முன்னுரை
இதிகாசம் என்பது ஒரு நாட்டின் அடையாளச் சின்னம்.
அது சரி! இதிகாசம் என்பது எது?
ஒரு நாட்டின் அல்லது இனத்தின் செவி வழியாக வந்த பண்டைய நிகழ்வுகளைக் குறிப்பாகக் கதையின் நாயகனின் வீரதீரச் சாகசச் செயல்கள் மூலம் விவரிக்கும் பெரிய பாடல்கள் நிறைந்த காவியம் இதிகாசம் ஆகும்.
பல சிறு கதைகளைக் கொண்ட பெரிய கதை. அதை ஒருவரே எழுதியிருக்கலாம். அல்லது பலர் சேர்ந்து அமைத்திருக்கலாம்.
பாடல்கள் அவற்றின் முக்கிய அம்சம்.
இதிகாசங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்குப் பல விளக்கங்கள் கூறப்படுகின்றன.
அவை மனிதர்களின் மனத்திலிருந்து உதித்தவை என்பதில் ஐயமில்லை.
எப்படி அவர்கள் மனத்தில் இப்படி நம்ப இயலாத நிகழ்ச்சிகள் எல்லாம் தோன்றியிருக்கும்? இன்று நாம் படிக்கும் மனோதத்துவ நிபுணர் பிராய்டின் தத்துவத்தைக் கொண்டு இதை ஒருவர் விளக்க முயலுகிறார்.
மனதின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள நினைவுகளற்ற தொல்பொருள்களின் கூட்டுக் கலவையிலிருந்து வெளிப்படும் கற்பனைகளும், கதைகளும் தான் இதிகாசங்களாகின்றன என்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் மனத்தில் பதிந்த ஆழ்ந்த பழமையான நம்பிக்கைகளும் எண்ணங்களும் தான் மந்திர தந்திரங்களாக மதங்களாக உருவெடுக்கின்றன. பின்னர் அவை சொற்களில் வரும்போது இதிகாசங்களாக மாறுகின்றன என்று அவர்கள் அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.
இதனால் இதிகாசங்கள் என்பவை வெறும் கட்டுக்கதைகள் என்ற தவறான வரைமுறைக்குச் சென்றுவிடக்கூடும்.
அதீதமான கற்பனைகளுடன் பகுத்தறிவும் கலந்து படைத்தவையே இதிகாசங்கள் என்பது ஆராய்ந்து அறிந்த அறிஞர்களின் கூற்று .
பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை ஆராய்ந்து அதன் மூலம் இதிகாசங்களின் மூலக்கூற்றை வரையறுப்பது ஒரு வகை.
சமூக மானிடவியலை ஆராய்வது இரண்டாவது வகை. இதன்படி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கதைகளுடன் சேர்த்து ஆராய்வது முக்கியமாகிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும்விட இந்தத் தொன்மக் கதைகள் எல்லாம் மனித இனம் தங்கள் அனுபவங்களின் துணை கொண்டு வெளிப்படுத்திய எறிகாட்சி என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. அதாவது, மனிதன் தான் பெற்ற மற்றும் கற்ற அனுபவங்களைப் பெரிதுபடுத்தி நீட்டிப் பார்க்கும் (PROJECTIONS) முயற்சியின் விளைவே இதிகாசம் என்பது இவர்கள் வாதம்.
இந்த முன்னுரையுடன் இதிகாசம் என்ற இலக்கிய வடிவின் குணங்களைப் பார்ப்போம்.
- இதிகாசம் என்பது நடுவில் ஆரம்பிக்கவேண்டும். அதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கதையின் போக்கில் பிறகு சொல்லலாம்.
- பல நாடுகள், உலகங்கள் கதையின் ஊடே வரவேண்டும்.
- துவக்கத்தில் கடவுளின் துதி இருக்கவேண்டும்.
- காவியத்தின் கருத்தை முன்னுரையாகச் சொல்ல வேண்டும்.
- கதை மாந்தர்களின் பட்டப்பெயர்களைச் சேர்த்துக் குறிப்பிடவேண்டும்.
- நீண்ட பேச்சுக்கள் இருக்கவேண்டும்.
- மனித முயற்சிக்குக் கடவுள் துணை வருதல் அவசியம்
- கதை நாயகன் அன்றைய நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் சக்தியாக இருக்கவேண்டும்
- கதை நாயகன் வீர தீரச் செயல்கள் புரியவேண்டும்.
- தவறு இழைத்த முக்கிய கதை மாந்தர் கதை முடிவில் நரகத்திற்கோ பாதாள உலகத்திற்கோ செல்லவேண்டும்
நம் இந்தியாவில் ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள் என்று போற்றப்படுகின்றன
உலகத்தின் மிகப் பிரபலமான இதிகாசங்கள் என்று குறிப்பிடுபவை :
- சுமேரியர்களின் கில்காமேஷ்
- ஹோமரின் இலியட்
- ஹோமரின் ஆடிஸி
- வால்மீகியின் ராமாயணம்
- வியாசரின் மகாபாரதம்
- வர்ஜிலின் ஏனிட்
- ஓவிட்டின் மெடமார்பசிஸ்
- ஃபிர்டௌசி
- பியோஉல்ஃப்
- அரியோஸ்டோ வின் அர்லான்டோ
இவை தவிர நூற்றுக் கணக்கான இதிகாசங்கள் பல்வேறு நாடுகளில் இனங்களில் கலாசாரங்களை விளக்கும் கருவிகளாக இருந்து வருகின்றன.
ஆப்பிரிக்க நாடுகள் (எகிப்து),
தென்மேற்கு நாடுகள் ( பெர்ஷியா, அராபியா ),
கிழக்கு ஆசியா (கொரியா, துருக்கி, ஈராக்),
தெற்கு ஆசியா (இந்தியா, இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பர்மா),
ஐரோப்பா (ரோமர்கள், கிரேக்கர்கள், ஸ்பானிஷ், இங்கிலாந்து, ஐரிஷ் ஜெர்மனி)
இப்படி எண்ணற்ற நாடுகள் தங்கள் கலாசாரங்கள் பிரதிபலிக்கும்படி பல இதிகாசங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.
இவற்றுள் ஒரு மாபெரும் அதிசயம் என்னவென்றால் பல நாடுகளில் பவனிவரும் அந்த இதிகாசங்களுக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
பிரளயம் பற்றி எல்லா இதிகாசங்களும் கூறுகின்றன. நோவாவின் படகு – மச்ச அவதாரம், மன்மதன் – குபிட், சீதையை இராவணன் கடத்துதல் – ஹெலன் பாரிஸால் கடத்தப்படல் , தேவர்களுக்கிடையே போட்டி, பொறாமை இப்படி எண்ணற்ற ஒற்றுமைகள் எல்லா இதிகாசங்களிலும் இருக்கின்றன.
மனிதர்கள் உலகத்தில் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் புலம் பெயர்ந்திருப்பார்கள் என்ற தத்துவத்தை இது மெய்ப்பிக்கிறதோ? அப்படிப் புலம் பெயரும்போது தங்களுடன் இருந்த நம்பிக்கைகளையும் கதைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றார்களா? பின்னர் அந்தந்த நாடுகளுக்குத் தக்கவாறு அவை மாற்றி அமைக்கப்பட்டனவா? இதிகாசங்கள் உண்மையில் நடந்தனவா? அதற்கு ஆதாரங்கள் உண்டா? இன்றைக்குக் கணிக்கவே கடினமாக இருக்கும் வானவியல் கூற்றுக்களை அவர்கள் அநாயாசமாகச் சொல்லுகிறார்களே, எப்படி? நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற மூலப் பொருட்களையும், கிரகங்களையும், கடவுளராக மாற்றியது ஏன்? பயத்தினாலா?
உலகின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
(சமீபத்திய செய்தி: இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள ராமர் சேது பாலம் தோன்றிய காலத்தை நமது விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராயப் போகிறார்களாம்)
இன்றைய காலகட்டத்தில் உலகில் நூற்றுக்கணக்கான இதிகாசங்கள் பவனி வருகின்றன.இந்துக்கள், புத்தர்கள், சீனர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், நார்ஸ், செல்டிக், ஸ்லேவிக், எகிப்தியர்கள், மெசபோடோனியர்கள், பாபிலோனியர்கள், அராபியர்கள், முகமதியர்கள் ஆகியோருடைய இதிகாசங்கள் மிகவும் பிரசித்தமானவை.
இவை அனைத்தும் ஒரு மத்தியப் புள்ளியிலிருந்து வந்தவை போலவே தோன்றுகிறது.
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இவற்றில் இருக்கும் ஒற்றுமையைக் கண்டுபிடிக்கலாம்.
நாமும் முயல்வோமே!
அவை என்னென்ன என்பதையும் பல நாடுகளின் இதிகாசக் கதைகளையும் இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
நமது முன்னோர்களின் அனுபவங்களையும் கதை சொல்லும் திறனையும் நாம் வியந்து பாராட்டுவோம் என்பதில் சந்தேகமில்லை.
(Ref : The Indian Theogony by Sukumari Bhattacharji)
இன்றைய நாகரிக மனிதன் அவ்வப்பொழுது கேட்கும் ஒரு கேள்வி !
உலகத்தில் முதல் நாகரிகம் தோன்றிய இடம் எது?
தேசப்பற்றும் இனப்பற்றும் கொண்டவர் அனைவருக்கும் தங்கள் நாடு- தங்கள் மொழி – தங்கள் கலாசாரம் – தங்கள் நாகரிகம்தான் முதலில் தோன்றியிருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற என்ற விருப்பத்தில் விளையும் எண்ணம் . அதில் தவறில்லை.
இந்தியாவில் இருக்கும் நம் அனைவருக்கும் வேத காலம்தான் ஆதியில் தோன்றிய காலம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
தமிழகத்தில் பிறந்த நமக்கு ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி’ என்ற எண்ணமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
ஆனால் வரலாற்று ஆசிரியன் உண்மையான ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் செல்லவேண்டும்- சொல்லவேண்டும்.
கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார்.
அவர் குறிப்பிடும் அம்சங்கள்:
- நகரக் குடியிருப்புகள்
- தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்
- தேவைக்கு அதிகமான உற்பத்தி
- வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்
- அரசாங்க அமைப்பு
- பொதுமக்கள் பயன்படுத்தப் பெரிய கட்டடங்கள்
- தொலைதூர வாணிபம்
- கலைப் பொருட்கள்
- எழுத்துக்கள், இலக்கியம்
- கணிதம், வடிவியல் (Geometry) வானியல் துறைகளில் தேர்ச்சி.
(நன்றி: விக்கிபீடியா)
உலகின் நாகரிகங்கள் நதிக் கரைகளில்தான் தோன்றின.
- யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றைய ஈராக்கின் பெரும்பகுதி அன்று சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட நாகரிகங்கள்.
- இந்தியாவின் நாகரிகம் சிந்து நதிப் படுகைகளில் தோன்றியது சிந்து சமவெளி நாகரிகம் மொகஞ்சாதரோ ,ஹாரப்பா போன்ற இடங்களில் நடந்த அகழ்வு ஆராய்ச்சிகள் இந்த நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன.
- எகிப்தின் நைல் நதியில் படர்ந்த நாகரிகமும் பழமையான நாகரிகங்களில் ஒன்று.
- தமிழ் கூறும் நல்லுலகம் குமரிக்கண்டம் , லெமூரியா என்ற ஆஸ்திரேலியா முதல் இந்தியாவரை இருந்து பின்னர் அழிந்த மாபெரும் நிலப்பரப்பு பற்றிப் பேசுகிறது.
- இன்கான், மாயன் ,கிரேக்க, ரோம சீன நாகரிகங்கள் போன்று எத்தனையோ நாகரிகங்கள் உலகில் தோன்றியிருக்கின்றன.
ஆனால் நாகரிக வளர்ச்சியின் முதல் பங்கு மற்ற நாகரிகத்தை அழிப்பதுதான் போலும். இந்த ஆதிக்க எண்ணம் பழைய நாகரிகத்தை அழித்துப் புது நாகரிகத்தை உருவாக்குகிறது. கற்காலம் முதல் இன்றுவரை இது தொடர்ந்து வருகிறது.
இன்றைக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ‘நாகரிகத்தின் துவக்கம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுவது யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்த மெசபடோமியா நாகரிகத்தைத்தான்!
இங்குதான் உலகின் முதன்முதலில் நாகரிகம் தோன்றியதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
சுமேரியா நாகரிகம் என்பதே அதன் பெயர். சுமேரியா என்ற மொழி பேசிய சுமேரியர்களே நாகரிகத்தின் முன்னோடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். .
தென் மெசபடோமியாவே சுமேரியா என்று கருதப்படுகிறது.
இந்த நாகரிகம் கிமு 4000 ஆண்டு முதல் கிமு 3000 ஆண்டு வரை எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
செப்புக் காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் சுமேரியா இருந்தது.
இங்கு வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின.
யூப்பிரட்டீஸ், டைகிரிஸ் என்னும் இரு ஆறுகளையும் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தினர்.
முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களைச் சாரும். சுமேரியர்கள் நூல் நிலையங்களையும் உருவாக்கினர்.
சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்தனர்
காலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே.
இப்படிப்பட்ட சுமேரிய நாகரிகத்தின் பழமையான இதிகாசங்களில் கில்காமேஷ் (GILGAMESH) என்ற அரசனைப் பற்றிய கதைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவன் பாதி மனிதன் பாதி இறைவன். ! மெசபடாமியா நாட்டைக் காக்க வந்த தலைவன் ! இறப்பில்லாத தன்மை கிட்டவேண்டும் என்பதற்காகப் போராடியவன்.
நம் அசுரர்கள் அனைவரும் இதைத்தானே விரும்பித் தவம் செய்தார்கள். சுமேரியாவிற்கு முன் அஸ்சிரியா என்ற ஒரு பிரதேசம் இருந்தது வடக்கு மெசபடாமியாவில். அங்கே அசுர் என்ற ஊரும் இருந்தது. அங்கேயிருந்த வந்தவர்கள்தான் நம் இதிகாசங்களில் வரும் அசுரர்களா?
புரியாத புதிர் .
மேலும் சுமேரியாவில் ‘ஊர்’ என்ற பெயரில் ஒரு நகரம் இருந்தது. ஊர் என்பது தமிழ்ப் பெயர் அல்லவா? அது எப்படி அங்கே?
புரியாத புதிர்.
இப்படிப் பல புதிர்களை உள்ளடக்கியதுதான் இதிகாசங்கள்.
படிக்கும்போதே நமக்கும் சிறகு முளைப்பது போன்ற அனுபவம் வரலாம்.
இந்தப் பயணத்தில் இது வரை நாம் கில்காமேஷ் , ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி , வர்ஜிலின் ஏனிட் ஆகிய நான்கு இதிகாசங்களைப் பார்த்தோம்.
கில்காமேஷ் , சுமேரியா நாகரிகத்தின் திறவுகோல் !
இலியட் மற்றும் ஒடிசி இரண்டும், கிரேக்க நாகரிகத்தின் அளவுகோல் !
ஏனிட் , கிரேக்க நாகரிகத்தின் நீட்சியாக வந்த ரோம நாகரிகத்தின் ஊன்றுகோல்!
இனி நாம் பார்க்கப் போவது ஓவிட் எழுதிய உருமாற்றம் – மெடாமார்பசிஸ் என்ற இதிகாசம் கிரேக்க -ரோம கடவுளர்களின் திருவிளையாடல்களைத் தொகுத்து வழங்கும் மந்திரக்கோல்.
ஒரு உருவத்திலிருந்து மற்றொரு உருவத்திற்கு உருமாற்றம் செய்வதைப் பற்றி கதைகளே இந்தப் புத்தகத்தின் மையக்கருத்து. இதை உலகம் தொடங்கிய காலத்திலிருந்து ஜுலியஸ் சீசர் மறையும் காலம் வரை எழுதியிருக்கிறார் ஓவிட் என்ற கவிஞர். 15 புத்தகங்கள் கொண்ட இந்த இதிகாசத்தை அவர் அகஸ்டஸ் சீஸர் காலத்தில் எழுதினார். அகஸ்டஸ் சீஸர் ஜூலியஸ் சீசருக்குப் அடுத்துவந்த ரோமாபுரி சக்கரவர்த்தி.

இப்படி ஒரு மாபெரும் காவியத்தைப் படைத்த கவிஞர் ஓவிட்டை முதலில் ஏகமாகக் கொண்டாடியவர் அகஸ்டஸ் சீஸர். ஆனால் அவரே ஓவிட்டை நாடு கடத்தினார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவ
கவிஞர் ஓவிட் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிட்டு அவரது காவியமான ” உருமாற்றம்” கூறும் கதைகளை இனி வரும் இதழ்களில் தொடர்ந்து பார்ப்போம்.
