Lord Krishna and Arjuna in a Chariot at the Kurukshetra Battle Canvas Print, Wall Art Decor, Mahabharata Hindu Gita Heritage, Ready to Hang image 1

பகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயம் “ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்” என்று அழைக்கப்படுகிறது. இது கீதையின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அத்தியாயம் இறைவனின் பரம்பொருள் தன்மையையும், பக்தியின் மகத்துவத்தையும், இறைவனை அடையும் எளிய வழியையும் விளக்குகிறது.

ஏழாம் அத்தியாயத்தில், பரா பிரகிருதி மற்றும் அபரா பிரகிருதி ஆகிய இரண்டின் இணைப்பாக இறைவனை ஸ்ரீகிருஷ்ணர் பார்க்கிறார். அதில் பரா பிரகிருதி என்பது “யயேதம் தாரயதே ஜகத்” அதாவது, எது இந்தப் பிரபஞ்சத்தின் அடித்தளமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம் நிலைபெற்று தாங்கப்படுகிறதோ” அதுவே காலத்தின் மாற்றங்களால் தாக்கப் படாத உண்மையாய் இருப்பது என்பதை உணர்த்துகிறது. அத்தியாயத்தின் மீதிப்பகுதி பெரும்பாலும் அபரா பிரகிருதியின் இயல்புகளையும் வெளிப்பாடுகளையும் விளக்குகிறது.

எட்டாம் அத்தியாயத்தில், சகுண உபாஸனை (உருவத்துடன் கூடிய இறைவனைத் தியானித்தல்) கிரம முக்தியை (படிப்படியாக முக்தியை அடையும் வழி) பெறுவதற்கான சாதனமாகக் கூறப்பட்டது. ஆனால் பகவானின் முக்கிய நோக்கம், சகுண உபாஸனையை ஒரு முன்னேற்பாடாக பயன்படுத்தி, மனிதனை இறைவனின் உண்மையான இயல்பை அறியும் தகுதியுள்ளவனாக்கி, இந்த வாழ்க்கையிலேயே ஜீவன் முக்தியை அடையச் செய்வதாகும். அதனால், பகவான் உபாஸனையை நேரடியாக முக்தி தரும் வழியாக அல்லாமல், ஞானத்திற்கான தயாரிப்பாக கற்பிக்கிறார். இந்த அணுகுமுறை ஏழாம் அத்தியாயத்திலும், இவ்வத்தியாயத்திலும் காணப்படுகிறது.

மேலும், எட்டாம் அத்தியாயத்தில், ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மனிதனுக்கு இருக்கும் இரண்டு இலக்குகளில் இறைவனை அடைவதும் ஒன்றாக காட்டுகிறார்.. இறைவன் என்பவர் அக்ஷரம் அதாவது அழிவற்றவராக, மனிதப்பிறவியின் மிக உயர்ந்த குறிக்கோளாக, மற்றும் எல்லையற்ற பரம்பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டார். மற்றொரு இலக்கு அழிவிற்குட்பட்ட, எல்லைகள் உடைய மாற்றங்கள் நிறைந்த வரையறுக்கப்பட்ட இந்த உலகமாகும்.

இப்போது ஒன்பதாம் அத்தியாயத்தில், அந்த பரா பிரகிருதியின் இயல்பும் மகத்துவமும் விரிவாக விளக்கப்படுகின்றன..உபநிஷத்துகளின் சாராம்சம் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்படுகிறது..

ஏழாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அபரா பிரகிருதியை, அதாவது, பஞ்ச பூதங்கள், மனம், புத்தி, அஹங்காரம் போன்ற உலகப் பொருள் சார்ந்த இயற்கையை மையமாகக் கொண்டு இறைவன் வெளிப்படுத்தும் சக்திகளை விளக்கினார். எட்டாம் அத்தியாயம், அக்ஷர பிரம்மம் எனும் அழிவற்ற பரம்பொருளை, அனைத்து உயிகளிலும் உள்ள தெய்வீக சைதன்யத்தை, உலகைத் தாங்கி நிறுத்தும் இறை சக்தியை அடைதலே, ஆன்மீகத்தின் மிக உயர்ந்த இலக்காகக் காட்டுகிறது..

ஒன்பதாவது அத்தியாயம் இந்த பரம்பொருளின் உண்மையான தெய்வீக இயல்பை அதாவது பராபிரகிருதியை ஆழமாக விளக்குகிறது. இதனாலேயே இது கீதையின் மிக முக்கியமான ஆன்மீகப்பாடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மனித வாழ்வின் உயர்ந்த ஆன்மீக வழிகாட்டியாகப் போற்றப்படும் பகவத் கீதையில் இந்த அத்தியாயம் கீதையின் இதயமாகக் கருதப்படுகிறது.

“ராஜவித்யா” என்பது எல்லா கல்விகளுக்கும் அரசனான உயர்ந்த அறிவைக் குறிக்கிறது; “ராஜகுஹ்யம்” என்பது எல்லா இரகசியங்களிலும் உயர்ந்த ஆன்மீக இரகசியத்தைக் குறிக்கிறது. இவ்வத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இறைவனின் உண்மையான இயல்பையும், பக்தியின் மகத்துவத்தையும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இது “ராஜ வித்யா” (அறிவுகளின் அரசன்) என்று பல காரணங்களுக்காக அழைக்கப்படுகிறது.

  1. 1. உயர்ந்த நிர்குண ஸ்வரூபத்தைப் பற்றிய ஒரே அறிவு. இது மட்டுமே உயர்ந்த நிர்குண ஸ்வரூபமான பரம்பொருளைப் பற்றி விளக்குகிறது. அந்த நிர்குண பிரம்மமே ஒரே உண்மை (சத்யம்) ஆகும். மற்ற எல்லா அறிவுத் துறைகளும் மாற்றமடையும் உலகைப் பற்றியோ அல்லது மாயையின் எல்லைக்குள் வரும் இறைவனின் வெளிப்பட்ட வடிவங்களைப் பற்றியோ பேசுகின்றன. அவை அனைத்தும் மாயா அல்லது மித்யா (தோற்றமளிக்கும் உண்மை) என்ற நிலைக்குள் அடங்குகின்றன.

ஆனால் இந்த அறிவு மட்டுமே, எல்லா மாற்றங்களுக்கும் அப்பாற்பட்ட, நித்தியமான பரம்பொருளை அறியச் செய்கிறது. எனவே இது அறிவுகளின் அரசன் என்று போற்றப்படுகிறது.

  1. முழுமையான விடுதலையை அளிக்கும் ஒரே அறிவு இது மட்டுமே மனிதனுக்கு முக்தியையும் முழுமையான திருப்தியையும் அளிக்கக்கூடிய அறிவாகும். மனிதனுக்கு பல நிலைகளில் குறைபாடு உணர்வு (sense of limitation) உள்ளது:

உடல் ரீதியான குறைபாடு: சிலர் தங்களது உடல் தோற்றத்தில் திருப்தி அடைவதில்லை. இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றை நாடுகின்றனர்.

மனரீதியான குறைபாடு: பலருக்கு “என்னை யாரும் நேசிப்பதில்லை”, “என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை” என்ற மனக்குறை மற்றும் தனிமை உணர்வு ஏற்படுகிறது.

அறிவு ரீதியான குறைபாடு: அறிவார்ந்த மனிதனுக்கு இன்னும் ஆழமான கேள்விகள் எழுகின்றன:

  • நான் யார்?
  • இந்த உலகம் எவ்வாறு தோன்றியது?
  • வாழ்க்கையின் நோக்கம் என்ன?
  • இறைவன் என்றால் என்ன?

இத்தகைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்காததால் அறிவுசார் அதிருப்தி உருவாகிறது.

ராஜவித்யையின் சிறப்பு என்னவென்றால், இந்த அனைத்து குறைபாடு உணர்வுகளுக்கும் அடிப்படைக் காரணம் நம்முடைய உண்மையான இயல்பை அறியாமை என்பதை அது காட்டுகிறது. ஆத்மா மற்றும் பிரம்மம் ஒன்றே என்பதை உணரும்போது, மனிதன் அனைத்து மட்டங்களிலும் பூரணத்தையும் நிறைவையும் அடைகிறான்.

எனவே இந்த அறிவு உயர்ந்த அறிவு மட்டுமல்ல; முழுமையான சுதந்திரத்தையும் நிரந்தர ஆனந்தத்தையும் அளிக்கும் விடுதலை அறிவாகும். இதனாலேயே பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தில் இது “ராஜவித்யா” என்று அழைக்கப்படுகிறது.

இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கம், இறைவன் அனைத்திலும் நிறைந்திருக்கிறார் என்பதையும், உலகம் முழுவதும் அவருடைய சக்தியால் இயங்குகிறது என்பதையும் விளக்குவதாகும். பகவான் தாம் இந்த உலகத்தின் படைப்பு, பாதுகாப்பு மற்றும் அழிவிற்குக் காரணமாக இருப்பவர்; ஆனாலும்,  அவற்றால் பாதிக்கப்படாதவர் பரம்பொருள் என்பாதை வலியுறுத்துகிறது.. இதன் மூலம் மனிதன் உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்து, நிலையான ஆன்மீக உண்மையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

இங்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த அத்தியாயத்தின் மையப் பொருளான ஈஸ்வர ஞானத்தை (இறைவனைப் பற்றிய அறிவை) அறிமுகப்படுத்துகிறார்.

இறைவனின் உயர்ந்த இயல்பைப் பற்றிய அறிவு “விஞ்ஞானம்” என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் தாழ்ந்த அல்லது வெளிப்பட்ட இயல்பைப் பற்றிய அறிவு “ஞானம்” (ānam) என்று அழைக்கப்படுகிறது. இந்த அறிவைப் பெற விரும்பும் சாதகனுக்கு, ஆசிரியரின் மீதும் சாஸ்திரத்தின் மீதும் நம்பிக்கை,

அவசியம்.

எனவே இந்த அத்தியாயத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் விளக்கப்படுகின்றன:

  1. பிரம்ம ஸ்வரூபம் – பரம்பொருளின் உயர்ந்த, நித்தியமான உண்மை இயல்பு.
  2. மாயா ஸ்வரூபம் – உலகமாக வெளிப்படும் இறைவனின் கீழ்நிலை இயல்பு.

ஒன்பதாம் அத்தியாயத்தின் 4-ஆம் ஸ்லோகத்திலிருந்து 10-ஆம் ஸ்லோகம் வரை, கிருஷ்ணர் முதன்மையாக இந்த உயர்ந்த இயல்பான பிரம்ம ஸ்வரூபத்தைப் பற்றியே விளக்குகிறார். அதாவது,

  • இறைவன் எவ்வாறு அனைத்திலும் நிறைந்திருக்கிறார்,
  • அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார்,
  • இருப்பினும் எதனாலும் கட்டுப்படாதவராக இருக்கிறார்,

என்ற ஆழமான வேதாந்த உண்மைகளை இப்பகுதியில் எடுத்துரைக்கிறார்.

அதனால், இந்தப் பகுதி உபநிடதுகளின் சாராம்சம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் உபநிடதுகள் அனைத்தும் இறுதியில் மனிதனுக்கு பரம்பொருளின் உண்மையான இயல்பை அறியச் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன; அதே உண்மையை இந்த ஸ்லோகங்கள் மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்குகின்றன. இறைவனைத் தவிர வேறு பிரபஞ்சம் இல்லை.

இருப்பினும், அவரது மாயை சக்தியால், உலகம் தனித்ததாகத் தோன்றுகிறது.

அவர்:

  • கேவலன் (ஒருமையானவர்)
  • அசங்கன் (பற்றற்றவர்)

ஆகாயம் எதனாலும் பாதிக்கப்படாதது போல, இறைவனும் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. அவர்:

  • உலகத்தின் தோற்றத்திற்கு காரணம்,
  • உலகத்தின் நிலைப்பாட்டிற்கு காரணம்,
  • உலகத்தின் அழிவிற்கும் காரணம்.

அவருடைய பிரகிருதி, அவரிடமிருந்து பிரிக்க முடியாத சக்தியாக இருந்து, படைப்புச் சுழற்சியை நடத்துகிறது.

இவ்வளவு நிகழ்வுகளுக்கும் இறைவனின் இருப்பு அவசியமானதாயிருந்தாலும், அவர்:

  • கர்த்தா அல்ல (செய்பவர் அல்ல)
  • போக்தா அல்ல (அனுபவிப்பவர் அல்ல)

அவர் அகர்த்தா மற்றும் அபோக்தா.

அப்படியானால், நம் பந்தத்திற்கு காரணம் என்ன?

அடிப்படை அறியாமையே (அவித்யை) காரணம்.

அதனால் இறைவன் மனிதனைப் போன்றவர், பிறப்பும் இறப்பும் உடையவர், ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்டவர் என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த அறியாமை உலகளாவியதாக இருந்தாலும், பலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சாஸ்திரங்களையும் பாரம்பரிய ஞானத்தையும் நிராகரித்து, தங்கள் விருப்பப்படி வாழ்ந்து, வாழ்க்கையை வீணாக்குகிறார்கள்.

சில உயர்ந்த மனிதர்கள் தங்கள் பந்தத்தை உணர்ந்து, அதிலிருந்து விடுபட இறைவனை நாடுகிறார்கள். அவர்கள் இறைவனை மட்டுமே அடைய விரும்புகிறார்கள்; பலவிதமான பக்தி முறைகளால் அவரை வணங்குகிறார்கள்.

சிலர் இறைவன் நானே என்று வணங்குகிறார்கள்; இறைவன் என்னைவிட வேறானவர் என்று வணங்குகிறார்கள்; அனைத்தும் இறைவனே என்று வணங்குகிறார்கள்.

இத்தருணத்தில்,பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இரண்டு வகை பக்தர்களைப் பற்றி கூறுகிறார்:

  1. சகாம பக்தர்கள்: இவர்கள், செல்வம், சுகம், சொர்க்கம் போன்ற வரையறுக்கப்பட்ட பலன்களை நாடுபவர்கள். அவர்களின் வழிபாடு பலன் தரும்.

ஆனால் அந்த பலன்கள் நிரந்தரமானவை அல்ல.

  1. நிஷ்காம பக்தர்கள்: இவர்கள்:இறைவனை மட்டுமே இலக்காகக் கொள்கிறார்கள். இத்தகைய பக்தர்களின் உலகியல் நலன்களையும் இறைவனே கவனிப்பதாக உறுதியளிக்கிறார்.

எட்டாம் அத்தியாயம், நிஷ்காம சகுண பக்தியை (பலன் எதிர்பார்க்காத, உருவத்துடன் கூடிய இறைவனை நோக்கிய பக்தி) கிரம முக்திக்கான வழியாக விளக்குகிறது. இது மறைமுகமான பாதை ஆகும். இந்தப் பாதையில் பக்தன் பிரம்மலோகத்தை அடைந்து, பின்னர் முக்தியை அடைகிறான்.

ஆனால் ஏழாம், ஒன்பதாம், பத்தாம், பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் அத்தியாயங்கள், நிஷ்காம நிர்குண பக்தியை (பலன் எதிர்பார்க்காத, உருவமற்ற பரம்பொருளை நோக்கிய பக்தி) ஜீவன் முக்திக்கான வழியை எடுத்துரைக்கின்றன.

இந்த ஜீவன் முக்தி, ஸ்ரவணம் (கேட்டல்), மனனம் (சிந்தித்தல்), மற்றும் நிதித்யாசனம் (ஆழ்ந்த தியானம் மற்றும் உண்மையில் நிலைபெறுதல்) ஆகியவற்றின் மூலம் பெறப்படுகிறது.

அதாவது, முக்தி என்பது மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் ஒன்றல்ல; “இங்கேயும் இப்போதே, இந்த வாழ்நாளிலேயே” ஆத்ம ஞானத்தின் மூலம் அடையக்கூடிய உயர்ந்த நிலை என்று இந்த அத்தியாயங்கள் போதிக்கின்றன

பந்தத்தில் தொடர்வதா அல்லது முக்தியை அடைவதா என்பது மனிதனின் தேர்வு.

மற்ற தெய்வங்களை வழிபடுபவர்களும் உண்மையில் ஒரே இறைவனையே வழிபடுகிறார்கள். ஆனால் அவர்கள் குறுகிய பலன்களை மட்டுமே நாடுவதால், அளவற்ற இறைவனை இழந்து விடுகிறார்கள். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியும் என்பது நாம் எடுத்துச் செல்லும் பாத்திரத்தின் அளவைப் பொறுத்தது. அதுபோல மனிதன் நாடுவதை மட்டுமே பெறுகிறான்.

அளவற்ற இறைவனை அடைய எப்படி வழிபட வேண்டும்?

பகவான் கூறுகிறார்: “ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிது நீர் – எதுவாக இருந்தாலும் பக்தியுடன் கொடு.” வழிபாட்டில் பொருள் முக்கியமல்ல.

மனப்பாங்கே முக்கியம். அதுவும் முடியாவிட்டால்: ஒவ்வொரு செயலையும் “இது உனக்காக” என்று இறைவனுக்கே அர்ப்பணித்துச் செய். இத்தகைய பக்தன் கர்மயோகி, சந்நியாசி இரண்டுமாக இருக்கிறான். அவன் விரைவில் மனத் தூய்மையை அடைந்து, குருவின் மூலம் ஞானத்தைப் பெற்று முக்தியை அடைகிறான்.

பகவான் மீண்டும் வலியுறுத்துகிறார்: அவர் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கக்கூடியவர். யார் வேண்டுமானாலும் அவரை அடையலாம்.

பக்தியின் சிறப்பு என்னவென்றால் பாவங்கள் செய்தவர்களும், மன பலவீனம் உடையவர்களும், வெளிமுகமானவர்களும் கூட பக்தியின் மூலம் உயர்ந்த இலக்கை அடைய முடியும்.

பகவான் உறுதியளிக்கிறார்: “என் பக்தன் ஒருபோதும் அழிவதில்லை.”

இறுதியாக பகவான் பக்தியின் சாரத்தை இவ்வாறு கூறுகிறார்:

“என்னையே நினைத்துக்கொள்.

என் பக்தனாக இரு.

என்னையே இலக்காகக் கொள்.

என்னையே வணங்கு.

என்னிடம் சரணாகதி அடை.

இவ்வாறு மனதை என்னிடத்தில் நிலைநிறுத்தினால்,

நீ என்னையே அடைவாய்.

ஏனெனில் நானே உன்னுடைய ஆத்மா.”

பக்தி மிகவும் உயர்ந்த சாதனையாக இருந்தாலும், அது நேரடியாக முக்தியை அளிப்பதில்லை. பக்தி மனத் தூய்மையை அளிக்கிறது. குருவை அடையச் செய்கிறது. சாஸ்திரத்தைப் புரிந்துகொள்ளும் தகுதியை அளிக்கிறது. ஆனால் இறுதி முக்தி கிடைப்பது: குருவின் வழிகாட்டுதலுடன் சாஸ்திரங்களைப் பயின்று, ஆத்ம ஞானத்தைப் பெறுவதன் மூலமே.

ஒன்பதாவது அத்தியாயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று பக்தியின் எளிமை மற்றும் உயர்வு பற்றிய போதனையாகும். இறைவனை அடைவதற்கு பெரிய யாகங்கள், கடினமான தவங்கள் அல்லது ஆழ்ந்த தத்துவ அறிவு – இவை எல்லாம் தேவையில்லை என்று பகவான் கூறுகிறார். உண்மையான அன்பும் தூய மனமும் கொண்ட பக்தியே போதுமானது. இதனை விளக்கும் வகையில் அவர்,

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சதி”  என்ற புகழ்பெற்ற ஸ்லோகத்தில், ‘ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது சிறிது நீரைக் கூட பக்தியுடன் சமர்ப்பித்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்’,என்று கூறுகிறார். இதன் மூலம் இறைவன் பக்தனின் மனதையே முக்கியமாகக் கருதுகிறார் என்பது தெளிவாகிறது.

மேலும், இவ்வத்தியாயம் சமத்துவத்தின் செய்தியையும் எடுத்துரைக்கிறது. எந்த ஜாதி, பாலினம், சமூக நிலை அல்லது பிறப்பைப் பொருட்படுத்தாமல், இறைவனை முழுமனதுடன் சரணடைபவர்கள் அனைவரும் அவரை அடைய முடியும் என்று பகவான் உறுதியளிக்கிறார். இது மனிதகுல ஒற்றுமையையும் ஆன்மீக சமத்துவத்தையும் வலியுறுத்தும் உயர்ந்த கருத்தாகும்.

இந்த அத்தியாயம் கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவற்றில் பக்தி யோகத்திற்கே தனிச்சிறப்பை அளிக்கிறது. மனிதன் தன் அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணித்து, பற்றற்ற மனதுடன் வாழ வேண்டும் என்ற செய்தியை இது வழங்குகிறது. இத்தகைய வாழ்க்கை மன அமைதியையும், ஆன்மீக முன்னேற்றத்தையும், இறுதியில் முக்தியையும் அளிக்கிறது.

முடிவாக, பகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயம் இறைவனின் பரிபூரண தன்மையையும், பக்தியின் மகத்துவத்தையும், அனைவருக்கும் திறந்த ஆன்மீகப் பாதையையும் விளக்கும் அரிய பொக்கிஷமாகும். மனித வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து இறைவனுடன் ஒன்றுபட விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அத்தியாயம் ஒரு நிரந்தர வழிகாட்டியாகத் திகழ்கிறது.

 

.*********************************