வாழ்க்கையின் இனிமையான தருணங்கள்

இந்த நாள் எனக்காகவே பிறந்ததோ!

வாழ்க்கை என்பது என்ன? எல்லோரும் ஒரேபோலப் பிறந்து, வளர்ந்து, உறங்கி, விளையாடி, சாப்பிட்டு, படித்து, வேலைபார்த்து, பின் இறப்பது என்பதுதானா? வேறு ஒன்றும் இல்லையா என்ன? எல்லார் வாழ்விலும் இனிமையான சில / பல தருணங்கள் உண்டு. அதனை உணர்ந்து கொண்டாடுவது ஒரு உயர்வான அனுபவம். உணர்ந்து கொள்வதே ஒருவித இனிமை. கொண்டாடுவது இன்னும் இனிமை. என் சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

பள்ளிப்பருவத்தில் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வதென்பது உற்சாகமானதொன்று மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்க்கும் வழிகள். ஒரு சின்னப் பரிசு வாங்கிவிட்டாலும்கூட தன்னம்பிக்கை வளர ஆரம்பித்துவிடும். 7-ம் வகுப்பில் என் பாட்டு ஆசிரியை சில பாரதியார் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தார். அதில் ஒன்றைப்பாடி பாரதியார் பாட்டுப் போட்டியில் (மூன்றாம்) பரிசு வாங்கினேன். ‘ஓடி விளையாடு பாப்பா’ எனத் தலைப்பிட்ட பாரதியார் கவிதைகள் புத்தகம். இன்றும் என்னிடம் உள்ளது. இதுவே பல பரிசுகளுக்கும் முதல்படி!! அப்புறம், ஒரு பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக, ‘நான் சென்ற சில நாடுகள்’ எனும் தலைப்பில் அந்நாள் அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் எழுதிய நூல் – எனது பெரும் பொக்கிஷம்! இசையும் பேச்சும் என்னுடன் கூடவே இருந்து என்னை உற்சாகப் படுத்திய தருணங்கள் அவை. அவ்வப்போது நாடகங்களும் கூட!! எட்டாம் வகுப்பில் தமிழ் மீடியத்தில் படித்த நான் ஆங்கிலத்தில் நேருஜியைப் பற்றிப் பேசி முதல் பரிசு பெற்றேன். தந்தையின் உதவியுடன்தான்!! அதனை பள்ளிக்கூட ஆண்டுமலரில் பதிப்பித்தார்கள். நான் வானில் சிறகடித்துப் பறந்தேன்.

இது ஒன்பதாம் வகுப்பில் நேருஜியைப் பற்றி ஒரு இசைநாடகம் எழுதி அரங்கேற்றும்வரை சென்றது. நானே புனைந்த பாடல்கள் சில இன்னும் நினைவிலுள்ளன. அவற்றில் ஒன்று:

பஞ்சசீலக் கொள்கைகளும் பலநற்பணிகளும் படைத்தார்

          அஞ்சாண்டுத் திட்டங்களும் அஞ்சாமல் வகுத்தார்-கண்

துஞ்சாமல் துயருற்றோரின் துயரினைத் தொலைக்கவே-நாளின்

          எஞ்சிய பகுதியையும் எளிதாகச் செலவிட்டார்.

மற்றவை எங்கு சென்றனவோ? பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவில்லையே என வருத்தமாக உள்ளது. நான் நிறையக் கவிதைகள் புனைவேன் என்று என் தாய் கூறியிருக்கிறார். ஒரு காலகட்டத்தில், கல்லூரி நாட்களில் இவை என்ன பிதற்றல்கள் என நினைத்தேனோ என்னவோ கிழித்தெறிந்துவிட்டேன் அவற்றை!

ஆனால் ஒன்று. இவை அனைத்துமே அன்பான அருமையான ஆசிரியர்களின் அரவணைப்பினாலும் உற்சாகப் படுத்தலினாலும்தான் நடந்தன. சுட்டியான, துடிப்பான மாணவர்களை அடையாளம் கண்டுகொண்டு உற்சாகப்படுத்துவது ஆசிரியர்களே! இவர்களைப் பற்றி பின்னொரு சமயம் விவரமாக எழுதுகிறேன்.

என் தந்தையார் எனக்கு அம்புலிமாமா, கண்ணன் ஆகிய புத்தகங்களை சந்தா கட்டி வரவழைத்துக் கொடுப்பார். நானும் அவற்றைப் படித்து, பள்ளிக்கூடத்தில் மதிய உணவு இடைவெளியின்போது சாப்பாடு முடிந்ததும், ஓடி விளையாடாமல், வகுப்பறையில் அமர்ந்து கதை கேட்கும் ஆர்வம் கொண்ட தோழிகள் கூட்டத்திற்குக் கதை சொல்வதுண்டு!! திறந்தவாய் மூடாமல் கதை கேட்கும் நண்பிகள், அருமையான பொழுதுகள், இனிமையான தருணங்கள்; ஏங்கவைக்கும் நாட்கள்.

கல்லூரி நாட்களிலும் கூட இனிமையான சில தருணங்கள் இன்றும் பசேலென்று நினைவில் நின்று உள்ளத்தைச் சிலிர்க்க வைக்கின்றன. ஒரு ஆண்டு (நான் பி. யூ. சி. படித்த வருடம் என நினைக்கிறேன்) அரிச்சந்திரன் – சந்திரமதி கதையை நாட்டிய நாடகமாகத் தெருக்கூத்து வடிவத்தில் என் கல்லூரி மாணவிகள் நடித்தார்கள். இதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரபல நாட்டியக் கலைஞர்களான நடராஜ் – சகுந்தலா (கணவன்- மனைவி) அவர்களைக் கல்லூரியார் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் பரத நாட்டியம் தெரிந்த மாணவிகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்தார்கள். இதற்குப் பாடல்களைப்பாட நானும், இன்னொரு மாணவியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அருமையான பாடல்கள், இன்றும் நினைவில் நின்று இனிக்கும், மகிழ்விக்கும் பாடல்கள்.

சந்திரமதி தன் மகன் லோகிதாட்சனுடன் சபைக்குள் பிரவேசிக்கும் தருணம். ஒரு பளபள ஜரிகைப் புடவையை இருவர் பிடித்துவர, அந்தப் புடவையின் பின்னால் நடனமாடியபடி அவர்கள் வருவார்கள்:

கந்த பரிமள சந்த்ரமுக வாசம் சபை எங்கும் ப்ரகாசம்

          சந்த்ரமதிதேவி வந்தாளே கைவீசி காலில் தண்டை ஒலிபேசி….

          கற்புடைய பெண்ணரசி கணவனை நாடிநல்ல

          பொற்புடைய சூர்யகுல புத்ரன் லோகிதாசனுடன்…..

          தத்தோம் தத்தோம் தரிகிட தத்தோம் தத்தோம்.

இப்போதும் இதை எழுதும்போது உள்ளம் துள்ளுகிறது!!

பின்பு நட்சத்திரகன் என்பவன் தான் அரிச்சந்திரனுக்குக் கொடுத்த கடனை உடனே திருப்பித்தருமாறு கேட்டு வருகிறான். குதித்துக் குதித்து அவன் ஆடிய நடனம் இப்போதும் கண்ணில் நிற்கிறது.

நட்சத்தரகன் வந்தேன் நானே இச்சபையை நாடிவந்தேன்.

          உச்சிதமாக, கச்சிதமாக; உச்சிதமாக, கச்சிதமாக;

          பொன்னைத்தாரேன் என்று சொன்னபடி இங்கே

          இன்னைக்கே தந்திடு இப்போதே கொடுத்திடு!

இவையெல்லாம் வாழ்வின் பொன்னான தருணங்கள். இன்றும் நினைவுபடுத்திப் பார்க்கும்போது இனிமை பொங்குகிறது.

பின்பு என் தமிழிலக்கிய ஆசைக்கு விருந்து படைத்த ஒரு குறவஞ்சி நாட்டிய நாடகத்தை எனது கல்லூரி மாணவியர் அரங்கேற்றினர். பாடகி யார்? அடியேன்!! என்ன குறவஞ்சி? பெத்லகேம் குறவஞ்சி!! வேதநாயகம் சாஸ்திரியார் இயற்றியது! கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? சர்ச் எனப்படும் தேவாலயம் காவியத்தலைவியாக, யேசுநாதர் காவியத் தலைவனாக, அருமையாக இயற்றப்பட்ட குறவஞ்சி இலக்கியம். இதனைச் சுடர்க்கொடி பத்மா எனும் பிரபலமான நாட்டியமணி நடனமாக வடிவமைத்திருந்தார். எனது தோழிகள் அழகாக மியூசியம் கலையரங்கு (Chennai) மேடையில் ஆட, நானும் இன்னொரு தோழியும் பொருத்தமாக இசையமைக்கப்பட்ட பாடல்களைப்பாட, ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்தான்!!

சிங்கன்: இத்தனை நாளாக என்னிடம் கேளாமல்

                       எங்கே நீ சென்றனை சிங்கீ சிங்கீ!- (மா)

          சிங்கி:   பெத்தலகேம் நகர் சீயோன் குமாரிக்கு

                       பத்திக்குறி சொல்லச் சிங்கா சிங்கா!

1967-68 ல் அரங்கேறிய இதன் பாடல்களை நான் மட்டுமல்ல, அப்போது கல்லூரி முதல்வராக இருந்த மதர் சுப்பீரியரும் கூட நினைவில் வைத்திருந்தார். கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளின் பின்பு, பழைய மாணவிகளான நாங்கள் சிலர் கல்லூரிக்குச் சென்றபோது அவரைச் சந்தித்தோம். நினைவில் வைத்துக்கொண்டு என்னுடன் சேர்ந்து சில நிமிடங்கள் இந்தச் சில பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். ஆனந்தக் கண்ணீர்தான்! எப்பேர்ப்பட்ட நாட்கள்! அந்த நாளும் வந்திடாதோ?

எங்கள் தமிழ்ப்பேராசிரியை ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக எங்களில் சிலரை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். எனக்கு இணைப்பு உரை வாசிக்கும் வேலை. எல்லாரைப் பற்றியும், அவர்கள் நடிப்பு, பாட்டு, இன்னபிற பற்றியும் எழுதிக் கொடுத்திருந்தார்கள்; கணீர்க்குரலில் வாசித்தேன். நிகழ்ச்சி முடிய ஐந்தே நிமிடங்கள் இருந்தபோது, என்னைத் தன் அருகாமையிலழைத்து, என் கையிலிருந்த காகிதத்தை வாங்கி அதில், ‘இதுவரை இணைப்பு உரை வாசித்தது கே. மீனாக்ஷி’ என எழுதிக் கொடுத்தார்கள்; வாசிக்கச் சொன்னார்கள். அந்த அன்பில், என்னை இழந்தேன் நான். ஒன்று தெரியுமா? அவர்களுடைய தமிழ் வகுப்பு ஒன்றைக்கூட நான் தவறவிட மாட்டேன். அத்துணை அழகாகப் பாடங்கள் கூறி நம்மைக் கட்டிப்போட்டு விடுவார்.

பின்னொரு சமயம் பாண்டிச்சேரியில் படித்தபோது, ஒரு சீனியர் நண்பரின் விடாமுயற்சியினால் வானொலியில் பாட வாய்ப்புக் கிடைத்தது. ஆஹா என உள்ளம் பூரித்தாலும், ஒத்திகை பார்க்கப் பலமுறை வானொலி நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. நிறைய வகுப்புகளைத் தவறவும் விட்டுவிட்டுப் பரிதவித்ததுண்டு.

எங்கள் வகுப்பில் நாங்கள் ஆறு மாணவர்கள் மட்டுமே! அதனால் யாரை எப்போது பேராசிரியர்கள் கூப்பிட்டு பாட சம்பந்தமான கேள்விகளை எல்லார் முன்பும் கேட்பார்கள் எனத் தெரியாது. எப்போதும் அன்றைய பாடங்களைப் படித்துத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சக மாணவர்கள் எதிரில் மானம் போய்விடும்! இதன் நடுவே ஒரு சமயம் லைப்ரரிக்கான கட்டிடம் புதிதாகத் திறக்கப்பட்டு அதன்முன்பு ஒரு சரஸ்வதி சிலை நிறுவப்பட்டது. அதனைத் திறந்துவைக்க அப்போதைய உதவி ஜனாதிபதி வந்தார். கடவுள் வாழ்த்துப்பாட என்னைப் பணித்திருந்தார்கள். சரஸ்வதி மீதான ஸ்லோகம் ஒன்றினைத் தயார் செய்து பாடினேன். விழா முடிந்து வகுப்புகளுக்கு, நாங்கள் எங்கள் பரிசோதனை சாலைக்குச் சென்றுவிட்டோம். பேராசிரியர் என்னை நோக்கி வந்தார். “நீ எதற்காக மைக்ரோபயாலஜி படிக்க வந்தாய்?” என்று புன்னகைத்தபடி கேட்டார். என் தலை சுழன்றது. என்ன தவறு செய்துவிட்டேன், இவ்வாறு என்னைக் கேட்கிறாரே எனத் தடுமாறினேன். கண்கள் பிரவாகமெடுக்கத் தயார்! “நீ சங்கீதத்தை நன்கு முறையாகப் பயின்றிருந்தால் எங்கேயோ போயிருக்கலாம், எப்படிப் பாடுகிறாய் அம்மா!” என்றாரே பார்க்கலாம். புல்லரித்தது. “மைக்ரோபயாலஜி, நுண்ணுயிரிகள் பற்றிய படிப்பு எனது நெடுநாளைய கனவு,” என அவரிடம் போய் பீற்றிக்கொள்ள முடியுமா? அசடு வழியச் சிரித்து வைத்தேன். இப்போது எண்ணிக் கொள்கிறேன்; அடுத்தபிறவி என ஒன்று இருந்தால், அதில் மானிடனாகப் பிறந்தால், இசையால் உலகை ஆளவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

கூறிக்கொண்டே போகலாம்; இவற்றையெல்லாம் கூறியது, வாழ்க்கையின் இனிய தருணங்களை அனுபவிக்க வேண்டும்; கொண்டாட வேண்டும். அவற்றில் லயித்து அசைபோட வேண்டும்.

எத்தனை பாடங்களைக் கற்பித்து, அழகான தருணங்களை நம்மிடம் கூட்டிவைத்திருக்கிறது இந்த வாழ்க்கை எனும் ஓடம்!!

——————————————–