Music show on Kannadasan’s songs. March 4 evening - MYLAPORE TIMESசுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: பாரதியின் இலக்கிய வீச்சுDangers of external religiosity and hypocrisy

 

படைத்துள்ள படைப்புகளில் எல்லாம்
வாழ்ந்து கொண்டிருப்பவன்!

நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் மரணமில்லை

இந்த வரிகள் இறைவன் கண்ணன், முண்டாசுக் கவி பாரதி மற்றும் கண்ணதாசன் மூவருக்கும் பொருந்தும்.

கீதை என்பது வெறும் ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு அல்ல. கீதை வாழ்வியல் நெறிகளைக் கூறும் வழிகாட்டி. 5000 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட கருத்துகள், இன்றைக்கும் பொருத்தமாக இருப்பது எவ்வளவு சிறப்பு?

கீதையை அடிப்படையாக வைத்தே பல நீதி நூல்கள், மனித வள மேம்பாட்டு நூல்கள், வெற்றிச் சூத்திரங்கள் படைக்கப்பட்டு வந்தன – வருகின்றன – வரும். காரணம், திருக்குறள் போல, வேதங்கள் போல இருக்கும் எக்காலமும் இருக்கும் ஏற்புடைத் தன்மை.

திருவெம்பாவையில், மாணிக்க வாசகர், சிவபெருமானைப் பற்றிக் கூறும்போது,

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே,
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே,
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்,
உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம்,

என்று பாடுகிறார்.

அதாவது, உலகில் உள்ள பழமையான பொருட்கள் எல்லாவற்றினும் மேலும் பழமையானவனே! பின்னர் தோன்றிய எல்லா புதுமையான பொருள்களைக் காட்டிலும் மேலும் புதுமையானவனே! உன்னை ஆண்டவனாய்க் கிடைக்கப் பெற்ற, பெருமை வாய்ந்த உன் அடியார்களாகிய நாங்கள், உன்னுடைய தொண்டர்களை வணங்குவோம்.

பழமைக்கெல்லாம் (antiques) பழமை இறைவன் – அதே நேரம், இன்று, இப்போது, இந்த நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதுமைக்கெல்லாம் (latest invention) என்பதைத்தான், மணிவாசகர், அற்புதமாய், முன்னைப் பழம் பொருள் என்றும் பேர்த்தும் அப்பெற்றியனே என்றும் கூறி இருக்கிறார்.

இது, இறைவனே மானிடர்க்குச் சொன்ன பகவத் கீதைக்கும் பொருந்தும். கீதையில் கூறப்பட்டுள்ள ஸ்லோகங்கள் கீதையின் சாரமாகவும், வாழ்வில் தெளிவு பெற உதவும் மந்திரங்களாகவும் கருதப்படுகின்றன.
ஸ்லோகம் (6.6) – மனக் கட்டுப்பாட்டுப் பற்றிக் கூறுகிறது .
பந்துராத்மாத்மனஸ்தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜித: |
அனாத்மனஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத் |
பொருள்:
மனதை வென்றவனுக்கு, மனமே சிறந்த நண்பன். மனதை வெல்லாதவனுக்கு, மனமே மிகச் சிறந்த எதிரி.
மனம் வெளுக்கச் சாயமுண்டோ
எங்கள் முத்து மாரியம்மா
என்கிறான் பாரதி.

மனித ஜாதியில் துயரம் யாவையும்
மனதினால் வந்த நோயடா
என்கிறான் கண்ணதாசன்.

ஸ்லோகம் (2.14) மனதின் சம நிலை பற்றிக் கூறுகிறது.
மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக து:கதா: |
ஆகமாபாயினோ நித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத |
பொருள்:
குந்தியின் மகனே, குளிர்காலம், கோடைக்காலம், இன்பம், துன்பம் போன்றவை வந்து போகக்கூடியவை. அவை ஆத்மாவுடன் நிலையாக இருப்பவை அல்ல. எனவே, அவற்றை பொறுமையுடன் தாங்கிக்கொள்.

பாரதி கொஞ்சம் வித்தியாசமாய்,

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!” என்று பாடும், கவிதையின் உட்பொருளைப் பார்க்கும்போது,
‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்னும் ஆன்றோர் வாக்கு. ஒருவனிடம் பொருட்செல்வம் மிகுதியாக இருந்தாலும், மனநிறைவு இல்லையென்றால் அவன் வறியவனாகவே கருதப்படுவான். நெஞ்சில் உரமுமின்றி நினைவில் தெளிவுமின்றி நிற்பவர்களுக்கு அன்பு, அறிவு, அருள் என்னும் உடைமைகள் இருந்தாலும் அவை யாவும் பயனற்றுப் போய்விடும். ஊக்கம் நிறைந்த மனமே சிறந்த என்கிறான் வள்ளுவன்.

அதனால் மனத்தை அதன் போக்கில் போகவிடாமல், உயர்ந்த நோக்கின்படி வழிநடத்திச் செல்லும் தலைவனாக நாம் இருக்கவேண்டும். நாம் வேண்டியபடி உள்ளம் சென்றால்தான், உள்ளம் வேண்டியபடி உடல் செல்லும்; ஐம்புலன்களும் பக்குவப்படும்.

மனத்தின் தன்மையைத் தெளிவாக உணர்ந்த சித்தனான பாரதியும், ‘பேயாய் உழலும்’ மனத்தை ‘நில்’ என்று சொல்லி நிலைநிறுத்தப் பார்த்தான். ‘எனது உளமே! சஞ்சலம் தவிர்த்து சிவானந்தப் பேற்றை நாடி நாள்தோறும் சார்ந்து நிற்பாய்’ என்று அறிவுறுத்தியும் பார்த்தான். இந்தக் கட்டளையும் அறிவுரையும் உள்ளத்தை ஒன்றும் செய்யவில்லை; மனம் உழல்வதையும் நிறுத்தவில்லை.

அதனால், சிந்தையைத் தெளிவாக்க வேறொரு யுக்தியைக் கையாண்டான். ‘மனத்தைக் கனிவுடன் கூப்பிட்டுப் பார்ப்போம்; வாழ்த்துவோம்; பின்பு அதன் குறைகளைச் சுட்டிக்காட்டுவோம்; அதன் பெருமைகளையும் சொல்வோம்; இறுதியில் புத்தி புகட்டுவோம்; ஊக்கமும் கொடுப்போம்’ என எண்ணி, மனத்தின் செயல்பாடுகளை நுண்ணறிவுடன் ஆராய்ந்து செய்த ஆத்ம விசாரத்தின் விளைவாக உதித்ததுதான் அவனது ‘மனப்பெண்’ கவிதை என்றே கூறலாம்.

கண்ணதாசன்,
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
என்று பாடுகிறான்.

வாழ்வியல் நெறிகளை, கருத்துக்களை, பண்டிதர்கள் மட்டுமல்லாமல் பாமரர்களையும் படிக்க, எழுத, ரசிக்க வைத்ததில் இறைவன் கண்ணன், பாரதி, கண்ணதாசன் மூவருக்கும் மிகப் பெரிய பங்குண்டு. மூன்று பேருக்கும், அடிப்படையாக இருப்பது தேசியம் மற்றும்தெய்வீகம் . கீதை உலகின் பல நாடுகளில் போற்றப்படுவதன் காரணமும் இதுதான்.

காந்தி அடிகளும், அரசியலுக்கு ஆன்மிகம்தான் அடிப்படை என்றே பேசினாலும், தொடங்கினாலும், கீதையே வழிகாட்டி , ராம் ராம் என்றே கூறி வந்தாலும், அவரால் உடன் இருந்தோர்க்கு ஆன்மிகத்தைப் புரியவைத்து, அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. அவர் கண் முன்னாலேயே பல உயிர்கள் லட்சக்கணக்கில் பலி (பழி) வாங்கப்பட்டது என்பதே வரலாறு .

மஹாகவி மிகத் துணிவாக எழுதுகிறான்.

ஐரோப்பியர்கள் கருணையோடு இந்தியரைக் காப்பாற்றாவிட்டால் இந்தியர்கள் பாழாய்ப் போய்விடுவார்கள் என்ற பயம் சிறிதும் இருக்க வேண்டிய நியாயமில்லை. ஒருக்கால் ஐரோப்பியரை இந்தியாவை விட்டு நீக்கிய பின், வேறு ஜாதியார்களுக்கும் இந்தியர்களுக்கும் சண்டைகள் உண்டாகி,  அதனால் இந்திய ஜனங்கள் மாண்டுபோய் விட்டாலும் கூட அப்படி மாண்டு வீரஸ்வர்க்கம் பெறுவதுதான் பதினாயிரம் மடங்கு மேலானதேயன்றி இன்னொரு ஜாதியார்கள் இந்தியர்களைப் பார்த்துக் கோழைகள் யென்றும், பயந்தவர்கள் யென்றும், ஆட்டுக்குட்டிகள் யென்றும் மண்டை யென்றும், கல்லென்றும் கூறி அவமதிப்பதிப்பதை(க்) காதால் கேட்டுக் கொண்டு சிறிதும் வெட்கமின்றி நடைபிணங்களாய் நடமாடித் திரிவது ஒருபொழுதும் பொருந்தாத காரியமாகும்”

(இந்தியா பத்திரிகை 29.12.1906)

இது கீதையில், அர்ஜுனனுக்கு, கண்ணன் அருளிய பகவத் கீதையின் சாரம் ஆகும்.
கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் , கண்ணன், அர்ஜூனனிடம் இதே கருத்தைக் கூறுகிறான்.

கண்ணதாசன்,

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே

வளரும் வளரும் என்றே
காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே
பார்த்திருந்தோம்

மலர் முடிந்துபிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன்
பழம் பறிப்போமே

உழவும் தொழிலும்
இங்கே
நாம் படைத்தோம்
உறவும் சுவையும்
என்றும்
நாம் வளர்த்தோம்

பணம் படைத்த
மனிதரைப் போல்
பஞ்சு மெத்தை
நாம் பெறுவோம்
மாடி மனை
வீடு கட்டி
வாழ்ந்திருப்போமே

நெஞ்சில்
ஒரு களங்கமில்லை
சொல்லில்
ஒரு பொய்யுமில்லை

வஞ்சமில்லா
வாழ்க்கையிலே
தோல்வியுமில்லை

என்று பாடுகிறான்.

கண்ணன் அர்ஜூனனிடம் கூறுகிறான் –

சுயநல மனிதர்களை வென்றே ஆக வேண்டும்

பாரதி கூறுகிறான் –
பூமியில் யாருக்கும் இனி அடிமை செய்யோம்

கவியரசு எழுதுகிறான் –

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால்
வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்
அனைவரையும்
வாழ வைப்போமே

மூன்று பேரின் இந்த வரிகள் எல்லாமே ஒரே புள்ளியில் பயணிக்கின்றன. மானுடத்தின் பெருமையும் கடமையும் இங்கே பகிரப்படுகின்றது.

அடுத்த வாரம் சந்திப்போம்.