“அம்மா, திரும்பத் திரும்ப கல்யாணம், கல்யாணம்னு போர் அடிக்காதே. இந்தத் தடவை நான் சென்னைக்கு வருவது யூனிவர்சிட்டியிலே என்னுடைய பிஎச்டி  கைடை சந்திக்கவும் வைவா-பிரசன்ட்டேஷனைச் செய்யவும் மட்டும்தான். ஒரு வாரம்தான் லீவு. என் கல்யாணத்தைப் பற்றி என்னுடைய தாட்ஸ் எல்லாம் உனக்கு பல தடவை சொல்லியிருக்கேன். நாளைக்குக் கிளம்புறேன். பிளைட் வெள்ளிக்கிழமை காலை சென்னை வரும். அப்பாவிடம் ஏர்போர்ட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லு. நானே வந்துடுவேன். அவர் அதிகமா டிரைவ் செய்யாம பார்த்துக்கோ,”

என்று வீடியோ காலை முடித்தாள் காயத்ரி. “ஓகே, பை!”

காயத்ரி மெட்ராஸ் ஐஐடியில் படித்து, பின்னர் அமெரிக்காவின் எம்ஐடியில் படித்து, இப்போது கூகிளின் தலைமையகத்தில் பெரிய பதவியில் இருக்கும் புத்திசாலிப் பெண். வயது 30-ஐத் தாண்டியிருந்தாலும், திருமணம் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவள். தன் வேலை, படிப்பு ஆகியவற்றை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் அறிவு ஜீவி. இப்போது சென்னை வரத் திட்டமிட்டு, அம்மாவுக்கு இந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறாள்.

லலிதா, காயத்ரியின் அம்மா, தன் மகளின் படிப்பையும் பதவியையும் பற்றி உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தாலும், கடந்த சில வருடங்களாக கல்யாணம் வாழ்க்கைக்கு அவசியமில்லை என்ற காயத்ரியின் தீர்மானத்தால் மனம் வருந்திக்கொண்டிருப்பவர். பல கோவில்களுக்குச் சென்று வேண்டிக்கொண்டிருப்பவர். காயத்ரியின் தந்தை சுவாமிநாதன், மகளின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருப்பவர். இந்த இருவருக்கிடையில் மாட்டிக்கொண்டு, லலிதா தினமும் பிரார்த்தனைகளிலும் ஆன்லைன் ஸ்லோக வகுப்புகளிலும் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

******

சிகாகோ சர்வதேச விமானநிலையத்தில் செக்கிங் கவுண்டரில், தன் செல்ஃபோனில் இருக்கும் போர்டிங் கார்டின் க்யூஆர் கோடை காட்டி நுழைகிறான் வெங்கி என நண்பர்களால் அழைக்கப்படும் வெங்கட் ராகவன். இன்னும் போர்டிங்கிற்கான அழைப்பு வரவில்லை. சற்று ரிலாக்ஸாக உட்கார்ந்து, போனில் இன்ஸ்டாவை மேய்ந்துகொண்டிருக்கிறான்.

திடீரென, “நான் சர்ப்ரைஸாக இந்தியா போய் நின்றால், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்படியிருக்கும்?” என்று கற்பனை செய்து சிரித்துக்கொள்கிறான். பிளைட் சரியாகச் சென்றால், விடியற்காலை நேரத்தில் அவர்களுக்குத் தெரியாமல் கேட் ஏறி மாடிக்குப் போய், திடீரென படியிறங்கி, “ஹை அம்மா, அப்பா! ஹேப்பி 50த் அனிவர்சரி!” என்று சொன்னால் எப்படியிருக்கும்?” என்று நினைத்துப் புன்னகைக்கிறான். அவனது பெற்றோரின் 50-வது திருமண நாளுக்கு சர்ப்ரைஸாகச் செல்வது அவனது திட்டம். மேலும், தன் ப்ரொமோஷன் செய்தியையும், தன்னைத் திருமணம் செய்யது கொள்ள வற்புறுத்தும் பெற்றோருக்கு அதற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப் போவதையும் சொல்லத் திட்டமிட்டிருந்தான்.

சரியான நேரத்தில் கிளம்பிய விமானத்தில், எதிரிலிருக்கும் திரையில் ஒரு படத்தைத் தேர்வு செய்து, ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு சீட்டில் சாய்ந்தான் வெங்கட். பலரைப் போல, எதைச் செய்தாலும் ஒரு கண்ணை போனில் வைத்திருப்பது வெங்கிக்கும் இப்போது அனிச்சையாகிவிட்டது. திடீரென, அவனது ஆஃபீஸ் எச்ஆரிடமிருந்து வந்த மெசேஜைப் பார்த்து அதிர்ந்து போனான். சில மணி நேரங்களுக்கு முன் வந்திருந்த அந்தச் செய்தியை அவன் பார்க்கத் தவறியிருந்தான். செய்தி இதுதான்: “பயணத்தைக் கேன்ஸல் செய்துவிட்டு ஆஃபீஸுக்கு வா. யூஎஸ் கவர்ன்மென்ட் சில அவசர உத்தரவுகளைப் போட்டிருக்கிறது. உன் விசாவில் இப்போது இந்தியா போனால் திரும்பி வர முடியாது போலிருக்கிறது.”

விமானம் ஏறுவதற்கு முன் வாட்ஸ்அப்பைப் பார்த்திருந்தால் கேன்ஸல் செய்திருக்கலாம். “இப்போ என்ன செய்ய?” என்று குழம்பிப்போனான் வெங்கி. கூகுளில் அது என்ன செய்தி என்று தேடினான். அதிபர் ட்ரம்பின் அறிவிப்பை முழுவதும் படித்து திடுக்கிட்டான். அவனது விசா வகையைச் சேர்ந்தவர்கள், எங்கிருந்தாலும் அடுத்த நாள் நியூயார்க் நேரம் இரவு 12 மணிக்குள்   அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும் என்று சொன்னது  அந்த அறிவிப்பு. .

அவனது எம்பிஏ படிப்பும், முடிவுகளை எடுக்க அவனது நிறுவனம் தந்த பயிற்சிகளும் இந்த இக்கட்டான சூழலில் உதவின. அவன் பயணிக்கும் விமானம் பிராங்க்ஃபர்ட் வரைதான். அங்கிருந்து வேறு விமானம் மாறி சென்னை செல்ல வேண்டும். லேப்டாப்பைத் திறந்து, பிராங்க்ஃபர்ட்டிலிருந்து நியூயார்க்குக்கான விமானங்களைத் தேடி, கிடைத்த விமானத்தில் டிக்கெட் புக் செய்தான். கட்டணங்கள் கன்னாபின்னாவென உயர்ந்திருந்தன. வேறு வழியில்லாததால் புக் செய்தான். தான் பயணிக்கும் விமான நிறுவனத்துக்கு, எதிர்பாராதவிதமாக அமெரிக்கா திரும்ப வேண்டியிருப்பதால் இந்தப் பயணத்தை பிராங்க்ஃபர்ட்டுடன் நிறுத்திக்கொள்வதாகவும், இது குறித்து அங்குள்ள விமான அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் மெயில் அனுப்பினான். தன் கம்பெனி எச்ஆருக்கு, நியூயார்க் ஆஃபீஸுக்கு வருவது குறித்த விவரங்களுடன் செய்தி அனுப்பினான். பிராங்க்ஃபர்ட் விமானநிலையத்துக்குச் செல்லும் நேரத்தைப் பலமுறை பார்த்து தவித்தபடி பயணத்தைத் தொடர்ந்தான்.

பிராங்க்ஃபர்ட் விமானநிலையம் மிகப் பெரியது. ஒரு டெர்மினலிலிருந்து மற்றொரு டெர்மினலுக்கு டிரைவர் இல்லாத மோனோ ரயில் மூலம் செல்லும் அல்ட்ரா மாடர்ன் வசதி உள்ளது. எப்போதுமே ட்ரான்ஸிட் பயணிகளால் நிரம்பி வழியும் அந்த விமானநிலையத்தில் அன்று அதுவே திணறும் அளவுக்கு கூட்டம். பல இந்திய முகங்கள். வெங்கட் போலவே பலர் அமெரிக்காவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த வெங்கிக்கு, இந்தச்   ஷாக்கிங்கான சர்ப்பிரைஸ்.  பெரும் கவலையை ஏற்படுத்தியது. இப்போது இரவு 8:30 மணி. அவனது நியூயார்க் விமானம் மறுநாள் காலை 4:30-க்குத்தான். அதுவரை விமான நிலையத்திலேயே நேரத்தைக் கழிக்க வேண்டும். அவனது கிரெடிட் கார்ட்களுக்கு தூங்கும் வசதியுடன் லவுஞ்ச் அணுகல் இருந்தாலும், எதிலும் இடமில்லை. எனவே, ஒரு ஸ்டார்பக்ஸ் ஸ்டாலுக்கு முன் அமர்ந்து, லேப்டாப்பில் அந்த அதிர்ச்சியான செய்தியின் பின்னணிகளைப் படித்து முடித்தான்.

“அப்பா, உங்கள் 50-வது அனிவர்சரிக்கு சர்ப்ரைஸாக இந்தியா வந்துகொண்டிருந்தேன். ஆனால், ஆஃபீஸிலிருந்து ஷாக்க்கிங் சர்ப்பிரைஸாக ஒரு   செய்தி வந்ததால் அமெரிக்காவுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். விபரமாக நாளை பேசுவோம் ,” என்று அப்பாவுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருந்தான்.

அப்போது, யாருடனோ போனில் பேசிக்கொண்டே வந்த ஒரு பெண் எதிரில் உட்கார்ந்தாள். “அதான் சொல்றேன்ல, அம்மா, இது யாரும் எதிர்பார்க்காதது. எல்லோரும் பதறிக்கொண்டிருக்காங்க. எனக்கு எதுவும் பிரச்சினையில்லைன்னாலும், இந்த முக்கியமான கட்டத்தில நான் ஆஃபீஸ்ல இருக்கணும். இப்பவே வீடியோ கால்கள் ஆரம்பிச்சுடுச்சு. கவலைப்படாதே, அடுத்த மாசம் அல்லது கிறிஸ்மஸ் போது வர்றேன்.”

தமிழ் குரல் கேட்டு, “இதுவும் நம்ம கேஸ் மாதிரி இருக்கே,” என்று நினைத்த வெங்கி, “ஹலோ, தமிழா?” என்று கேட்டான். தலை நிமிர்ந்த காயத்ரி, “ஆமாம், நீங்க?” என்று கேட்க, “ஐ ஆம் வெங்கி,” என்று கைகுலுக்க கையை நீட்டினான்.

வெங்கி ஆர்டர் செய்த காஃபி லாட்டே வந்ததும், “எனக்கும் அதுதான் பிடிக்கும்,” என்று காயத்ரியும் ஆர்டர் செய்தாள். காஃபி வந்தபின், இருவரும் பேச ஆரம்பித்தனர். காஃபியில் தொடங்கிய பேச்சு, அவர்களது கம்பெனிகள், படிப்பு, ட்ரம்பின் அரசியல், தொழில்களின்நிலை, ரஜினிய்ன் கூலி படம்  என எல்லாவற்றையும் சுற்றி சுழன்றது. காயத்ரியும் நியூயார்க் சென்று தன் ஆஃபீஸில் ரிப்போர்ட் செய்யத் திட்டமிட்டிருந்தாள். இருவரும் ஒரே விமானத்தில் பயணிக்கபோவது தெரிந்ததும் அவர்களின் பேச்சு இன்னும் நெருக்கமாயிற்று  . பேச்சு இரவு முழுவதும், காலை 4 மணி வரை தொடர்ந்தது. இடையில், “ஒரு சின்ன வாக் போலாமா?” என்று விமானநிலையத்திலேயே இணைந்து நடந்தனர்.

ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொள்ள சில மணி நேரப் பேச்சு போதுமா? இறைவன் படைப்பில் மனிதனும் அவனது மனமும் ஒப்பற்ற கருவிகள். பல காலம் ஒத்திப்போட்ட விஷயங்களை உடனே முடிவு செய்யும் வலிமையும், முடிவு செய்யப்பட்டவற்றை சட்டென மாற்றும் சக்தியும் பெற்ற அதிசயமான கருவி மனித மனம். அது. எப்போது, எப்படி இயங்கும், மாறும் என்று யாராலும் யூகிக்க முடியாது. காலையில் விமானம் ஏறும் முன், அவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

“அம்மா, உனக்கு நிம்மதியளிக்கும் ஒரு நியூஸ். உங்கள் மகள் கல்யாணம் செய்யப்போறா. நாளை ஊருக்குப் போனவுடன் விவரமா பேசுறேன். அதுவரை யார்கிட்டயும் டமாரம் அடிக்காதே. உன் பெருமாளுக்கு மட்டும் வேணா சொல்லிக்கோ,” என்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பிவிட்டு, காயத்ரி போனை ஃபிளைட் மோடில் போட்டாள்.

“ஹலோ அப்பா, நான் சிகாகோ போனவுடன் விவரமாப் பேசுறேன். இப்போதைக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ்: உங்கள் மகன் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கான். அவள் யார்னு விவரம் நாளை. அதுவரை அம்மாவும் நீங்களும் பொறுமையா இருக்கணும்,” என்று மெயில் அனுப்பியபின்  லேப்டாப்பை மூடிய வெங்கி ,காயத்ரியுடன் போர்டிங் கேட்டை நோக்கி நடந்தான்.

அவர்களது கைகளின் விரல்கள் இணைந்திருந்தன.

திருமணங்கள் சொர்க்கத்தில் மட்டும் நிச்சயமாவதில்லை; யூஎஸ் கவர்ன்மென்ட்டின் அதிரடி அறிவிப்பால் விமானநிலையங்களில் கூட நிச்சயமாகின்றன.