பரமனும் அவன் மனைவி பார்வதியும் நகரத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சொகுசான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்கள். எட்டுத் தளங்கள் உயரம், ஒவ்வொரு தளத்திலும் நான்கு வீடுகள். காலை, மாலை—எப்போதும் லிஃப்ட் கதவுகள் திறந்து மூடிக் கொண்டே இருக்கும். ஆனாலும், மனிதர்களுக்கிடையிலான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தன.
பரமன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தான். காலை அவசரமாகக் கிளம்பி, இரவு சோர்வுடன் வீடு திரும்புவான். பார்வதி வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வேலை செய்தாள். இருவரும் சேர்ந்து குடியிருப்பின் வசதிகளை ரசித்தாலும், எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள், அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது. “அவரவர் வேலை அவரவர்” என்ற எண்ணமே அந்தக் குடியிருப்பின் அடையாளமாக இருந்தது.
ஒரு நாள் பரமனின் தாய் வாணி, கிராமத்திலிருந்து மகனைப் பார்க்க வந்தார். காலை நேரத்தில் குடியிருப்பின் நீண்ட வழித்தடங்களில் நடக்கும்போது, அவளுக்கு அது ஒரு பெரிய பள்ளிக்கூடத் தாழ்வாரம் போலத் தோன்றியது. ஆனாலும், பள்ளிக்கூடம் போல சத்தமோ, சிரிப்போ இல்லை. எல்லாம் அமைதியாக, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்குள் மூழ்கியிருந்தார்கள்.
“இந்த வீடெல்லாம் ஒரே மாதிரியா இருக்கு,” என்று வாணி பார்வதியிடம் சிரித்தப்படி சொன்னாள்.
“ஆமாம் அம்மா, எல்லாம் ஒரே மாடல் வீடுகள்,” என்று பார்வதி பதிலளித்தாள்.
அந்த நாளிலிருந்து வாணி, குடியிருப்பை கவனிக்கத் தொடங்கினாள். யார் எப்போது வெளியே போகிறார்கள், யார் எப்போது வருகிறார்கள் என்று. அப்போது தான் அவள் ஒரு விஷயத்தை கவனித்தாள். தினமும் காலை ஒரு இளம் மருத்துவர், வெள்ளை கோட் அணிந்தபடி, நேராக எதிர் வீட்டிலிருந்து வெளியேறுவார். மாலை நேரம் மீண்டும் அதே கோட்டுடன் உள்ளே நுழைவார்.
“பரமா,” என்று ஒருநாள் வாணி மகனை அழைத்தாள், “எதிர் வீட்டில யாருக்காவது உடம்பு சரியில்லையா? தினமும் டாக்டர் வர்றாரே.”
பரமன் சற்று யோசித்தான். “எனக்குத் தெரியல அம்மா. நாம பேசினதே இல்லையே” என்றான்.
அவன் அந்தக் கேள்வியை பார்வதியிடம் கேட்டான். அவளும் தலையசைத்தாள். “நான் கூட கவனிச்சேன். ஆனா யாருன்னு தெரியாது. இங்க யாரும் யாரைப் பற்றியும் அதிகம் பேச மாட்டாங்க.”
வாணி சிரித்தாள். “நீங்க எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கீங்க. பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறது கூட இங்க பழக்கம் இல்லையா?”
பார்வதி சற்று விளையாட்டாக, “அப்படின்னா, நீங்களே போய் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிச்சுட்டு வரலாமே, அம்மா,” என்றாள்.
அடுத்த நாள் தீபாவளி. பார்வதி வீட்டில் செய்த இனிப்புகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்தாள். வாணி அதை எடுத்துக்கொண்டு, மனதில் சிறு தயக்கத்துடன் எதிர் வீட்டின் கதவின் முன் நின்றாள். கிராமத்தில் இருந்தால், இப்படிப் போய் பேசுவது இயல்பான விஷயம். ஆனால் இங்கு—ஒரு அடுக்குமாடியில்—அது ஒரு சின்ன சாகசம் போலத் தோன்றியது.
மெதுவாக கதவைத் தட்டினாள்.
கதவு திறந்தது. நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி சிரித்த முகத்துடன் நின்றார்.
“வணக்கம்,” என்று வாணி இனிப்புத் தட்டை நீட்டினாள், “நான் எதிர் வீட்டில இருக்கிற பரமனோட அம்மா. தீபாவளி வாழ்த்துகள்.”
“வாழ்த்துகள்” என்று அந்தப் பெண்மணி மகிழ்ச்சியுடன் தட்டை பெற்றுக்கொண்டார். “உள்ள வாங்க”.
வாணி உள்ளே நுழைந்ததும், வீட்டின் அமைதி அவளைக் கவர்ந்தது. எளிமையான அலங்காரம், சுத்தம், மயான அமைதி.
சற்றுத் தயங்கியபடி, வாணி கேட்டாள், “ஒரு விஷயம் கேட்கலாமா? தினமும் ஒரு டாக்டர் வர்றதைப் பார்த்தேன். உங்க வீட்டுக்காரர் கூட காணோமே ?. யாருக்காவது உடம்பு சரியில்லையோன்னு நினைச்சேன்.”
அந்தப் பெண்மணி சிரித்தாள். “இல்லை, அம்மா. அவன் எங்களோட மகன் தான். மருத்துவம் படிக்கிறான். கல்லூரிக்குப் போயிட்டு வரும் போது கோட் போட்டே வருவான். அதான் அப்படித் தோணிருக்கும். வீட்டுக்காரர் லாப்டாப்ல எப்பவும் எதையோ நோண்டிட்டு இருப்பாரு. டீ சமயம் வெளிய வருவாரு. இருங்க டீ எடுத்திட்டு வரேன்.”
வாணியின் முகத்தில் ஆச்சரியம். “அடடா! நாங்க எல்லாம் வேற மாதிரி நினைச்சோம்.”
“இங்க எல்லாம் அப்படித் தான்,” என்று அந்தப் பெண்மணி மென்மையாகச் சொன்னாள். “யாரும் யாரோட வாழ்க்கைக்குள் அதிகம் தலையிட மாட்டாங்க. அவரவர் பாதையிலேயே போறாங்க வர்றாங்க . இதெல்லாம் அமெரிக்கா கலாச்சாரம். இப்ப நீங்க கூட முன்னாடி சொல்லிக்கொள்ளாம வரது லைக் பண்ண மாட்டாங்க. போன்ல அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துட்டு தான் வரணனுமாம். ஹாய்-ன்னு சொல்லிக்கிட்டு தடாலடியா வந்திடக்கூடாது. காலம் மலையேறிப் போச்சு. ஒரு சிலர் கல்யாணம் கூட பண்ணிக்காம கணவன்-மனைவி போலாவவும் வாழ்வானுவாங்கா .”
வாணி அதிர்ந்து போனாள் . மேற்கொண்டு அவளால் எதுவும் பேச முடியவில்லை. வாணி வெளியே வந்தபோது, அவளது மனம் எதையோ அடித்தாற் போல் ஒரு விதமாக இருந்தது. என்னத்தை சொல்வது, எதை இழந்து எதை வாங்குகிறோம் ?. கிராமத்தில் இருந்தபோது, ஒவ்வொரு வீட்டின் கதையும் தெரிந்திருக்கும். யாருக்கு என்ன பிரச்சனை, யார் எப்போது சிரித்தார்கள், அழுதார்கள் —எல்லாம் தெரியும். ஆனால் இங்கு… அமைதியும் தனிமையும் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கியிருந்தது.
வீட்டுக்குத் திரும்பியதும், பரமனும் பார்வதியும் ஆர்வமாகக் கேட்டார்கள். வாணி நடந்ததைச் சொன்னாள்.
“இது தான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பண்பாடு,” என்று முடித்தாள்“.
அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கிட்டு வாழ்றது. தெரியாதது மர்மம் இல்ல, மரியாதை.
பரமனும் பார்வதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

