பாகம் 5 – நதிக்கரையில் ஓர் இதயகோயில்
![]()
சென்ற இதழில் :
உலகின் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியங்களின் ஒன்றான கெய்ரோ மியூசியம் பார்த்தபின், கெய்ரோ ரயில் நிலையம் வந்தடைந்தோம். அங்கிருந்து எகிப்தின் அஸ்வான் நகரத்திற்குச் செல்லும் ரயிலில் எங்கள் பயணம் துவங்கியது.
இனி :
கெய்ரோவில் இரவு கிளம்பி, மறுநாள் முற்பகலில் ஆஸ்வான் சென்றடையும் இந்த ரயில் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சற்றுப் பழையதாக இருந்தாலும், உள்ளே இதமாகக் குளிரூட்டப்பட்ட சிறிய அறையில் இருவருக்கான கூபே படுக்கை வசதி, உடைமைகளை வைத்துக் கொள்ளத் தனி இடம் என்று சௌகரியங்களுக்குக் குறைவில்லை.
இரவு நன்கு உறங்கினோம். இளங்காலைக் கதிர்கள் உள்ளே நுழைய, திரையை விலக்கிவிட்டு ஜன்னல் வழியாக பார்த்தால் நைல்நதி இணையாக பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
நைல் நதியை ஒட்டி செழுமையான கிராமங்கள், நம் ஊர் போலவே ரயிலைப் பார்த்து கை அசைக்கும் குழந்தைகள், ஆங்காங்கே மணல் திட்டுக்கள்.
இரயிலில் காலை உணவாக வழங்கப்பட்ட சாண்ட்விச்சைக் கடித்தபடி, குழுவிலுள்ள ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகப்படுத்திக் கொள்ள நேரமும், வாய்ப்பும் கிடைத்த தருணம் அது. பயணம் சுமார் 13 மணி நேரம் நீடித்ததது.
இரயில் அஸ்வான் நகரை அடைந்தபொழுது எந்தவித அலுப்பும் இல்லாமல் உற்சாகமாகவே இருந்தோம். இரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேராகத் துறைமுகத்திற்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு வித்தியாசமானதொரு தங்கும் வசதி ஏற்பாடாகி இருந்தது. அங்கிருந்த கப்பலில் எங்களுக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
எகிப்து நாட்டில் இந்த நைல் நதி க்ரூஸ்கள் வெகு பிரபலம். அகலமான, ஆழமான நைல் நதியில் பயணிக்கும் இந்த உல்லாசக் கப்பல்கள் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்றவை.
பெரும்பாலும், முக்கியமான சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் நைல் நதியை ஒட்டியே இருக்கும் என்பதால், உணவு, இருப்பிடம் பற்றிக் கவலையின்றி விடுதிகளைத் தேடி அலையாமல், இடங்களை கைடு வசதியுடன் சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் அதே கப்பலில் ஏறி பயணத்தைத் தொடரலாம்.
எங்கள் குழுவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த க்ரூஸ், அஸ்வான் நகரிலிருந்து புறப்பட்டு கோம் ஒம்போ, ஏடிஃபூ, (இ)சான வழியாக லக்சர் செல்லும் உல்லாசக் கப்பல் ஆகும்.
கப்பலில் மதிய உணவை உண்டபின் வெளியே வந்து தயாராக ஏற்பாடாகியிருந்த பேருந்து மூலம் அஸ்வான் அணைக்கட்டைக் காணச் சென்றோம்.
![]()
அஸ்வான் உயர் அணைக்கட்டு எகிப்திய வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டபொழுது வெள்ளக் கட்டுப்பாடு, விவசாயம், மின்சாரம் என்ற மூன்று முக்கிய காரணங்களுக்காக 1898-1902 ஆண்டு காலகட்டத்தில் ஆஸ்வானின் முதல் மண் அணையை (Earth Dam) கட்டினார்கள்.
பிற்காலத்தில் இந்த அணை விரிவு படுத்தப்பட்டு 11,811 அடி நீளமும் 3215 அடி அகலமும் 364 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்டமான அணையாக உருமாறியது. பெரிய கடல் போல அமைந்துள்ள இதன் நீர்த்தேக்கத்திற்கு, முன்னாள் அதிபர் நாசர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிழற்படங்கள் எடுக்க அருமையான பிரதேசம் இது.
இங்கு நீர்மின்சக்தியாக 12 ஜெனரேட்டர்கள் துணைக் கொண்டு 2.1 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 13 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும், சுமார் 10 லட்சம் ஹெக்டேர் பாலைவன நிலத்தை நீர் மேலாண்மை மூலம் பயிர் செய்யும் நிலங்களாகவும் மாற்றியுள்ளார்கள்.
அடுத்ததாக அஸ்வான் அணைக்கட்டில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிலே (PHILAE) கோயிலுக்குச் சென்றோம்.
The PHILAE Temple

நம்மூரில் புகழ் பெற்ற ஆலயங்கள் பல நதிக்கரையை ஒட்டியே அமைந்துள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேசங்களில் பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். அதுபோல நைல் நதிக்கரையோரமாகப் பல பழமையான எகிப்திய தெய்வங்களின் ஆலயங்கள் அமைந்திருந்தன.
அஸ்வான் அணைக்கட்டில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் பிலே தீவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
நைல் நதியில் அதிவேக ஸ்பீடு போட் மூலம் பயணித்தது அலாதியான அனுபவம்; தூரத்தில் பழுப்பு நிறத்தில் பிலே கோயில் தெரிய ஆரம்பிக்க,
“அது ஒரு காதல் கோயில். தெரியுமா உனக்கு?” என்று சந்தியாவைப் பார்த்து டாக்டர் ராம்நாத் கேட்டார்.
“டாக்டர் எதாவது கதை விடுவார், நம்பாதீங்க” என்றார் ஜானு மாமி.
“இல்லை, எனக்கு கைடு சொன்னார். கிரேக்க மொழியில் பிலியா (Philia) என்றால் ஃப்ரெண்ட் ஷிப், ஸ்வீட் ஹார்ட் என்று அர்த்தமாம்”
அதற்குள் கைடு அமுன் அனைவரின் கவனத்தை ஈர்த்து, வேறொரு பகுதியைக் காட்டி “அதோ தெரிகிறது பாருங்கள், அதுதான் AGILIKA தீவு. அங்குதான் முதலில் இந்தக் கோயில் இருந்தது சொன்னால் நம்பமாட்டீர்கள்.
வருடங்களில் சில மாதங்கள் நைல் நதியின் நீரோட்டம் மிக அதிகமாக இருக்கும். அதனால் பிலே கோயில் அவ்வப்போது மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும்.
இந்த அபாயத்திலிருந்து பழமையான இக்கோயிலைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார்கள். ஓர் இத்தாலிய கட்டுமான கம்பெனி இந்தக் கோயிலை 65,000 பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் வரிசை இலக்கம் இட்டு ஜாக்கிரதையாகச் சேமித்து பிறகு, அதைப் பழைய நிலையில் எப்படியிருந்ததோ அதே வடிவில் பிலே தீவில் கோயிலை மீட்டுருவாக்கியது..
1964 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பெரிய அளவு நிதி உதவியுடன், 50 நாடுகள் ஒத்துழைப்புடன் எட்டு வருடங்கள் இந்தப் பணி நடந்ததாம்.
பழமையான வரலாற்றுச் சின்னங்கள், ஒரு தலைமுறையின் அலட்சியத்தால் பறிபோய்விடாமல் காப்பாற்ற வேண்டும் என்கிற இவர்களது அக்கறையைப் போற்ற வார்த்தைகளே இல்லை.
இதுபோல இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள அத்தனை கோயில்களையும், பழங்கால நினைவுச்சின்னங்களையும் மீட்டுருவாக்கி அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையன்றோ?
தீவுக் கோயிலை அடைந்தோம். பிரம்மாண்டமாகச் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் வரவேற்றன. உள்ளே சுற்றிப் பார்த்தோம். ஹதோர் (காதல் / அன்பு ), ஐசிஸ் (தாய்மை), எனப் பல பெயர்கள் கொண்ட எகிப்திய தெய்வங்களின் சிலைகள் உள்ளே இருந்தன. கிரேக்க, ரோம நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் மிக உயரமான தூண்கள். நம் மதுரை நாயக்கர் மஹால் ஞாபகம் வந்தது.
பண்டைய வரலாற்றின்படி எகிப்து நாடானது, வடக்கே அலெக்ஸாண்ட்ரியாவில் துவங்கி தெற்கில் அஸ்வான் நகரத்தோடு முடிவடைகிறது.
அதற்கு அடுத்து நியூபியா ராஜ்ஜியம் இருந்தது. நியூபியாவும் நாகரீகத்தில் சிறந்து விளங்கிய நாடு. தற்போதைய எகிப்தின் தென்பகுதியும் சூடானின் வடபகுதியும் சேர்ந்தது. முற்காலத்தில் அங்கு, தங்கம் வெட்டி எடுக்கப்பட்டதால் செழுமையான நாடாகவும் இருந்தது.
எகிப்தியக் கடவுள்களை, அண்டை நாடான நியூபியாவிலும் வணங்கினார்கள். நியூபியன்களும் பிலே கோயிலுக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
வருடத்தில் பத்துநாட்கள் நம்ம ஊர் பிரம்மோற்சவம் போல இங்கு பெரிய அளவுக்கு விழாக்கள் நடந்திருக்கின்றன. பண்டைய எகிப்தியர்களின் பல நாகரீக, கலாச்சார பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், இந்திய நாகரீகத்தை ஒத்திருப்பதைப் பலமுறை, இந்தப் பயணத்தில் கண்டோம்
பிலே கோயிலை உலகப் பாரம்பரிய மையங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. கிசா பிரமிட் பகுதியில் நடப்பது போல சவுண்ட் அண்ட் லைட் ஷோ இங்கும் நடைபெறுகிறது.
பிலே தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் க்ரூஸ் கப்பலுக்குத் திரும்பினோம். இரவு முழுவதும், கப்பல் இந்தத் துறைமுகத்தில்தான் இருக்கும். நாளை அதிகாலை அபுசிபல் கோயிலுக்கு மீண்டும் பேருந்து மூலம் செல்லப் போகிறோம். அதன் பிறகு மீண்டும் கப்பலுக்கே வந்து விடுவோம்.
“அப்ப, எப்பத்தான் இந்த கப்பல் துறைமுகத்தை விட்டு நகரும்? சும்மா கப்பலை காட்டிவிட்டு இறக்கி விட்டுவிடுவீர்களா?”
“நாளை அபுசிபல் கோயிலுக்குப் போய்விட்டு வந்த பின், மதிய உணவுக்கு பிறகு கப்பல் கிளம்பி (KOM OMBO) கோம் ஓம்போ என்கிற நகருக்குச் செல்லப் போகிறோம்” என்றார் அமன் சிரித்தபடி.
“ஆங்.. சொல்ல மறந்துவிட்டேனே, சீக்கிரம் இரவு டின்னர் முடித்துவிட்டு கப்பலின் பார்ட்டி ஹாலுக்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக இரவு ‘நூபியன் பார்ட்டி ஷோ’ ஏற்பாடு செய்துள்ளோம். அதைத் தொடர்ந்து அஸ்வானின் மிக ஃபேமஸ் ஆன ‘பெல்லி டான்ஸ்’ – இடுப்பு நடனம் உங்களுக்காகக் காத்திருக்கிறது! தவற விடாதீர்கள், என்றார் அமுன்
டாக்டர் ராம், வெங்கட் மாமாவைப் பார்த்து கண்ணடிக்க, சிறிய வெட்கம் அவர் முகத்தில் தெரிந்ததை அனைவரும் ரசித்தார்கள்.
அப்போது ஜானு மாமி, “ஏன்ணா ஏதோ டான்ஸ்ன்னு சொன்னாளே” அது என்ன? என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார்.
இரவு உணவை முடித்துவிட்டு, அந்த ஃபைவ் ஸ்டார் க்ரூஸின் கார்னிவல் டெக் வந்து அமர்ந்தோம்.
எகிப்திய வாத்தியக்காரர்கள் இசைக்க, வண்ண வண்ண உடைகள் அணிந்து’ நியூபின் கிராமிய நாட்டியத்தை விறுவிறுப்பாக ஆடினார்கள்.
வெங்கட் மாமாவைக் காணவில்லை. தூங்கப் போய்விட்டார் போல.
அறிவிப்பாளர் மைக்கைப் பிடித்து இந்த நிகழ்ச்சிக்கு அடுத்த நிகழ்ச்சியாக நடைபெற இருந்த எகிப்திய பெல்லி டான்ஸ் நர்த்தகி வர இயலாததால், இன்று அந்த நிகழ்ச்சி நடைபெறாது. ஆனால் நாளை இரவு நிச்சயம் நடக்கும். எல்லோரும் தவறாமல் வந்து கலைஞர்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும், டாக்டர் எங்களிடம், வெங்கட் மாமா நாளை காலை நம்மிடம் கண்டிப்பாக பெல்லி டான்ஸ் பற்றி கேட்பார். இன்று நடந்துவிட்டதாகச் சொல்வோம். அப்பொழுதுதான் நாளை நிகழ்ச்சிக்கு வருவார். அப்போது அவருக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கும் என்றார். எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமோதித்தோம்.
இரவு கப்பலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நிம்மதியாகத் தூங்கினோம்.
எகிப்திய பழமொழி :
விதை தனக்குள் அடங்கியுள்ள மரத்தை வெளிப்படுத்துவதில்லை.
(தொடரும்..)
