
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
2026 மே மாதத்துக் கதைகளில் பரிசுக்குரிய படைப்பாக நடுவர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் தேர்ந்தெடுத்த கதை
மூடிய சாளரம் – எம்.கோபாலகிருஷ்ணன் – காலச்சுவடு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இம்மாதம் வெளிவந்த கதைகளில் எனக்குப் பிடித்த சில கதைகள்
1. பிறப்புச் சான்றிதழ் ஆசிரியர் : உஷாராணி சம்பந்தன் கல்கி
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே கயவன் ஒருவனால் கர்ப்பமான வள்ளி என்னும் பெண் பிடிவாதமாக படிப்பைத் தொடர்ந்து +2 வரை படித்து வேலைக்குச் சென்று மகனை ஆளாக்குகிறாள். அவனுக்கு திருமணம் பேசச் செல்லும்பொழுது பெண் வீட்டார், “பையனின் தந்தையின் பெயரைக் கூட சொல்ல மறுக்கிறீர்களேே? பத்திரிகையில் போட அப்பா பெயர் வேண்டாமா?” என்று கேட்கிறார்கள். வள்ளியின் தாய், “அவந்தான் அப்பா என்று எங்கள் குல சாமிதான் வந்து சொல்ல வேண்டும் என்று சொல்கிறாள். அப்போது பெண் வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி, “உங்களுக்கு கோலி நட்ராஜ் என்று ஒருத்தரை தெரியுமா? இந்தப் பையன் அப்படியே அவனைப் போலவே இருக்கிறான்” என்று கேட்கிறார். அந்த கோலி நாட்ராஜ்தான் உண்மையில் அந்தப் பையனின் தந்தை.அவனுடைய பிறப்பிற்க்கு சாட்சி கிடைத்து விடுகிறது. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல, ஆனால் அதை வெளிப்படையாக சொல்லாமல் உணர்த்தியிருக்கும்் கதை. கதை எழுதப்பட்ட விதம் சிறப்பாக இருந்தது.
2. தாய் பிறந்தாள் ஆசிரியர்: சத்தியப்பிரியன் – குமுதம்
குழந்தைக் கண்ணனுக்கு பாலூட்டுகிறேன் என்று முலைப்பாலிலேயே விஷத்தைக் ஊட்டிய் பூதனாவின் கதை. அவளுக்குள் இருந்த தாய்மைக்கான ஏக்கம், முதல்முறையாக தாயாகி பாலூட்டிய தான் அந்தக் கோலத்தில் இறக்க விரும்பாமல் பூதனாவாக இறக்க வேண்டும் என்ற வரத்தை இறைவனிடம் கேட்டுப் பெறுகிறாள் என்ற அழகான கற்பனை.
3. மானிக்வின் பொம்மைகள் ஆசிரியர்: R. சீனிவாசன் – நடுகல்
வயது ஆக ஆக சிற்றின்ப ஈடுபாடு குறைந்து அறிவு முகிழ வேண்டும் என்பதை திருநங்கை மற்றும் ஜவுளிக்கடைகளில் வைக்கப்படும் ஆண்,பெண் பொம்மைகளை உதாரணமாகக் காட்டி வித்தியாசமாக எழுதப் பட்டிருக்கும் கதை. சொல்லப்பட்ட விஷயமும், சொன்ன விதமும் சிறப்பு.
4. பழையன கழிதலும் ஆசிரியர் – சித்ரூபன் – தினமணிகதிர்
நம் மனதில் மண்டிக்கிடக்கும் வன்மம், பகையுணர்ச்சி இவைகளை விட்டொழிக்க வேண்டும் என்னும் பாடத்தை ஒரு முதியவர் ஒரு இளைஞனிடம் கற்றுக் கொள்கிறார் என்பதை சுவைபட சொல்லியிருக்கும் சிறுகதை. கதையின் துவக்கத்தில் அந்த முதியவருக்கும், இளைஞனுக்கும் இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமையை விவரித்திருக்கும் விதம் சுவாரஸ்யம்.
5. காதல் 2.0 ஆசிரியர்: புவனபாரதி, குமுதம்
இன்றைய இளைய தலைமுறையினருக்கு காதல் என்பது என்ன? அதை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள்? என்பதை விறுவிறுப்பான நடையில் ரசிக்கும் விதமாக சொல்லியிருப்பத கவர்கிறதுு.
6. கை நிறைய கல்கண்டு ஆசிரியர்: சுப்ரபாலன், கல்கி
சிறு வயதில் ஒரு கல்யாணத்தில் தட்டில் வைக்கப்பட்டிருந்த கல்கண்டை எடுக்கப் போனபொழுது ‘கூடாது’ என்று பார்வையாலேயே தடுத்த அம்மாவின் கண்டிப்பினால் அது தவிர்க்கப்படுகிறது. வயதாகியும் கூட திருமணங்களில் வைக்கப்பட்டிருக்கும் கல்கண்டுகளை தொட்டதில்லை. ‘யாராவது எதாவது தந்தால் பக்கி மாதிரி வாங்கிக்கொள்ளக் கூடாது’ என்ற அம்மாவின் கண்டிப்புதான் பொதுவாழ்விலும் தன்னை நேர்மையாக நடந்து கொள்ள வைத்ததோ என்று நினைக்கிறார். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர் சுவை அறியும் திறனை இழக்கிறார். அதை மீட்டுத் தருகிறது அம்மாவைப் போலவே சுட்டும் விழிச் சுடர் கொண்ட ஒரு சிறுமி தரும் கல்கண்டு. கல்கண்டு போல இனிக்கும் நடை!
7. மூடிய சாளரம் ஆசிரியர்: எம்.கோபாலகிருஷ்ணன், காலச்சுவடு
என் பார்வையில் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டு, காலச்சுவடு பத்திரிகையில் வெளியான மூடிய சாளரம் என்னும் கதையே சென்ற மாதத்துக் கதைகளில் பரிசுக்குரியது.
வாழ்க்கையில் நாம் பெரிதாக கருதும் பந்தம், பாசம் போன்றவை எப்படி அர்த்தமற்றதோ அப்படியே வைராக்கியம், பழிவாங்குதல் போன்றவைகளும் அர்த்தமற்றவைகளே என்பதை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும் கதை. கதை மாந்தர்கள், அவர்களின் குணங்கள், உரையாடல்கள் எல்லாமே மிகவும் இயல்பாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
இந்த வாய்ப்பை எனக்குத் தந்த குவிகம் ஆசிரியக் குழுவினருக்கு என் நன்றிகள்.
