Carabao (Philippine Mango) Fruit Seeds for Planting – Heirloom Non-GMO High Germination Organic Garden Seeds

வாழ்க்கையில் சலிப்பு தட்டாமல் இருக்க. அவ்வப்போது மனதை களிப்பாக்கிக் கொள்ள ஆன்மிகத்  தொடர்பான சுற்றுலாவோ அல்லது இயற்கையை  ரசிக்கும் சுற்றுலாக்களோ சென்று நம் அன்றாடக்  கவலைகள் மறந்து சற்றே பொழுது நல்ல விதமாக இன்பமாக கழிக்கவோ, அடிக்கடி குடும்பத்தாரோடும், மேலும் யாரெல்லாம் வருகிறார்களோ உறவுக்காரர்கள் , நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு போய் வரும் எங்கள் வழக்கம்!

கலந்து கொள்ளும் அனைவருமே மிக ஆர்வமாய் அவர்களால் இயன்ற சுவையான கெட்டுப் போகாத உணவுப் பொருட்களை சமைத்து எடுத்துக் கொண்டு , நொறுக்குத் தீனிகள் எல்லாம் செய்து எடுத்துக்கொண்டு ஒரு சிறிய மகிழுந்து அல்லது ரெயில் அல்லது கார்கள் இவற்றில் வெளியூர்களுக்கு சென்று வர ஆர்வத்துடன் வந்துவிடுவார்கள்!

மனித மனம் எப்போதும் கடமைகளையே நினைத்து ,கடமைகளையே செய்து வாழ்க்கையில் உழன்று இறுகிப் போயிருக்கும் நேரங்களில், இப்படி பல ஊர்களுக்கு சென்று மலைகள், ஆறுகள் , நதிகள் இருக்கும் பசுமையான இயற்கை கொஞ்சும் எழில் சார்ந்த இடங்கள் என்று , இயற்கையோடு உறவாடி மகிழ்ந்து நம் பூமியை வளப்படுத்தும் அந்த சுற்றுலாத் தலங்களுக்கும் மனதை சமனப்படுத்தும் ஆலையங்களுக்கு சென்றும்,

,உதாரணமாக உயரமான மலைகள் , ஏறியே ஆகவேண்டும்! ஆர்வத்தில் ஏறினால் பலவிதமான இயற்கைக் காட்சிகளை பறவைப் பார்வையில் கண்டு ரசிக்கலாம், ஆனால் ஏறிவந்துவிட்டோமே, இப்போது இறங்க வேண்டுமே, அப்படி இறங்குதலும் ஒரு உடற்பயிற்சிதானே!

இப்படி மாசில்லாத காற்றையும் ஸ்வாசித்து, சோம்பிக் கிடந்த உடலின் இயக்கத்தை முடுக்கிவிட்டு, உடலுக்கும் சில தேகாப்யாசங்களை அளித்தும், மேலும் கடற்கரைகளில் மணல் சுடாத நேரங்களில் நடக்க வேண்டும் , நம்மால் முடிந்த அளவு மணலிலும், பாதுகாப்பான காட்டுப் பாதைகளிலும் நடக்க வேண்டும் , கல்லும்முள்ளும் காலுக்கு மெத்தை என்று சொல்வார்களே அது போல் நடந்தால் அக்யுபங்சர் என்று தனியாக எதுவுமே வேண்டாம்!

நம் உடலை உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கி, இயற்கையான உடல் ஆரோக்கியத்தையும் , கண்ணால் காணுகின்ற மனதுக்கு பிடித்த இயற்கை வளங்களையும், நதிகள் சுழித்தோடும் அழகையும் ,சூரியனின் கிரணங்களை உள் வாங்கி வைரம் போல் பள பளக்கும் நீர் முத்துக்களையும் , முத்துத் திவலைகள் என்று சொல்லக் கூடிய அருவிகளின் ஆனந்தமான நீர்த் தெளிப்பைக் கண்டு அதன் இதமான சாரலை நாமும் அனுபவித்து, அப்படி தெறித்து மலையின் உச்சியிலிருந்து பயமின்றி கீழே தாவி வீழும் மெல்லிய அருவிகளையும் , ஆக்ரோஷமான அருவிகளையும் கண்டும், ஆழமில்லாத ஆபத்தில்லாத நதிகளில் நீந்தி விளையாடியும், நம் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான உப்பு சர்க்கரை கொழுப்பு ஆகியவற்றை களைந்து முனிவர்கள் போல் ஆரோக்கியமாக வாழவும் முயலவேண்டுமே!

அப்படி ஒவ்வொரு முறை வெளியூர் செல்லும் போதெல்லாம் ஏற்கெனவே வெளியூர்களில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்து வைத்துக் கொண்டு, பெரியவர்கள் வயதானவர்கள், குஞ்சு குளுவான்கள் என்று நம் முன்னோர்கள் வர்ணிக்கும் சிறு குழந்தைகள், வாலிபர்கள், இளசுகள், பெண்மணிகள், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் என்று எல்லோரையுமே அழைத்துக் கொண்டு போவது வழக்கம்,

ஆங்காங்கே சுவையூட்டும் உணவும் அளித்து ,பல பெரியவர்கள் சிறியவர்கள் நடுத்தர வயதினர் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் பேதமின்றி எல்லோரையுமே அவரவருக்கு இயன்ற ஆர்வம் உள்ள ஏதேனும் ஒரு தலைப்பிலே பேசவைத்து, அவற்றைக் கேட்டு இன்புற்று மகிழ்ந்தே பிரயாணத்தை மிகவும் மகிழ்வாக ஆக்கிக் கொள்ளுதல் எங்களுக்கு வழக்கம்!

அப்படிப்  பிரயாணம் செல்லும் பொழுது பல பொறுப்புகள் சிலருக்கு கொடுக்கப் பட்டிருக்கும், அவற்றை அவர்கள் தான் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும், மற்றவர்கள் அந்தப் பொறுப்பிலே தலையிடக் கூடாது என்று ஒரு கட்டுப்பாட்டை விதித்து அதைக் கடைப்பிடிக்கிறோம். பாதுகாப்பாக சில எளிமையான மருந்துகளையும்,, முதலுதவிப் பெட்டியையும் உடன் கொண்டு செல்வோம்!

அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள் அனைவருக்குமே பாதுகாப்பு அவர்கள்தான் என்று ஒரு வரையறை கடைப்பிடிப்போம் , அதனால் இயன்றவரை இறைவன் அருளால் எந்த ஆபத்துமில்லாமல் மகிழ்ச்சியாகவே எங்கள் பயணங்கள் இருந்திருக்கின்றன அவையெல்லாமே சுவையான அனுபவங்களே.!

அப்படி போகும் போதெல்லாம் கனஜோராக பாடல்கள் கதைகள் ஸ்வாரஸ்சியமான நகைச்சுவைகள் கதைகள் ஆன்மீகம் எல்லாமே ஒவ்வொருவர் மனதிலிருந்தும் கொட்டும் . பலவிதமான திகில் அனுபவங்கள் பகிர்வார்கள் , கண்களிலே ஆனந்த பாஷ்பம் பொங்க பக்தி ரசம் சொட்டச் சொட்ட ஆன்மீகம் பேசுவார் ஒருவர்,

இளைஞர்கள் பொதுவிலே சிலதைப் பேசினாலும், பூடகமாக அவர்கள் வயதொத்தவர்களுக்கு மட்டும் புரியும்படியாக எதையேனும் பேசிவிட்டு பெரியவர்களுக்கு புரியாது என்று நினைத்துக் கொண்டு ஆரவாரமாக சிரிப்பார்கள், பேசிக்களிப்பார்கள் !

அவர்கள் வயதைத் தாண்டித்தானே பெரியவர்கள் வந்திருக்கிறார்கள்! அதனால் அவர்கள் கண்டு கொள்ளாமல் புரியாதது போலவே முகத்தை வைத்துக் கொண்டு இளைஞர்களை எடைபோட்டுக் கொண்டிருப்பார்கள்.

பசியெடுத்தால்,  ‘ஏம்பா ஏதாவது பம்பு செட் இருக்கா பாரு , வயல் வெளியிலே அங்கே போயி உக்காந்து சாப்பிடலாம்’ என்பார்கள்.  ஓட்டுனரும் அருமையான நிழலான மரத்தடியிலே நிறுத்துவார்,

அல்லது மாந்தோப்பு போன்ற தோப்பிலே நிறுத்துவார் .அங்கே பசுமையான வயல் வெளியில் பம்ப் செட் அல்லது மாந்தோப்பு இருக்கும் இடத்தின் சொந்தக் காரரை அணுகி அனுமதி பெற்று, அங்கே நாங்கள் கொண்டு சென்ற புளியோதரை இட்லி மிளகாய்ப்பொடி தோசை சட்னி,பூரி வடை பொறித்த வடாம் வத்தல் எலுமிச்சை சாதம் குழம்பு சாதம் தயிர் சாதம் போன்றவைகளை அந்தந்த பொழுதுக்கேற்ப உண்டு அவர்களுக்கும் கொடுத்து மகிழ்ச்சியாய் உண்டு
கைகழுவி முகம் கழுவி புத்துணர்வு பெற்று மீண்டும் பயணத்தை தொடர்வோம்,

ஆனாலும் பயணம் முடிந்து அவரவர் வீடு திரும்பும்போது அவரவருக்கு உண்டான இயல்பான குணங்கள் வந்துவிடும்! ஆகையால் அப்போது அவரவர் எப்படிப்  பேசுவார்கள் என்பதை உணர்ந்தே இந்தப்  பிரயாணங்களை நடத்துவோர் அனுசரித்து, நடந்து கொள்தல் நலம்,

அதுமட்டுமல்ல பயணத்துக்கு போகும்போது இருந்த உற்சாகம் திரும்பி வரும் போது அலுப்பின் காரணமாக குறைந்து போய்க் காணப்படும், அப்போது தான் அவரவர் வம்புகள் பேச தொடங்குவார்கள்-  தம் மூளையைப் புதுப்பித்துக் கொள்ள,

அப்போதிலிருந்து தொடங்கி அடுத்த பயணம்வரை அவரவர் வேலைகளும் பிரச்சனைகளும் வம்பும் மட்டும் தொடரும்.  ஆகவே இயன்ற வரையில் இடைவெளி விட்டு அடுத்த மகிழ்வுந்து பயணத்துக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று நினைப்பேன் நான்,

இப்படி அடிக்கடி பயணங்கள் செய்யும் போதெல்லாம் ‘நமக்கும் ஒரு மாந்தோப்பு இருந்தால் எவ்வளவு  நல்லா இருக்கும் ? அட மாந்தோப்புகூட வேண்டாம்,  ஒரே ஒரு நல்ல இனிப்பான பங்கனபள்ளி  மாம்பழங்கள் அளிக்கும் ஒரு பங்கனபள்ளி  மாமரம் இருந்தால் கூடப் போதுமே ‘ என்பாள் என் இல்லத்தரசி. 

அவள் ஆசைக்காக ஒரு பங்கன பல்லி மாமரத்தை 29 வருடங்களுக்கு முன் நட்டேன்! அது இப்போது வளர்ந்து பெரிதாகி நிறைய மாம்பழங்கள் அளிக்கிறது, அதனால் நாங்கள் தேனினினும் இனிய பங்கனபல்லி மாம்பழங்களை உண்டு களிக்கிறோம்,

“ நட்டால்தானே வளரும், பூக்கும் காய்க்கும் கனியும், நல்லவைகளை நாம் நடக் கற்றால் அதன் நற்பலன்கள் நம்மை அடையும்,”

ஒவ்வொரு வருடமும் நிறைய காய்க்கிறது ! காய்க்கும் அத்தனை காய்களையும் பலருக்கு பகிர்ந்து அளிக்கிறோம் மீதமுள்ள காய்களை பழுக்கப் போடுகிறோம், எத்தனை செல்வம் சேர்த்தோம் என்றாலும் அவை கரைந்து போகும் . ஆனால் நற்காரியங்கள் , புண்ணிய செய்கைகள் அதன் பலன் நம் கணக்கில் எப்போதுமிருக்கும்,

மாங்காய்களை இயற்கையாக பழுக்க வைக்க நாங்களும் வைக்கோல் வாங்கி வந்து அதன் உள்ளே வைத்து பழுக்க வைத்துப் பார்த்தோம், அதன் பிறகு ஒரு மாம்பழக்காரரை அணுகி ஆலோசனை கேட்டோம் ‘அதெல்லாம் வேணாங்க, ஒரு மரத்தட்டிலே காகிதங்களிலே சுற்றி வையுங்கள் தானாகப் பழுக்கும் ‘என்றார்,

அப்படியும் செய்து பார்க்கிறோம் ஆனாலும் ஒரே மாம்பழத்திலே சிலபாகங்கள் அதிகமாகவும் சில பாகம் குறைவாகவும் பழுக்கிறது, ஆனால் பல மாம்பழங்கள் ஒரே சீராக இனிப்பான சுவையான பழமாகப் பழுக்கிறது .

ஆக ஒரே மரத்துப் பழமென்றாலும் (காய்களென்றாலும்) அவைகளை ஒரே சீராகப் பழுக்க வைக்க உத்திகளைக் கையாள வேண்டும் என்பது புரிந்தது, !

ஒரே குடும்பத்து உறவுகள் என்றாலும் அவைகள் எல்லாமே ஒரே சீரான குணங்களை கொண்டிருக்க முடியாது என்பதும் புரிந்தது! ஆனால் சில திருவிழாக்கள் ,சில கொண்டாட்டங்கள் , சில ஒன்றுகூடல்கள், ஆகியவைகளில் தத்தம் இயல்புகளை மறந்து ஒன்று கூடி அந்த விழாவை சிறக்க நடத்திவிட்டு, அதன் பிறகு இயல்பான குணங்களுக்கு திரும்பலாமே தவிர எப்போதுமே எல்லா மனிதர்களும் ஒரே இயல்பிலேயே தம்மை வைத்துக் கொண்டு இருத்தல் இயலாது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். 

ஆகவே வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட அனைவரையுமே ஒருங்கிணைப்பதற்கு ஆழ்ந்த அதீத திறமை வேண்டும் . ஆனாலும் எத்தனை திறமை காட்டினாலும் எப்போதுமே வெய்யில் ஏற ஏற ஏறுகின்ற பாதரசமானியின் அளவீட்டை போல் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளுதல் கடினம்.  அதே போல் வெய்யில் இறங்க இறங்க இறங்கும் பாதரசக் குறியீடு போல் அமைத்துக் கொள்தலும் கடினம்!

சகிப்புத் தன்மையும் அரவணைத்துக் கொண்டு போகும் தன்மை ஏற்கெனவே நிறைய இருந்தாலும் இன்னமும் இன்னமும் இன்னமும் அதிகமாக வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனாலும் , பெரும்பான்மையானவர்க்கு பாதகம் செய்தால் அவர் எப்படிப்பட்ட நண்பராயிருந்தாலும் உறவாயிருந்தாலும், அவரை அந்த நேரத்துக்கு அந்த பெரும்பான்மையினரிடமிருந்து தனிமைப்படுத்தி அவருக்கும் உணர்த்தியே மீண்டும் அந்த மக்கள் குழுமத்திலோ குடும்பத்திலோ சேர்க்க வேண்டும்!

உறுதியான நிலைப்பாடு பிரயாணம் சிறக்கவோ , விழா சிறக்கவோ,  குழுமம் சிறக்கவோ,  குடும்பம் சிறக்கவோ இல்லாது இருந்தால் களையெடுத்தல் அவசியமே! அப்படிக் களையெடுக்காவிட்டால் விளை நிலத்தின் முழுப்பயிரும் வீணாவது தான் நடக்கும்!

என் இல்லத்தரசி சொல்கிறாள்: ” நான் கேட்டேன் என்பதற்காக மாமரத்தை நட்டு வளர்த்துவிட்டால் மட்டும் போதாது, அதிலே காய்க்கும் காய்களை பழுக்க வைக்கும் அனுபவத்தையும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும், அப்போதுதான் காய்க்கின்ற எல்லாக் காய்களையும் பழுக்க வைக்க முடியும்.   இல்லாமல் ஒவ்வொரு முறையும் ஒரு வருடம் காத்திருந்து அபூர்வமாய் காய்த்த காய்களை முறையாகப் பறித்து நல்ல முறையோடு பழுக்க வைத்தால், அமிர்தம் போன்ற கனி கிடைக்கும். ” 

உறவுகளும் அப்படித்தான், அதை செய்யத் தவறினால் அழுகி வீணாகும் , ஆனால் மனிதர்களாகிய நாம் நம் குறையை உணராமல் மரத்தின் மீது குறை சொல்லுவோம், நல்ல அழுகாத மாங்காய்களை தருகிறதா இம்மரம்? என்று!

பங்கனபள்ளி  என்னும் ஊர் ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்…ஆங்கிலேயர் காலத்தில் ஒரு குட்டி சமஸ்தானமாக இருந்தது…திருமாலின் அவதாரம் என்று கருதப்படுகிற, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்கால நிகழ்வுகளையும், ” காலஞானம் “என்னும் நூலில் எழுதி வைத்த ஸ்ரீவீரபிரம்மேந்திர சுவாமி
இந்த ஊரில் வெகு காலம் வாழ்ந்தார்…அவருக்கு ஒரு கோவிலும் இங்கு இருக்கிறது.. அகில இந்தியப் புகழ்பெற்ற, சுவை மிக்க மாம்பழங்கள்…பயிரிடப்படும் ஊரின் பெயராலேயே ‘பங்கனபள்ளி  மாம்பழம்’ என்று அழைக்கப்படுகிறது…

“மரத்திலே குறையில்லை மனிதர் குணத்திலே மாற்றம் வேண்டும், உத்திகளைக் கற்க வேண்டும், பருவத்தே பயிர் செய் என்றார்கள் பெரியோர் , நல்ல விதை போட்டால் நல்ல பயிர் விளையும் என்றார்கள் நம் முன்னோர்கள் , ஆகவே நாம்தான் மாற வேண்டும் ” என்கிறாள் என் இல்லத்தரசி !

உண்மைதானே