காணாமல் போன கனவுகள்: புதுவை ஆதீன சிதம்பரம் ஸ்ரீ பாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள்- பாண்டிச்சேரி சித்தர்கள். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் மாணிக்கவாசகர் ஆவார். அவர் சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையான  திருவாசகத்தை எழுதியவர்.’திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ எனப் புகழப்படும் பெருமை உடையது திருவாசகம்.

          மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் காலத்திற்கும் முற்பட்டவர் எனக் கூறப்படுகிறது. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

          மாணிக்க வாசகர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூரில் அந்தணக் குலத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர்கள் சம்புபாத சரிதரும், சிவஞானவதியும் ஆவர். இவர் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தார். 

                 ஒரு நாள் மன்னன் அரிமர்த்தனன் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்துள்ளதைக் கேள்விப்பட்டார். மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து குதிரைகளை வாங்கி வரும்படி பணித்தான் மன்னன். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறைக்கு அருகே அறந்தாங்கியில் இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே, குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவின் வடிவில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர்,’சிவஞான போதம்’ என்றார். இது நிகழ்ந்த விதத்தை திருவாதவூரார் திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில் விளக்கியிருக்கிறார்.

                 சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பவை யாவை என்று உபதேசிக்க வேண்டினார் மாணிக்கவாசகர். சிவபெருமான் அவருக்கு குருவாக சிவஞானத்தை போதித்துத் திருவடி தீட்சையும் அளித்தார். துறவுக்கோலம் பூண்டு வாய்பொத்தி தன் குருவின் முன் நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் திரும்ப அழைத்தனர். ஆனால், அவர்களுடன் திரும்பிச் செல்ல மாணிக்கவாசகர் மறுத்து விட்டார்

                    பாண்டியன் ஒற்றர்களிடம் ஓர்  ஓலையைக் கொடுத்து, அவரை அழைத்து வரக் கட்டளையிட்டான். ‘குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை’ என்று கூறி மாணிக்கவாசகர் ஓலையை குருவிடமே கொடுத்துவிட்டார். குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்துக் ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனின்  ஆட்களை திரும்ப அனுப்பினார்.

                     ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வராததால், பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை அழைத்து வந்து எரிக்கும் வெயிலில் நிறுத்தினான். இரும்புக் கிட்டியால் இறுக்கினான். சிவபெருமானின் சிவகணங்களைக் குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே, இறைவனுக்கு, ’பரிமேலழகர்’ என்னும் காரணப் பெயர் ஏற்பட்டது.

               உயர் ரகக் குதிரைகள் வருவதை அறிந்து மன்னன் மகிழ்ந்தான். தலைவன் அரசனிடம் குதிரைகளை ஒப்படைத்தான். பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதனை வாங்கிக் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறின.மன்னனின் கொட்டடியில் இருந்த குதிரைகளைக் கடித்துவிட்டு ஓடின. பாண்டியன் மிகவும் கோபம் கொண்டு கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

                மாணிக்கவாசகரின் துன்பம் பொறுக்க மாட்டாத சிவன் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்தார். கரைகளை உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்தது.பாண்டியன்,’வீட்டுக்கோர் இளைஞன் வந்து கரையை அடைக்க உதவ வேண்டும்’ என்று ஆணையிட்டான். பிட்டு விற்கும் வந்திக் கிழவி வீட்டில் ஆண்கள் யாருமில்லை. சிவபெருமான் ஏவலாளாக வந்து வந்தியின் உதிந்த பிட்டுக்காக மண் சுமக்கும் திருவிளையாடலை நிகழ்த்தினார்.

                மாணிக்கவாசகருக்காக இறைவன் நடத்திய விளையாடலைக் கண்டு மன்னன் மீண்டும் அவரை மந்திரியாக இருக்க வேண்டினான். அதை மறுத்து குருவின் ஆணைப்படி சிவத்தலங்களுக்குச் சென்று பாடி வணங்கி,  மாணிக்கவாசகர் சிதம்பரத்துக்கு வந்தார்.

               மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் ‘நமச்சிவாய வாழ்க’ எனத் தொடங்கும் சிவபுராணம், அற்புதப் பத்து, அதிசயப் பத்து, குழைத்த பத்து, சென்னிப் பத்து, ஆசைப் பத்து, வாழாப் பத்து, அடைக்கலப் பத்து, செத்திலாப் பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம், திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப் பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டிப் பதிகம், திருச்சதகம் முதலிய பதிகங்களைப் பாடினார். உத்தரகோசமங்கைக்குச் சென்று நீத்தல் விண்ணப்பம் பாடினார்.

                சோழ நாட்டில் திருவாரூர் தியாகேசரை வணங்கி திருப்புலம்பல்  பதிகத்தையும், சீர்காழியில்,’பிடித்த பத்து’ என்னும் பதிகத்தையும் பாடினார். பின்னர் திருமுதுகுன்றம், திருவெண்ணெய்நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்து விட்டு திருவண்ணாமலையை அடைந்தார்.

                     திருவண்ணாமலையில் ஒவ்வொரு மார்கழியும் திருவாதிரைக்கு முன் பத்து நாட்களில் கன்னிப் பெண்கள் விடியற்காலம் ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே உள்ள தீர்த்தக்குளத்தில் ((இப்போது அது மாணிக்கவாசகர் குளம் என அழைக்கப்படுகிறது) நீராடி வழிபாடு செய்வதைக் கண்டார். அப்போதுதான்,கன்னியர்கள் பாடும் திருவெம்பாவையை பாடினார். அவ்வூர் பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு அவர்கள் பாடுவதைப் போல், ’திருவம்மானை’ பாடினார்.

             பின்னர்,’திருக்கழுக்குன்றப் பதிகத்தையும்’ தில்லையில் நடராசரை தரிசித்து,’பத்து’ என்னும் பதிகத்தையும். குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், கோயில் மூத்த திருப்பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல் அன்னைப் பத்து, திருக்கோத்தும்பி, குயில் பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து, ஆகிய பதிகங்களையும் தில்லையில் பாடினார்.

                       தொன்மக் கதை ஒன்று ஊமைப்பெண்ணை மாணிக்கவாசகர் பேச வைத்ததும் அவள் மாணிக்கவாசகரின் கேள்விகளுக்குச் சொன்ன பதிலே,’திருச்சாழல்’ என்றும் கூறப்படுகிறது. இதன்பிறகு திருப்படையாட்சி, திருப்படையெழுச்சி, அச்சோப்பதிகம், யாத்திரைப் பத்து ஆகிய பதிகங்களையும் பாடினார்.

மாணிக்கவாசகரின் பாடல்கள் இனிமைக்கும், உருக்கத்துக்கும், பக்திச்சுவைக்கும் பெயர்பெற்றவை. இராமலிங்க வள்ளலார்,

’வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

 

வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்

கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்

வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான

நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே!

என்று திருவாசகத்தின் உருக்கத்தையும், இனிமையையும் பாடுகிறார்.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா ஈசன் பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

     திருப்பெருந்துறையில். மாணிக்கவாசகரின் செப்புத் திருமேனி உற்சவமூர்த்தியாக உள்ளது. இங்கு கருவறைக்குப் பின்புள்ள நாலுகால் மண்டபத்தில் குருந்தமூல சுவாமி(ஆத்மநாதர்) உபதேசம் செய்ய, மாணிக்கவாசகர் வணங்கி உபதேசம் பெறுவது போன்ற சிற்பங்கள் உள்ளன. மாணிக்கவாசகர் ஜோதியோடு கலந்திருப்பதால் இங்கு தீப ஆராதனையில் பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி இல்லை.

            மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் திருமறைநாதர் கோயிலுக்கு அருகில் மாணிக்கவாசகர் அவதரித்த இல்லம் இப்போது மாணிக்கவாசகரின் கோயிலாக அமைந்துள்ளது.அங்கே பூஜைகள் நடைபெறுகின்றன.

                     ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியும், திருவெம்பாவையும் அனைத்து சிவாலயங்களிலும் ஓதப்பட்டும், பாடப்பட்டும் வருகின்றன. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மார்கழி திருவாதிரையை ஒட்டி மாணிக்கவாசகரின் 10 நாள் உற்சவம் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.

                      சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் 10 நாட்களும் மாணிக்கவாசகரை நடராஜப் பெருமானின் முன் எழுந்தருளச் செய்து, திருவெம்பாவை பாடும் வழக்கம் இன்றும் உள்ளது. உத்தரகோசமங்கை போன்ற சிவத்தலங்களிலும் திருவாதிரை விழா நடைபெறுகிறது.

                     சிதம்பரத்தில் அந்தணர் ஒருவர் மாணிக்கவாசகரிடம் வந்து அவர் பல தலங்களில் எழுதிய பதிகங்களாகிய திருவாசகம் முழுவதையும் முறையாகச் சொல்லும்படி கேட்டு அவற்றை சுவடியில் எழுதியெடுத்தார். மாணிக்கவாசகரால் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் பாடக்கேட்டு சுவடிகளில் எழுதியெடுத்தார். நூலின் முடிவில் ‘மாணிக்கவாசகர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து’ எனத் திருச்சாத்திட்டு சுவடிகள் தில்லைச் சிற்றம்பலத்தில் பஞ்சாக்கரப் படியில் வைக்கப்பட்டிருந்தன.

தில்லையில் இருந்த அச்சுவடிகள் கர்நாடக நவாபின் படையெடுப்பின்போது நாகலிங்க அடிகளால் பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டிச்சேரி அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழையில் திருவாசக ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று தனது 32-ம் வயதில் இறைவனுடன் கலந்து மறைந்தார் என்று கூறப்படுகிறது.இவ்வாறான அடியார்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.அவற்றை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு  அரசின் அறநிலைத் துறைக்கும்,ஆன்மீகத் தலைவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் அதிகம் உள்ளது.