தைமூர் தொடர்ச்சி

timur-invasion – The Byzantium Blogger

 

முன்கதை: தைமூரின் படைகள் டெல்லியைச் சுற்றியது. போர் துவங்கியது.

1398 டிசம்பர் 17 ஆம் தேதி, மல்லு கான் மற்றும் சுல்தான் மெஹ்மூதின் படை, தைமூரின் படையுடன் போரிட டெல்லி வாயிலுக்கு வெளியே வந்தது. அவர்கள் யானைகளை நடுவில் வைத்தனர். ஆயுதம் ஏந்திய வீரர்கள் அவற்றின் மீது அமர்ந்திருந்தனர். தைமூர், ஒரு உயரமான மேட்டின் மீது நின்றுகொண்டு, போர்க்களத்தைப் பார்த்தான். போர் தொடங்குவதற்கு சற்று முன்பு, தைமூர் குதிரையிலிருந்து இறங்கி தரையில் விழுந்து வணங்கி வெற்றிக்காக தொழுகை செய்தான். போர் தொடங்கியவுடன், தைமூரின் வில்லாளர்கள் மல்லு கானின் படையின் வலது பக்கத்தை குறிவைத்தனர்.

மல்லு கான், தைமூரின் வலது புறத்தில் உள்ள வீரர்கள் மீது தனது இடது புறம் உள்ள வீரர்கள் மூலம் தாக்கத் தொடங்கினான். ஆனால் தைமூரின் வீரர்கள் மல்லு கானின் படையில் ஓரங்களில் இருந்த வீரர்களைத் தாக்கி அழிக்கத் தொடங்கினர்.

யானைகளால் தனது வீரர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டிருப்பதை தைமூர் கண்டான். அதற்கு அவன் ஏற்கனவே திட்டமிட்டிருந்தான். இப்போது அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்தது. காய்ந்த புல்லையும் மரக்கட்டைகளையும் சுமந்து நின்ற ஒட்டகங்களை முன்பக்கம் கொண்டு செல்லுமாறு தைமூர் தனது வீரர்களை கேட்டுக் கொண்டான். யானைகள் எதிரே வந்தவுடன் ஒட்டகங்களின் முதுகில் வைத்திருந்த காய்ந்த புல் மற்றும் மரங்களுக்கு தீவைக்கப்பட்டது.

“திடீரென முதுகில் எரியும் நெருப்புடன் யானைகளின் முன்னால் ஒட்டகங்கள் வந்தன. யானைகள் பயந்து தனது வீரர்களை நோக்கித் திரும்பி, அவர்களை நசுக்கத் தொடங்கின. இதன் காரணமாக மல்லு கானின் வீரர்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது,” என்று ஜஸ்டின் மரோஃஸி எழுதுகிறான். மேலும், “மரங்களில் இருந்து உதிரும் தேங்காய்கள் போல் இந்திய வீரர்களின் தலைகள் போர்க்களத்தில் குவியத்தொடங்கின,” என்று எழுதினான்.

வலது முனையிலிருந்து தைமூரின் படைதளபதி பீர் முகமது, வீரர்களை துரத்திச்சென்று, டெல்லியின் சுவர்களுக்குள் அவர்களை அழித்தான். இதற்கிடையில், தைமூரின் 15 வயது பேரன் கலீல், ஒரு யானையை அதன் மீது அமர்ந்திருந்த வீரர்களுடன் பிடித்து, தனது தாத்தாவின் முன்னால் நிறுத்தினான்.

குர்ரா கானுக்கு போரின் தலைமை பொறுப்பை வழங்கிய தைமூர், தானும் போரில் குதித்தான். “நான் ஒரு கையில் வாளையும், மறு கையில் கோடரியையும் எடுத்துக்கொண்டேன். இடது மற்றும் வலதுபுறத்தில் வாள் மற்றும் கோடரியை சுழற்றியவாறு நான் நடந்து கொண்டிருந்தேன். இரண்டு முறை நான் யானைகளின் தும்பிக்கையை வெட்டி சாய்த்தேன். தும்பிக்கையை இழந்த யானைகள், தரையில் சாய்ந்தன. அம்பாரியில் அமர்ந்திருந்த வீரர்கள் கீழே விழுந்தனர். அப்போது நகரத்திலிருந்து வெளியே வந்த பெரிய மீசை வைத்திருந்த இந்திய வீரர்கள் என் வழியைத் தடுக்க முயன்றனர்,” என்று தைமூர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளான்.

“எனது இரண்டு கைகளால் மிக வேகமாக நான் சண்டையிட்டேன்.. நாங்கள் மெதுவாக நகர வாயிலை நெருங்கிக்கொண்டிருந்தோம்.” என்று குறிப்பிட்டான். இதற்கிடையில் தைமூர் குதிரையின் கடிவாளம் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தான்.

“நான் திடுக்கிட்டு தீப்பந்த வெளிச்சத்தில் என் கையை பார்த்தேன். என் ரத்தத்தால் என் கை நனைந்திருந்தது. என் உடைகள் ரத்தத்தில் நனைந்திருந்தன. ரத்த ஆற்றில் இருந்து வெளியே வந்ததைப் போல உணர்ந்தேன். எனது இரண்டு மணிக்கட்டுகளிலும் காயம் இருப்பதையும், எனது இரண்டு கால்களில் ஐந்து காயங்கள் இருப்பதையும் கண்டேன்,” என்று தைமூர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளான்.

அதற்குள் தைமூரின் வீரர்கள் டெல்லிக்குள் நுழைந்து விட்டனர். மறு நாள், தைமூர் ஒரு வெற்றியாளராக டெல்லிக்குள் நுழைந்தான். டெல்லியின் சுவர்களுக்குள் கூடாரம் அமைக்கப்பட்டது. அவசர அவசரமாக தைமூரின் அரசவை கூட்டப்பட்டது. சுல்தான் மெஹ்மூத்தின் அரசவையை சேர்ந்தவர்களும், டெல்லியின் உயரடுக்கு மக்களும் அவனிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். டெல்லியின் முழுக் கட்டுப்பாடும் தைமூர் லங்கிடம் வந்துவிட்டது.

படையெடுப்பாளரின் தயவில் தங்கள் மக்களை விட்டுவிட்டு, டெல்லி சுல்தான் மெஹ்மூத் மற்றும் மல்லு கான் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். “மீதமுள்ள சுமார் 100 யானைகள் ஒவ்வொன்றாக தைமூரின் முன்னால் கொண்டு வரப்பட்டன. அவை மண்டியிட்டு தும்பிக்கையை உயர்த்தி டெல்லியின் புதிய ஆட்சியாளரான தைமூருக்கு வணக்கம் செலுத்தின. யானைகளுடன் தூதர்களையும் அனுப்பி, டெல்லியை தைமூர் கைப்பற்றி விட்டதாக ஆசியா முழுவதும் செய்தியை பரப்பினான்.” வரலாற்று ஆசிரியர்கள் எழுதினர்.

போர் முடிந்தபிறகு தைமூர், டெல்லியை எதற்காக தாக்கினானோ, அந்த விஷயத்தில் கவனம் செலுத்தினான். உங்கள் ஊகம் மிகச்சரி தான்! டெல்லியின் கருவூலம் எவ்வளவு பெரியது, இங்கிருந்து எதை எடுத்துச் செல்ல முடியும் என்று திட்டமிடத் தொடங்கினான். அவனுடைய வீரர்கள், வீடு வீடாகச் சென்று எவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். வசூல் ராஜா தைமூர் ஆனான். சில வீரர்கள் தானியங்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். அன்று, தைமூர் லங்கின் 15,000 வீரர்கள் டெல்லி நகர எல்லைக்குள் வந்தடைந்தனர். தைமூரின் வீரர்களுக்கும் டெல்லி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Claiming that Sultan Nasiruddin Mahmud allowed his Hindu subjects to worship false idols in a manner that was insulting to Muslims, Timur invaded the Delhi Sultanate in 1398.முகமது காசிம் ஃபெரிஷ்டா தனது ‘ ஹிஸ்டரி ஆஃப் தி ரைஸ் ஆஃப் மொஹமடன் பவர் இன் இண்டியா’ என்ற புத்தகத்தில் ” தங்கள் வீட்டுப்பெண்கள் இழிவுபடுத்தப்படுவதையும், சொத்துக்கள் சூறையாடப்படுவதையும் இந்துக்கள் கண்டனர். அவர்கள் தங்கள் வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டு, வீட்டிற்கு தீ வைத்துக் கொண்டனர். இது மட்டுமல்ல. தங்கள் மனைவி மக்களைக் கொன்று விட்டு தைமூரின் வீரர்களை எதிர்த்தனர். டெல்லியின் தெருக்களில் சடலங்கள் குவிக்கப்பட்டன. தைமூரின் முழுப் படையும் டெல்லிக்குள் வந்தது. வெகு விரைவில், டெல்லி மக்கள் ஆயுதங்களை கைவிட்டனர்,” என்று எழுதியுள்ளார்.

டெல்லிவாசிகளை பழைய டெல்லிக்கு விரட்டியடித்தனர். அங்கு அவர்கள் ஒரு மசூதி வளாகத்தில் தஞ்சம் புகுந்தனர். “தைமூரின் 500 வீரர்களும் இரண்டு பிரபுக்களும் மசூதியைத் தாக்கி, அங்கு தஞ்சம் புகுந்த ஒவ்வொருவரையும் கொன்றனர். துண்டிக்கப்பட்ட தலைகளையும் துண்டிக்கப்பட்ட உடல்களையும் கொண்டு ஒரு கோபுரத்தை உருவாக்கினர். கழுகுகளுக்கும் காகங்களுக்கும் உணவாக அதை விட்டுச் சென்றனர். இந்தப் படுகொலைகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன,” என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கியாத் ஆதின் அலி, தனது ‘டைரி ஆஃப் தைமூர்ஸ் கேம்பெயின் இன் இந்தியா’ என்ற புத்தகத்தில், அக்கால நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். “ஆட்டுக் கூட்டத்தைத் தாக்கும் பசியுள்ள ஓநாய்களின் கூட்டம் போல, டெல்லிவாசிகளை தைமூரின் வீரர்கள் தாக்கினர்,” என்று அவர் எழுதுகிறார். இதன் விளைவாக, செல்வம், நகைகள் மற்றும் வாசனை திரவியங்களுக்கு பெயர் பெற்ற டெல்லி, எரியும் நரகமாக மாறியது. அதன் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அழுகிய பிணங்களின் வாடை வீசியது.

“தைமூரின் வீரர்கள் டெல்லியின் செழிப்பைக் கண்டு திகைத்தனர். நாலாபுறமும் தங்கம், வெள்ளி, நகைகள், முத்துக்கள், விலையுயர்ந்த ரத்தினக் கற்கள், நாணயங்கள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகள் இருந்தன” என்று யாஸ்டி கூறுகிறார். தைமூரின் வீரர்கள், டெல்லியின் குடிமக்களை தங்கள் விருப்பப்படி வேலை செய்ய வைத்தனர். தைமூரின் வீரர்கள் டெல்லியிலிருந்து திரும்பிச் செல்லும்போது, ஒவ்வொரு சிப்பாயின் பின்னாலும் சராசரியாக 150 சாதாரண குடிமக்கள் நடந்து கொண்டிருந்தனர்.

தைமூர் இரண்டு வாரங்கள் மட்டுமே டெல்லியில் தங்கியிருந்தான். இதற்கிடையில் அவன் உள்ளூர் இளவரசர்களின் சரணடைதலையும் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டான். டெல்லியின் பல கைவினைக் கலைஞர்களை கையில் விலங்கு பூட்டி சமர்கண்டிற்கு அழைத்துச் சென்றான். புறப்படுவதற்கு முன் தைமூர் லங், கிஸ்ரு கானை, இன்றைய பஞ்சாப் மற்றும் வட சிந்தின் ஆளுநராக நியமித்தான். அவன் டெல்லியில் எந்த ஆட்சியாளரையும் நியமிக்கவில்லை. அங்கு ஆட்சியமைக்க எஞ்சியிருந்த இளவரசர்களுக்கிடையில் பல ஆண்டுகள் போராட்டம் நீடித்தது.

சிறிது காலம் கழித்து, மல்லு கான் மற்றும் சுல்தான் ஷா திரும்பி வந்து இந்த இழுபறி போராட்டத்தில் பங்கு கொண்டனர். தைமூருக்கு ஆட்சியில் ஆர்வம் இல்லை. ராஜ்ஜியங்களை வெற்றி கொள்வதில் மட்டுமே அவன் ஆர்வமாக இருந்தான்.

டெல்லியில் கொள்ளையடித்த பொக்கிஷத்துடன் தைமூரின் படை தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கியது. ஒரு நாளைக்கு நான்கு மைல்கள் வரை மட்டுமே பயணிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் பொருட்களை வைத்திருந்தனர். திரும்பிச் செல்லும்போது கூட தைமூர் வழியில் சுமார் 20 சிறிய போர்களில் ஈடுபட்டான். வாய்ப்புக் கிடைத்த இடமெல்லாம் மேலும் கொள்ளையடிக்கப்பட்டது.

தைமூர் காஷ்மீரை அடைந்து, அங்கிருந்து காபூலைக் கடந்தபோது, அவனது கை, கால்களில் கொப்புளங்கள் வந்தன. குதிரையின் முதுகில் உட்காரக்கூட முடியாத அளவுக்கு அவரது உடல் நிலை மோசமானது. சிரமத்துடன், இந்துகுஷ் மலைகளில் பயணம் செய்தான். ஓர் ஆற்றை 48 முறை கடக்க வேண்டிய அளவுக்கு சுற்றி வளைந்த பாதையில் செல்லவேண்டியிருந்தது.

இந்தியாவிலிருந்து யானைகள், தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைத் தைமூர் ஏற்றிச் சென்றான். மிக முக்கியமாக, சமர்கண்டில் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்ட டெல்லியின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் மற்றும் தச்சர்களைச் சிறைப்பிடித்துத் தன்னுடன் அழைத்துச் சென்றான்மறுபுறம், சமர்கண்டில் இருந்து 1000 மைல் தொலைவில் இருந்த டெல்லி சிதிலமடைந்த நகரமாக மாறியது.

பல தலைமுறை இந்திய சுல்தான்கள் குவித்த அளவிட முடியாத செல்வம் சில நாட்களிலேயே கைவிட்டுப்போனது. இதுமட்டுமின்றி சுல்தானகத்தின் தானிய இருப்புகளும், விளைந்த பயிர்களும் நாசமாயின. டெல்லி முற்றிலுமாக அழியும் நிலைக்கு வந்தது. அங்கு உயிர் பிழைத்த மக்கள் பட்டினியால் சாக ஆரம்பித்தனர். இந்த நிலையில் இருந்து மீண்டு வர டெல்லிக்கு 100 ஆண்டுகள் ஆனது.

முன்னாளில், காஞ்சிபுரத்தை அடைய பல மன்னர்கள் போர் தொடுத்ததைப் படித்தோம். அந்த நிலை டெல்லிக்கு வந்தது, அந்தக் காலக்கட்டத்தில் நடந்த கதைகளைச் சொல்ல சரித்திரம் துடிக்கிறது.