“டேய் தமிழு, உன்னை தேடி அன்பு வந்திருக்காண்டா” என்று உள்ளே பார்த்து கத்தினாள் மணிமேகலை.

“அவனை உக்காரச் சொல்லு. வந்துடறேன்” என்று பதில் கொடுத்தான் தமிழ் செல்வன்.

அங்கிருந்த அரதப் பழைய சோபாவில் அமர்ந்தான் அன்பு. மணிமேகலை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். “இன்னாடா ஹேர் ஸ்டைல் இது புள்ளிங்கோ கணக்கா இருக்கு?” அவன் தலை முடியை பார்த்துக் கொண்டே சொன்னாள் மணிமேகலை. “உன் அண்ணனும் இப்படித் தான் முடி வெச்சிக் கிட்டிருக்கான், அவனை சொல்லமாட்டியா?” என்றான் அன்பு.

தமிழ்செல்வன் அம்மா பார்வதி ஹாலுக்கு வந்து “தமிழ் வர்ற வரைக்கும் இதை சாப்பிடு கண்ணு” என்று ஒரு தட்டில் இரண்டு இட்லியும் தக்காளி சட்னியும் அவன் முன்னே ஒரு ஸ்டூலில் வைத்தாள்.

“இப்பத்தான் டிபன் சாப்பிட்டு நேர இங்க வர்றேன் ஆன்டி. மணி எட்டாவுது. காலேஜுக்கு நேரமாயிடுச்சே” என்றான்.

“பரவாயில்ல கண்ணு ரெண்டு இட்டிலி தான் வச்சிருக்கேன். அம்மா நல்லாயிருக்கங்களா” என்றாள் பார்வதி.

தினமும் இவனைப் பாத்து கொண்டு தான் இருக்கிறாள், இருந்தாலும் இதைக் கேட்பதை நிறுத்த மாட்டாள். அதனால் அன்பு பதிலுக்காக காத்திராமல் உள்ளே சென்று விட்டாள்.

தமிழ் செல்வன் தங்கை மணிமேகலை குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே கல்லூரிக்கு வேண்டிய புத்தகம் நோட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உயரமாக, சுருள் கேசத்துடன் களையாக இருந்தாள்.
இட்லி சாப்பிட்டுக்கொண்டே அன்பு கேட்டான் “நேத்தைக்கு அனுப்பின வாட்ஸ் அப் பாத்தியா மணி?”

” அந்த பூனை வீடியோவா? செம்ம காமெடி இல்ல?”

கல கலவென சிரித்தாள் மணிமேகலை.

“எங்கேயிருந்து உனக்கு இப்படி கோக்கு மாக்கு வீடியோ எல்லாம் கெடைக்குது?”

தமிழ் செல்வன் தயாராகி வெளியே வந்தான். ” அன்பு, நேத்து மத்தியானம் காலேஜ் கட் பண்ணிட்டியாமே, என்ன சினிமா?” என்றான்.

” நம்ம தல படம் மாப்ள, மொத நா மொத ஷோ. ரசிகர் மன்றம் டிக்கட் கெடைச்சுது. நீ படிக்கிற புள்ள வர மாட்டேன்னு நா மாத்திரம் போனேன். சரி வா நேரமாவுது, போலாம்”

இருவரும் புறப்பட்டார்கள்.

“அன்பு, நாளையிலிருந்து எங்க அண்ணன் தமிழ் ஒரு வாரம் அவன் டிபார்ட்மெண்ட்டோட கேரளாவுக்கு டூர் போறான். ஓசி பைக்குக்கு என்னடா பண்ண போறே?” என்றாள் மணிமேகலை.

” எனக்கும் நாளையிலேருந்து செமஸ்டர் லீவு! யார் கிட்ட?”

வாசலில் பைக் சத்தம் உறுமி மறைந்தது.

இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில் தான் படிக்கிறார்கள். தமிழ் கணினியும் அன்பு சிவிலும். மூன்றாம் வருடம். தமிழ் ஓரளவுக்கு நன்றாகப் படிப்பான். அன்பு பெயருக்கு தான் காலேஜ். இருவரின் அப்பாக்களுக்கும் அம்பத்தூர் பாக்டரியில் வேலை. விடி காலை போனால் இரவு தான் வீட்டுக்கு வருவார்கள். கைப்பணம், கடன் எல்லாம் போட்டு ஊருக்கு வெளியே அரை கிரவுண்டில் வீடு கட்டி நாலு வருஷம் முன்னால் குடி வந்தார்கள். அன்பு வீடு இரண்டு தெரு தள்ளி. தமிழ்செல்வனிடம் பைக் இருப்பதால் தினம் இங்கு வந்து இருவரும் சேர்ந்து செல்வார்கள். மணிமேகலை அருகில் ஒரு கல்லூரியில் B.Com முதல் வருடம் படிக்கிறாள். பேருந்தில் போய் வருவாள்.

“மேகலா சாப்பாடு டப்பாவை மறந்துறாத” அவசரமாக புறப்பட்டுக்கொண்டிருந்த மணிமேகலையி்டம் டிபன் டப்பாவை கொண்டு வந்து கொடுத்தாள் பார்வதி. “தாங்க்ஸ், வர்றேம்மா” என்று டப்பாவை எடுத்துக் கொண்டு கொண்டு பறந்தாள்.

பத்து நிமிஷத்தில் பேருந்து நிறுத்தம். புறநகர் என்பதால் ஈ, காக்காய் இருக்காது.

மறுநாள் காலை அதே இடத்தில் பஸ்சுக்காக மணிமேகலை நின்று கொண்டிருந்தாள். கூட ஓரிரு பயணிகளும். அவள் பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. பின் சீட்டிலிருந்து இறங்கிய அன்பு மணிமேகலையை நோக்கி வந்தான்.

“தமிழ் டூருக்கு போயிட்டானா மணி?”

” நேத்தைக்கு ராத்திரி புறப்பட்டு இன்னைக்கு காலைல திருவனந்தபுரம் போய் சேந்துட்டான். மெசேஜும் கொடுத்திட்டான். உனக்குத் தான் காலேஜ் இல்லையே, எங்க ஊர் சுத்திட்டிருக்க?”

“அது வந்து மணி…. உன்னய ஒரு நாள் கூட பாக்காம இருக்க முடியல, அதான் உங்க வந்தேன்”
அதிர்ச்சியானாள்  மணிமேகலை.

“அடப் பாவி.. இது இன்னாடா கூத்தா இருக்கு. நீ என் அண்ணன் மாரி”

“இல்ல மணி, நா ரொம்ப நாளாவே உன்னைத்தான் நெனச்சுக்கிட்டு இருக்கேன். மாட்டேன்னு சொல்லாத மணி” அன்பு கெஞ்சினான்.

“ஆர் யூ எ நட்? என்னடா பேசற. நா உன்கிட்டே அந்த மாதிரி எல்லாம் பழகல்ல. இந்த நினைப்பை எல்லாம் மூட்டை கட்டிட்டு ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு”

தூரத்தில் பஸ் வந்து கொண்டு இருந்தது.

“பிளீஸ் மணிமேகலை பிளீஸ்” சொல்லிக் கொண்டே மணிமமேகலையின் கைகளைப் பிடிக்க முயன்றான்

” ச்சீ இவ்வளவு கெட்ட எண்ணத்தோட இனிமே என்னைப் பார்க்க வராதே” சொல்லிகொண்டே தன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். பஸ் நெருங்கியதும் அதில் ஏறினாள். முகம் கோபமடைந்தது.

பஸ் பக்கத்திலேயே கொஞ்ச தூரம் ஓடி வந்து கொண்டே ” நாளைக்கு நா இதே நேரம் வர்றேன். நல்ல யோசிச்சு சொல்லு மணி” என்றான். மணிமேகலைக்கு தலை சுற்றியது. ‘இவனைப் போய் நல்லவன்னு நெனைச்சு சிரிச்சுப் பேசிக்கிட்டு

இருந்தோமே’. அன்று முழுவதும் இதே நினைப்பு ஓடியது.
மறுநாள் அதே நேரம்.அதே இடம். நேற்று மாதிரியே ஒரு பைக் பின்னால் வந்து இறங்கி மணிமேகலையை நெருங்கினான்.

மணிமேகலை ஆத்திரமானாள்

” நேத்து அவ்வளவு சொல்லியும் புத்தியில ஏறலியா? எங்கடா வந்த?” என்றாள். இவள் போட்ட சத்தத்தை பார்த்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரண்டு மூன்று பேர் இவர்களையே பார்த்தனர்.

அருகில் வந்த அன்பு மணிமேகலை எதிர் பாரா வண்ணம் திடீரென அவள் காலில் விழுந்தான்.

“முடியல மணி.. நீ இல்லாம என்னால உயிர் வாழ முடியாது. என்னை கை விட்டுறாதே” என்று அழுதான்.
பதறிய மணிமேகலை ஒரு அடி பின்னே சென்றாள்.

லூசாடா நீ? நாம வேற வேற ஜாதிங்கறத விட்டுறு. உன்னால இன்னிக்கு மாசம் ஒரு பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியுமா? நான் தான் நேத்தே சொல்லிட்டேன் இல்ல நா உன்கூட இந்த மாதிரி எண்ணத்தோடு பழகல்லன்னு. மரியாதையா இங்கே இருந்து ஒடிப் போயிடு. உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா உன்ன வெட்டி பொலி போட்டிடுவாரு”

அன்பு எழுந்தான். அவன் முகம் விகாரமடைந்தது.

” வேற வழி தெரியல மணி” என்று சொன்னவன் பாய்ந்து அவள் முகத்தை இறுகப் பிடித்து இழுத்து இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அழுந்த முத்தமிட்டான். உறைந்து போய் நின்ற மணிமேகலை சுதாரித்து அவனை அறைய கையை ஓங்கினாள்.

சட்டென பின் வாங்கிய அன்பு இமைக்கும் நேரத்தில் பைக்கில் பின்னால் தாவி ஏறி பறந்து விட்டான்.

மணிமேகலைக்கு அழுகையும் கோபமும் ஒரு சேர அவளை நிலை குலைய வைத்தது. கூட நின்றிருந்த ஒரிருவரும் கூட திகைத்துப் போய் நின்றார்கள்

ஒரு நடு வயது பெண்மணி “நாசமாப் போறவன்.. பச்ச பிள்ளையை இப்படிப் பண்ணிட்டு போறானே, வெளங்குவானா” என்று கத்தி கொண்டே மணிமேகலை அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டாள். மணிமேகலை கேவிக் கேவி அழுதாள். பஸ் வந்தது.

கல்லூரி வகுப்பில் ஒரு பாடத்திலும் மனசு போகவில்லை. மறுபடி மறுபடி அவன் முத்தமிட்ட காட்சியே உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. இரண்டு கன்னங்களும் அருவருப்பாக இருந்தன. இருந்தது. இதுவரை பத்து தரம் தண்ணீரில் கன்னத்தை கழுவி இருப்பாள்.

மதியம் மரத்தடியில் ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பாடு டப்பாவைத் திறந்தாள். சாப்பிட பிடிக்கவில்லை.
செல்போன் அடித்தது. அன்பு.

“மணி நா லைனில் இருக்கேன். ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் பாரு” என்றான். பதறியவள் வாட்ஸ் ஆப்பை திறந்து பார்த்தாள். காலையில் அன்பு முத்தமிட்ட காட்சி ஓடியது. உடம்பு நடுங்கியது. “பொறுக்கி ராஸ்கல்.. ” என்று கத்த ஆரம்பித்தாள். “பொறு பொறு.. காலையில என்கூட வந்தவன் எடுத்த வீடியோ. நல்லாருக்கா? இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது. நாளைக்கு காலைல பஸ் ஸ்டாப்புக்கு வர்றேன். என் பிரெண்ட் பைக் கொண்டு வர்றேன். மகாபலிபுரம் போயிட்டு ஜாலியா இருந்துட்டு சாயங்காலம் திரும்பிடலாம். வீட்டுல ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டு வந்துடு. வரல்லேன்னு வச்சிக்க, இந்த வீடியோ, வாட்ஸ் ஆப் பேஸ் புக் மூலமா எல்லாருக்கும் போயிடும். கரெக்டா வந்துற்றியா? வர்ற.” போனை கட் பண்ணி ஆஃப் பண்ணி விட்டான் அன்பு.

மணிமேகலைக்கு உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. கை கால் நடுங்கியது. ‘ கடவுளே நான் என்ன தப்பு பண்ணினேன்?’ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. உடம்பு கூசியது. மதிய வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.

வழக்கத்துக்கு மாறாக சீக்கிரம் வந்த பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தாள் பார்வதி.

“மத்தியான கிளாஸ் இல்லயாம்மா? ” என்று கேட்டுக் கொண்டே மணிமேகலையின் முகத்தைப் பார்த்து பதைத்துப்

போனாள்.
“ஏண்டா, உடம்பு சரியில்லையா? ” என்று கேட்டு கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள்.

“உடம்பு இப்படி சுடுதே. மாத்திரை தர்றேன்” என்று அவளை தடவி கொடுத்து மாத்திரையும் சூடாக டீயும் கொடுத்தாள். மணிமேகலை அம்மாவிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. இரவு தூக்கமே வராமல் தவித்தாள். மறுநாள் காலை தொங்கிய முகத்துடனே கல்லூரிக்குப் புறப்பட்டாள். ஏற்கெனவே சொன்னபடி அவள் தோழியும் துணைக்கு வந்தாள்.
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது அன்பு சொன்ன மாதிரியே ஒரு பைக் ஒட்டிக் கொண்டு வந்தான். மணிமேகலையைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. “குட் கேர்ள்” என்று சிரித்தான். “வா வந்து உட்காரு” என்று பின் சீட்டைப் காண்பித்தான். மணிமேகலை கால்கள் நடுங்க அவன் அருகில் சென்றாள். தன் கைப் பையை திறந்து ஒரு கண்ணாடி குப்பியை எடுத்தாள். கண் சிமிட்டும் நேரத்தில் குப்பியத் திறந்து அதில் இருந்த திரவத்தை அன்பு முகத்தில் வீசினாள். பைக்கிலிரிருந்து கீழே விழுந்த அன்பு “ஐயோ எரியுதே ஐயையோ. கண்ணைத் திறக்க முடியலையே, நாயே என் மேல எதையோ ஊத்திட்டயே” என்று கதறிக் கொண்டு இப்படியும் அப்படியும் புரண்டான். மணிமேகலைக்கு வெறி வந்தது போல் சத்தம் போட்டாள்.

“ஆமாண்டா, ஆசிட் தான் ஊத்தினேன். நல்லா கதறு. பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா?நேத்திக்கே நான் முடிவு பண்ணிட்டேன். கெமிஸ்ட்ரி படிக்கிற என் பிரென்ட் கிட்டே சொல்லி ஆசிட் கொண்டு வரச் சொன்னேன். இதோ இத எல்லாத்தையும் விடியோ பிடிச்சிக்கிடிருக்கா. இத உடனேயே எல்லா வலைத் தளத்திலும் போடப் போறேன். அதோட நீ நேத்திக்கு அனுப்பின வீடியோவும் சேர்த்து போடப் போறேன். எல்லா டி.வி சானலுக்கும் அனுப்பப் போறேன். உன்னை மாதிரி யாராவது பொறுக்கி பசங்க பொண்ணுங்க கிட்ட வாலாட்டினா இது தான் நடக்கும். போலீஸ் என்னைத் தேடி வரும். கவலையில்லை. என் மேல குத்தம் இல்லன்னு நிரூபிப்பேன். பொறம்போக்கு” என்று சாமியாடி தீர்த்தாள். அன்பு இன்னும் புரண்டு கொண்டிருக்க மணிமேகலை தன் தோழியைப் பார்த்து “வீடியோவை நிறுத்திடு. வா போகலாம்” என்று சொல்லி நிதானமாக திரும்பினாள்.