எஸ்.வி.வி.
![]()
வழக்கறிரான எஸ்.வி.விஜயராகவாச்சாரியார் இந்தி,சம்ஸ்கிருதம், தெலுங்கில் புலமை மிக்கவர். ஆங்கிலத்தில் நகைச்சுவை கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில் 1926-களில் வாரா வாரம் நகைச்சுவை கட்டுரை எழுதியவர்.
கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற வழக்கு பிரச்னையை மையமாக வைத்து அவர் எழுதிய நகைச்சுவை கட்டுரை அந்தக் காலத்தில் மிகவும் சிலாகிக்கப்பட்டது. ஆனந்த விகடனில் அவரது கட்டுரையை ‘கோயில் யானை’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து கல்கி வெளியிட்டார். அவரை தமிழிலும் எழுத வைக்க முயற்சி மேற்கொண்டார். எஸ்.வி.வி.-யின் முதல் கதை ‘தாட்சாயினியின் ஆனந்தம்’ விகடனில் பிரசுரமானது.
உலகை, மனிதர்களை, வாழ்க்கையை தான் கண்டவாறு நகைச் சுவையுடன் பதிவு செய்த படைப்பாளி.’சம்பத்’ என்ற அவரது நாவல் குறிப்பிடத்தக்கது.’ ராஜமணி’, ‘கோபாலன்’, ‘உல்லாச வேளை’, ‘செல்லாத ரூபாய்’, ‘வாழ்க்கையே வாழ்க்கை உள்ளிட்டவை இவரது பிற நாவல்கள். ஆங்கிலத்திலும் 8 படைப்புகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. ஹிந்து, விகடனில் மட்டுமே எழுதியுள்ளார். பாரதமணியில் இவரது ‘விவேகம்’ என்ற கதை வெளியாகியுள்ளது. வேறு இதழ்களில் அவர் எழுதவில்லை.எழுத்தாளர் வாஸந்தி இவரது வாழ்க்கை வரலாற்றை ‘எஸ்.வி.வி. எனும் ரஸவாதி’ என்ற பெயரில் எழுதியுள்ளார்.
துமிலன்

ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியவர் துமிலன். தமிழில் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். நாம் எல்லோரும் அற்பம் என நினைக்கும் விஷயங்களிலிருந்து நகைச்சுவையைத் தேடிப்பிடித்து தருவது துமிலனின் வித்தை- இது கல்கியின் பாராட்டு.இலக்கியத்தின் எந்தப் பிரிவில் எழுதினாலும் அவர் அதில் நகைச் சுவை பாணியைக் கையாண்டார் துமிலன்.
தினமணி கதிரில் அவர் எழுதிய ‘குயுக்தி நிபுணர்’ கட்டுரை நகைச்சுவை நடையில் எழுதப்பட்டது.’பிரின்ஸ்பால்’ நாவல் நகைச்சுவை கலந்த மர்ம நாவல். ‘பையன் யார்?, ‘சிஐடி சிறுவர்கள்’, ‘யுத்தக்கலை’, ‘பிருந்தாவனம் எக்பிரஸ்’, ‘பகவதி எம்எல்ஏ’, ‘வனிதா பி.ஏ.’, புனர்ஜென்மம்’ உள்ளிட்டவை இவரது பிற நாவல்கள். கிராமத்துக்குச் சென்று விவசாயம் செய்ய முயன்ற இளைஞனின் கதையை நகைச்சுவையுடன் கிராம மோகினி நாவலில் சித்தரித்துள்ளார். நாகஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை பற்றியும் இவர் எழுதியுள்ளார்.
தாருல் இஸ்லாம் பத்திரிகையில் இவர் எழுதிய ‘ஊர்வம்’சிறந்த நகைச்சுவைத் தொடர். ‘மாலதி ‘என்ற பத்திரிகையை நடத்திய இவர் அனுசூயை, என்.ஆர்.காசி என்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார.துமிலனின்’ புனர்ஜென்மம்’ நாவல் ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்ற பெயரில் திரைப்படமாக வந்தது.
தேவன்
ஒருவரை அழவைப்பது எளிது. சிரிக்க வைப்பது அரிது. வாசகர்களை தனது எழுத்தால் குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்தவர் மகாதேவன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவன். சின்னக் கண்ணன். அம்பி, விச்சு என்ற பெயர்களிலும் அவர் எழுதினார். மான்ட் பிளாங் என்ற சிவப்பு நிற தடி பேனாவை எழுதுவதற்குப் பயன்படுத்தினார்
‘சிஐடி சந்துரு’, ‘துப்பறியும் சாம்பு’, ‘ஸ்ரீமான் சுதர்சன்’, ‘மிஸ்டர் ராஜாமணி’, ‘மல்லாரி ராவ் கதைகள்’, ‘அப்பளக் கச்சேரி’, ‘மிஸ் ஜானகி’, ‘மைதிலி’ இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். ‘கோமதியின் காதல்’ நாவல் திரைப்படமாக வெளிவந்தது.
நகைச்சுவை மட்டுமின்றி குடும்ப, சமூக நாவல்களையும் பயணக்கட்டுரைகளையும் அவர் எழுதினார்.’கொடுக்கு’ பத்திரிகை உதவி ஆசிரியர், சாம்புவிடம் வருஷாந்திர மலருக்கு சிறுகதை வாங்க படும்பாட்டை அத்தனை சுவராஸ்யமாக எழுதியிருப்பார் தேவன். ‘நடன ராணி இந்திரா’ குறுநாவல் அவரது எழுத்தாளுமைக்குச் சான்று.
கல்கிக்கு பின் ஆனந்த விகடன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் தேவன். இரண்டாம் உலக யுத்தத்தின் செய்திகளை ‘யுத்த டைரி’ என்ற பெயரில் சர்வதேசப் பத்ரிகைக்கு இணையான விவரங்களுடன் எழுதினார். சில்பியின் கோயில் சித்திரங்களுடன் இவர் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆன்மிகத் தொடர் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.44 வயதில் மறைந்தார். அமரர் தேவன் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் மூன்று எழுத்தாளர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர்.
பாக்கியம் ராமசாமி
அப்புசாமி-சீதாப்பாட்டி பாத்திரங்களைப் படைத்து நகைச்சுவையுடன் எழுதி ஏராளமான வாசகர்களைக் கவர்ந்தவர் பாக்கியம் ராமசாமி. குமுதத்தில் ‘மஞ்சள் பிசாசே, கொஞ்சம் நில்’ சிறுகதை மூலம் 1963-ம் ஆண்டு இத் தம்பதியை அறிமுகம் செய்தார். இயற்பெயர் ஜ.ரா.சுந்தரேசன். ‘சீதோபதேசம்’,’அ்ப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’, ‘மாணவர் தலைவர் அப்புசாமி’, ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ நாவல்கள் மிகவும் பிரபலம்.
நகைச்சுவைக் கட்டுரைகளிலும் முத்திரை பதித்தவர். ‘பேப்பர் படிக்கும் எறும்பு’, ‘பீரோவுக்குப் பின்னால்’,’சிரிக்காத மனமும் சிரிக்கும்’, ‘நானா போனதும் தானா வந்ததும்’ போன்ற தொகுப்பில் உள்ள கட்டுரைகள் வரிக்கு வரி நகைச்சுவை கொண்டது. ‘பஜ்ஜி சாஸ்திரம்’, ‘ரவா தோசை,’ ‘பாவம் இவள் ஒரு தைக்ப’ உள்ளிட்ட கட்டுரைகள் நகைச்சுவையில் மாஸ்டர் பீஸ். ஜ்வாலா மாலினி என்ற புனைப் பெயரில் ‘மனஸ்’ என்ற நாவலை எழுதியுள்ளார். காமத்தீயில் புழுங்கும் கதாநாயகி அதை வெல்ல மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானி கணவன் என்று செல்லும் வித்தியாசமான படைப்பு. பொன்னியின் புன்னகை, கதம்பாவின் எதிரி, பூங்காற்று, குங்குமம், பாசாங்கு, நெருங்கி நெருங்கி வருகிறாள் ஜ.ரா.சு.வின் குறிப்பிடத்தக்க நாவல்கள்.
நாடோடி
ஆனந்த விகடன், கல்கி இதழ்களில் நூற்றுக் கணக்கில் நகைச்சுவை கட்டுரைகள், கதைகள் எழுதியவர்.இயற்பெயர் எம்.வெங்கட்ராமன். ‘நாடகமே உலகம்’ இவரது நகைச்சுவை கட்டுரைத் தொகுப்பு.. கல்கி இதழில் அவர் எழுதிய ‘எங்கள் குடும்பம் பெரிது’,’ இதுவும் ஒரு பிரகிருதி’ தொடர்கள் நகைச்சுவை ததும்பும் வாழ்க்கைச் சித்திரங்கள்.
‘அட பரமசிவா’,’ கிழவியும் குமரியும்’, ‘ஸ்திரீகள் ஜாக்கிரதை’, ‘புருஷர்களுக்கு மட்டும்’ உள்ளிட்டவை அவரது படைப்புகள். நாடோடி தனது முதுமைக் காலத்தில் ராமகிருஷ்ண விஜயம் இதழில் சமய. ஆன்மிக கட்டுரைகளை எழுதினார்.
தினமணியில் ஜராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த போது ஆன்மிகம் என்ற பத்தியை அவர் தினமும் எழுதியது வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மீள் வாசிப்புக்கு பலர் அப்பகுதி வெளியான பக்கத்தை பத்திரப்படுத்தி வைத்தனர்.
கடுகு
சக பள்ளித் தோழர்களான சித்ராலயா கோபு, ஸ்ரீதருடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களில் நடித்தார். இயற்பெயர் பி.எஸ்.ரங்கநாதன். கே.பாலச்சந்தர் படத்தில் நடித்துள்ளார். கடுகு என்ற பெயரில் துணுக்குகள் எழுதினார்.
பணி நிமித்தம் தில்லியில் இருந்த போது குமுதத்தில் அகஸ்தியன் என்ற பெயரில் எழுதிய ‘அரே டெல்லி வாலா ‘கட்டுரை வாசகர் வட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது.
தினமணி கதிரில் அகஸ்தியன் என்ற பெயரில் அவர் எழுதிய ‘பஞ்சு கதைகள்’ பிரபலம். ‘கமலா’, ‘தொச்சு’ சீரியல் கதைகள் எழுத்துலகில் அவரை திரும்பிப் பார்க்க வைத்தன. ‘என்ன தவம் செய்தேனோ?’ கட்டுரை மூலம் அவருக்கு புகழ் கிடைத்தது.
எழுத்துருக்கள் உருவாக்கத்தில் ஆர்வம் கொண்டவர்.அழகி மென்பொருளில் பயன்படுத்தும் எழுத்துரு கடுகுவின் உருவாக்கம்.
ஜே.எஸ்.ராகவன்
ஆங்கிலத்திலும், தமிழிலும் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியவர். பிரபல கட்டுமான நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்தார். அண்ணா நகர், மாம்பலம் டைம்ஸில் ‘தமாஷா வரிகள்’ என்ற பத்தியை 15 வருடங்களுக்கு மேல் எழுதினார். நகைச்சுவை பொங்கும் பத்தியை அந்த இதழ்கள் வந்ததும் வாசகர்கள் முதலில் வாசித்து மகிழ்ந்தனர்.
பிரபல இதழ்களிலும் அவற்றின் தீபாவளி மலர்களிலும் ஜே.எஸ். ராகவன் நகைச்சுவைக் கதைகள் பிரசுமாயின. ‘அன்புள்ள சண்டக் கோழியே’, ‘தத்தக்கா புத்தக்கா’, ‘சிவசாமியின் சபதம்’,’ சிவசாமி துணை’, ‘வரிவரியாகச் சிரி’, ‘சுண்டல் செல்லப்பா’, ‘எல்லாம் இன்கம் மயம்’, ‘பூகோள ரம்பை’, ‘கோபிகைகளும் ஜாங்கிரிகளும்’, ‘டமால் டூமில்-500 வாலா’ உள்ளிட்டவை அவரது குறிப்பிடத்தக்க நகைச்சுவை ததும்பும் படைப்புகள்.
