துளித் துளியாய்

ஜன்னல் வழியாக வெளியே பெய்யும் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த வயதாக இருந்தாலும் மழையைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் குதூகலம் மாறுவதே இல்லை. முற்றத்தின் மேல் ஓட்டில் இருந்து சொட்டுச் சொட்டாக விழும் நீர்த் துளிகளைக் கையில் ஏந்தி ஒருவர் மேல் ஒருவர் எறிந்து குழந்தைகளாக விளையாடிய காலம் நெஞ்சில் பரவியது. கொட்டும் மழை நீரைப் பிடிக்க அங்கங்கே குடமும் பக்கெட்ட்டும் வைத்து நீரை வீணாக்காமல் உபயோகப்படுத்திய காலங்களும் உண்டு.
நீர்த் துளிகள் என்று நினைக்கும் போது ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்கிற பழமொழி ஞாபகம் வருகிறது. சேமிப்பதற்கு இந்த பழமொழியைப் பொதுவாகச் சொல்வார்கள். சாமி அலமாரியில் உண்டியல் வைத்து சில்லறைகளாக சேர்ப்பதில் இருந்து, அம்மாக்களும் பாட்டிமாரும் வீட்டுச் செலவுக் காசில் இருந்து கொஞ்சம் எடுத்து சிறுவாட்டு பணம் என்று வைப்பதில் இருந்து, பாத்திரச்சீட்டு நகைச்சீட்டு என்று பெண்ணின் கல்யாணத்திற்கு சேமிப்பது வரை சிறு துளி பெருவெள்ளம் தான்! நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இன்னின்ன செலவுக்கு என்று ரெக்கரிங் டெபாசிட்( RD ) கட்டுவேன். தீபாவளி செலவுக்கு, பிள்ளை ஸ்கூல் பீசுக்கு, லீவில் ஊருக்குப் போகும் செலவுக்கு என்று சேர்க்கும் சிறு துளிகள் அந்தந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்த காலங்கள் அவை.
இப்படிச் சிறுக சிறுக சேர்த்து வளர்பவை பணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. படிக்கிற காலத்தில் எங்கள் தந்தை அன்றன்றைக்கு நடத்தும் பாடத்தை அன்றே படித்து விட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார். அப்படி சின்ன சின்னதாக படித்து முடித்து விடும்போது, கால், அரை, முழுப் பரீட்சைகள் பயமுறுத்தாது. நானெல்லாம் எல்லா வகுப்பிலும் 90 ல் இருந்து 100 மதிப்பெண்கள் தான் வாங்குவேன். சிறுகச் சிறுக படித்ததால் தான்!!
இப்படி யோசித்துக் கொண்டே போனால், பழக்கங்களும் சரி, திறமைகளும் சரி சிறுகச் சிறுக சேமிப்பவைதான். சாதனை உயரத்தை எட்டிப்பிடித்துக் கையில் கோப்பையுடன் நிற்கும் பலரைப் பாருங்கள். விளையாட்டு, இசை, சினிமா, போன்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் சொல்வது இதுதான், ‘சிறுவயதிலிருந்து தினந்தோறும் பயிற்சி செய்தேன், திறமையைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டேன்’, என்பார்கள். தொடர்ந்து சிறுகச் சிறுக வளர்த்துக் கொள்ளும் எதுவுமே சோடை போவதில்லை.
முதலமைச்சர் விஜய் அவர்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அவர் அரசியலுக்கு வந்த போதும், கட்சி ஆரம்பித்து தேர்தலில் தனியாக போட்டியிட்ட போதும், பலரும் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ‘சின்னப் பையன், அரசியல் தெரியாது, சினிமா நடிகன் தானே’, என்றெல்லாம் கொஞ்சம் இளக்காரமாகத்தான் பார்த்தார்கள். இப்போது அவர் தன்னை நிரூபித்து, பல இக்கட்டுகளைக் கடந்து முதலமைச்சராக உட்கார்ந்து இருக்கும்போது புரிகிறது, ‘அவர் ஒன்றும் மேலோட்டமானவர் இல்லை’ என்பது. அரசியலில் பல வருடங்களாக அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்திருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார். படிப்படியாகத் தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார். பேப்பரைப் பார்க்காமல் உறுதிமொழியை அவர் மனப்பாடமாக மனதில் இருந்து பேசுவதும், ஒரு தேர்ந்த சொற்பொழிவாளரைப் போல் முதல் உரையை முதலமைச்சராக ஆற்றிய போதும், இதற்குப் பின்னால் பல வருடங்களாக அவர் சேமித்திருக்கும் திறமை தெரிகிறது.
இதுதான் எதையும் சிறுகச் சிறுக சேமிப்பது என்பது என்றால், இதைக் கொஞ்சம் பின்னோக்கியும் பார்க்கலாம்.
நமக்கு மனதில் ஒரு ஆசை இருக்கிறது, கனவு இருக்கிறது, லட்சியம் இருக்கிறது, என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அது ஒரு சின்னப் பொறி தான். ஒரு மேடை நாடகத்தைப் பார்ப்போம். இப்படி நாம் நடிக்க வேண்டும் என்று தோன்றலாம். பரிசு பெறும் ஒருவரைப் பார்த்து, இவரைப் போல எழுத்தாளராகி நாமும் பரிசு பெற வேண்டும் என்ற ஆசை வரலாம். எல்லாமே அப்படித்தான்! முதலில் ஒரு சின்ன ஆசையாக, பொறியாகத் தான் தோன்றும்.
அதை நோக்கி தினம் தினம் சிறுகச் சிறுக அதற்கான திறமையை வளர்த்துக் கொள்வதும், ஆசானைத் தேடிக் கற்றுக் கொள்வதும், பயிற்சி செய்வதும் தான் நம்மை அந்தக் கனவை நோக்கி அழைத்துச் சென்று சாதிக்க வைக்கும்.
சாதனைகள் மட்டுமல்ல பழக்கங்களும் இப்படித்தான்! ‘நிறையப் புத்தகங்கள்படிக்க ஆசை, வீடு பூராவும் புத்தகங்களை வாங்கிக் குவித்திருக்கிறேன். படிக்கவே நேரமில்லை’ என்பார்கள். ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள் என்று ஆரம்பியுங்கள். ஆனால் தினமும் அந்தச் சிறு துளி நேரம் படிக்கச் செலவிட வேண்டும். துளித் துளியாய் சேரும் அந்தச் செயல் பிறகு பழக்கமாகிவிடும்.
உடற்பயிற்சியில் இருந்து, பக்தி, பாராயணம், சமையல் வரை எல்லாமே இப்படித்தான்! என்னால் முடியவில்லை என்று சோர்ந்து உட்காராமல் சின்னச் சின்னத் துளியாக எந்த பழக்கத்தையுமே சேமிக்க ஆரம்பித்தால் நிச்சயம் அது நமக்கு கைவசப்படும்.
துளித்துளியாகச் சொட்டும் மழை நீரைப் பார்த்தபடி மனதில் வட்டமடித்த சின்னச் சின்ன விஷயங்கள் இப்படி ஒரு நீண்ட கட்டுரையாகி விட்டதே !!
-கிரிஜா ராகவன்
