கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் வருடா வருடம் நடத்தும்   கோடை நாடக விழாவின் 35 வது ஆண்டு நாடக விழா இம்முறை சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரத கான  சபாவில் துவங்கப் பெற்று 22 ஏப்ரல் 2026 முதல் துவங்கி 30 ஏப்ரல் 2026 வரை நாரத கான சபா அரங்கிலும், பிறகு அதன் தொடர்ச்சியாக மே மாதம் ஒன்று இரண்டு மூன்று ஆகிய மூன்று நாட்களில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பிலும் நடைபெற்றது.மொத்தம் 12 புது நாடகங்கள் மேடை ஏறின.

இந்த கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது நாடக விழாவில் 12 குழுக்கள் தங்கள் நாடகத்தை முதன்முறையாக அரங்கேற்றி போட்டியிலும் பங்கேற்றன. இந்த நாடகங்கள் மூன்று பேர் கொண்ட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டு அவற்றிற்கு  பல்வேறு  பரிசுகளும்  (சிறந்த நாடகம், சிறந்த இயக்கம், சிறந்த வசனம், சிறந்த மேடையமைப்பு, சிறந்த நடிகை, சிறந்த நடிகர் உட்பட)  கேடயங்களும், சுழல் கோப்பைகளும், பரிசுத் தொகையும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக வழங்கப்பட இருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்படும் நாடகங்கள், அவற்றுக்கான பரிசுகள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டு அந்த விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.  இந்த நாடக போட்டியின் சிறப்பு அம்சமே கார்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் இந்த நாடகங்களைக் கண்டு மகிழ ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி அளித்து (குளிரூட்டப்பட்ட அரங்குகளில்) நிகழ்த்துகிறது என்பதுதான். தவிரவும் இந்த நாடகங்கள் ஒவ்வொன்றிற்கும் பார்வையாளர்களுக்கும் விமர்சனப் போட்டி வைக்கப்பட்டு சிறந்த விமர்சனங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.வித்தியாசமான நாடகங்கள், வித்தியாசமான கதைக்களன்கள், வித்தியாசமான மேடை உத்திகள் என்று என்று பலவிதமான பரிசோதனை முயற்சிகள் இந்த ஆண்டு(ம்) வெற்றிகரமாக மேடையேறி நடைபெற்றன.

முதல் முறையாக இந்த முறை ஒவ்வொரு நாளும்  நாடக அறிவிப்பு செய்யும்போது பொறுப்புத் துறப்பு என்று ஒரு அறிவிப்பு செய்து நாடகம் குறித்த வசனங்களுக்கும் கதைக்கும் அந்தந்த நாடக குழுவின் ஆசிரியரும் இயக்குனர்களுமே பொறுப்பு என்றும் இதில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்  சபாவிற்கு பொறுப்பு ஏதும் இல்லை என்று புதிய அறிவிப்பு செய்தது சற்றே ஆச்சரியம். இந்த முறை இடம்பெற்ற 12 நாடகங்களில் ஒரு  பார்வையாளனாக நான் கண்டு ரசித்த சில நாடகங்களின் விமர்சனங்களை உங்களுக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்.

 

  1. “மதில் மேல் பூனைகள்”

கோடை நாடக விழா கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்திய நிகழ்வில் 24 ஏப்ரல் 2026 வெள்ளி அன்று மேடை ஏறிய நாடகம் “மதில் மேல் பூனைகள்” ஜே. சி. கிரியேஷன்ஸ் சார்பாக மேடை ஏறிய இந்த நாடகத்தின்  கதை/ வசனம்/ இயக்கம்
வி. பி. எஸ். ஸ்ரீ ராமன்.

இந்த நாடகம்  ஒரு பெண் கொலை வழக்கு சார்பாக இரண்டு நபர்களை போலீஸ் விசாரணை செய்யும் காட்சியில் துவங்கி பிறகு காட்சிகள் ஒரு குடும்பப் பின்னணி கதை போக்கில் நகர்கிறது திருமணத்திற்கு தன் மகனை வற்புறுத்தும் பெற்றோர், அந்த மகனுக்கு ஒரு காதலி, (அந்த காதலி அவனை சில காலம் திருமணத்திற்கு பொறுத்திருக்கும் படி சொல்கிறாள்.) இருவருக்குமான பேச்சுவார்த்தையில் விவாதம் முற்றி போய் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பிறகு ஏற்படுகிற பிரச்சனைகள் சம்பவங்கள் இவை நாடகத்தை முன்னோக்கி நடத்திச் செல்கிறது. நாடகம் முதலில் ஒரு திரில்லர் பாணியில் துவங்கி பிறகு இயல்பான குடும்ப வாழ்க்கை பின்னணிக்கு செல்வது வித்தியாசமான கள அமைப்பு.

இந்த நாடகத்தில்- விருப்பமில்லாத ஜோடிகளுக்குள் நிகழ நேர்கிற திருமணங்கள், காதல் ஜோடி மாற்றங்கள், மாமனார், மாமியார்,மருமகள் ,மருமகன் உறவுகள் இவை யாவும் சிக்கல்கள் இல்லாமல் ஆனால் சுவாரஸ்யமாக பின்னப்பட்டிருப்பது நாடகத்தின் பலம். நாடகத்தில் நடித்த அத்தனை பேரும் தங்களின் பாத்திரம் உணர்ந்து நடித்திருந்தார்கள். அதிலும் எல்லா பாத்திரங்களுக்கும் கிட்டத்தட்ட சம பங்கு என பங்களிப்பு  இருந்தது கதை வசனகர்த்தா இயக்குனர் இவரின் திறமையை பறைசாற்றுகிறது. நாடகத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த ஆனந்த், வெங்கடேசனின் அப்பாவாக நடித்த வி. பி. எஸ் .ஸ்ரீ ராமன், பங்கஜத்தின் அண்ணனாக நடித்த எஸ் கௌரி சங்கர், பங்கஜம் ஆகியோர் தங்களின் சிறப்பான நடிப்புப் பங்களிப்பை அளித்திருந்தார்கள்.

நாடகம் நல்ல முடிவை நோக்கி நகர்ந்ததும், மனிதர்களின் உளசிக்கல்களை எளிமையான வசனங்களில் புரிய வைத்திருந்தமையும் பாராட்டத்தக்கவை.

 

2. மழையில் ஓர் இரவு”

 

கோடை நாடக விழாவின் எட்டாம் நாள் நாடகமாக 29 4 2026 அன்று தியேட்டரிக்ஸ் ஸ்டேஜ் கிராஃப்ட் அரங்கேற்றிய “மழையில் ஓர் இரவு”  நாடகமாகும். இந்த நாடகத்தின் கதை, வசனம் எஸ். கெளரி சங்கர் தயாரிப்பு மற்றும் இயக்கம் எஸ். ஆனந்த்.

இந்த நாடகம் சமகால சமூக குடும்ப வாழ்க்கை நாடகமாக துவங்கினாலும் போகப் போக ஒரு த்ரில்லர் பாணி வடிவம் எடுத்து சஸ்பென்ஸ், கதாபாத்திர வில்லத்தனங்கள், காதல், மோதல், இவை பற்றி ஒரு பரந்து பட்ட பார்வையை வைத்து த்ரில்லர் வகை நாடகமாக பரிமளித்தது.

நாடகத்தின்  முதல் காட்சியில் ஒரு வீட்டில்  மழைக்கு ஒதுங்க நேர்கிற, இன்னும் திருமணம் செய்து கொள்ளாத காதல் ஜோடி ஒன்று(அனுபமா/அபிநவ்) அங்கே ஒரு எழுத்தாளரை சந்திக்கிறது. அனுபமா அபினவ் இவர்கள் சந்திக்கும் அந்த எழுத்தாளர் அக்னி எனும் புனைப்பெயரில் எழுதும் அமரநாதன். அமரநாதன் தான் தான் அந்த எழுத்தாளர் அக்னி என்று அறிவிக்கும் போது அவர் எழுத்தை தீவிரமாக ரசித்து வாசிக்கும் அனுபமா அவரை கண்டு  அப்படியே பிரமித்து போகிறாள். அவரின் குடும்ப வாழ்க்கை குறித்து அபினவ்,அனுபமா இருவரும் அமரநாதனிடம் விசாரிக்க தன் மனைவி இறந்து போய்விட்டதாகவும் அதற்குப் பிறகு அவர் பல ஆண்டுகளாக கதைகள் எழுதுவதில்லை என்றும் கூறுகிறார் அக்னி. அவரை மறுபடியும் இலக்கிய உலகில் கதை எழுத செய்யும்படி செய்ய அனுபமா முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் எழுத்தாளர் அமரநாதன் மீது பரிவு  கொள்கிற அனுபமா  அவரின் மனைவி பற்றி விசாரிக்கிறார்.

அப்பொழுது தன் மனைவி அவள் கிராமத்தில் ஒரு தீ விபத்தில் இறந்து போய்விட்டாள் என்கிற தன்னுடைய ஃபிளாஷ்பாக் கதையை சொல்கிறார் அவர்.  ஆனால் வீட்டில் பணிபுரியும் முத்து என்கிற பணியாள் அமரநாதன் மனைவி அகல்யாவிற்கும் தேவராஜன் என்பவருக்கும் இருந்த காதலைப் பற்றி குறிப்பிடுகிறார். அவரிடம் இருந்து மேற்கொண்டு தகவல் அறிந்து கொள்ளும் அபிநயா அகல்யாவை தேடி அவர் அவர் வாழ்ந்திருந்ததாக சொல்லப்படும் கிராமத்தில் விசாரிக்கிறார். அங்கே லட்சுமி என்ற பெண்மணி மூலம் அந்த விபத்தில் இறந்து போனது அகல்யா அல்ல அவள் அம்மா என்பது தெரிய வருகிறது. அந்த விபத்துக்கு பிறகு அகல்யா கிராமத்தை காலி செய்து விட்டு திருவண்ணாமலை அருகில் ஒரு சிற்றூரில் இருப்பதாக சொல்கிறார்  லட்சுமி. அந்த சிற்றூருக்கு தன் காதலன் அபினவுடன் செல்லும் அனுபமா அங்கே ஆச்சரியமாக அகல்யாவை சந்தித்து விடுகிறார். அந்த  அகல்யாவிடம் மனது விட்டு  பேசும்போதுதான் எழுத்தாளர் அமரநாதன் என்கிற அக்னி எனும் கலைஞரின் சுயமான கோரமுகம் தெரிய வருகிறது.  இத்தனை நாட்கள் அகல்யா இறந்து விட்டதாக நாடகம் ஆடியதும் பிறகு தேவராஜன் அகல்யா நட்பு மீது சந்தேகப்பட்டு அகல்யாவை துன்புறுத்தியது, கொலை செய்ய முயற்சித்தது, அதில் இருவருமே தப்பித்து வெளியேறியது என்கிற தகவல்கள் தெரிய வருகிறது. உண்மையில் அக்னி என்கிற அமர நாதனின் போலித்தன முகமூடியை கிழித்து அவரின் சுய முகத்தை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்பில் அனுபமாவும் அபினவும் ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். அதன்படி,  இறந்ததாக சொல்லப்படும் அகல்யா தன்முன் உயிருடன் வந்து நிற்பதை பார்த்த அமர்நாதன் அதிர்ச்சி அடைவதும் அவர் மெல்ல மெல்ல தன்னை மழையில் ஓர் இரவு சந்திக்க நேர்ந்த அனுபமா மீது ஒருதலைக் காதல் கொள்வதும் அதற்காக  இப்போது தன் முன் அதற்கு இடையூறாக இருக்கும் அகல்யாவை கொல்ல முயற்சிப்பதும் நடக்கிறது.

இந்த கலவரத்தின்  ஒரு கட்டத்தில் அகல்யா அமர நாதனை ஒரு கைகலப்பில் கொன்று விடுகிறார்.பொது வாழ்க்கையில் அதிலும் இலக்கியம் அரசியல் ஆன்மீகம் இப்படி எல்லா இடத்திலேயும் இந்த மாதிரி போலிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் இந்த அமர நாதனின் முடிவு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்கிற குறியீட்டுத் தகவலுடன் நாடகம் நிறைவடைகிறது எழுத்தாளர் அக்னி என்கிற அமர நாதனாக எஸ் ஆனந்த் நாடகம் முழுவதும் தன் நடிப்பால் ஆக்கிரமிக்கிறார். விஸ்வஜித்தின் இசையும் அரங்க அமைப்பின் ஒளியும்  ஒலியும் நாடகத்திற்கு நல்ல வலு சேர்க்கிறது.

இந்த நாடகம் சமூக நாடகம் போல் தோன்றினாலும் உண்மையில் ஒரு விறுவிறுப்பான திரில்லர் வகை நாடகமாகவே தோன்றுகிறது. நாடகத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக நடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக அகல்யா பாத்திரம் ஏற்று நடித்த நாஞ்சில் ரேவதியின் மிகை ஏதுமில்லா பண்பட்ட நடிப்பு குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய வகை சார்ந்தது

 

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 35 வது கோடை நாடக விழாவில் 27 04 2026 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை  நாரத கான சபாவில் PMG மயூரப்ரியா சார்பில் அரங்கேற்றமாகிய நாடகம் கல்லப்பிராமம்.
இந்த நாடகத்தின் கதை வசனம் இயக்கம்
P முத்துக்குமரன்.

தேசபக்தியும்  தெய்வபக்தியும் நாட்டின் இரு கண்கள் எனப் போற்றப்பட வேண்டும்  எனும் நேர்மறைச் சிந்தனைதனை பிரதானப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்ட நாடகமாகும் இது.

சிங்கப்பாறை கிராமத்தின் சிங்கார வேலன் கோவில் பூசாரி சரவணன் (எஸ். ஆனந்த்). அவந்  கிராம மக்கள் உதவியோடு ஊர் கோவிலை சீர் செய்து அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய ஊர் மக்களின் ஒத்துழைப்பை நாடுகிறார். கிராமத்து விவசாயியான ஆறுமுகம்(பரத்) தன்னுடைய வயலில் அறுவடை முடிந்தபின் கோவிலுக்கான நன்கொடை பணத்தை தருவதாக கூறுகிறார். அந்த கிராமத்திலிருந்து பட்டாளத்தில் பணிபுரியும் சிங்காரத்தின் மனைவி வீரலட்சுமி அவர்களின் மகன் கௌஷிக்(அஷ்வின்) தங்கள் பங்குக்கு கோவிலுக்கு நன்கொடை தருகிறார்கள்.

சென்னையில் வசிக்கும் விநாயகம்( பி. முத்துக்குமரன்) அவரது வளர்ப்பு மகன் குமரன் (ஆனந்த்)அதே அடுக்ககத்தில் வசிக்கும் அகிலா (அனுசுரேஷ்) அவருடைய அம்மா கண்ணம்மா (ராதிகா ரவீந்திரன்) தன் மகளின் திருமணத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுக் கொள்கிறாள். இந்த சூழலில் விநாயகம் வீட்டிற்கு மேஜர் ஜஸ்வந்த்(சாய் பிரசாத் ஸ்ரீராம்)அலமேலு (லதா ராஜகோபாலன்) ஆகியோர் வந்து தங்குகிறார்கள். அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் இயல்பாகவே தேசப்பற்றும் ராணுவ வீரர்கள் பற்றிய ஆர்வமும் விழிப்புணர்வும்  என்பதாகவே அமைந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் சிங்கப்பாறை கிராமத்தில் இருந்து பட்டாளத்திற்கு சென்ற சிங்காரம்  நாட்டின் பாதுகாப்பு சார்ந்த ராணுவ நடவடிக்கை ஒன்றில் இறந்து விட்டதாக செய்தி வருகிறது. 

இதை கேள்விப்பட்ட ஊர் மக்கள் சிங்கப்பாறை  சிங்காரவேலன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக சேர்க்கப்பட்ட தொகையை ஏக மனதாக வீரலட்சுமிக்கு வழங்கி அவர்களுடைய கனவான வீடு கட்டுவதற்கு உதவுகிறார்கள். இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு மேஜர் ஜஸ்வந்த் சிங் உதவியால் பூரண நலம் பெற்று குலதெய்வம் கோயிலுக்கு வரும் அகிலாவின் அம்மாவும்  அகிலாவும் கூடவே விநாயகம் அவர் மகன் அவருடைய உடன்பிறவா சகோதரி அலமேலுவையும் அழைத்து வருகிறார்கள். சென்னையில் ராணுவத்திலிருந்து எந்த நேரமும் அழைப்பு பணியும் வரலாம் என குலதெய்வம் கோவிலுக்கு வர முடியாத சூழலில் இருக்கும் மேஜர் ஜஸ்வந்த் அவருடைய ராணுவ மேலிடம் சிங்காரத்திற்கு உதவிகள் செய்ய பணித்திருப்பதால் அதே ஊருக்கு வருகிறார். கோவிலில் அனைவரும் சந்தித்துக் கொள்கின்றனர். 

இராணுவத்தில் சேர விரும்பும் வீரலட்சுமி மகனுக்கு அதற்கான உதவிகள் செய்வதாக மேஜர் ஜஸ்வந்த் கூறுகிறார். இதற்கிடையே அகிலாவிற்கும் மேஜர் ஜஸ்வந்திற்கும் திருமண சம்பந்தம் பேசப்படுகிறது. அப்போதுதான் மேஜர் ஜெஸ்வந்த் ஒரு இராணுவ நடவடிக்கையில் தன்னுடைய காலை இழந்திருப்பது மற்றவர்களுக்கு தெரிய வருகிறது. அதற்குப்பின்  ஏற்படும் திருமணம் குறித்த தயக்கங்கள் வலுக்க, அகிலா தானாகவே முன்வந்து இது தனக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதாகவும் அது தெரிந்தே தான் திருமணத்திற்கு சம்மதிப்பதாகவும் கூறுகிறார். இந்த இடத்தில் ராணுவ வீரருக்கு கௌரவம் கொடுத்து எல்லைச்சாமிக்கு ஜாதி மதம் இனம் ஊனம் எதுவும் கிடையாது என்று கூறும் அகிலாவின் வாதமும் வசனமும் பலத்த கைதட்டல்களைப் பெற்றது.

நாடகம் அங்கங்கே நகைச்சுவை வசனங்களால் சிரிப்பு ஊட்ட தவறவில்லை. ஆனாலும்  அவற்றை எல்லாம் தாண்டி ராணுவ வீரர்கள் பற்றிய பல அரிய தகவல்கள் பார்வையாளர்களுக்கு புதியதாகவும் அதே நேரம் வியக்க வைப்பதாகவும் இருந்தது பாராட்டுக்குரியது. 

அகிலாவின் வார்த்தைகளில் நம் தேச கொடியின் கயிறு வீரலட்சுமி போன்றோரின் தாலிகளிலிருந்து கட்டப்பட்டிருக்கிறது, கொடியிலிருந்து உதிரும் பூக்கள் ராணுவ வீரர்களின் மனைவிகள் சூடிய மலர்கள் என்றும் கொடி காற்றில் படபடக்கும் போது அந்த காற்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து இறந்து போன ராணுவ வீரர்களின் மூச்சுக்காற்று என்பது  போன்ற மிக பலம் வாய்ந்த வசனங்களிப்பு இந்த நாடகத்தை தேச பக்தி ஊட்டும் அளவிற்கு சிறப்பான வசனங்களை இயல்பாக எழுதியுள்ள பி. முத்துக்கிருஷ்ணன் பாராட்டுக்குரியவர்.

நாடகத்தில் நடித்த அத்தனை பேரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களை சிறு மேற்கொண்டு சிறப்பாக பங்களித்தனர். அனைவருமே தெளிவான உச்சரிப்பில் நல்ல குரல் வளத்தில் பேசியது கூடுதல் சிறப்பு. ராணுவ வீரர்களின் வரலாறு, தேசத்தின் பெருமை, தேசபக்தியின் அவசியம் இவற்றையெல்லாம் முன்னெடுத்து சொல்லப்பட்ட இந்த கல்லபிராமம் நாடகம் அழகு மிக அழகு– நாடக போக்கில் பூசாரி சொல்வது போல் வந்த ஔவையார் சொன்னது போல.

(மற்ற நாடகங்கள் அடுத்த இதழில் ..)