நேர்மையாய் உழைத்து நாணயமாய், ஆயிரம் இன்னலிலும் தவறாது மலர்ச்சியை முகமிருத்தி எதிர்கொண்டு வாழ்ந்த எம் சொத்தின் மதிப்பு எவ்வளவென்று – தெரியுமா உமக்கு?

எத்தனையோ சோதனைகள் அத்தனையிலும் துன்பத்தை முகத்திலே காட்டாமல் மலர்ச்சியாய் நாமிருந்து சமாளித்தே வாழ்ந்திருந்து சாதனைகள் செய்தோமே எம் சொத்தின் மதிப்பு எவ்வளவென்று – தெரியுமா உமக்கு?

கோடிப் ப்ரச்சனைகள் கொடிகட்டிப் பறந்தாலும் ஆடிப்போகவில்லை தேடித்தேடி வாழ்க்கையில் புன் சிரிப்பை முகம் கொண்டே வாழ்ந்த அகம் கொண்டே வளர்ந்தோமே எம் சொத்தின் மதிப்பு எவ்வளவென்று —– தெரியுமா உமக்கு?

ஒரு வழியாய்ப் படித்து ஒரு வேலை கிடைத்து ஒரு பெண்ணைத் தாரமாக்கி் அவளுக்கு ஒரு நாயகனாய், ஒரே நாதனாகி ஒன்றிப் போய் ஒற்றுமையாய் ஒன்றே தாரம் அதுவே தரம் என்றே வாழ்ந்திருந்து, ஒரு பிள்ளை இரு பெண்ணும் அளவாகப் பெற்றெடுத்தும் மூவரையும் தேவர்கள் போல் தாங்கித் தாங்கி அன்பாய் இதமாய் அருமையாய் வளர்த்து ஆளாக்கிவிட்டாலும், எங்கள் சொத்தின் மதிப்பென்னவென்று –தெரியுமா உமக்கு?

அவர்களுக்கும் கல்வி, நேர்மையாய் வாழ ஒரு வேலை, வாழ்வதற்க்கொரு ஆதாரத் தகுதியுள்ள தக்க துணை, அத்தனையும் தேடித்தந்து தக்கபடி வாழவைத்தே, தர்மத்தை சொல்லிச் சொல்லி தன்மையாய் வளர்த்துவிட்டு, பக்தியுடன் பண்போடும் வாழ்ந்திருந்த தம்பதியர்! யாம் அப்படியே வாழ்ந்தாலும் எங்கள் சொத்தின் மதிப்பு எவ்வளவென்று -தெரியுமா உமக்கு?

நாங்களும் உணரவில்லை எமக்கே தெரியவில்லை எம் சொத்தின் மதிப்பென்ன என்றே!  உமக்கெங்கே புரியும் எம் சொத்தின் மதிப்பு, என்றாலும் அந்த ஒருநாள் தனிலே ஆனந்த வேளையிலே எம் சொத்தின் மதிப்பென்ன என்றே நாங்களே உணர ஒரு வாய்ப்பு எமைத்தேடி வந்ததைய்யா!

எங்கள் அறுபதாம் மண நாளிலும் எழுபதாம் மணநாளிலும் எங்கள் இருவரையும் அருகருகே அமரவைத்தே,  வெற்றிலைபாக்கு பல்வகைப்பழங்கள், மஞ்சள் குங்குமம், என்றெல்லாம் தாம்பாளத்தில் வைத்து,

 

உற்றமும் சுற்றமும் பிள்ளைகளும் பெண்களும் பேரன்  பேத்திகளும்  பட்டாடை உடுத்து பம்பரமாய்ச் சுழன்று அகமும் முகமும்  மகிழ்ந்து, ஆடிஓடி வேலை செய்தே அகமகிழ்ந்தே, அட இன்னும் வெக்கத்தைப் பாரென்றே நகைச்சுவையாய், எங்களை நாணித் தலைகுனிய வைத்தே, உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்றே அரவணைத்தே குழந்தைகளும் பேரன் பேத்திகளும் எங்களைக் கொஞ்சியே ஆதரவாய்த் தோளிலே கைபோட்டு கன்னங்களில் முத்தமிட்டு களிப்பூட்டி எம் வாரிசும் வம்சமும் மகிழ்ந்த நாளில் தானே நாங்களே உணர்ந்தோம் எம் சொத்தின் மதிப்பென்ன என்பதையே!

விஷ உரம் போடாமல் இயற்கையாய் விளைத்த பயிர் நாடியே கிளிகள் வரும் அதுதானே இயற்கை தந்த வரம் இறைவனின் கருணை மனம் இயற்கையாய் வாழ்ந்திருந்து இயல்பாய் வளர்ந்து வந்தால் நம்மோடு உறவாட உயிரான பாச மனம் கூடிக்களிக்கும் கும்மாளமிடும் வாசம் முகர்ந்தே மகிழும் உண்மைதானே!?

எம் சொத்தின் மதிப்பென்ன என்று இப்போதும் நீங்களெல்லாம் அறியாமல் புரியாமல் இருந்துவிட்டால் விட்டால்,  நீர் எப்போதுணர்வீர் எம் சொத்தின் மதிப்பென்ன வென்றே ?–

கோடிக்கோடி சொத்து வரும் பல பதவி தேடி வரும் ஆயினுமென் கிடைக்குமா இப்பேறு?  பேரன் பேத்திகளும் பெற்ற பிள்ளைகளும் கூடி மகிழ்ந்தே கும்மாளமிட்டு ஆடிப்பாடி அகம் குளிர்ந்தே நம்மை அரவணைக்கும் பாக்கியம் கிடைத்திடுமா?  அன்பாய் ஆயிரம் முத்தம் அளித்தே மகிழும் சுற்றமும் உறவும் மகிழ்ந்தே கொண்டாடும் இப்பேறு கிடைத்திடுமா ? அவனருள் இல்லையென்றால்! இப்போது புரிகிறதா என் சொத்தின் மதிப்பென்னவென்று?

எங்களுக்கு புரிகிறது  நட்புக்கும் சுற்றத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் நன்றி சொல்லி,  இறைக்கும் நன்றி சொல்கின்றோம்!                         இது போல் பாக்கியம் எல்லோர்க்கும் கிடைக்க, குடும்ப சகிதமாய்  இறையை நோக்கி தொழுகின்றோம் யாம் பெற்ற பேறு இவ்வையகம் பெற்று களிப்புடனே  வாழ்வாங்கு வாழ!

 

இப்போது உங்களுக்குத் தெரிகிறதா எம் சொத்தின் மதிப்பு?