ரசிகாஸ் கலை பண்பாட்டு அமைப்பின் சார்பில் முனைவர் தென்காசி கணேசன் அவர்கள் எழுதிய ஐந்து நூல்கள் ஏப்ரல் 20ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூர்புரத்தில், பத்மபூஷன் திரு நல்லி செட்டியார் அவர்களால் வெளிடப்பட்டது.
சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் டாக்டர் பஞ்சாபகேசன் தலைமை ஏற்க, அரங்கம் புத்தகப் பிரியர்கள், பல்வேறு ஆளுமைகள் என நிரம்பி வழிந்தது.
கடந்த வருடம் நான்கு புத்தகங்களை வெளியிட்ட முனைவர் தென்காசி கணேசன், இந்த வருடம், ஐந்து நூல்களை, வெவ்வேறு தலைப்புகள் -வெவ்வேறு களங்கள் -வெவ்வேறு தகவல்கள் கொண்ட,
1) புதிய ஆத்திசூடி
2) பாபநாசம் சிவன் முதல் பழனி பாரதி வரை
3) இனி எல்லாம் சுகமே
4) பாட்டொன்று கேட்டேன்
5) பகவத் கீதையில் நிர்வாகவியல்
என்ற தலைப்புகளில் வெளியிட்டிருப்பது சிறப்பானது மட்டுமல்ல, அரிதானதும் கூட..
இசைக்கவி ரமணன், வேதா கோபாலன், சப்தரிஷி லாசரா, மக்கள் குரல் ராம்ஜி மற்றும் ராகவன் இவர்களின் மதிப்புரை, காஞ்சிபுரம் காமாக்ஷியம்மன் கோயில் ஸ்தானிகம் திரு நடராஜ சாஸ்திரி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு டி எஸ் கிருஷ்ணமூர்த்தி, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், பத்மஶ்ரீ சீனி விஸ்வநாதன் அவர்கள் புதல்வி ஶ்ரீமதி ராஜா, விவேகானந்தா பள்ளி நிறுவனங்களின் இணைச் செயலர் ஶ்ரீராம், கண்ணதாசன் கழகம் காவிரி மைந்தன், பேனாக்கள் பேரவை திரு மோகன்தாஸ், உரத்த சிந்தனை திரு பத்மினி, உதயம்ராம் இவர்களின் வாழ்த்துரை என விழா களைகட்டியது.
பதிப்பகம் சார்பில் திரு வானதி ராமநாதன், தாமரை மீடியா திரு ரவி, குவிகம் ராமநாதன் உரையாற்ற, மலர்வனம் ராம்கி, பேனாக்கள் பேரவை, உரத்த சிந்தனை, குவிகம் , நடிகர் திலகம் ரசிகர்கள் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் உட்பட நட்பும் உறவும் வந்திருந்தார்கள். தீபன் ராதாகிருஷ்ணன் அவர்கள், நிகழ்ச்சியை மிக அழகாக தொகுத்து வழங்கினார்.
முனைவர் தென்காசி கணேசன் அவர்கள் ஏற்புரையில் புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா மற்றும் வீடியோ திரு வெங்கடேசன், உணவு வழங்கிய அப்பு, அரங்கத்தை வழங்கிய நூலக அதிகாரி சதீஷ் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். செவிக்கு உணவு முடிந்தபின், சாய் சங்கரா ஏற்பாடு செய்திருந்த சுவையான சிற்றுண்டி, அனைவரின் வயிற்றுக்கு உணவானது.
வந்திருந்த கூட்டம் மட்டுமல்ல, புத்தகங்களும் அன்று அதிக அளவில் வாங்கப்பட்டன என்பது மனதிற்கு இதமான செய்தி.
மின்சார விளக்குகளால் எவ்வளவு ஒளியூட்டப்பட்டாலும் புத்தகங்கள் இல்லாத வீடு இருள் படிந்த வீடே… வாசிப்போம்…நிறைய..

