பாத்திர விளக்கம்
ஓர் இலக்கை நோக்கி உங்களை வழி நடத்துவதே இலக்கியம். இலக்குகளோ வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டே நிறுவப்படுகின்றன, எனவேதான் சுவையான இலக்கியங்கள் சுவையான வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டே அமைகின்றன,
எழுபத்து ஏழு வயதிலே பயணம் செய்யும் எனது “இளைய” வாழ்க்கையிலே மிக வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது “கோவிட்” எனும் தீ நுண்தொற்று நாட்கள். முதன் முறையாகத் தனிமையையும், இழப்புகளையும், கொத்துக் கொத்தான மரணங்களையும் கண்ட கொடிய நாட்கள். நிசப்தமான நீண்ட தெருவில் அரைமணிக்கொரு ஆம்புலன்ஸ் வண்டி ஸைரன் ஒலி கேட்கையில் வயிற்றில் ஏதோ செய்யும்; தெரிந்தவரோ தெரியாதவரோ என மனம் நடுங்கும். கைகளையும் கால்களையும், காய்கறிகளையும், “ஸானிடைஸர்” கொண்டு திரும்பத் திரும்ப அலம்பிக் கொண்டிருக்கும் அவலம்; மூச்சு விட முனகிக் கொண்டே முகம் மறைத்து அணியும் “மாஸ்க்” ரெகுலேஷன்; இறந்த சடலங்களையும் காண இயலாது அழுது மாயும் உறவுக் கூட்டங்களின் “நேரலைத்” தொகுப்புகள் என நடந்தேறி முடிந்த சோக நாட்கள். இன்னும் என்ன சொல்ல ? இதை அறியார் யாருண்டு ?
இந்தச் சோகங்களையெல்லாம் பல எழுத்தாளர்கள் படைப்புகளில் கொண்டுவந்தனர். கவிஞர்கள் கவிதை எழுதினார்கள்; கட்டுரை ஆசிரியர்கள் பல தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். ஆனால் இதிலே கொஞ்சம் மாறி நின்று சில எழுத்தாளர்களும், கார்ட்டூன் படைப்பாளிகளும், “கோவிட்” சூழலைக் கேலியாக்கி நகைச்சுவைக்கான கருத்தாக மாற்றினார். அவர்களை நான் மனமாரப் பாராட்டுகின்றேன். காரணம் அந்த நகைச்சுவை மட்டும் இல்லையென்றால் வாழ்க்கையே சூனியமாகி நின்றிருக்கும்.
கோவிட் லாக் டவுன் “ தொடங்கிய நாளில் இருந்தே நான் அது பற்றி எனது முகநூல் பக்கத்தில் எழுதத் தொடங்கிவிட்டேன். கொஞ்ச நாள் “சீரியஸாக “ எழுதி வந்த நான், மாறி வரும் அல்லது மாறிவிட்ட அன்றாட வாழ்க்கையின் மாற்றங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
இதுவரை இருந்த பழக்கத்தில் வீட்டுக்குள் இருக்கும் நேரமே குறைவு. கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பிறகும் நான் அதிகம் வீட்டில் இருந்ததில்லை. எனது ஆய்வுத் துறை சார்ந்த உயிரியல் தொழில் நுட்பம் கொண்டு பெரிய தொழிற்சாலைகளின் கழிவுகளையும் மாசுகளையும் அகற்றும் திட்டங்களுக்கு உதவும் கம்பெனி ஒன்றைத் தொடங்கி பத்து ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தி மீண்டும் ஓய்வு பெற்றேன். இதன் பிறகாவது நான் அதிகம் வீட்டில் இருப்பேன் என்று எனது துணைவியார் எண்ணியிருந்திருக்கக் கூடும். ஆனால் அது நடக்கவில்லை.
இலக்கியத் துறையில் நான் ஏற்றிருக்கும் பணிகள் எனது பெரும்பான்மை நேரத்தை எடுத்துக் கொண்டது. அப்போதுதான் ஒன்றைப் புரிந்துகொண்டேன்.
இப்போதுள்ள மனைவிமார்களுக்கும் , எனது காலத்து மனைவிமார்களுக்கும் அதிகம் வேற்றுமை கிடையாது. அலுவலகம் சென்று பணி புரிவதுதான் வேலை; அந்த நேரத்தில் “பிஸி” யாக இருப்பதற்கு கணவர்களுக்கு அனுமதி உண்டு. ( கவனிக்கவும் – உரிமை அல்ல) மற்றபடி வீட்டிலிருக்கும் வேளைகளில் எல்லாம் “வீட்டு வேலைகளில் “ ஈடுபடுவதுதான் இல்லற மாண்புக்கு அழகு.
மனைவிமார்களும் வேலைக்குச் செல்கிறார்களே என்றால், அவர்கள் இயல்பாகவே எல்லா வீட்டு வேலைகளையும் தமது மெல்லிய தோள்களில் என்றும் சுமப்பதால் அவர்களுக்கு இது போன்ற “விதிமுறைகள் “ கிடையாது.
மேலும், கணவன் வீட்டு வேலைகளில் உதவுகிறானா என்று “மானிட்டர்” செய்யும் அதிகாரம் மனைவிக்கு இருப்பதைப் போல, மனைவி வேலை செய்கிறாளா என்று பார்த்து அது பற்றிப் பேசும் உரிமை , இது வரை எந்த ஆண்மகனுக்கும் வழங்கப்பட்டதில்லை.
இதிலே இன்னொரு முக்கியமான “உள்குத்து” இருப்பதை பல கணவன்மார்கள் அறிந்திருப்பதில்லை. ஆபீஸிலிருந்து வந்ததும் தனது ஃபோன் , லேப்டாப் மற்றும் சார்ஜர்களை மறவாமல் அதனதன் இடத்தில் வைப்பது,வங்கிக் கணக்குகளை மேற்பார்ப்பது, பிள்ளைகளை பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று விடுவது மளிகைச் சாமான்கள் , பிற ஹவுஸ் ஹோல்ட் பொருட்கள் வாங்க அவ்வப்போது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ஓடுவது, எரிவாயு உருளை, வாட்டர் கான், பீட்ஜா போன்றவற்றிற்கு ஃபோன்னில் ஆர்டர் கொடுப்பது, உறவுக்காரர்கள் வந்தால் அவர்களை ஊர் சுற்றிப் பார்க்க அழைத்து செல்வது போன்ற பல வேலைகளை ஆண்கள் செய்தாலும் அவையெல்லாம் , “வீட்டு வேலைக்குள்” சேர்க்கப்படுவதில்லை.
“கலா! என்ன.. அதான் எல்லா வேலையும் செய்யறேனே .. வீட்ல சும்மா நான் படுத்துண்டு தூங்கறா மாதிரி பேசறே !”
“ ஆமா! பெரிசா செஞ்சு உழைச்சிட்டீங்க .. ஏதோ ரெண்டு மூணு வேல அதுவும் ஒங்க வேல .. “
“ ஏன் போன வாரம் வாஷிங் மெஷின் நான் தான் ஆபரேட் பண்ணினேன் அது வேலை இல்லையா ? உன் தம்பி ஃபேமிலி வந்த போது நானே கார் ஓட்டிண்டு போய் ஊரெல்லாம் சுற்றிக் காட்டினேனே அது வேலை இல்லயா..? பழைய பேப்பரைக் கடையில் போட்டேனே, ஹால் பூரா இந்த ஞாயிற்றுக் கிழமை ஒட்டடை அடிச்சேனே .. “
இதெல்லாம் எல்லா வீட்டிலேயும் கேக்கற டயலாக் ; இதன் தாத்பரியம் ஒண்ணுதான் .. ஆண்கள் கிச்சனுக்குள் சென்று பெண்டாட்டிக்கு ஹெல்ப் பண்ணர வேலை மட்டும்தான் “வீட்டு வேலைன்னு “ கணக்குல வரும். மற்ற எதுவும் மலையையே புரட்டினாலும் கணக்குல வராது.
இந்தப் பின்னணியில்தான் நான் வீட்டில் எந்த வேலையும் செய்யாதவன் என்ற “நல்ல” பெயர் எடுத்திருந்தேன்.
“நீங்க காலேஜ் லேந்து ரிடையர்ட் ஆன பிறகு வீட்டுக் காரியங்களில் உதவி செய்வீர்கள் என்று பார்த்தால், வேறு ஒரு கம்பெனி ஆரம்பித்து விட்டீர்கள் ( கல்லூரி முதல்வர் ஸ்டேட்டஸ் லேந்து கம்பெனி டைரக்டர் ஆனது பெருமை இல்லையா என்று கேட்ட எனது மைண்ட் வாய்ஸ் , வெளியே கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. )
கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகாவது வீட்டுக்கு உபகாரமாய் இருப்பீர்கள் என்றால் அதுவும் இல்லை. எழுதறேன் படிக்கறேன் பேசறேன் என்று ஒங்க ரூமில் உட்கார்ந்து மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்..! காப்பி குடிக்க வாங்க என்று நாலு தரம் கத்த வேண்டி இருக்கு. -.. காது கேக்கலையா கவனம் இல்லையா ? ( நான் மோட்டு வளையில் மூழ்கி எழுந்த போதெல்லாம் ஓர் அழகிய கவிதை உருவான வரலாறு அவள் சிலபஸ்ஸில் என்றுமே இடம் பெறாது)
போகட்டும் ! விஷயத்துக்கு வருகிறேன். கோவிட் சீஸன் அவளுக்கு சாதகமாகிப் போனது. ஆனால் இது பற்றிய கணிப்பு எனக்குள் இருந்ததால் நானே முந்திக் கொண்டேன். ( யாரு கிட்ட !)
“கலா ! இப்பத்தான் ஃபுல் லாக் அவுட் ..ஆயிடுச்சு வீட்டில் என்ன வேலை இருக்கு ? நான் ஹெல்ப் பண்ணறேன் “ என்று முதல் அம்பு தொடுத்தேன். உடனே இதற்கெல்லாம் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் நீங்க வாழும் இல்லற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. அப்படித்தான் நடந்தது,
“ ஆமாம் ! கல்யாணம் ஆயி நாப்பது வருஷம் தாண்டியாச்சு .. இதுவரைக்கும் எதிர்பாக்காத என்ன பெரிய ஹெல்ப் பண்ணப் போறேள் ?” என்று நொடித்தாள்.
“ ஹி ஹி என்ன அப்படி சொல்லிட்ட ? எனக்குத் தெரியாதா ! உனக்கு யார் ஹெல்ப்பும் தேவை கிடையாதுன்னு எனக்குத் தெரியுமே ! நீ தான் “ஒன் உமன் ஆர்மி” ஆச்சே ! ஒரு வேளை தேவையோன்னு நெனச்சுக் கேட்டுட்டேன் .. சரி நீ ஒன் வேலையப் பாரு “ என்று என்னை நானே பாராட்டிக் கொண்டு நழுவத் தொடங்கினேன்,
ஒரு பெரிய பெருமூச்சு சத்தம் கேட்டது. “ ஏன் எனக்கு ஹெல்ப் பண்ணினா கொறஞ்சு போயிடுமா? நான் வேணும் வேண்டான்னு சொல்லறது கிடக்கட்டும்.. நீங்க என்ன ஹெல்ப் பண்ணறதா இருக்கேள் ?”
இந்த நேரடித் தாக்குதலை நான் எதிர் பாக்கல ! மென்று முழுங்கிக் கொண்டு கிச்சனை சுற்று முற்றும் பார்த்தேன். தலைக்குள் “ஐடியா” பகுதியில் பல்பு எரிந்தது. பல்பு வாங்காமல் இருக்கும் வழி பிறந்தது. வாய் திறந்து ஒரு முழு வாக்கியம் பகர்ந்தேன் அது என் வாழ்க்கைப் பாதையையே ஒளிமயமாக்கியது !
(தொடரும்)

