
5000 வருடங்கள் முன்னரேயே இந்த தேசத்தின் வேத நூல்கள் எப்படிப்பட்ட வாழ்வியல் முறைகளை, சனாதனம் என்ற பெயரில் இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைத்திருக்கிறது என்பதை நினைத்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. உலக வாழ்க்கையைப் பற்றி பகவத் கீதை கூறி இருக்கும் கருத்துக்கள் அன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமாக இருப்பது என்பது இந்த மண்ணின் மகத்துவம்.
தனி மனித ஒழுக்கம், குடும்பம், தொழில், சமுதாயம், தேசம் என அனைத்திற்கும் பொதுவான, நேர்மையான நீதிகளைத் தந்திருக்கிறது நமது வேதங்களும், இதிகாசங்களும்.
கீதையில், அர்ஜுனன் தெய்வீக உணர்வில் உள்ளவர்களின் அடையாளங்களைப் பற்றி விசாரிக்கிறார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஸ்ரீ கிருஷ்ணர், ஆழ்நிலையில் இருக்கும் நபர்கள் எவ்வாறு பற்றுதல், பயம் மற்றும் கோபத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்பதை விவரிக்கிறார்; அவர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சீராக மற்றும் அமைதிகுலைவற்ற நிலையில் இருக்கின்றனர்; அவர்களின் புலன்கள் தன்வயப்படுத்தப்பட்டு மேலும் அவர்களின் மனம் எப்பொழுதும் கடவுளில் லயித்திருக்கும். மனதின் துன்பங்களான காமம், கோபம், பேராசை ஆகியவை எவ்வாறு உருவாகின்றன, மற்றும் அவற்றை எவ்வாறு அகற்றலாம் என்பதையும் படிப்படியாக விளக்குகிறார்.
இந்தப் பிரபஞ்சம் எல்லோருக்கும் ஏதேனும் பிரச்னையைத் தருவது போன்று, சந்தோஷத்தைத் தருவது போன்று, செல்வத்தை தருவது போன்று, ஏழ்மையைத் தருவதுபோன்று தந்திருக்கின்றது. இவையெல்லாமுமே காலக்கிரமத்தில் மாறக் கூடியவை. அதனால் எது வருகின்றதோ எதுவாக இப்போது இருக்கின்றீர்களோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். அதை அலசி ஆராயுங்கள். அதன் வலிகளையும் சவால்களையும் அலசுங்கள். அல்லது ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும்
அதுவாகவே தீரும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். தீர்க்க முடியும் என்று உங்களுக்கு நீங்களே உறுதியாக இருங்கள். உங்களுக்கு மட்டும்தான் இத்தனை பிரச்னை என்று மனம் மிரட்டும்போது, சும்மாயிரு என்று அதட்டி வையுங்கள். மனதின் பலவீனத்தை அதிகப்படுத்தாதீர்கள். பல்வேறு தீர்வுகளை நோக்கி நகருங்கள். அப்படி நகரும்போதே உங்களால் பிரச்னைகள் குறித்து தெளிவாக யோசிக்க முடிவதை அறிந்து வியப்பீர்கள் என்றும்
புலன்களுக்கும் புலபொருட்களுக்கும் இடையிலான தொடர்பு மகிழ்ச்சி மற்றும் துன்பம் பற்றிய நொடிப்பொழுதான உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவை நிரந்தரமற்றவை, இவை குளிர்காலம் மற்றும் கோடை காலங்களைப் போல வந்து செல்கின்றன. பரத வம்சத்தில் தோன்றிய அர்ஜுனா, அமைதி குலையாமல் அவைகளை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் கிருஷ்ணர்.
ஸ்லோகம் 15 – அத்தியாயம் 2
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
ஸமதுஃகஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே
ஓ அர்ஜுனா, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தால் பாதிக்கப்படாமல் இரண்டிலும் நிலையாக இருப்பவனே மனிதர்களில் உன்னதமானவன். அத்தகையவன் விடுதலைக்கு தகுதி பெறுகிறான்.
ஸ்லோகம் 16 – அத்தியாயம் 2
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வனயோஸ்தத்த்வதர்ஶிபி:
நிலையற்றவற்றில் சகிப்புத்தன்மை இல்லை, மற்றும் நித்தியத்திற்கு இடைநிறுத்தம் இல்லை. இந்த இரண்டின் இயல்புகளையும் ஆய்வு செய்தபின், உண்மையைக் கண்டறியும் தீர்க்கதரிசிகள் இந்த முடிவுக்கு வந்தனர்.
இல்லையெனில், மனம் உங்களுக்கு மட்டுமே ஏகப்பட்ட பிரச்னைகள் என்றும், இந்த ஜென்மமே பாவப்பட்ட ஜென்மம் என்று பயமுறுத்தியபடி இருக்கும். எனவே எதுவரினும் வா என்று அழையுங்கள். பதட்டப்படாது ஓரிடத்தில் அதை அமர்த்துங்கள். பிரச்னைகளை நோக்கி பேசத் தொடங்குங்கள். அந்தக் கணத்திலேயே பெரும் பலம் உங்களை சூழ்வதை உணர்வீர்கள்.
கண்ணனும், அர்ஜுனனிடம், எண்ணத்தின் தோற்றம், விளைவுகள் பற்றி கூறுகிறான். எண்ணம் பெரிதானால் வாழ்வு – சுருங்கினால் மரணம் – இது விவேகானந்தர் கூறும் வார்த்தை. இதனை உள்வாங்கிய பாரதி, மிக எளிதாக, ஒரு பாமரனும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பாடுகிறான்.
மனிதனின் வாழ்வு வெற்றி பெற ஓரிரு வார்த்தைகள் போதும். வேதங்கள், சுபாஷிதங்கள் என அவை கூறுவதும் அப்படித்தான் .வேத வரிகள், கீதை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் என அதிலிருந்து இரண்டு வார்த்தை கூட போதும்.
சமஸ்க்ருதத்தில் – சத்யம் வத – உண்மை பேசு ; தர்மம் சர – தர்மம் செய் – அதைத்தான் அவ்வை – அறம் செய்ய விரும்பு என்று ஆத்திசூடியில் கூறுகிறாள். ஆறுவது சினம் ;
பாரதி நிறைய கவிதைகள், கட்டுரைகள், கதைகள், வசன கவிதைகள், பாஞ்சாலி சபதம் என பல எழுதி இருந்தாலும், பாரதியின் ஆத்திசூடி என்பது அவ்வையை ஒட்டி, ஆனால் கொஞ்சம் மாற்றி, காலத்துக்கேற்ப தரப்பட்டிருக்கிறது.
பெரிய வாழ்வு நெறியை, தத்துவத்தை இரண்டே அடிகளில் பொதுமறை தந்த வள்ளுவன்,
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு
என்கிறான். பாரதியோ,எண்ணம் பற்றி கூறும்போது,
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்!
திண்ணிய நெஞ்சம் வேண்டும்!
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
எண்ணங்களின் பிறப்பிடம், இருப்பிடம், இறப்பிடம் எல்லாமே மனம்தான். அதனைப் பொறுத்தே ஒருவனின் உயர்வு. எண்ணமே வாழ்வு என்ற வரி சாதாரண வரிகள் அல்ல, ஒருவனின் வாழ்வின் அடிப்படை தொட்டு இறுதிவரை, அவன் வாழ்வு, அவன் கொண்டிருக்கும் எண்ணத்தைப் பொறுத்துத்தான் அமைகிறது என்பது உலகத்தில் நாம் பார்த்து வரும் நடைமுறை.
உலகில் பிறக்கும் மனிதர்கள் பயனுள்ள வகையில் வாழ்தலே சிறப்பு என்று நினைக்கிறார் பாரதி. ஆகவே, சிவசக்தியைப் பார்த்து, என்னை அறிவு மிகுந்தவனாகப் படைத்து விட்டாய். அந்த அறிவால் மனித குலம் பயன்படும் வகையில் வாழ்வதற்கான வலிமையைக் கொடு என்று வேண்டுகிறார். எதற்காக? இந்த உலகம் பயனுற வாழ்வதற்காக. இதனையே,
என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
மனதில் உறுதி வேண்டும் என்பதைத்தான் சிதையா நெஞ்சு கொள் என்று கூறுகிறான் மஹாகவி.
மனம் தளராமல், உடைந்து போகாமல், எந்நிலையிலும் உறுதியுடனும் தைரியத்துடனும் , நம்பிக்கையுடனும் வாழவேண்டும் என்பதே இதன் கருத்து. இந்த வரிகளுக்கு உதாரணமாக வேறு யாரையும் நாம் பார்க்க வேண்டாம். பாரதியின் வாழ்க்கையே போதும். தன்னுடைய வாழ்வில் வறுமை, வெறுமை போன்ற பல இன்னல்களைச் சந்தித்தபோதும், ‘சிதையா நெஞ்சு கொள்’ என்ற கொள்கையுடன் உறுதியாக நின்றதுடன் .சுயநலம் இல்லாமல் பொதுநலத்திற்காகவே வாழ்ந்து காட்டிய மஹாபுருஷன் அவன்.
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை
என்ற வரிகளில் அவன் மன உறுதி தெரிகிறது.
அதனால்தான் எத்தனையோ கவலைகளால் வருந்தினாலும் மனஉறுதியை கைவிடாத பாரதி.
தேடிச் சோறு நிதந் தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?’
என்று பாடுகிறான். சாதாரணத் துன்பங்களுக்கெல்ளாம் விதியை நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் ‘குன்றென நிமிர்ந்து நில்’ என்பதுதான்.
கண்ணதாசன் தனது பாடலில்,
விதியென்று ஏதும் இல்லை
வேதங்கள் வாழ்க்கை இல்லை
உடலுண்டு உள்ளம் உண்டு
முன்னேறு மேலே மேலே
என்று கடமை சேர்ந்த உழைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதுடன், தேவையற்ற கவலைகளைப் புறம் தள்ளி விட்டு, நம்பிக்கை, கடமை இவற்றின் அவசியத்தை,
தலைக்குமேலே வெள்ளம்போனால்
ஜானென்ன முழமென்ன
தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
நாளென்ன பொழுதென்ன
விலைக்குமேலே விலை வைத்தாலும்
மனிதன் விலையென்ன
உயிர் விட்டுவிட்டால் உடல் சுட்டுவிட்டால்
அதில் அடுத்த கதையென்ன
எல்லாம்வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் – இது சத்தியம்
பஞ்சைப்போட்டு
நெருப்பை மறைப்பவன்
பைத்தியக்காரனடா-பாவம்
தீர்க்க பணத்தை இரைப்பவன்
பச்சை மடையனடா
நெஞ்சுக்கு
நீதியை ஒழித்தே வாழ்பவன்
நிச்சயம் மிருகமடா
நல்ல நேர்மையிலும்
தன் வேர்வையிலும்
தினம் வாழ்பவன் தெய்வமடா
என்று பாடுகிறான். சிறு செயல்கள் வாழ்க்கையின் நிலையை மாற்றிவிடும் என்பதே வாழ்வின் உண்மை.
ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் வீட்டில் பூசணிக்காய் காய்த்துத் தொங்கியது. அதைப் பார்த்த அந்த ஊர் பணக்காரர் ஒருவர் அந்தச் செடியில் இருந்து ஒரு காயை எடுத்துக் கொண்டு தனது வீட்டுச் சமையலிலும் உபயோகித்துவிட்டார். இது எப்படியோ ஊர் மக்களுக்குத் தெரிந்துபோக, அதற்குப்பின் அந்த வீட்டின் அடையாளமே பூசணிக்காய் திருடியவர் வீடு என்றே ஆகிவிட்டது. ஆண்டுகள் கடந்து, அந்தப் பெரியவரும் இறந்தபின், 3 தலைமுறைகள் கடந்தும், அந்த வீட்டின் அடையாளம் மட்டும் பூசணிக்காய் திருடியவர் வீடு என்றே நிலைத்துவிட்டது.
குடும்பத்தின் 4ஆவது தலைமுறை இதைக் கேட்டு மனம் வருந்தி, ஊருக்கு வந்த ஒரு சாமியாரிடம் பரிகாரம் கேட்க, அவர் அன்னதானம் செய்யுங்கள் என்று கூறினார். மறுநாள்முதல், வசதி இல்லாதவர்கள் வந்து இருவேளை உணவு உண்டார்கள். 4 தலைமுறைகளாக பூசணிக்காய் திருடியவர் வீடு என்ற பெயர், பத்தே நாட்களில் அன்னதானம் செய்யும் வீடு என்று மாறிவிட்டது.இதில் வந்ததுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்ற பழமொழி.
இதன் நீதி என்றால், தீமைகளை தீமைகளால் அழிக்க முடியாது. நன்மைகள் செய்தே மாற்ற முடியும். நம்மை நாமே சிறப்பாக உணரும் பட்சத்தில் நமது செயல்கள் நமது சிந்தனைகள் எப்போதுமே சிறப்பாக செயற்படும்.. குற்றமில்லாமல் சுவாசிக்கும் போது எத்தனை நிம்மதி நமக்கு.
அடுத்த மாதம் சந்திப்போம்
