பாகம் 6 – நதிகளில் இத்தனை நிறங்களா?
சென்ற மாதம் :
….. நிகழ்ச்சி முடிந்ததும், டாக்டர் ராம்நாத் எங்களிடம், நாளை காலை வெங்கட் மாமா நம்மிடம் பெல்லி டான்ஸ் பற்றி கண்டிப்பாக கேட்பார். இன்று நடந்து விட்டதாகச் சொல்வோம். நாளை நிகழ்ச்சிக்கு வருவார். அப்போது அவருக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கும் என்றார். எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமோதித்தோம்.
இனி,
அபுசிம்பல் கோயில் வளாகம்
சூடான் நாட்டிலிருந்து நைல் நதி, எகிப்துக்குள் நுழையும் பகுதியில், அஸ்வானிருந்து தெற்கே 283 கி.மீ தொலைவில் உள்ளது அபுசிம்பல் என்னும் மிகப்பெரிய கோயில் வளாகம்.
இதைப் பார்ப்பதற்காக அஸ்வான் துறைமுகத்தில் நாங்கள் தங்கியிருந்த கப்பலிலிருந்து வெளியே வந்து, தயாராக இருந்த குளிர் சாதனப் பேருந்தின் மூலம் விடியற்காலை அபுசிம்பல் நகரை நோக்கிப் பயணித்தோம்.
பாலைவனத்திற்கு நடுவே செல்லும் மூன்று மணி நேர சாலைப் பயணம், அலுப்பைத் தராமல் இருக்க, தமிழ் திரைப்படப் பாடல்களின் அந்தாக்ஷரி நடந்தது.
வெகு சிறப்பாகப் பாடக் கூடிய பிரசாத் போன்ற நண்பர்கள் எங்கள் குழுவில் இருந்தார்கள். வெங்கட் மாமா, தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, தண்டபாணி தேசிகர் என்று ஆதிகாலத்துப் பாடல்களை எடுத்துவிட, சந்தியா இனிமையான குரலில், பின்சீட்டில் இருந்த தன் கணவர் சாய் குமாரைப் பார்த்து, ‘முன்பே வா, என் அன்பே வா’ என்று பாட, குழு ஆர்ப்பரித்தது.
இதையும் தாண்டி, சீடை, தட்டை, கடலை மிட்டாய், தேங்காய்ப்பால் முறுக்கு, கமர்கட்டு, தேன்மிட்டாய் என்று தங்கள் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த பாக்கெட்களை ஒவ்வொரும் சர்குலேஷனில் விட ஜமாபந்தி களை கட்டியது.
“என்ன வெங்கட் சார், நேத்து ராத்திரி தவற விட்டுடீங்களே? பெல்லி டான்சர், என்னம்மா இடுப்பை வளைச்சி, வளைச்சி ஆடினாங்க! நேத்திக்கி டான்ஸ், நம்பர் ஒன்!” என்று டாக்டர் ராம்நாத் எடுத்துவிட, சக பயணிகள் ஒத்து ஊத,
“நான் என்ன பண்றது? ஜானுதான் விடவில்லை” என்றார் மாமா அப்பாவியாக.
“மாமி, இன்னைக்கு ராத்திரி கப்பல் கார்னிவல் ஷோ..ல வெறும் தெருகூத்து நடனம்தான். மாமாவை அலவ் பண்ணுங்க” என்று மற்றொருவர் கேட்க,
“தாராளமாகப் போகட்டுமே, நான் என்ன முந்தானைலயா முடிச்சு வச்சுக்க முடியும்?” என்று ஜானு மாமி சொல்ல, ஒரே சிரிப்பும், கலாட்டாவாகவும் இருந்தது.
இப்படி உரையாடிக்கொண்டு வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. செந்நிறக் கோட்டையான, அபுசிம்பல் வளாகத்தின் பார்க்கிங் பகுதியில், எங்கள் வாகனம் நுழைந்தது.
அதிசய அபுசிம்பல்
படபடைக்கும் மதியநேர வெயிலில், அபுசிம்பலின் சிவப்பு வண்ணம் சற்றுத் தூக்கலாகவே தெரிந்தது. பிரம்மாண்டமான குடைவரைக் கோயில் நுழைவாயிலில் எங்களை நிறுத்தினார், கைடு அமுன்.
சந்தியா நுழைவாயிலில் நோக்கியபடி, “அதோ பிரம்மாண்டமாக அமர்ந்த வண்ணம் நான்கு சிலைகள் இருக்கிறதே. அந்த சிலை வடிவில் இருப்பவர்கள் யார்?” என்று கேட்க,
“முதல் சிலை எகிப்த்தை ஆண்ட ராம்சேஸ்-II மன்னரின் (கி.மு.1264) சிலை”
“அப்ப இரண்டாவது?”
“அதுவும், அவர்தான்”
“அப்ப மற்றவை?”
மூணாவது, நாலாவதும் ராம்சேஸ்தான்!
சுமார் 60 அடி உயரத்தில், வரிசையாக அமர்ந்த நிலையில் நான்கு சிலைகள், அதுவும் ஒரே மன்னரின் வடிவம் என்பது, பார்ப்பதற்குச் சற்று வித்தியாசமாகத் தோன்றியது.
அமுன் மேலே தொடர்ந்தார்.
ராம்சேஸ், ஹிட்டிடஸ் என்கிற அரசனை வெற்றி கொண்டதைக் குறிக்கும் வகையில் கட்டிய கோயில் இது. ஆனால் பாருங்கள். கி.மு காலத்தில் கட்டிய கோயிலாக இருந்தாலும் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர்தான் இக்கோயில் கண்டெடுக்கப்பட்டது என்பது ஆச்சரியம்!
சுவிட்ஸர்லாந்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் லூட்விக் பர்ஹார்ட் 1813 ஆம் ஆண்டு இந்தக் கோயிலைக் கண்டுபிடித்தார். அஸ்வான் நீர் தேக்க உருவாக்கம் காரணமாக, அபுசிம்பல் கோயிலும், யுனெஸ்கோ உதவியுடன், இந்த இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு கோயில்கள் சேர்ந்த, இந்த வளாகத்தின் உள்ளே நுழைந்தால், மன்னர் ராம்சேஸின் வாழ்க்கை வரலாறு, படை, வீரம், வெற்றியைக் குறிக்கும் வகையில் சித்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல எகிப்திய கடவுள்களின் வடிவங்களும் உள்ளன. இதன் மைய மண்டபத்தை, மிகப் பெரிய குவிமாடம் அலங்கரிக்கிறது.
சிறிய கோயிலொன்றும் இவ்வளாகத்தில் உள்ளது. அது ராம்சேஸ் தன் பட்டத்துராணி நெஃபர்தர் நினைவாகக் கட்டியது. இந்தக் கோயிலில் ஹாதோர் என்கிற பெண் தெய்வத்தின் சிலையும் உள்ளது.
அமுன் சொல்லிய சில விஷயங்கள் வியப்பூட்டின. இந்தக் கோயிலில் பிப்ரவரி 22 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில், சூரியஒளி கிட்டத்தட்ட 200 மீட்டர் உள் சென்று சிலைகளின் மீது விழுகிறது. இந்த இரண்டு நாட்களில் ஒன்று, மன்னர் ராம்சேஸ் பதவியேற்ற நாள், இரண்டாவது, அவர் மறைந்த நாளாகும் என்றார்.
நம்மூர் கோயில்களில் மூலவர் சிலையின் மீது சூரிய வெளிச்சம் குறிப்பிட்ட நாட்களில் விழும் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா?
அபுசிம்பல் கோயிலில் குடியிருக்கும் தெய்வங்கள், அமுன் (அர்த்தம்: கடவுள்களுக்குக் கடவுள்) ரா என்கிற சூரியக் கடவுள், மற்றும் பெடா என்னும் பாதாளலோகக் கடவுள். உட்கோட்டத்தில் இவர்களுடன் மன்னர் ராம்சேஸ் சரிசமாக அமர்ந்திருக்கிறார். இவர்கள் மீதுதான் சூரியகிரணம் விழுகிறது.
இதன் மூலம் பண்டைய எகிப்தியர்கள், கடவுளுக்குச் சமமான இடத்தை மன்னர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அமுன் என்பது, எங்கள் டூர் கைடு பெயரும் கூட.
The Spy Who loved Me ஹாலிவுட் படத்தில் வில்லன் ஒளிந்திருந்த கோயில், இந்த அபுசிம்பல்தான்.
வழியில் மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பி, மீண்டும் கப்பலுக்கே திரும்பினோம். கப்பலில் சுவையான டீயும், ஸ்நாக் வகைகளும் வழங்கப்பட்டன.
சற்று நேரத்தில் பீம் என்கிற சப்தம் கேட்டது! கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பியது. இங்கிருந்து (ஆஸ்வான்), லக்ஸர் செல்லும் கப்பலின் அடுத்த நிறுத்தம் கோம்ஒம்போ என்கிற துறைமுகம்.
கப்பல் மேல் தளத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டோம். இளங்காற்று வீசியது. பெரிய அகலமான நதி. அதன் இரு கரைகளிலும் குட்டி, குட்டி கிராமங்கள். சூரியன் மறைந்து அந்திப் பொழுதில் ஏற்படும் மாற்றங்கள், அதில் தோன்றும் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா வண்ணங்கள். நைல் நதியில் பிரதிபத்து மாலைப் பொழுதை ரம்யமாக்கியது.
இந்தப் பயணத்தின் பொழுது நாம் நைல் நதியைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
அது என்ன வெள்ளை நைல் – நீல நைல்?
ஒரு பழுப்பு காகிதத்தில், நீல நிற ரிப்பனை ஒட்டியது போல, பாலைவன எகிப்து நாட்டின் பரப்பளவில், நடுபாதிக்குச் சற்று தள்ளி தெற்கிலிருந்து, வடக்காக நைல் நதி பாய்கிறது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் பருண்டி நாடுகளின் மலைப்பகுதிகளில் பாயும் ஆறுகள், விக்டோரியா ஏரிக்கு நீர் ஆதாரத்தைத் தருகிறன. அங்கிருந்து கிளம்பும் வெள்ளை நைல் வட உகாண்டா வழியாகத் தெற்கு சூடானுக்குள் நுழைகிறது. அங்கு சமவெளிகள், சதுப்பு நிலங்கள் வழியாகப் பாயும்பொழுது அந்தப் பகுதி நிலப்பரப்பில் உள்ள வெள்ளை நிறக் களிமண் நீரில் கரைந்து வருவதால், இதற்கு வெள்ளை நைல் என்கிற பெயர் கிடைத்தது.
எத்தியோப்பியாவின் தானா ஏரியிலிருந்து நீல நைல் தன் பயணத்தைத் துவங்குகிறது. பருவமழை காலங்களில் வெள்ளப் பெருக்கோடு பாய்ந்து வரும் வழியில் எரிமலைப் பாறைகளிலிருந்து அடர் நீலமான வண்டல் மண்ணை அடித்துக் கொண்டு வருகிறது. எனவே இதன் பெயர் நீல நைல்! நீல நைல்தான் அதிக அளவு வண்டல் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது.
நீல நைல், 1450 கிலோமீட்டர்கள் பாய்ந்து, சூடானின் கார்டோம் (KHARTOUM) பகுதியில், வெள்ளை நைல் நதியுடன் சங்கமமாகிறது.
இந்த சங்கமத்திற்குப் பிறகு சூடான் நாட்டிலிருந்து, நைல் என்கிற ஒற்றை பெயரில் பாலைவன நாடான எகிப்திற்குள் நுழைகிறது.
எகிப்தில் நுழையும் நைல் நதி, அபுசிம்பல், நாசர் எரி, அஸ்வான் அணைகட்டு, கோம் ஒம்போ, ஏடிஃபூ, (இ)சான, லக்சர், கியூனா, சுஹாக், அஷ்யுட் நகர்கள் வழியாக கெய்ரோ நகருக்குள் நுழைகிறது.
அங்கிருந்து பல்வேறு கிளை நதிகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது.
நைல்நதி டெல்டா, உலகின் மிக வளமான பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. குளிர் பருவத்தில் கோதுமையும், வேனிற் காலத்தில் நெல்லும் இங்கு பயிரிடப்படுகின்றன. மக்காச்சோளம் மற்றொரு முக்கிய பயிராகும். இங்கு விளையும் எகிப்திய பருத்தி (Egyptian Cotton) உலகத்தரம் வாய்ந்தது.
நிறைவாக நைல் நதி, அலெக்ஸாண்ரியா முதல், சையது போர்ட் வரையிலான பரந்த பகுதிகள் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக் கடலில் கலக்கிறது.
நைல் நதியை ஒட்டியே எகிப்தின் அதிகபட்ச மக்கள் வாழ்கிறார்கள். நைல் நதி இல்லை என்றால் எகிப்து முழுவதுமே பாலைவனமாக இருந்திருக்கும். கிட்டத்தட்ட 96% இன்றும் பாலைவனமாக இருக்கிறது. இந்த பகுதியில் 3 – 4% மட்டுமே விவசாய நிலமாக அமைந்திருப்பதற்குக் காரணம், நைல் நதியின் கொடையே!
அப்படி என்றால் நதி என்பது ஒரு நாட்டிற்கு எத்தனை இன்றியைமையாதது என்பது புலனாகிறது. நதியை அலட்சியப்படுத்தாமல், போற்றிப் பாதுகாப்பது, எத்தனை அத்தியாவசியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
முதலையும் கழுகும்
கப்பல் கோம்ஒம்போ துறைமுகத்தை அடைந்தது. மெதுவாக இருள் கவ்வத் துவங்கியது.
அமுன் வந்தார். நீங்கள் எல்லோரும் 30 நிமிடத்திற்குள் தயாராகி வாருங்கள். நாம் இந்த நகரின் கோம்ஒம்போ (Kom Ombo) கோயிலுக்கு சென்று வருவோம் என்றார்.
“இந்த கோயிலில் இருக்கும் தெய்வங்களின் பெயர் என்ன?” என்று அமுனிடம் கேட்டோம்.
அமுன், இந்தியாவில் நீங்கள் பிராணிகளையும், விலங்குகளையும் கடவுளாக, கடவுளின் அவதாரங்களாக வழிபடும் வழக்கம் இருப்பதாக இதற்கு முன்னால் வந்த பல இந்தியக் குழுக்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
அதனால் உங்களுக்குப் புரிந்து கொள்வது எளிது. இந்தக் கோயிலின் பிரதான தெய்வங்கள் சோபெக் (SOBEK) என்கிற முதலையும், ஹோரஸ் (HORUS) என்கிற கழுகும் ஆகும்.
இந்த தெய்வங்களின் முகங்கள் முறையே முதலை மற்றும் கழுகு வடிவில் இருந்தாலும், உடல் மனித உருவம் கொண்டிருந்தது.
கிரேக்க, ரோமன் கட்டிடக்கலையின் வடிவத்தை இங்கு பார்க்கலாம். இரண்டு பிரம்மாண்டமான வாசல்கள் ஒரு சேர அமைந்துள்ளது. ஒரே அமைப்புடன் தெற்குப்பக்கம் முதலை கடவுளுக்காகவும், வடக்கு பக்கம் கழுகு கடவுளுக்காகவும் உள்ளது .
இக்கோயில் பாலைவன மணல்களால், பல ஆண்டுகள் மூடிக்கிடந்தது. எகிப்திய மொழியில் கோம்பு என்றால் மணல் என்று அர்த்தம். 180 – 47 BC வாக்கில் கட்டப்பட்ட இந்தக் கோயில் நைல் நதியில் அவ்வப்பொழுது ஏற்படும் வெள்ளங்கள், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களைக் கடந்து மீதி இருப்பதுதான்.
நைல் நதியில், முதலைகளின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், அவற்றிலிருந்து மக்களைக் காத்திடக் கோயில் கட்டி முதலையை வழிபட்டார்கள் என்கிற செய்தி உள்ளது. இதைத் தவிர, முதலை, கழுகு பற்றி எகிப்திய புராணக் கதைகளும் நிறைய உள்ளன.
இக் கோட்டத்தில் சிலைகளை விட கற்களில் செதுக்கப்பட்ட, ஓவிய வடிவங்கள் அதிக அளவில் உள்ளன. விதவிதமான பறவைகள், பூக்கள், செடிகள், மற்றும் பண்டைய எகிப்தியக் குறியீடுகள் என சுவர் ஓவியங்கள் பிரம்மாண்டமாக உள்ளன.
நாங்கள் சென்றது பின் மாலைப் பொழுது என்றாலும் விளக்கொளியின் மூலம் அத்தனை ஓவியங்களையும் பார்க்க முடிந்தது.
மீண்டும் கப்பலுக்கு திரும்பினோம். இரவு உணவுக்கு பிறகு இசை வாத்தியங்களுடன் கலாபியா என்கிற எகிப்திய கிராம நடனம் (GALABIYA PARTY) நடைபெற்றது.
வெங்கட் மாமா எங்களுடன் அமர்ந்து உற்சாகமாகக் கைதட்டி தலையாட்டி ரசித்துக்கொண்டிருந்தார். அடுத்து எகிப்திய நடனமான பெல்லி டான்ஸ் ஆரம்பமானது.
இளமையான நடனமங்கை இடுப்பை அசைத்து, அசைத்து ஆடினார். விறுவிறுப்பான இசைக்கேற்ற நடன அசைவுகள்!
நம் நாட்டு கதக் நடனங்களில், கால்களின் அசைவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இதில், இடுப்பு அசைவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடுகிறார்கள். விரசம் இன்றி கலையை முன்னிறுத்தும் வண்ணமாகவே நடனம் அமைந்திருந்தது.
அனைவரும் நிகழ்ச்சி முடிந்த பின் உறங்கச் சென்றோம். இரவில் கப்பல் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அடுத்து எட்ஃபு (EDFU) என்கிற நகரை அடைந்தது.
‘நைல் நதியைக் காணும்..’ – அடுத்த அத்தியாயத்தில்..
எகிப்திய பழமொழி :
நாவிற்கு எலும்பில்லை. ஆனால், அது இதயத்தை உடைக்க வல்லது.
**********


