‘ யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் ,வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை ‘.
என்று முண்டாசு கவி பாரதி, கம்பரைப் போற்றி ,புகழ்ந்து பாடினார்.
கம்பரின் மாபெரும் படைப்பான’ கம்ப ராமாயணம் ‘, (ராமாவதரம்) மூல நூலான வால்மீகி எழுதிய ராமயணத்தை தழுவி, அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டாலும், அனேக இடங்களில் கம்பர் தன்னுடைய கண்ணோட்டத்தில் எழுதி இருப்பது
அனைவரும் அறிந்ததே!
கம்பருக்கு தன்னுடைய நாயகனை என்றுமே உயர்த்தி பேசுவது வழக்கம்.
கம்பருக்கு தன் ராம காதை எழுத வால்மீகி ஈர்த்தார் என்றால் ,கவியரசு கண்ணதாசனுக்கு தன் கவிதைகள் புனைய கம்பர் காந்தமானார்.
கம்பனை கரைத்துக் குடித்தவர் கவியரசு எனலாம் .அவருடைய ஒவ்வொரு பாடலிலும் கம்பரின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். கவியரசின் சந்தங்கள் பல கம்பரின் வரிகளை பேசும்,சூழ் நிலைகள் வேறு வேறாக இருந்தாலும். அந்த வரிகள் அவரை மட்டும் அல்ல ,நம்மையும் பரவசப்படுத்தும்.பார்ப்போமா!
‘ இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றுஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்.
இந்த பாடலில் பார்த்தால் எல்லாம் வண்ண மயம். வண்ணம் எழுத்தில் மட்டும் இல்லை ; பாடலிலும் தான். வண்ணத்தை எழுத்து என்னும் எண்ணத்தில் தோய்த்து ,கிண்ணத்தில் சுவை மிக்க பாடலாக்கி தருகிறார்.’மை வண்ணத்து அரக்கி ‘…கருஞ்சாந்து போல வண்ணமுடையவள் தாடகை என்ற அரக்கி. அவளுடன் யார் போரிட்டார்.’ மழை வண்ணத்து அண்ணலே! மழையைக் கொண்டுவரும் கரிய மேகத்தை ஒத்த வண்ணமுடைய ராமனே என்கிறார். கருமை நிறத்தை ஒத்தவர்கள் தான் இருவரும் .ஆனால் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் வண்ணமாம் அரக்கி ; கம்பரின் பாட்டுடை தலைவனோ மழையை உண்டாக்கும் கரும் மேகத்திற்கு ஒப்பானவன் என்கிறார்.
மை வண்ணத்து அரக்கியுடன் நடந்த போரில் ,இராமரின் கையில் வில்லும், அம்பும் விளையாடியதாம்.’ கை வண்ணம் ‘ அப்பொழுது பார்த்தேன் என்று பிற்பாடு கால் வண்ணம் பார்த்த பிறகு தான் எழுதினார். ‘ கால் வண்ணம் இங்கு கண்டேன்’. ராமர் திருவடி பட்டு அகலிகை சாபம் நீங்கியதை கால் வண்ணம் என்கிறார்.
பொதுவாக கை அணைக்கும் ;கால் உதைக்கும். இங்கு கை, தாடகையை வதைக்க, கால் அகலிகையை வாழ்த்துகிறது .எதிர்மறை .
அதுதான் கம்பனின் சிறப்பு. அழிப்பதற்கு கையும் ,அணைப்பதற்கு காலும் சூழ் நிலைக்கேற்ப தன் பணிகளை மாற்றிக் கொள்ளும் என்பதை இங்கு கம்பர் கையாண்டுள்ளார். சில நேரங்களில் இதுவும் ஒப்புக்கொள்ளக் கூடியதே.
பாட்டு முழுவதும் வண்ண மயம்.
கண்ணதாசனை எவ்வாறு ஈர்த்த்து ?பார்ப்போமா.
‘ பால் -வண்ணம் -பருவம் -கண்டு; வேல் -வண்ணம் -விழிகள் கண்டு
மான் -வண்ணம்-நான்- கண்டு- வாடுகிறேன்’
கண்-வண்ணம் அங்கே-கண்டேன் கை -வண்ணம் இங்கே-கண்டேன்
பெண்- வண்ணம்- நோய்- கொண்டு வாடுகிறேன்.’
கவியரசை ஈர்த்தது அந்த வண்ணம் மட்டும் தான் ,அந்த வண்ணம், அடுத்தடுத்து வந்தவண்ணம் இருப்பது தான் சிறப்பு.இருவரும் வண்ணத்தைக் குழைத்து அடுத்தடுத்து சந்தம் அமைத்தனர்.
‘ பால் போன்ற வெண்மையான களங்கமில்லாத பருவ வயது;வேல் போன்ற கண்கள்; மானின் நிறத்தைப் போன்ற உடல் இவைகளை உன்னிடம் பார்த்து உன் பால் ஈர்த்தேன். கண் போன்ற நிறம் உன்னிடம் பார்த்தேன் ; இங்கே உன் கையின் அழகு பார்த்தேன். பெண்ணாகிய நான் உன் நினைவால் வாடுகிறேன் என்ற பொருள் பட பாட்டை வடிவமைத்துள்ளார்.
வார்த்தைக்கு வார்த்தை ‘ வண்ணம்’ என்கிறார்.வண்ணம் என்றால் இங்கே போன்ற, தன்மை வாய்ந்த ,இயல்புடைய என்ற பொருள் பட எழுதி உள்ளார் கவியரசு.
கவிசக்ரவர்திக்கும்,கவியரசுவிற்கும் என்ன ஒற்றுமை என்றால் வார்த்தை (சந்தங்கள்)மட்டுமே.
இருவரும் வேறு வேறு சூழ் நிலையில் இந்த வார்த்தை ப்ரயோகம் செய்துள்ளனர். கம்பர் காட்டில் தாடகை வதத்தையும், அகலிகை சாப விமோசனத்தையும் இணைத்து எழுதி உள்ளார். கவியரசு அன்புகொண்ட இருபாலரின் வர்ணிப்பாக எடுத்தாள்கிறார்.
கம்பர் ,கைகளும் ,கால்களும் புரிந்த வர்ண ஜாலத்தை பேசுகிறார்.கைகள் வில்லுடன் ஜாலம் புரிந்தது ; கால்கள் மெதுவாக வருடிக் கொடுத்தது என்று கை வண்ணத்தையும் ,கால் வண்ணத்தையும் வர்ணிக்கிறார்.
கவியரசோ ‘ பால் வண்ணம்’. வெள்ளை நிறம் களங்கமில்லா பால்.அதுபோன்று வெள்ளந்தியான பருவ வயது பெண் என்னை ஈர்த்தவள் என்ற பொருள் பட எழுதி உள்ளார். வேல் வண்ணம் .இங்கு உவமை .வேல் போன்ற கூர் விழிகள் என்று கண்களை வேலிற்கு ஒப்பிடுகிறார். மான் வண்ணம். மானைப் போன்ற நிறம். இங்கு வண்ணம். பெண்வண்ணம் . பெண் என்ற இனத்தைச் சேர்ந்த நான். இங்கு இனம். என்று அந்த ‘வண்ணத்திற்கு’. பலவித அர்த்தங்களை. கூறுகிறார்.
‘ வண்ணம்’ என்ற ஒரு சொல்லுக்கு இயல்பு, உவமை,நிறம்,இனம் ( பெண் வண்ணம்)என்று பல் பொருள் பொதிய எடுத்தாண்டுள்ளார்.
இருவருமே எண்ணங்களை,வண்ணங்கள் குழைத்து எழுத்தில் வடித்து நம்மை பரவசப் படுத்துகின்றனர்.
கம்பனை ரசிப்போம் ,கண்ணதாசனை காதலிப்போம்!
உஷா கண்ணன்.
எழுத்தாளர் ,கல்வி ஆலோசகர்

