தைமூர்

Amir Timur

1388

அது ஒரு கொடுங்கனவு. அது கொலைவெறிகாலம். கனவிலும் நினையவொண்ணா அந்தக் கொடுங்கனவு நிஜமாகவே நடந்தேறியது, டெல்லிக்கு விரைவில் நிகழவிருக்கும் ஒரு பேரபாயம். ஒரு பேரழிவு. இந்தியா கண்டிராத இனப்படுகொலையின் உச்சம். அந்த அழிவிலிருந்து மீள, டெல்லிக்கு ஒரு நூற்றாண்டு ஆயிற்றென்றால் அதன் தாக்கத்தை சற்றே விளங்கிக்கொள்ள இயலும். ஒரு பத்து வருடங்கள் கழித்து வரப்போகும் அந்த அவலங்களை சரித்திரம் நடுங்கிக்கொண்டே சொல்கிறது.

அந்த 1388 வருடத்தில், நன்றாக ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் காலமானான். அன்று, இந்தியா, வங்காளம், காஷ்மீர் மற்றும் தக்காணம் என பிரிந்து கிடந்தது. அவனுடைய சந்ததிகள் சுல்தானாக அடித்துக்கொண்டார்கள் என்பதை நாம் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளத்தேவையில்லை. அது தான் நடந்தது. டெல்லியை, அவனது பேரன்கள் மற்றும் அவனுடைய இளைய மகன் என்று ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து மன்னர்கள் ஆண்டனர். எந்த ஒரு வெளி ஆக்கிரமிப்பாளருக்கும் அழைப்பு கொடுக்கும் விதமாக டெல்லியின் உள் விவகாரம் இருந்தது. இந்த குழப்பச் செய்திகள், ஆயிரம் மைலுக்கப்பால் இருந்த சமர்கண்டில் எதிரொலித்தன. அந்தக் குழப்பத்து முடிவில், நாசிர் முகம்மது ஷா டெல்லியின் சுல்தானானான்.

முதலில் தலைப்புச்செய்திகள்:

1398-ல் தைமூர், டெல்லியைத் தாக்கி, துக்ளக் சுல்தான் நசீர்-உத்-தின் மஹ்மூத் ஷாவை தோற்கடித்து, நகரை சூறையாடி, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று, டெல்லி சுல்தானகத்தை சிதைத்தான். இந்த படையெடுப்பு, டெல்லியை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீண்டு வர முடியாத அளவுக்கு அழித்தது. தைமூர், 15 நாட்கள் நகரைக் கொள்ளையடித்தான். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், பல கைவினைஞர்கள் சமர்கண்டிற்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். டெல்லி சுல்தானின் யானைப்படையை, எரியும் விறகுகளைச் சுமந்து வந்த ஒட்டகங்களைக் கொண்டு தைமூர் முறியடித்தான். அது துக்ளக் வம்சத்தின் முடிவுக்கு வித்தானது.  டெல்லியைப் பாழாக்கியது. மற்றும் 1526-ல் பாபரின் படையெடுப்பிற்கு வழி வகுத்தது.

இனி தைமூரின் படையெடுப்பைப் பற்றி விரிவாகப் பேசுவோம்: டெல்லியை கைப்பற்றுவதற்காக, தைமூரின் 90,000 வீரர்கள் சமர்கண்டில் அணி திரண்டனர். ஒரே இடத்தில் இத்தனை பேர் திரண்டதால் நகரம் முழுவதும் புழுதி பரவியது. சமர்கண்டு, டெல்லிக்கு வடமேற்கே சுமார் 1,000 மைல் தொலைவில் இருந்தது. டெல்லியை அடையும் பாதை, உலகின் மிகவும் கடினமான பாதையாக இருந்தது. இந்துகுஷ் மலைகளின் மீது ஏறி இறங்கி இந்தப்பாதை சென்றது. மகா அலெக்சாண்டர்கூட வீழ்த்த முடியாத மக்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

வழியில் பல ஆறுகள், பாறைகள் நிறைந்த சாலைகள் மற்றும் பாலைவனங்கள் இருந்தன. அவை டெல்லியை அடைவதற்கான வழியை மிகவும் அணுக முடியாததாக ஆக்கின. அவற்றை தாண்ட முடிந்தாலும்கூட தைமூரின் படை இதுவரை தாங்கள் கண்டிராத வலிமை மிக்க யானைகளை எதிர்கொண்டாக வேண்டும்.

இந்த யானைகள், வீடுகளையும் மரங்களையும் வேரோடு சாய்ப்பது மட்டுமின்றி எதிரே உள்ளவர்களை சுழற்றியடித்து மிதித்துக் கொண்டே செல்லும் கதைகளை அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். அவற்றின் தும்பிக்கை மிக வலுவானதாக இருந்தது. எந்தப் படைவீரனையும் துதிக்கையால் வளைத்து கீழே தூக்கி எறிந்து தன் கால்களால் நசுக்கிவிடும்.

அப்போது இருந்த டெல்லியின் நிலையைப் பார்த்தோம். சமர்கண்ட் நகரம் – இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருக்கும் நகரம். முன்னாளில், அலெக்சாண்டர் அதைத் தாக்கி வென்றான். 1200ல் ஜெங்கிஸ்கான் என்ற கொடும் அரசன் சமர்கண்டைத் தாக்கி, அதை முற்றிலும் அழித்திருந்தான். அங்கு, சமர்கண்டில், 1330ல் தைமூர் என்ற கொடுங்கோல் அரசன் தோன்றினான். சமர்கண்டிற்கு முன்பு நடந்தது போல், ஒரு பெரும் சம்பவம் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தான். இந்தியாவில், டெல்லியில் இருந்த குழப்பச்செய்திகள் அவன் எண்ணத்துக்குத் தூபமிட்டது.

சமர்கண்டிலிருந்து கிளம்பிய உடனேயே தைமூருக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டது. 90,000 வீரர்களையும், இரு மடங்கு குதிரைகளையும் இந்துகுகுஷ் மலைகளை தாண்டி எப்படி அழைத்துச் செல்வது என்பதே அது. தைமூரின் படை, மாறுபட்ட வானிலை கொண்ட பல்வேறு பகுதிகளை கடக்க வேண்டியிருந்தது. தைமூரை விட குறைவான தலைமைப் பண்பு கொண்ட எந்தவொரு நபரையும் அழிக்க இது போதுமானதாக இருந்தது.

சமர்கண்டிற்கும் டெல்லிக்கும் இடையே பனி படர்ந்த மலைகள் –  சுட்டெரிக்கும் பாலைவனங்கள் – மற்றும் தரிசு நிலங்கள் நிறைந்த பரந்த நிலப்பரப்பு இருந்தது. அங்கு வீரர்கள் சாப்பிடுவதற்கு ஒரு பிடி தானியத்தை கூட விளைவிக்க முடியாது. தைமூரின் வீரர்களுக்குத் தேவையான பொருட்கள், சுமார் 1.5 லட்சம் குதிரைகளின் முதுகில் கொண்டு செல்லப்பட்டன. தைமூரின் வீரர்கள் பல பெரிய போர்களில் பங்கேற்றவர்கள் தான். ஆனால் இந்த சூழல் பற்றிய முன் அனுபவம் அவர்களுக்கு இல்லை. சாலை மிகவும் ஆபத்தானதாக இருந்தது. பல குதிரைகள் வழுக்கி விழுந்து மாண்டன. பல போர்களில் வெற்றி பெற்றுள்ள தைமூர், குதிரையின் முதுகில் இருந்து இறங்கி சாதாரண சிப்பாய் போல் நடக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதைப் பார்த்த அவருடைய வீரர்களும் நடக்கத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்திற்குள், தைமூரின் படை காபூலை அடைந்தது. தைமூர் அக்டோபரில் சட்லெஜ் ஆற்றை அடைந்தான். அங்கு, வழிமறித்த சாரங் கான் என்பவனை தைமூர் வென்றான்.

தைமூர் டெல்லியை அடைவதற்கு முன்பு வழியில் சுமார் ஒரு லட்சம் இந்துக்களை சிறைபிடித்தான். டெல்லிக்கு அருகே லோனியில் தனது முகாமை அமைத்து, யமுனை ஆற்றின் அருகே ஒரு குன்று மீது நின்று நிலைமையை ஆய்வு செய்தான். அதற்குள் பரஸ்பர சண்டையால் டெல்லியின் பலம் வெகுவாகக் குறைந்திருந்தது. ஆயினும் அதன் எல்லைச் சுவருக்குள் தைமூரின் படையை எதிர்கொள்ள பத்தாயிரம் குதிரை வீரர்கள், 25 முதல் 40 ஆயிரம் வீரர்கள் மற்றும் 120 யானைகள் தயாராக இருந்தன. 700 வீரர்கள் கொண்ட தைமூரின் முன்னரங்கப் படையை மல்லு கானின் படைகள் தாக்கியபோது தைமூருக்கும் டெல்லி வீரர்களுக்கும் இடையே முதல் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் டெல்லி, சுல்தான் முகமது ஷாவால் ஆளப்பட்டது. ஆனால் உண்மையான நிர்வாகம் மல்லு கானின் கட்டுபாட்டின் கீழ் இருந்தது.

மல்லு கானின் வீரர்கள் தன்னைத் தாக்கினால், உடன் வரும் ஒரு லட்சம் இந்து கைதிகள் மல்லு கானை ஊக்குவித்து அவனுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று தைமூர் அஞ்சினான். தனது படைக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கைதிகள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்ற பயத்தில் தைமூர், அந்தக் கைதிகளை அதே இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்த கைதிகளை தங்கள் கைகளால் கொல்லுமாறு தன்னுடன் வந்த மத குருமார்களுக்கும் தைமூர் உத்தரவு பிறப்பித்தான்.

“மனிதகுல வரலாற்றில் இதுபோன்ற கொடுமைக்கு வேறு எந்த உதாரணமும் இல்லை” என்று சர் டேவிட் பிரைஸ், தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த நேரத்தில் மற்றொரு கவலையும் தைமூரை ஆட்டிப்படைத்தது. அவன் தனது சுயசரிதையான ‘முல்ஃபிசத் திமூரி’யில், “என் மிகப்பெரிய கவலை, வலிமைமிக்க இந்திய யானைகள். சமர்கண்டில் அவற்றைப் பற்றிய கதைகளை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். முதல் மோதலில் அவற்றின் திறனை நாங்கள் பார்த்தோம். அவற்றுக்கு நாலாபக்கமும் இரும்பு கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. யானைகளின் மேல் தீப்பந்தங்களை வீசுபவர்கள், வில்லாளர்கள் மற்றும் யானை பாகன் அமர்ந்திருப்பார்கள். யானையின் தந்தங்களில் விஷம் தடவப்பட்டிருப்பதாக வதந்தி பரவியது. யானைகள் தனது தந்தங்களை எதிராளியின் வயிற்றுக்குள் குத்தின. அவற்றின் மீது அம்புகள் மற்றும் ஈட்டிகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளான்.

இந்திய யானைகளை சமாளிக்க ஒரு துல்லியமான திட்டம் தேவையாக இருந்தது. தங்களுக்கு முன்னால் ஒரு ஆழமான குழி தோண்ட தைமூர் தனது வீரர்களுக்கு உத்தரவிட்டான். அந்தக் குழிகளுக்கு முன்னால் எருதுகளின் கழுத்து மற்றும் கால்களில் தோல் பட்டைகள் கட்டி நிற்க வைத்தனர். பின்னர் ஒட்டகங்களின் முதுகில் மரத்தையும், காய்ந்த புல்லையும் ஏற்றி அவற்றையும் ஒன்றாகக் கட்டினர். யானை பாகர்களை முதலில் குறிவைத்து தாக்குமாறு, வில் வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தொடரும்…