குமுதம் விவகாரம்... தர்மம் மறுபடி வென்றது! | Dr SAP Jawahar wins in Kumudham ownership case - Tamil Oneindia

ஏஸ் டைரக்டரின் அற்புதமான பேட்டி…

’வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் குமுதம்’ என்ற வரியை ஒரு காலத்தில் பிரபலப் படுத்தினார்கள். ஒரு லட்சமாக இருந்த சர்க்குலேஷன் மெல்ல உயர்ந்து இரண்டாகி, மூன்றாகி.. மேலும் உயர்ந்து அதிகபட்சமாக ஆறரை லட்சங்களை எட்டியது.

இதழியல் சர்வேயின்படி ஒரு புத்தகத்தைப் பொதுவாகக் குறைந்தது இரண்டு பேர் படிப்பார்கள் என்றார்கள். எழுத்தாளர் சிவசங்கரி மேம் வேறு ஒரு authentic சர்வேயின்படி ஒரு பத்திரிகையின் இதழைப் பத்துப் பேர்கள் படிக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் சொன்னார். குமுதத்தில் வெளியான சிவகங்கரியின் கதைகளை அறுபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்தார்கள் என்று நிரூபணத்துடன் சொன்னார்.

இதற்கு ஒரு நியாயமான… நல்ல காரணம் இருந்தது. அப்போதெல்லாம் குடும்பத்தில் நிறைய நபர்கள் இருந்தார்கள். பல வீடுகளில் கூட்டுக்குடும்பம் இருந்தது. இந்த லாஜிக்படி கணக்கிட்டால் சிவசங்கரி மேம் சொன்னது சரியான கூற்றுதான். 

குமுதம் சர்க்குலேஷன், ஆறரை லட்சத்தை எட்டியவுடன் குமுதம் அலுவலகத்தில் கண்ணில்படுமாறு இரண்டு மூன்று இடங்களில் பெரிய அளவில் ‘இலக்கு- பத்து லட்சம் பிரதிகள்’ என்று எழுதிவைத்திருந்தார்களாம். அதைப் பார்க்கும்போதே உத்வேகம் வந்து புதிய ஐடியாக்களை யோசிப்பார்களே

அப்போது சில காலத்துக்குக் குமுதம் விளம்பரம் டிவியின் பிரபல சானல்கள் சிலவற்றில் ஒளிபரப்பினார்கள்.

அதில் ‘வாரத்துக்கு வாரம் வித்தியாசம். அதுதான் குமுதம்’ என்ற வாசகம் இடம்பெறும்.

நிழல்கள் ரவி போன்றவர்கள் இந்த விளம்பரப்படத்தில் நேரடியாகத் தோன்றினார்கள். ரவியின் மனைவியும் அதில் வந்தார்.

நிழல்கள் ரவி தயாரித்த குமுதம் இதழின் கோ ஆர்டினேட்டரும் என் கணவர் திரு கோபாலன்தான்..

அனேகமாக சினிமா, இலக்கியம், எழுத்து போன்றவற்றிற்கு  கோபாலன் போவார். அரசியல்வாதிகளாயிருந்தால் பால்யூ போவார்.

முதல் இதழ் தயாரித்தவர் இதுதாண்டா போலீஸ் ராஜசேகர்.

அதென்ன இதழ் தயாரிப்பது .. அதென்ன கோ ஆர்டினேஷன்? என்கிறீர்களா?

16 பக்கங்கள் ஒரு ஃபாரம். ஒரு பெரிய ஷீட்டை எட்டு முறை மடித்தால் சரியாக 16 பக்கங்கள் வரும். ஆகவே பதினாறின் மடங்குகளாகவே இதழ்கள் அச்சிடுவார்கள். குமுத்தின் சைஸ் 96 பக்கங்கள்.

இதில் தலையங்கம், வழக்கமான தொடர்கள் மற்றும் விளம்பரங்கள் போக 32 முதல் 42 பக்கங்கள் வரை மற்ற அம்சங்கள், சிறுகதை போன்றவை இருக்கும்.

ஆக ஒரு பிரபலத்திடம்  சென்று அவர் எந்த வகையில் அந்தப் பக்கங்களுக்கு விஷயங்கள் கொடுப்பார் என்று இரண்டு மூன்று முறை போய்ப் பேசுவார்கள்.

எத்தனை கட்டுரைகள், எத்தனை பேட்டிகள் செய்ய விரும்புகிறார் என்றும் அவரை யாரேனும் பேட்டி எடுக்கலாமா.. அவர் பிரபலமாக இருக்கலாமா அல்லது குமுதத்தின் பிரதிநிதி என்ற முறையில் தானே பேட்டி எடுக்கலாமா என்று கேட்பார் என்கணவர். சில பிரபலங்களின் குடும்பத்தினரையும் பேட்டி எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் அதையும் செய்வோம்.

எதெது எத்தனை பக்கங்கள் வர வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.

முதல் நாள் மட்டும் அந்தப் பிரபலத்தின் வீட்டுக்கு மரியாதை நிமித்தம் திரு ரா கி ரங்கராஜனோ, ஜ ரா சுந்தரேசனோ வருவார்.

சுவாரஸ்யமான விஷயம்தான். ஆனால் பெண்டு நிமிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அத்தனை பக்கங்களுக்கும் உரிய விஷயங்களைத் தயார் செய்து தர வேண்டும். பெரும்பாலும் அரசு பதில்களுக்கு பதில் அந்தப் பிரபலத்தின் பதில்கள் வெளியாகும். முன்னதாக விளம்பர அறிவிப்பு செய்துவிடுவதால் அந்தப் பிரபலத்திடம் கேட்க நினைத்த கேள்வியையே வாசகர்கள் அனுப்புவார்கள்.

ரு பிரபல நடிகர், மிகவும் சுவாரஸ்யமாகத் தன் இதழ் வர வேண்டும் என்று விரும்பினார். அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு போன டைரக்டர் ஒருவரை அவரே பேட்டி காண விரும்பினார்.

“நானே போய்ப் பேசி, பேட்டி எடுத்துடறேங்க” என்றார்.

“பேட்டியின் காஸட்டைக் குடுத்தீங்கன்னா… நாங்க எழுதிடுவோம்” என்று என் கணவர்  சொன்னார்.

“அதெல்லா வேணாம். நான் பார்த்துக்கறேன்” என்றார் நடிகர். ஓரளவு பிரபலமான எழுத்தாளரின் பெயரைச் சொல்லி, அவர் அந்தக் கேஸட்டைப் போட்டுக் கேட்டு எழுதிவிடுவார் என்றார்.

பேட்டி கொடுக்கும் டைரக்டர் டாப் இயக்குனர். பேட்டி காணும் நடிகர் அருமையான திறமைசாலி. எழுதப் போகிறவரும் ஓரளவு நன்கு எழுதக்கூடியவர். எனவே பேட்டி சுவாரஸ்யமாக வருமே.

இரண்டு நாட்களில், பேட்டி தயாராக இருப்பதாகச் சொல்லி வந்து வாங்கிக்கொண்டு போகச் சொன்னார். போனால்… பலத்த ஏமாற்றம்.

இரண்டாம் வகுப்பு மாணவனின் விடைத்தாள் மாதிரி சோனியாக மூன்று பக்கம் (அதுவும் கையெழுத்தில்).

விஷயமாவது சுவையாய் இருக்கும் என்று பார்த்தார் எந்த ஊரில் பிறந்தீர்கள், வளர்ந்தீர்கள், நீங்கள் இயக்கியவற்றில் உங்களுக்கு மிகப்பிடித்த திரைப்படம் எது என்கிற மாதிரியான ‘க்லீஷே’ கேள்விகள். இதன் பதிலைத் தமிழ்நாட்டின் ஐந்து வயசுக்குழந்தைகூடச் சொல்லிவிடும்.

அவர் வீட்டு சோபாவிலேயே உட்கார்ந்து படித்துவிட்டு இவர் ஏமாற்றத்துடன் “சார் இவ்ளோதானா?” என்று கேட்க, அவர் ஸ்ட்ரிக்டான குரலில் அவ்ளோதான் என்று சொல்லிவிட்டார். அந்தக் காஸட்டைத் தந்தால் நாங்கள் டைப் செய்துகொள்வோமே என்று கேட்க அதற்கும் மறுத்துவிட்டார் நடிகர்.

வீட்டில் வந்து என்னிடம் காண்பித்தார். இதைப் பிரசுரிக்க மாட்டார்கள் என்று உறுதியாய்ச் சொன்னேன். அத்தனையும் ஒரு பேட்டியின் ஆரம்பத்தில் கேட்கக்கூடிய ‘வார்மிங் அப்’ கேள்வி பதில்கள்.

எதிர்பார்த்தமாதிரியே அலுவலகத்தில் அந்தப் பேட்டியை சுவாரஸ்யமாக எழுத முடியுமா என்று பார்க்கும்படி சொல்லிவிட்டார்கள்.

ஏற்கனவே காஸட் தர மாட்டேன் என்று அவர் சொல்லிவிட்டதால், பள்ளிக்கூடத்துக்குப் பெற்றோரை அழைத்துச் செல்லும் மாணவன்போல் இவர் துணை ஆசிரியர் பிரியா கல்யாணராமனை அழைத்துச் சென்றார்.

காஸட்டைக் கேட்டவுடன் நடிகருக்கு வந்ததே கோபம். “நான் ஓகே செய்த பேட்டி அது. நான் என்ன முட்டாளா?” என்று கேட்டிருக்கிறார்.

“சார் நீங்கள் தயாரிக்கும் இதழ். அது சிறப்பாய் வந்தால் உங்களுக்குப் பெருமை அல்லவா?” என்று பிரியா கல்யாணராமன் கேட்டுப் பார்த்தார்.

ஒரு வேளை இதழ் தயாரிப்புக்கே மறுத்துவிடுவாரோ, என்று அதற்கும் தயாராகத்தான் போனார்கள்.

ஒரு கட்டத்தில் மிகவும் கோபத்துடன் அவர் நான்கு காஸட்களை எடுத்து வந்து சோபாவில் வீசிப் போட்டார்.

“நீங்களே எழுதிக்குக்குங்க.” என்று கோபமாக அனுமதித்தார்.

வீட்டுக்கு வந்து காஸட்டைப் போட்டுப் பார்த்த நாங்கள் அசந்துபோய்விட்டோம். மணிமணியான கேள்விகளை நடிகர் கேட்க…அற்புதமான பதில்களைச் சொல்லியிருந்தார் டைரக்டர். டைப் செய்தால் அறுபது பக்கத்துக்குச் சுவையான பேட்டி வந்தது. எனக்கு மிக நன்றாகத் தெரியும் நான்கு பக்கத்தக்கு மேல் பிரசுரிக்க மாட்டார்கள் என்று. எனினும் சுவாரஸ்யமாக இருக்கவே மொத்தமும் டைப் செய்தேன் (இப்போது அது என்னிடம் இருந்தால் ஒருஅற்புதமான புத்தகமே போடலாம்).

அந்த எழுத்தாளர் கேஸட்டையே கேட்காமல் எழுதிவிட்டாரோ என்று எனக்குச் சந்தேகம். 

பொதுவாகப் பேட்டிகள் நான்கு பக்கங்களுக்கு மேல் போட மாட்டார்கள். போரடிக்கும். ஆனால் இந்தப் பேட்டி சுவையான ஆறு பக்கங்களுக்கு அவர் இதழில் பிரமாதமாகப் பிரசுரமாயிற்று. அந்தப் பேட்டியைத் தமிழ்நாடே புகழ்ந்தது.

மறுநாள் போன் அடித்தது. பேசியது நடிகர்தான். நெகிழ்ந்த குரலில், “இவ்ளோ நல்ல பேட்டி மிஸ் ஆகத் தெரிஞ்சுதே.  தப்பு என் பேர்லதான்..” என்று மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார்.

பத்திரிகையாளர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். தலையில் கைவைத்து உட்காரவும் நேரமிருக்காது. குதூகலித்துக் கூத்தாடவும் அவகாசம் கிடையாது.

நாட்கள் நீளும்…