேதியோ’
‘சேதிதான். அதான் வந்துருக்கேன்’
என் மனைவி பிள்ளைக்கு ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். பிள்ளை அதனை வாங்கிப்பாதி குடித்து விட்டு , அந்தச் செம்பை பெஞ்சிலேயே தன்னோடு வைத்துக்கொண்டார்.
‘செம்பு இங்க இருக்கட்டும் போ’ என்றேன் மனைவியிடம். அவள் அகன்று போனாள். அவளுக்கும் அரை மனசுதான். யாருடன் பேசினாலும் நான் ஏதேனும் ஒரு பொறியில் எப்போதும் மாட்டிக்கொண்டு விடுவேன் என்பதாக அவளுக்கு யோசனை. அதில் உண்மையும் இல்லாமலில்லை.
‘ நானு மாடுவுள வச்சி நிர்வாகம் பண்ணி காசு பணம் சேத்தேன். கஸ்டப்பட்டு ஒரு கிரவுண்டு பூமி வாங்குனன். அய்ஸ்கூலு முருகேச வாத்யாருண்டதான். அவருதான நம்ம ஊரு மொகனையில பிளாட் போட்டு வித்தாரு. மொத பிளாட்ட நா வாங்குனதாலே எனக்கு ஒரு டூ வீலர் பரிசா குடுத்தாங்க. அதுலதான் நா இப்ப எங்கயும் போறது வர்ரது. ஒங்க வூட்டுக் கூட அதுலதான் வந்தன். கரும்பச்ச கலர்ல வண்டி ஆ வெளில நிக்குது பாருங்க’
‘வண்டி எரைச்சல் வருல’ எட்டிப்பார்த்தேன். டூ வீலர் பள பள என்று மின்னியது. சந்தனம் குங்குமம் அழகாக வைக்கப்பட்டிருந்தது.
‘ஒங்க வண்டி ரோட்டுல போனா ஊரே தருமங்குடி மொதலியார்தான் போறாருன்னு பேசிக்குவாங்க’ பிள்ளை சிரித்தார்.
’அது தெரிஞ்ச கதை. அத வுடுங்க இப்ப நீங்க எடம் வாங்கியாச்சு வீடு கட்ட ஆரம்பிக்கணுமே’
‘அங்கதான் சிக்கலு. நாந்தான் அந்த கொளஞ்சி நகர்ல மொத பிளாட் வாங்குனன். பாக்கி எழுபத்திநாலு பிளாட்டுங்க. ரெட்ட வரிசையா பிளாட்டுங்க நாலு, ஒத்த வரிசயா பிளாட்டு ஒன்னு ஆக மொத்தம் எழுபத்தைந்து பிளாட்டுவ.’
‘அது என்ன ஒத்த வரிச ரெட்ட வரிச’
‘தெருவுல எதிர் எதிரா பிளாட் இருந்தா ரெட்ட வரிச, ஒரு தெருவுல ஒரு வரிசைக்கு தான் பிளாட் இருக்கு. எதுத்தாப்புல பிளாட்டுவ இல்ல. அப்படி பிளாட் இல்லன்னா அது ஒத்த வரிச’
‘கரெட்டா சொன்னீங்க’
‘எது கரெக்டா சொல்லி என்னா பண்ணுவ. அந்த கொளஞ்சி நகர் பிளாட்டுங்க பாக்கி எழுபத்திநாலையும் ஒரே ஆசாமி வாங்கியிருக்கு’
‘இது என்னா புது சேதி அப்படிக்கூடமா’
‘புது சேதிதான் நானும் இது வரைக்கும் இப்படிக் கேள்விப்பட்டதில்லை. ஆனா நடந்து போச்சி’
‘வாங்குன பார்ட்டி ஆரு’
‘நெய்வேலில என் எல் சி கார்ப்பொரேஷன்ல ரோடு காண்ட்ராக்ட் எடுத்து வேல பாக்குறவரு அவுரு பேரு ராசாராமன். தருமங்குடி சொந்த ஊரு’
‘ஆமாம் தருமங்குடி என் ஊர் தான. அந்த ராசாராமன் என் கூட படிச்சான். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலு. தருமங்குடிக்கு பக்கத்து ஊருதான் வளையமாதேவி அங்கதாம் நாங்க படிச்சம்.’
‘இப்ப என் பிரச்சனைய சொல்லிடறேன். கொளஞ்சி நகர் பிளாட் அத்தனையும் அந்த என் எல் சி காண்ட்ராக்டர் ராசாராமனே வாங்கிகிட்டாரு. ஆனா அதுல ஒரு பிளாட் மாத்திரம் முன்னயே எனக்கு கிரையம் ஆகியிருக்கு. அந்த நெய்வேலி காண்ட்ராக்டர் என்ன வரச்சொல்லி ஒரு நாளு சேதி அனுப்புனாரு. நானும் போனேன். ‘கொளஞ்சி நகர்ல மனைப்பிரிவு மேப்புபடி மொத்தம் எழுபத்தைந்து மனைங்க. அதுல எழுபத்து நாலையும் நானே கிரையம் வாங்கிட்டன். ஒன்னு மட்டும்தான் ஒங்க கிட்ட இருக்கு. நா மொத்த கொளஞ்சி நகரையும் ஒன்னாக்கி ஒரே காம்பவுண்டா போடப்போறேன். காம்பவுண்ட் போட்ட எடத்துல சின்னதா ஒரு தொழிற்சாலை வைக்கலாம்னு இருக்கன். என் காண்ட்ராக்ட் தொழிலுக்கு வேணுங்கற ஃபேப்ரிகேஷன் வேலைங்க பலது இருக்கு. அத நா தயார் பணணணும். நீங்க வாங்கியிருக்குற பிளாட்ட எங்கிட்ட வெலைக்கு குடுத்துடுறீங்களான்னு கேட்டாரு. நானு பிளாட் கிரையம் வாங்கின ஆன அடுத்த நாளே பூமி பூஜய போட்டேன். வாஸ்து எனக்கு அப்பிடி அமஞ்சிது. பாங்குல கடன ஒடன வாங்கி ஒரு வீடு கட்றதாவும் இருக்கன்னு சொன்னேன்.’
‘கத ரொம்ப சீரியஸ்ஸா போவுது’ என்றேன்.
‘என்ன கதங்கிறீங்க. நா படுற கஸ்டம் சொல்லமுடியாது. கொளஞ்சி நகர்ல மொத்த பாதையும் புல்டோசர் வச்சி நெறவிடுவேன். உம்ம பிளாட்டுக்கு எப்பிடி நீரு போவீருன்னு பேசுனாரு. எனக்கு பயம் வந்துடுச்சி. நா பதில் எதுவும் பேசுல. நீரு ஒன்னும் சரிப்பட்டு வர மாட்டீரு. நா என் ஜோலிய நா பாத்துகறேன்னு சொல்லிட்டாரு.’
‘உங்களுக்கு பிளாட் கிரையம் குடுத்த அந்த முருகேஷ் வாத்தியார பாத்திங்களா’
‘மொத வேலயா அததான் செஞ்சன். ‘ வாத்தியாரே நீங்கதான் எனக்கு ஒரு வழி காட்டணும். வீடு கட்டறதுக்கு பூமி பூஜ எல்லாம் போட்டு இருக்கன். பேங்க் லோன் ஏற்பாடு முடிஞ்சி போச்சி. ஒங்க கிட்ட வாங்குன என் பிளாட்டுக்குப் போவ வர ஒரு பாத ஒதுக்கி ஒதவுணும்னு சொன்னேன். முருகேஷ் வாத்யாரு சொன்னாரு ‘ இது மொத்தமும் லே அவுட் போட்ட எடம். மனைங்க டேரக்டர் டௌவுன் பிளான்கிட்ட அப் ரூவல் ஆகியிருக்கு. அந்த அப்ரூவல் வாங்கறதுக்கு காச கொட்டி கொட்டி குடுத்துருக்கன். என் வேல முடிஞ்சிது. நீங்க ரைட்டா இங்கிருந்து கிளம்புலாம் ஆக வேண்டியத பாக்கலாம்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிட்டாரு. அப்பறந்தான் அந்த காண்ட்ராக்டர் எந்த ஊருன்னு அக்கம் பக்கம் விபரம் கேட்டேன். பலானவங்க அவுரு தருமங்குடின்னு சொன்னாங்க. ஒங்க ஊர் அது தானேன்னுட்டுதான் இப்ப ஒங்க கிட்டு வந்துருக்கன்’
எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. அந்த காண்ட்ராக்டர் ராசாராமனைத் தெரியாது என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்த பிரச்சனை இப்படி நெருக்கடி கொடுத்திருக்காதே என்றும் எண்ணினேன்.
‘இப்ப நா என்ன செய்யிணும் அத சொல்லுங்க’ என்றேன்.
‘நீங்க அந்த காண்ட்ராக்டர் கிட்ட பேசணும். என் பிளாட்டுக்கு நானு போக வர ஒரு பாதை வேணும்னு கேட்கணும்.’
‘எங்கிட்ட சொல்லிட்டிங்க. இது விஷயமா நா அவர கேக்குறேன். அவர் என்ன சொல்றாருன்னு கேட்டு வரன். வந்து ஒங்க கிட்ட சொல்லுறேன்’
‘எப்ப கேட்டு சொல்வீங்க எனக்கு மேட்டர் அர்ஜெண்டு ஆச்சே’
‘பாக்கறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்யுறேன்’ இதெல்லாம் நமக்குத் தேவையா எனக்கு மனம் சுள்ளென்றது.
‘அப்ப நா பொறப்படுறேன்’ என்றார். பிள்ளை செம்பிலிருந்த பாக்கித்தண்ணீரையும் குடித்துவிட்டுக் கிளம்பினார். என் மனைவி எங்கள் சம்பாஷணையைக் கேட்டிருப்பாள். அவள் முகம் அதை அறிவித்தது.
‘ஒங்களுக்கு இது வேணுமா’ என்றாள்.
‘மனுஷாளுக்கு மனுஷாள் ஒரு ஒத்தாசை. நாம வேற என்ன பெரிசா தூக்கி குடுத்துடப் போறம்’ நான் சமாளித்தேன்.
‘சுழி சும்மா இருக்காது’
‘என்னோட படிச்சவன். ராசாராமன் இப்ப நெய்வேலில பெரிய காண்ட்ராக்டர். சித்த அவனிடம் சொல்லிப்பாப்பமே. நமக்கிதுல என்ன நஷ்டம்’
‘கஷ்டம்டா’ சொல்லி அவள் நகர்ந்து கொண்டாள்.
ரிஷிப்பிண்டம் ராத்தங்காது. நான் அன்று மாலையே காண்ட்ராக்டர் ராசாராமனைச் சந்தித்துப் பேச அவன் வீடு சென்றேன். மாளிகை போல் இருந்த வீட்டின் வாயிலில் கார்கள் லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. காவலாளியிடம் தகவல் சொல்லி அனுப்பினேன். தருமங்குடிக்காரன் நான் என்பதால் என்னை உடனே உள்ளே வரச்சொன்னார்கள். சோபாவில் உட்கார்ந்து கொண்டேன். ராசாராமன் ஆளே மாறிப்போயிருந்தான். எனக்கு அவனை அடையாளமே தெரியவும் இல்லை.
‘காபியா கூல் டிரிங்க்ஸா’
‘காபி அரை சக்கர போட்டு’
ஒரு பணிப்பெண் காபிக்கான பித்தளை டபரா டம்ப்ளர் சூடான பால் டிகாக்ஷன் சக்கரைக்கிண்ணம் எல்லாவற்றையும் ஒரு டிரேயில் கொண்டு வைத்தாள். இப்படி நான் காபி சாப்பிட்டதேயில்லை. வேண்டிய அளவு பால் டிகாக்ஷன் சக்கரை எடுத்துக்கொண்டு காபி கலந்தேன். சாப்பிட்டேன். தருமங்குடி ஊரோடு வளையமாதேவி பள்ளி பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். நான் கொளஞ்சி நகரில் ஒரு பிளாட் வாங்கிய அந்த கத்தாழை வெங்கடேசம் பிள்ளையைப் பற்றி ஆரம்பித்தேன்.
‘அவர் ஒரு முறை வந்து போனார். நான் தான் வரச் சொல்லியிருந்தேன். அவர் பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும்
‘ அப்பறம் நா சொல்ல என்ன இருக்கு. உனக்கே விஷயம் நல்லா தெரியுங்கற. அவருக்கு அவர் பிளாட்டுக்கு போக வர சின்ன பாதை விடணும். அவர் எளியவர். வேற ஒரு பிளாட் வாங்கறது கீங்கறது எல்லாம் அவராலே முடியாது. பூமி பூஜை எல்லாம் முடிச்சி வீட்டு வேல ஆரம்பிக்க போறதா என்னண்ட சொல்றாரு. எனக்கு ரொம்ப வேண்டியவரு. என்னண்ட வந்தாரு. ரொம்ப கேட்டுக் கிட்டாரு. நீதான் அவருக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணணும்’
ராசாராமன் அத்தனை பிசியாக இருந்தான். யார் யாரோ அவனிடம் போனில் பேசினார்கள். நேரில் வந்து பேசிவிட்டும் போனார்கள். எல்லாருக்கும் தக்க பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
‘நீ ரைட்டா போ. நா பாத்துகறேன். ஒனக்கு வேண்டியவர்னு சொல்லிட்ட. அந்த கத்தாழை வெங்கடேசம் பிள்ளைக்கு என்ன பண்ணணுமோ. அத நா பண்ணிடறேன்’
‘புரியல்லயே’
‘அவர் பிளாட்டுக்கு போக வர பாதை விடணும். அதானே அத நா பாத்துகறேன். அவருக்கு நா எப்படி ஒதவணுமோ அப்படி ஒதவுறேன். ஒத்தாசையா இருக்கேன். உனக்கு கவலையே வேண்டாம் விடு.’ என்றான் ராசாராமன்.
‘அப்ப நா கெளம்பறேன்’
‘பேஷா. எனக்கும் தலைக்கு மேல வேல கெடக்குது’ ராசாராமன் முடித்துக்கொண்டான். நான் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். கத்தாழை வெங்கடேசம் பிள்ளைக்குத் தகவல் சொல்லி அனுப்பினேன். அவரும் என் இல்லம் வந்தார். நெய்வேலி காண்ட்ராக்டர் ராசாராமனைப் பார்த்ததையும் அவரிடம் வெங்கடேசம்பிள்ளை வைத்த கோரிக்கையைச் சொன்னதையும் அவர் பிள்ளைக்குப்பாதை தருகிறேன் என்று உறுதி தந்ததையும் சொன்னேன்.
‘அப்ப ஒன்னும் பிரச்சனை இல்லே. போன காரியம் பழந்தான்’
‘என்னா லேசா சொல்றீங்க. ஒங்களுக்கு போக வர பாதை தர்ரேன்னு சொல்லிட்டார்’
கத்தாழை வெங்கடேசம்பிள்ளை என் இரண்டுகைகளையும் பிடித்துக்கொண்டார். தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
‘எந்த பால்ய சிநேகிதத்துக்கு ஒரு வெயிட் இருக்கத்தான் செய்யிது’
‘ஆமாங்க பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்’ என்றேன்.
‘நா ஒரு நடை அவர நேரா பாத்து தாங்க்ஸ் சொல்லிட்டு வந்துடணும்’
‘ரைட்டா போங்க. சொல்லிட்டு வாங்க’
’ எனக்கு இது பெரிய ஒத்தாசை, யாராலயும் செய்ய வைக்காது’
‘இருக்கட்டுங்க. இதெல்லாம் என்னங்க’
கத்தாழை வெங்கடேசம்பிள்ளை தனது டூ வீலரில் புறப்பட்டுச் சென்றார். ஏதோ சாதித்துவிட்டதாய் என் மனம் எனக்கு சேதி சொல்லியது. கதவின் மறைவில் ஓரமாய் ஒளிந்திருந்த மனைவி பட்டென்று வெளிப்பட்டாள்
‘இது எவ்வளவு தூரம் போவுதுன்னு பாப்பம்’
‘எது’
‘அதுதான்’ என்றாள்.
சில தினங்கள் சென்றன. திரும்பவும் கத்தாழை வெங்கடேசம்பிள்ளையின் கரும்பச்சை டூவிலர் என் வீட்டு வாயிலில் சாதுவாய் நின்றது. அவர் இறங்கி வேகமாக என் வீடு வந்தார்.
‘அய்யா கவுத்துட்டான் அந்த காண்ட்ராக்ட்காரன்’
‘என்ன புள்ள சொல்றிங்க’
‘இப்பதான் அவன் வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன். நா நீங்க சொன்ன சேதிய மனசுல வச்சிகிட்டு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாம்னுட்டு அந்த நெய்வேலி காண்ட்ராக்ட்காரன் ராசாராமனை பாக்கப் போனேன். அந்தக் குரங்கு இப்ப கோட்டானாயிட்டான். இங்க யாரும் வருல என்ன பாக்கவும் இல்லன்றான். பிளாட்ட என்னண்ட வித்துட்டு போயிடு. இல்லன்னா நீ கெடந்து சாவுன்றான். மரியாதை குடுத்து அவன் பேசுல. இங்க நிக்காத ஒத வாங்கிப்ப. ஒன்ன தொலச்சிபுடுவேன் தொலச்சி. என்ன வாடா போடான்னு பேசுறான்’ சொல்லிய கத்தாழை வெங்கடேசம்பிள்ளை கண் கலங்கினார். என் மனைவி எடுத்து வந்த செம்பு தண்ணீரை வாங்கி கட கட எனக் குடித்தார்.
‘அம்மா இப்பதான் வந்தாங்களா’ தன் முகத்தைக் கழுவிக்கொண்டார்.
‘நா பாத்துகிட்டேதான இருக்கேன். அம்மா இப்பதான் வந்தாங்க நாம பேசகிறது எல்லாம் அவுங்க காதுல எங்க வுழுவ போவுது. இன்னைக்கு நேத்தா நா பாக்குறன் எப்பவும் அப்படித்தான்’ என்றேன்.
‘அது சரி. நா இப்ப என்னா செய்யுலாம்’
‘எதுன்னாலும் பெறவு பேசிக்குவம் புள்ள இப்ப நீங்க கெளம்புங்க’ என்றேன்.
பிள்ளைக்கு ரியல் எஸ்டேட் காரர் பரிசாகக் கொடுத்த டூவீலரில் ஏறி அமர்ந்து கொண்டார். வண்டி எத்தனைக் கம்பீரமாகச் சாலையில் செல்கிறது என்பதை மட்டும் பார்த்துக்கொண்டேன்.
‘பிள்ளைக்கு வாகன யோகம்’ என் மனைவி சொல்லிக்கொண்டே பிள்ளை வைத்துவிட்டுப்போன காலி செம்பை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். நான் தான் இன்னும் உள்ளே போகாமல் நிற்கிறேன்.

