‘இன்று கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?’
‘என்ன விசேஷம்?’
‘கடைத் தெருவுக்குப் போய் சில சாமான்கள் வாங்கணும்’
‘இது என்ன அதிசயம், எழுதிக் கொடு, நான் ஆபீஸ்லேயிருந்து வரும் போது எப்போதும் போல் வாங்கிக் கொண்டு வருகிறேன்’
‘இல்லை எனக்கும் சில சாமான்கள் பார்த்து வாங்கணும்’
‘சரி சீக்கிரம் வருகிறேன்’
‘அச்சச்சோ மணி ஆறு ஆகி விட்டதே, இனிமேல் வீட்டுக்கு எப்படிப் போவது? சீக்கிரம் வரச் சொன்னாளே! இன்னிக்கின்னு பார்த்து மேனேஜர் இந்த வேலையை முடிக்கச் சொல்லிவிட்டாரே! சரி சமாளித்து தான் ஆக வேண்டும்’
‘இந்தாங்க காபி பக்கோடா’
‘என்னது இது! எள்ளும் கொள்ளும் வெடிக்கும்னு நினைச்சோம், சாந்தமாக இருக்காளே!’
‘சாரி புவனா கொஞ்சம் லேட்டாகி விட்டது, நாளைக்குப் போகலாமா?’
‘அதனால என்னங்க, நாளைக்கேப் போகலாம்’
‘என்னதிது அதிசயமா இருக்கு, உடனே ஒத்துக் கொண்டு விட்டாளே, ஏதாவது வில்லங்கம் இருக்கப்போகிறது, பார்க்கலாம்’
‘வந்து விட்டீர்களா, இந்தாருங்கள் காபியும் பஜ்ஜியும்’
‘என்ன விசேஷம்?’
‘ஒன்றும் இல்லை, நீங்கள் களைப்பாயிருப்பீர்கள் என்று பண்ணினேன், சரி கிளம்பலாமா?’
‘சரி அப்படி எங்க தான் உனக்குப் போக வேண்டும், அதைச் சொன்னால்தானே நான் கூட்டிக் கொண்டு போக முடியும்’
‘எனக்கு புக் ஷாப்புக்குப் போகணும்’
‘புக் ஷாப்பா?! என்ன புக் வாங்க, நம்முடைய பெண்ணுக்கும் பிள்ளைக்கும் தான் ஸ்கூலில் கட்டாயமாக அதிக பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களைத் தருகிறார்களே! வேறு என்ன ஏதாவது விட்டுப் போய் விட்டதா?’
‘இல்லை, எத்தனை கேள்விகள், வாருங்கள் என்னோடு’
‘சரி, என்ன புத்தகம், நானும் தேடட்டுமா?’
‘இல்லை நீங்கள் வாசலிலே உட்கார்ந்து கொண்டிருங்கள், நான் இதோ எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்’
‘என்னது இது, ஒரு கூடை நிறைய புத்தகம் எடுத்துக் கொண்டு வருகிறாளே, என்ன ஏதாவது பரீட்சைக்குத் தயார் பண்ணப் போகிறாளோ, வேளைக்கு சாப்பாடு கிடைக்குமா?’
‘பணம் கொடுத்து விடுங்கள்’
‘இது என்ன டிராயிங் நோட்டு, கலர் பென்சில், ஆயில் பேஸ்ட்?’
‘வாருங்கள் வாருங்கள், எனக்கு ஒரு பேக் வேணும், அந்த கடைக்குப் போகலாம்’
‘ஒன்றுமே புரியவில்லையே?’
வீட்டுக்கு வந்தவுடன் சத்தம் போட்டு
‘என்னதான் நடக்கிறது இங்கே, நீ என்ன நெனச்சிட்டு இருக்க?’
‘உங்களுக்கு ரொம்ப பிடித்த சப்பாத்தியும் குருமாவும் சாப்பிடுங்க’
பிறகு மெதுவே
‘நான் நாளையிலிருந்து ஆர்ட் கிளாஸ் போகப் போகிறேன்’
திடுமென்று தூக்கி வாரிப் போட , தன்னை சமாளித்துக் கொண்டு
‘என்ன சொல்கிறாய் என்ன சொல்கிறாய்?’
‘ஆர்ட் கிளாஸ், ஆமா பக்கத்து வீட்டு பாமா, எதிர் வீட்டு வனிதா எல்லோரும் போகிறார்கள்’
‘சரி உனக்கு ஆர்ட் பத்தி என்ன தெரியும்?’
‘ஏன் எனக்கு படம் வரையத் தெரியாதா? ஒரு மரம், ஒரு பூ, ஒரு பூனை போடத் தெரியாதா?’
‘இது மட்டும் அல்ல ஆர்ட், எல்லா கிளாஸும் பாதிப் பாதி’
‘சரி சரி என்னை விடுங்கள், நாளைக்குத் தேவைப்படும் பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்க வேண்டும்’
ஏதோ சொல்ல விழைந்து
‘சரி தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழம் என்ன?’
மறுநாள் விடிந்து ஏழு மணி ஆகியும் காபியைக் காணோம். மெதுவாக எட்டிப் பார்த்தால், அவள் ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன புவனா காபி போட்டாச்சா’
‘இருங்கோ நான் இப்ப உதயசூரியனைப் பார்த்துக் கொண்டு இருக்கேன், இன்றைக்கு சாயந்திரம் படம் வரைய’
‘நீ என்ன வேணா செய், ஆனால் என் காபியில் மாத்திரம் கையை வைத்து விடாதே’
‘உங்களுக்கு உங்களைத் தவிர வேறு எந்த நினைப்பும் இல்லை, கொண்டு வருகிறேன்’
காகம் குத்தி குத்தித் தின்னும் அழகை பார்த்துக்கொண்டே இருந்ததில் காலை டிபன் ரத்து. இப்படியே போனால், மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் அவனுக்கு நன்றாகத் தெரியும் எதுவுமே இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் தங்காது என்று.
மறுநாள் ஆபீஸ்லேயிருந்து வீட்டுக்குள் நுழைந்தால் வீடு அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் சின்ன குப்பியில் தண்ணீர், அது எந்த கலர் என்று தெரியவில்லை, மஞ்சள் பச்சை எல்லாம் கலந்து, இன்னொரு பக்கத்தில் பென்சில் சீவி மரக் குப்பை, இன்னொரு பக்கத்தில் கசக்கி கசக்கி போட்ட பேப்பர் குப்பைகள், தலையைக் கவிழ்ந்து படுத்தவாக்கில் புவனா.
‘என்ன புவனா இது?!’
‘பேசாம இருங்கள், என்னுடைய கற்பனை கலைந்து விடும், டின்னர் வாங்கி விடுங்கள், நான் இன்று போட்ட படம் பாருங்கள்’
‘இது என்ன படம்?’
‘உதிக்கும் சூரியன்’
‘சூரியனைக் காணோமே’
‘இனிமேல்தானே உதிக்கப் போகிறான்’
என்ன சொல்வதென்றே தெரியவில்லை ராகவனுக்கு, சூரியனையும் காணோம், காபி டிபனையும் காணோம். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உள்ளே நுழைந்தால் வெங்காய பக்கோடா வாசம் மூக்கைத் துளைத்தது. புவனா கையில் காபியுடன் சிரித்துக் கொண்டே வந்து
‘வாருங்கள் உங்களுக்குப் பிடித்த பக்கோடா’
அக்கடா என்று இருந்தது. நிம்மதியாகவும் இருந்தது, எதுவும் கேட்டு மாட்டிக்க விரும்பவில்லை, ஆனாலும் சந்தேகத்தை நிவர்த்தி செய்யவில்லையென்றால் எப்பொழுதாவது இந்த பூதம் கிளம்பும் என்று மெதுவாக
‘என்ன ஆயிற்று புவனா, இன்று வகுப்பு லீவா?’
‘போங்க அந்த டீச்சருக்கு ஒண்ணுமே தெரியல, உடைந்த மண்குடத்தை, கலைந்து போன பறவை கூட்டத்தையும் வரைய சொன்னால் அது எப்படிங்க முடியும்?’
ராகவனுக்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், இந்த நிம்மதி எந்த வகுப்பு ரூபத்தில் கிளம்பும் என்ற அச்சம் இல்லாமல் இல்லை, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று சொன்ன பாரதியார் சொன்னது எனக்குப் பொருந்துமா?!
