புத்தகம் : ஆளுக்கொரு வானம் ( கவிதைகள் )
எழுதியவர்: மதுவந்தி
குவிகம் பதிப்பகம் ( முதல் பதிப்பு : ஜூன் 2020 )
பக்கங்கள் : 70
விலை : ரூ. 60
குவிகத்தின் முக்கிய அங்கத்தினரான கவிஞர் மதுவந்தி என்ற வீரராகவன் சமீபத்தில் திடீரென மறைந்தது குவிகத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் பேரிடியாய் இறங்கியது. அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையும் தாண்டி, அவருடைய ரசிகத் தன்மையும், பாராட்டும் முகமும், புன்சிரிப்பும், மென்மையும், நன்னடத்தையும் அனைவருடைய கவனத்தையும் அன்பையும் பெற்றது.
நான் பல வருடங்களுக்கு முன்பு யூடியூபில் கவிஞர்களைப் பற்றி அறிமுகம் செய்து சில வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த நாட்களில், மதுவந்தி அவர்களை அணுகியபோது, அவருடைய முதல் கவிதை நூலான “ஆளுக்கொரு வானம்” என் கைக்கு வந்து சேர்ந்தது.
70 பக்கங்களில் 60 சின்னஞ்சிறு புதுக் கவிதைகளைக் கொண்ட கைக்கடக்கமான நூல் அது. கையில் எடுத்தால் ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்.
மதுவந்தி மறைந்த செய்தி என் மனதைக் குடைந்தபோது “ஆளுக்கொரு வானம்” என்ற இந்த அழகிய நூலை மீண்டும் அசை போட்டேன் .
முதல் கவிதை : சூரிய வணக்கம்
“இருந்த இடத்திலேயே இருந்து,
உள்ளுக்குள்ளேயே
எரிந்து,
ஜோதியும் வெம்மையும்
தந்து,
எங்கள் வாழ்வை
நடத்துகிற சூரியனே !
உன்னை நிதமும் வணங்குவேன்…
என் அம்மாவை
ஞாபகப்படுத்துவதால்….!”
இந்தக் கவிதையைப் படித்துவிட்டு “பிடிக்கவில்லை” என்று யாராவது சொல்ல முடியுமா ?
என்ன ஒரு எளிய நடை !
பொங்கிவழியும் கவித்துவம் !
“என் அம்மாவை ஞாபகப்படுத்துவதால் !” என்று மனதைத் தொடும் அந்தத் திருப்பம் தரும் வரிகள் !
“தவம்” என்று மற்றொரு கவிதை :
“உன்னுள்ளும்
என்னுள்ளும்
கவிதைக் கனல்
உண்டு சாம்பல்
உடை உடுத்தி,
ஊதிக் கலைத்து
பெரு நெருப்பாக்க
ஒரு காற்று
வரவேணும்.”
சிறிய கவிதை. பெரிய பொருள். இதைப் படிக்கும்போதே நம்முள்ளும் கவிதைப் பொறி பறக்கிறது. மதுவந்தி போன்ற ரசிகர்கள்தான் நம்மைப் போன்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் என்றே புறப்பட்டு வந்த பெருங்காற்று.
குவிகமே அதற்கு சாட்சி.
மதுவந்தியின் கவிதை மனதைக் கொண்டாட மீண்டும் “ஆளுக்கொரு வானம்” படித்து ரசியுங்கள் நண்பர்களே !


