அம்மா டேபிளில் வைத்திருந்த சூடான காபியை மெதுவாக அருந்தி முடித்த கலா, உள்ளே சென்று புடவையின் கொசுவத்தை குனிந்து சரி செய்து கொண்டாள். காலில் புடவை சிக்கிக் கொண்டது. சிறிது சிரமப்பட்டு குனிந்து அவள் அதை சரி செய்து கொண்டாள்.
“அப்பா… நான் ரெடி. போகலாமா?” என்று அவள் கதவின் பக்கத்தில் நின்றபடி கேட்டாள்.
அப்பா நாகு பார்த்தார்.
அவரது கண்களில் ஒரே நேரத்தில் இரு உணர்ச்சிகள் கலந்தே இருந்தன.
பெருமையும், ஆழமான வருத்தமும்.
போலியோ தடுப்பூசி போட மறந்த ஒரே தவறின் விளைவு… மகள் கலாவின் காலில் அதன் விளைவாக வந்து முடிந்திருந்தது .
“என்னுடைய கவனக்குறைவு… என் குழந்தையை இந்த நிலைக்கு தள்ளிவிட்டது…” என்ற வலி ஆண்டுகள் ஆனாலும் போகவில்லை.
ஆனால் அதே நேரத்தில்…
கலா, அவரது மகள்,
உறுதியும் , போராட்டமும் சேர்ந்த ஒரு மகளாக உருவெடுத்திருந்தாள்
அவள் வளர வளர, அந்த ஊனம் அவளது தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவளது உறுதியையும் அதிகரித்தது.
“வாங்கப்பா… தாமதம் ஆகுது,” என்றாள் கலா, எப்போதும் போல தன்னம்பிக்கை கலந்த குரலில்.
“இந்த வேலை கிடைக்குமா…?” என்ற சிறிய ஐயம் மட்டும் அவர் கண்களில் பாக்கியிருந்தது.
நாகு அவளை பார்த்தார். ஆனாலும் அவளை ஊக்கப்படுத்தும் வகையில் “வேலை கிடைக்கும்மா. உன் படிப்பிற்கும் உன் புத்திக்கும்தான் வேலை கொடுப்பாங்க,உன் காலுக்கெல்லாம் இல்ல.”. அவர் குரலில் தந்தையின் அழியாத உறுதியும், பாசமும் இருந்தது.
கலா கட்டைக்கால்களை ஸ்கூட்டரின் முன்புறத்தில் சாய்த்து வைத்துவிட்டு, பின்னே பில்லியனில் ஏறிக் கொண்டாள்.
அவள் வேலை பெறும் கனவில் அவளுக்கே தெரியாமல் ஒரு புன்னகை வெளிப் பட்டது.
நேர்முகதேர்வு நடைபெறும் கட்டடத்தின் முன் நாகு ஸ்கூட்டரை நிறுத்தி, “நிறைய பேர் வந்திருக்காங்க மா…” என்றார் சற்றுக் கவலையுடன்.
கலா தலை ஆட்டினாள்.
“அதனால் என்ன? நான் தேர்வு முடிஞ்சு வெளியே வரேம்ப்பா. நீங்க வெயிட் பண்ணுங்க.”
உள்ளே நுழைந்தவுடனே அவளை சுற்றியே அத்தனை பேரது பார்வையும் இருந்தது. பல கண்கள்…பல பார்வைகள்…
அவளது கட்டைக்கால்கள் மீதும், அவளது நடை மீதும்.
ஏறக்குறைய ஐம்பது பேர், அனைவரும் வேலைக்காக வந்தவர்கள். அவள் மட்டும் குறையை உடைய ஒருத்தி.
அந்த பார்வைகள் அவளை காயப்படுத்தின. ஆனால் கலா காயத்தை மறைக்கும் தைரியம் கொண்டவள்.
அவள் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். கட்டைக்கால்களை ஓரமாய் சாய்த்து வைத்துக்கொண்டு, சான்றிதழ்களை. ஒழுங்கு படுத்தத்தொடங்கினாள்.
“இந்த வேலை… நிச்சயம் எனது தகுதிக்காகவே கிடைக்கணும்.” அவள் மனஉறுதியுடன் தன்னிடமே சொன்னாள்.
அவளது பெயர் அழைக்கப்பட்டதும், ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டுவிட்டு, கட்டைக்கால்களைப் பிடித்து மெதுவாக இன்டர்வியூ ரூமுக்குள் நுழைந்தாள்.
ரூமில் மூன்று பேர் இருந்தனர். நடுவில் ஒரு மெல்லிய தேகத்துடன் ஒருவர் இரு பக்கமும் மற்ற இருவர்.
முதல் இரண்டு பேர் நேர்த்தியான கேள்விகள் கேட்டனர்.படிப்பு, கணினி அறிவு, வேலை அனுபவம்…
கலா எதற்கும் தடுமாறவில்லை.
ஆனால் கடைசியில் நடுவில் அமர்ந்து இருந்தவர் அவளை நேராகப் பார்த்தார்.
“இந்த வேலை உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?” என்றார்.
அவர் குரல் ஒரு தன்னம்பிக்கையை குறைக்கும் தொனியில் இல்லாமல் இருந்தது. அது ஒரு கேள்வியாக மட்டுமே இருந்தாற்போல் கலாவிற்கு பட்டது. கலாவின் மனதில் முதலில் குழப்பம் தோன்றினாலும், அமைதியாக இருந்தாள்.
எம் டி தொடர்ந்தார்:
“உங்கள் பயோ டேட்டாவில் … உங்களைப்பற்றி ஒரு குறிப்பும் இல்லை.”
கலா புரிந்து கொண்டாள். அவர் கேட்க விரும்புவது ‘நான் மாற்றுத் திறனாளி’ என்ற சொல்லை.
ஆனால் கலா மெதுவாகச் சிரித்தாள்.“சார்… அதை குறிப்பிட்டு சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.
நான் என் திறமையை வைத்து வேலை செய்ய வருகிறேன்.என் குறையை வைத்து வரவில்லை.”
ஒரு நிமிடம் ரூம் அமைதியாகிப் போனது.
“புரிகிறது,” என்று எம் டி தலையசைத்தார். “வேலை கிடைத்தால் எப்பொழுது சேருவீர்கள் “
வேலை கிடைத்து விட்டது என்று யூகிக்க அவளுக்கு வெகு நேரம் ஆகவில்லை. மனம் மகிழ்ச்சி கொண்டபோதிலும், சிறிது நிதானித்து,துணிச்சலாக கேட்டாள் ,
“சார்… இத்தனை பேர் இருக்கும்போது, கடினமான பெரிய கேள்விகளே கேட்காமல்,
இந்த வேலை எனக்குத் தர முடிவு செய்ய போகிறீர்களா ?”
எம் டி அமைதியாகச் மென்மையாக சொன்னார்:
“நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்து…பல வருடங்கள் ஆகின்றன. இன்று நான் இந்த கம்பெனியின் எம் டி. “
ஒரு நொடி தலையைத் தாழ்த்தி, கலாவின் கண்களை நேராகப் பார்த்து கூறினார்:
“குறைகளை தாண்டி நடக்கக் கற்றவர்கள்தான்…உண்மையில் பலம் வாய்ந்தவர்கள். திறமை சாலிகள் இந்த அறைக்குள் நீங்கள் நடந்து வந்ததைப் பார்த்தபோது உங்களுக்கு இந்த வேலை வேண்டும் என்ற ஆர்வம் ,உங்களையே நம்பிய அந்த தைரியம்,கூட்டத்தில் தனியாக நிமிர்ந்த நிமிர்வு அவை எல்லாம் பார்த்து எனக்கு தெரிந்துவிட்டது.”
எம் டி பேசியதை கவனமாக கேட்டு வந்த கலாவுக்கு,அந்த ஒரு நொடியில் தனது தன்னம்பிக்கையே அதிகம் காத்து நின்றிருப்பதை உணர்ந்தாள்.கலாவின் கண்கள் ஈரமானது.
அவர் தொடர்ந்தார்:
“நீங்கள் குறிப்பிட்டது போல குறைகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மிஸ் கலா. அதை எல்லாம் கடந்த நபர்கள்… ஏற்கனவே எல்லா தகுதிகளும் பெற்றவர்கள் .”
MD பேசி முடிந்ததும், அவர் சில காகிதங்களில் கையொப்பம் இட்டு, “வேலையில் சேரும் ஒப்புதல் கடிதத்தை இந்த காகிதத்தை கொடுத்து வெளியே ஆபிஸில் பெற்றுக்கொள்ளுங்கள் . உங்களுக்கு வாழ்த்துக்கள், மிஸ் கலா,” என்று மெதுவாகச் சொன்னார்.
அந்தச் சொற்கள் கலாவின் மனதில் ஒரு இனிய அதிர்வை கொடுத்தன .
அவள் அந்த காகிதத்தை எடுத்து நன்றி கூறி எழுந்தாள்.
எம் டி மெதுவாக சீட்டை விட்டு எழுந்து, சாய்ந்து சாய்ந்து நடந்து போய் , பின்புறத்தில் இருந்த தனது கட்டைக்கால்கள எடுத்து கொண்டு மெதுவாக ரூமை விட்டு வெளியேறினார்.
ஒரு நிமிடம், அதிர்ந்து போனவள் , அவரது உறுதியான நடையைப் பார்த்தாள்.
அவள் இதுவரை பெருமையாக நினைத்த தன்னம்பிக்கை, ஏற்கனவே ஒருவரின் பாதையோடு ஒத்துவருவதாகத் தோன்றியது.
அவள் மனதில் ஓர் வார்த்தை மட்டும் ஒலித்தது
“தன்னம்பிக்கை .”
அந்த வார்த்தை உச்சத்தை தொட்டுக்கொண்டு இருந்தது.

