குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை மாலைகளில் நான் ஆலோசிக்கப் போவதுண்டு. அன்று, ஒருவருக்கு மனச் சிக்கல் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகித்து அறிமுகம் செய்ய என்னை அழைத்தார் மருத்துவர்.
கன்னத்தில் பழைய வடுக்கள் பல. புதிதாகவும் சில. பதிமூன்று வயதான அனில் என்னைப் பார்த்தான்.
அழைத்து வந்த ஆசிரியர் சென்றதுமே தம் தந்தை தீபக்கும், தாயார் ரூபாவும் பிரிய முடிவானதாகச் சொன்னான். அவர்கள் விவாகரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். தமக்குக் குற்ற உணர்வுடன் தவிப்பும் மன வேதனையும் உள்ளதாகக் கூறினான்.
பிள்ளைகளுக்கு விவாகரத்து வேதனையே. மன அழுத்தம் நேரிடலாம், உணர்வு மற்றும் நடத்தைப் பிரச்சினை (emotional-behavioral problems) உண்டாக்கலாம்.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க மனம் வரவில்லை என்றான். அப்பாவைப் போலவே இருப்பதால் தாயாருக்கு அவனுடைய முகச் சாயல் பிடிக்கவில்லை. தயங்கியபடி தந்தையைப் பிடிக்கும் என வேதனையுடன் பகிர்ந்தான்.
அனில் பிறந்ததிலிருந்து வீட்டினர், உறவினர், நண்பர்கள், பார்ப்போர் அனைவருமே “அதிருஷ்டம்! அப்பாவை உரித்து வைத்திருக்கிறான்” என்று எப்பொழுதும் சொல்வார்களாம். கேட்கும் போதெல்லாம் அனில் பெருமைப்படுவான். அப்பா மீதான அன்பு ஆழமானது! மதிப்பும் கூடியது.
சமீபத்தில் இந்த நிலை மாறியது! விவாகரத்து கோர்ட்டில் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு வருடமாக, ரூபா அனிலைப் பார்க்கும் போதெல்லாம், “தீபக்கின் நகல் நீ. அப்படியே உங்க அப்பா சாயல். பார்க்கவே வெறுப்பாயிருக்கு. பார்க்கப் பிடிக்காத சாயல்!” எனச் சொல்லும் தோரணை தவிப்பைத் தருகிறது என்றான். பெருமளவு அவமானம் பொங்கியதாகக் கூறினான்.
மனதிற்குள் அப்பாவைப் பிடிக்கும். அவருடைய கோட்பாடுகளைப் பின்பற்றினான். யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாத உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொள்வானாம்.
அனிலின் மனக் கசப்பை, சுயப் புரிதலில் பெரிய பாதிப்பைக் கணிக்க முடிந்தது.
அனிலின் நிலைமையை எரிக் எரிக்சன் (Erik Erikson) என்ற உலகம் போற்றும் சிறந்த மனோதத்துவ ஆய்வாளரின் விளக்கத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். அவருடைய கருதுகோளில் (theory), பிறந்ததிலிருந்து முதுமைவரை நிகழும் உணர்வு-சமூக வளர்ச்சியை எட்டுப் பிரிவாகப் பிரித்து, வளர்ச்சிக்குச் சாதகமானவற்றையும் அதில் முரண்பாடு நேரும் காரணிகளையும் வர்ணித்திருக்கிறார்.
இளம் பருவத்தினருக்கு (Adolescent) இந்த வளரும் கட்டம் தம் அடையாளத்தை (Identity) கண்டுகொள்ளும் காலகட்டமாகும். அனில் போன்ற சூழலைச் சந்திப்போருக்கு இடையூறு நேர்வதால் சுய அடையாளத்தில் குழப்பம் (Role Conflict) நேரிடும். ஆனாலும், இதிலிருந்து சுதாரித்துக் கொள்ளத் தகுந்த சூழலும் நபர்களும் வாழ்வில் வந்ததுமே இது மாறும் என ஆசுவாசத்துடன் எரிக்சன் கூறியுள்ளார்! யாரும் எந்த வயதிலும் மாற்றிக் கொள்ள முடியும்!
முகச்சாயல் மட்டுமின்றி தந்தையின் பல குணாதிசயங்களும் உள்ளதென்று அம்மாவும், பாட்டியும் உதாசீனப் படுத்துவதால் அவற்றை மாற்றி விட அனில் முயன்றான். உள்ளுக்குள் தந்தை மேலான பாசம் இச்செயலின் மீது கேள்வி எழுப்பியது. மனம் போராடியது. முயற்சிகள் தடைப்பட்டது.
முகத்தைப் பார்க்க ரூபா மறுப்பது அவஸ்தைப் படுத்தியது. தன் மேல் கோபம் பொங்கியது. தவிப்பைப் போக்குவதற்கு முகத்தைக் கீறிக் கொண்டான். அப்போதெல்லாம் அப்பாவைக் காயப் படுத்துவது போலத் தோன்றுகிறது என்றான். குற்ற உணர்வு மனதை வாட்டியது. இந்தச் செயலும் ரூபாவைச் சமாதானம் ஆக்கவில்லை. அம்மாவை வெறுக்கும்படி மனம் அழும் என்றான். ஏனெனில் அம்மா அப்பாவைச் சந்திக்க விடவேயில்லை.
அம்மா மீண்டும் மீண்டும், “அப்பாவிற்கு உன் மேல் பாசம் இருந்தால் வந்திருப்பாரு. இப்படியெல்லாம் ஆக விடுவாரா? தீபக் உன்னை வெறுக்கிறான்” என்று சொல்வது குழப்பம் அளித்தது. அனில் பார்த்ததில், தீபக் கூறுவதை மறுத்து ரூபா தம் தாயார் சொல்வதை மட்டும் எடுத்துக்கொள்வாள். அப்பா எதில் உதவ முன்வந்தாலும் ரூபாவின் தாயார் அதை ஏற்க மறுப்பார். அம்மா-அப்பாவின் விவாதங்கள் உச்சக் குரலில் போகும். சண்டை நடக்கையில் தாம் பயந்திருப்பதைக் கூறினான் அனில். முடிவில் எப்போதுமே அம்மா தம் தாயார் கூறுவதைத்தான் ஏற்றுக்கொள்வாள் என விளக்கினான்.
குறைபாடுகளை வரிசைப்படுத்தி, அனிலையும் ஆமாம் சொல்ல வற்புறுத்துவாள். என்ன செய்வதென்று தெரியாமல் இருண்ட நிலையை வர்ணித்தான் அனில்.
பெற்றோரின் மனஸ்தாபங்களை ஆறு வயதிலிருந்து அனுபவிப்பு.
இந்த அவலநிலையைத் தவிர்க்கவே மனநலம் சார்ந்த நாங்கள் குழந்தைகளுக்கு முன் விவாதமும் இழிவான சொற்களும் பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பரிந்துரைப்பது.
பாட்டியோ “உனக்காகத் தான் இதைப் பொறுத்துக்கொள்கிறாள் ரூபா” என்ற விமர்சனம். தன்னால் அவமானம்! தனிமைப்படுத்தியதை உணர்ந்தான்.
குவிந்ததோ எதிர்மறை உணர்வு. ஆதரவு இல்லை. அப்பாவின் சாயலால் குற்றச்சாட்டுக்கு உள்ளான சூழலை எதிர்கொள்ளும் திறனும் இல்லை. பிள்ளைகள் தங்களால் பிரச்சினை என எண்ணி, பழியை வாழ்நாள் முழுவதும் சுமப்பதால் பின்விளைவுகள் பல நேரலாம்.
திக்கற்ற நிலையினால் (helplessness) ஏற்படும் கொந்தளிப்பு தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளத் தூண்டலாம் . அனில் முகத்தைக் கீறிக்கொண்டான். சிலர் சிராய்த்துக் கொள்ளலாம், வெட்டிக்கொள்ளலாம், அடித்துக்கொள்ளலாம். இதில் உயிர் மாய்ப்பு இல்லாததால் தற்கொலையின்றி காயப்படுத்திக்கொள்ளுதல் (nonsuicidal self-injury NSSI) என்பார்கள். ஆரம்ப நிலையிலேயே மனநல உதவியை நாடுவது அவசியமாகும்! அதைத்தான் மருத்துவர் செய்தார்.
ரூபா தன் பக்கமே நியாயம் என்பதை அவளுடைய பெற்றோர்களும் நிலைநாட்டினார்கள். அதன் பிரதிபலிப்பு பிள்ளையின்மேல் படலாம் என்று தெரிந்தும், அநீதியைக் குழந்தையும் பார்க்கட்டும் என நினைத்துச் செய்தாள்.
தன்னால்தான் கஷ்டம். தன் பிழையினால் இந்த பிரிவும், விவாகரத்தும் என நம்பினான் அனில். எதுவும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகச் சோகம், மன அழுத்தம், கோபம் தோன்றியது. ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பில், பத்து வருடங்களுக்குப் பிறகும் பிரிவின் சூழலும் பெற்றோரின் வெறுப்பு பாவனையும் பிள்ளைகளின் நினைவில் தத்ரூபமாக நிற்பதாகப் பதிவு உண்டு. ஆழ்ந்த வடுக்களை அப்படியே விட்டுவிட்டால் அவர்கள் உறவு உருவாக்க அறியாததால் மற்றவருடன் சேர்ந்திருக்கப் புரியாது.
செஷனில் நடந்ததை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டோம். வாழ்க்கை மாற்றத்தில் மீண்டும் மீண்டும் தோன்றிய எண்ணங்களும் அப்போதும் இப்போதும் பொருட்களை உபயோகிக்கும்போது எழுந்த சிந்தனைகளையும் ஆராய்ந்தோம்.
சில செஷன்களுக்குப் பின்னர் இவற்றுடன் அனிலைத் தன்னைப் பற்றிய அபிப்பிராயத்தையும் சேர்த்துப் பகிரச் செய்தேன். நேர்மையாகச் செய்தான்!
முழு மனதுடன் ஸெஷனில் பங்கேற்பு பக்கபலமானது! யாவையும் ஆழமாகப் பார்க்க, கூர்மையான சிந்தனைத் திறனால் தெளிவு பெற முடிந்தது! தன்னிடம் “விமர்சனச் சிந்தனை” (critical thinking) திறனை அடையாளம் கொண்டு மகிழ்ந்தான்!
இந்தத் திறனுக்கு வாழ்க்கையில் மிக முக்கியப் பங்குண்டு. தேவை, தேவையற்றதை அறிந்து கொள்ள உதவும். குறிப்பாகப் போதைப் பொருட்கள், மது அருந்துதல், புகைப்பிடிப்பு தவிர்த்தலில்.
திறனை அடையாளம் கண்டுகொண்டபின் முகத்தைக் கீறிக்கொள்வதை எடுத்துக் கொண்டோம். பல சூழலைப் பகிர்ந்து ஆராய்ந்ததும் அனில் தனக்குள்ளே கோபம் உள்ளதை ஏற்றுக் கொண்டான். இதன் பிரதிபலிப்பாகவே காயப்படுத்திக் கொண்டான் என்றதைப் பல சேஷன்களுக்குப் பிறகே புரிந்துகொண்டான். கையாளும் திறன்களைத் திடப்படுத்தச் செஷன்கள் சென்றது.
மேலும் சுய உரை மேம்படுத்துவதின் அவசியத்தைப் புரியச் செய்தேன். இதற்குத் தினந்தோறும் தானாகச் செய்ததை “சரியாகச் செய்தேன்” என்று சொல்லி, தருணங்களைக் கவனிக்கப் பரிந்துரைத்தேன். ஆர்வத்துடன் செய்தான்!
மேம்பாட்டுக்கு மற்றொரு காரணம் வகுப்பு மற்றும் விளையாட்டு ஆசிரியரின் பங்கு. அனில் நிலையை அறிந்து, ஆதரவாக இருந்ததால் எரிக் எரிக்சன் கூறியது போல நேர்ந்தது!
விடலைப் பருவ காலத்தில் தம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் உருவாகும், இது முக்கியமான வளர்ச்சியின் காலம். தாம் இப்படியா இல்லையா எனக் கேட்டுக்கொள்வதற்கு ஆசிரியர் இருந்தார். அனில் குடும்பத்தினரின் விமர்சனமும் தாயும் நிராகரிக்கும் சூழலில் இந்தப் புரிதல் அனிலுக்கு பக்கபலமாக ஆனது.
அனில் அன்பானவன். அன்புக்குக் காத்திருந்தான். யாரோ அன்பைக் காட்டக் காத்திருப்பதை விட அவனை நாமே எவ்வாறு அன்பைக் காட்ட முடியும் என்றதை எண்ணச் செய்தேன். தடையற்ற அன்பைக் காட்ட ஆரம்பித்தான், அவனுடைய உடல், மனநலன் மேம்பட்டது!
இந்த நிலைக்கு வந்ததும் தன்னைப் பற்றியும் தந்தையின் பொருத்தம், வித்தியாசத்தையும் கணித்துப் பகிரச் செய்தேன். சாயல் பற்றிக் கூறினான், அதே சமயம் தன்னுடைய தனித்துவத்தையும் பார்க்க முடிந்தது!
பார்க்கப் பார்க்க, தன்னையே புது கண்களால் பார்க்கத் துவங்கினான் அனில்! செஷன்கள் முடிவடைந்தது.
நீதிமன்றத்தில் பெற்றோரின் விவாகரத்து, அனில் எந்த பெற்றோருடன் வாழ்வது (custody) என்பது போய்க்கொண்டிருந்தது.
தன் வாழ்க்கைப் பயணத்தை அவ்வப்போது பகிர வருவான் அனில். அப்போதுதான் நீதிபதியிடம் தனிமையில் உரையாட உத்தரவு கேட்டுக் கொண்டதாகக் கூறினான். தந்தையுடன் இருப்பதை விரும்புவதாகவும் அதற்கான காரணங்களையும் கூறியதை விளக்கினான். ஃபேமிலி கோர்ட் என்பதால் சோஷியல் வர்கர் செஷன் அமைக்கச் செய்ததாகக் கூறினான். என்னுடன் செஷன்களைப் பற்றிக் கூறியதால் அவர்களையும் சந்தித்து என் அபிப்பிராயத்தை நீதிபதியிடமும் பகிர்ந்தேன். ரூபாவை மனநல செஷன்களுக்குப் போகப் பரிந்துரைத்தார். மறுத்துவிட்டாள்.
தந்தையிடம் இருப்பதைக் கூறினான். அவர் விவசாய வல்லுநர், விவசாயிகளைச் சந்தித்து செயற்கை இரசாயனங்களைப் பற்றிச் சொல்லித்தருவாராம். அவருடன் அனிலும் போய்வர, இருவரின் உறவு மேம்பட்டது!
ஒருமுறை கடிதத்தில் தந்தை செய்வதைப் பார்த்து அனில் தானும் இயற்கையைப் பராமரிக்கும் துறை தேடுவதாகக் கூறினான். இதைப்பற்றி உரையாடி, தந்தையிடமும் பேசி, கட்டிடக் கலை தேர்வு செய்தோம். இந்தத் துறையில் இயற்கையைப் பாதுகாக்கும் வல்லுநர்களைச் சந்திப்பது ஆரம்பமானது!
தாயின் கொந்தளிக்கும் உணர்வினால்
பிள்ளையை நிராகரித்தாள்!
பிள்ளைக்குத் தத்தளிப்பு தவிப்பானது!
மனநலத்தை தொழில்சாரமாக அணுகியதால்
பூத்துக் குலுங்கியது பிள்ளை மொட்டு!
*******************************
