‘ஒரு புதிய நண்பன்’

ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு துணை ஆசிரியர் அந்த வார இதழுக்குப் பொறுப்பேற்பார் என்பது உங்களுக்குத் தெரியும். மூன்று வாரத்துக்கு ஒரு முறை ரொட்டேஷனில் ரா கி ர, ஜ ராசு, புனிதன் என்று ரோல் ஆகி வரும்.
திங்கட்கிழமை எடிட்டோரியல் மீட்டிங்குக்கு,நிறைய ஐடியாக்களை எழுதிக்கொண்டு போவார் என் கணவர் திரு கோபாலன். சப் எடிட்டர்களும் தங்கள் பங்குக்கு ஒரு ஐடியா லிஸ்ட் வைத்திருப்பார்கள். எடிட்டோரில் மீட்டிங்கின்போது ஐடியாக்களைச் சொல்லி எடிட்டரிடம் ஓகே வாங்க வேண்டும். அவர் ஒப்புதல் அளித்த ஐடியாக்களைவிடவும் உதட்டைப் பிதுக்க வைத்தவையே அதிகம்.
அந்தக் குறிப்பிட்ட வாரம் சப் எடிட்டர் புனிதன் ஐடியாக்கள் கேட்டிருந்தார்கள்.
நாங்கள் அதற்கு முன்தினம் ஒரு திருமண ரிசப்ஷனுக்குப் போயிருந்தோம். டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது எதிரில் உட்கார்ந்து டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்த டிப் டாப் ஆசாமியிடம் யாரோ ஏதோ விசாரிக்க அவர் மழுப்பலாக ஏதோ பதில் சொன்னார். உடனே எங்கள் கற்பனை விரிய, நானும் என் கணவரும் ரகசியக் குரலில் ஜோக் அடித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு வேளை, விருந்து சாப்பிட ஆசைப்பட்டு, தெரியாத கல்யாணத்தில் நுழைந்துவிட்டாரோ?
அப்போது தோன்றிய ஐடியாவை மறுநாள் இவர் புனிதனுக்கு எழுதிக் கொடுத்தார்.
அதாவது யாரென்றே தெரியாதவர்கள் வீட்டுக் கல்யாணத்துக்குப் போக வேண்டியது. சாப்பிட வேண்டியது. மாட்டிக்கொள்ளாமல் திரும்ப வர வேண்டியது. மாட்டிக்கொண்டால் குமுதம் அசைன்மென்ட் என்று சொல்லலாம்தான். ஆனால் எந்தக் காலத்திலும் குமுதம் அத்தாட்சியாகக் கடிதமோ, ஐ டி கார்டோ கொடுக்கும் வழக்கமே கிடையாது.
ஐடியா ஓகே ஆகிவிட்டது. டிப் டாப்பாக ஒரு நபரை ஏற்பாடு செய்துவிட்டார்கள். (அசைன்மென்ட்களின்போது தெரிந்தவர்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது குமுதத்தின் கொள்கை.)
சாப்பிட்டுவிட்டு மொய் கவர் கொடுத்துவிடுங்கள் என்றார் புனிதன். அதற்கொரு தொகையும் அலாட் செய்து கொடுத்துவிட்டார்.
பாமாஜியும் அந்த நபரும் சென்றார்கள். முதலில் மொய் கவரைக் கொடுத்து மண மக்களை வாழ்த்திவிட்டுச் சாப்பிடப் போனார்கள்.
சாப்பிட்டுவிட்டு வரும்போது மாப்பிள்ளைப் பையன் இவர்களைக் கையசைத்து அழைத்திருக்கிறான். சற்று வெலவெலத்துவிட்டார் உடன் வந்த நண்பர். அருகில் போனபோது பின்னால் மொய் கவரை மாப்பிள்ளை கையிலிருந்து வாங்கி வைத்துக்கொண்டே இருந்த நபரிடம் “வந்திருக்காங்க கேளுங்க” என்றார்.
“சார் மொய் கவர்ல ‘ஒரு புதிய நண்பன்’ னு போட்டிருக்கீங்களே? மாப்பிள்ளையைக் கேட்டால் உங்களை யாருன்னு தெரியலைன்றார்..” என்றார் மொய்கவர் கலெக்டர். மெதுவான குரலில் கேட்டாலு அழுத்தமான குரல்.
உண்மையைச் சொல்ல வேண்டி வந்துவிட்டது. நம் டிப் டாப் நண்பர் மெல்லிய குரலில் உண்மையைச் சொல்ல.. “அடடே..குமுதமா சந்தோஷங்க. சாப்பிட்டீங்களா?” என்று விசாரிக்க “அதுக்காகத்தானே வந்தோம்” என்று தன் இயல்புப்படி என் கணவர் ஜோக் அடித்தாராம்.
நல்ல வேளையாக நம்பினார்கள். பிற்பாடு பிரசுரமானபோது சந்தோஷப்பட்டுக் குமுதம் ஆபீசுக்கு போன் செய்து நன்றியும் சொன்னார்கள்.
கட்டுரைக்கு நிறையப் பாராட்டுக் கடிதங்கள் வந்தாலும் குமுதத்துக்கே உரித்தான முறையில் “தர்ம அடி வாங்காமல் தப்பிச்சீரே.. உங்களுக்குன்னு தோணுது பாருங்க ஐடியா” என்று சலிப்பான குரலில் பாராட்டிய கடிதத்தைத்தான் பிரசுரித்தார்கள்.
அவ்வப்போது ஏதாவது புதுமைகள் செய்வதே குமுதத்தின் வெற்றிக்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
குமுதத்திற்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது.
குமுதத்தில் ஒருபோன் நம்பர் பிரசுரிப்பார்கள். ‘இந்த நம்பருக்குப் பேசுங்கள். இன்ன பிரபலம் உங்களுடன் பேசுவார்‘ என்று அறிவிப்பார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அந்த நம்பரில் அவர்கள் பேச முடியும்.
இந்த சுவாரஸ்யமான பகுதி சில வாரங்களுக்குத் தொடர்ந்தது (வாரம் ஒரு பிரபலம்)
ஒரு சமயம் நடிகை லட்சுமி பேசுவார் என்று ஒரு நம்பர் அறிவித்தார்கள். ஆனால் அந்தோ.. கம்போஸிங் தவறு காரணமாக போன் நம்பரில் ஒரு டிஜிட் மாறிவிட்டது. (கம்போஸ் செய்தவர்.. முதல் இரண்டாவது புரூஃப் பார்த்தவர்கள் என்று அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டது அந்த போன் நம்பர்.) இதழ் வெளியாகுமுன்பே தவறைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் அனைத்து (பல லட்சம்) இதழ்களும் அச்சாகிவிட்டன.
பொதுவாக இது போல் ஏதாவது இக்கட்டு நேர்ந்தால் சமயோசிதமாக, சாமர்த்தியமாக எப்படிச் சமாளிக்கலாம் என்றுதான் பார்ப்பார்கள்.
இதற்கு என்ன தீர்வு என்ற ஆலோசித்தார் குமுதம் எடிட்டர். அவருக்கு ஓர் ஐடியா தோன்றிவிட்டது.
அதன்படி நடிகை லட்சுமிக்கு போன் செய்து சம்மதம் பெற்றனர். “அதனால் என்ன? நான் ரெடி..” என்று பெருந்தன்மையுடன் சம்மதித்தார் லட்சுமி.
எந்த நம்பர் பிரசுரமானதோ அந்த நம்பருக்குக் குமுதம் ஆபீசிலிருந்து போன் பறந்தது.
“தவறுதலாய் உங்கள் நம்பர் குமுத்தில் அச்சாகிவிட்டது. குறிப்பிட்ட ஒரு மணி நேரம் (என்றுதான் நினைவு) நடிகை லட்சுமி உங்கள் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து உங்கள் போனில் பேசுவது பற்றி உங்களுக்கு ஆட்சேபணை உண்டா” என்று கேட்க அவர்களுக்கு நம்பமுடியாத மகிழ்ச்சி.
பதற்றம் கலந்த சந்தோ…ஷத்துடன் அவர்கள் “எஸ்” சொல்ல.. நடிகை லட்சுமி போய் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து பேச.. அவர்கள் டீ காபி என்று உபசரிக்க… மொத்த விஷயமும் அடுத்த வாரம் பிரசுரமானது.
சம்பந்தப்பட்ட அந்த நம்பல் போன் இருந்த வீட்டிலிருந்த இளம் பெண்ணின் போட்டோவும் போட்டுவிட்டார்கள். வேறென்ன வேண்டும்!!
“அடடா. அதற்கு பதில் என் நம்பர் வந்திருக்கக்கூடாதா” என்று லட்சுமி ஃபேன்கள் நூற்றுக்கணக்கானோர் ஆதங்கப்பட்டு எழுதிய கடிதங்கள் குமுதம் ஆபிசில் மறுவாரம் குவிந்தன.
பொதுவாகவே பிரபலமானவர்களோ, சாதாரணர்களோ பேட்டி கொடுத்தபிறகு தவறாமல் ஒரு கேள்வி கேட்பார்கள். “இது எந்த இஷ்யூவில் பிரசுரமாகும்?”
நமக்கு ஓரளவு ஐடியா இருக்கும். “அடுத்த வாரம்” என்றோ, “அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம்” என்றோ சொல்வோம். அல்லது குறிப்பிட்ட இதழின் தேதியைச் சொல்வோம்.
ஆனால் அப்படிச் சொன்னதால் பெரிய சங்கடத்துக்கு உள்ளானதும் உண்டு.
குமுத்திற்கு இளைஞர்கள், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் மீது மிகுந்த பிரியம் உண்டு. எனவே வாரா வாரம் ஐடியாக்கள் எழுதித் தரும்போது பெரும்பாலும் கல்லூரி மாணவர்களைச் சம்பந்தப்படுத்துவதாகவே எழுதிக் கொடுப்போம்.
அதன்படி ஒரு வாரம் “மாணவர்கள் சிக்கலை அவிழ்க்கிறார்கள்” என்று தலைப்பிட்டு வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி, கடைசியில் உண்மையாகவே சிக்கல் விழுந்த நூல் கற்றையை அவர்களிடம் கொடுத்து ஐந்து பேரில் யார் அதை விரைந்து முதலில் அவிழ்க்கிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு சின்ன ஃபீச்சர் செய்தோம்.
நூல் கண்டின் சிக்கலை அவிழ்க்கும்போது அவர்கள் டிஸ்கஸ் செய்வதை.. ஜோக் அடித்துக் கொள்வதை அப்படி எழுதினால் அது சுவாரஸ்யமான கட்டுரையாகிவிடுமல்லவா?
ஐடியா ஓகே ஆயிற்று. கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியரிடமும் அவர்களின் பெற்றோரிடமும் சம்மதம் வாங்கியாயிற்று. ஒரு மாணவர் வீட்டிலேயே சந்திப்பை ஏற்பாடு செய்தாயிற்று. பாலிடிக்ஸ், சினிமா, ஜோக்ஸ், கல்லூரி சம்பவங்கள் என்று அவர்களின் உரையாடல் மிகவும் கலகலப்பாகப் போயிற்று. ஒரு மாணவன் முதலில் சிக்கலை வெற்றிகரமாக அவிழ்த்து, நூலை அழகாக ரோல் செய்து கொடுக்கவும் நல்லதோர் கட்டுரைக்கான விஷயங்கள் கிடைத்தன. புகைப்பட நிபுணர் கோணம் கோணமாக போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டார்.
மாணவ மாணவியர் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள். “இது எந்த இஷ்யூவில் பிரசுரமாகும்?”
அந்த முறை இளைஞர் சிறப்பிதழ் என்று உறுதியாகத் தெரிந்ததால் தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டார் தைரியமாக.
துரதிருஷ்டவசமாக அந்த வாரம் திரு எம் ஜி ஆர் காலமாகிவிட்டார். மாணவ மாணவியர் குமுதம் இதழை வாங்கிப் பார்க்க, அவர்களின் கட்டுரை பிரசுரமாகவில்லை. “என்ன சார். நான் அக்கம் பக்கம் மட்டுமின்றி எங்கள் கல்லூரியிலும் செய்தியைப் பரப்பிட்டோம். ஆனால் இந்த இஷ்யூல எங்க சந்திப்புக்கட்டுரை பப்ளிஷ் ஆகலையே?” என்று மெல்லிய கண்ணீருடன் எங்கள் வீட்டுக்கே வந்து மாணவிகள் கேட்டுவிட்டார்கள்.
எம் ஜி ஆர் பற்றிய செய்திகள் இவர்களின் பேட்டியை இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தது. உண்மையில் எங்களுக்கே அது அதிர்ச்சி பிளஸ் ஏமாற்றம்தான். எனினும் எம் ஜி ஆர் பற்றிய தகவல்கள் அதிமுக்கியமல்லவா?
மறுநாள் அதே இரண்டு மாணவர்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். “சார் சார்.. எங்கள் கட்டுரை பிரசுரமாகியிருக்கு..”
இதென்ன புதிர்? நாங்களும்தானே குமுதம் வாங்கினோம். அலுவலகத்தில் ஒரு பிரதி கொடுத்தார்கள். அவை இரண்டிலும் இல்லையே?
“திருச்சியில் எங்க சித்தி இருக்காங்க. அவங்க போன் செய்தாங்க. அவங்க வாங்கின இஷ்யூவில் பிரசுரமாகியுருக்கு..என் போட்டோவையும் பேட்டியையும் பார்த்துட்டுப் பாராட்டினாங்க.”
(அப்போதெல்லாம் மொபைல் இல்லை. போட்டோ எடுத்து அனுப்பவில்லை.)
ரா கி ர அவர்களுக்கு போன் செய்தபோது “ஆமாம். வெளியூர் பண்டில்களை அனுப்பியபிறகுதான் எம் ஜி ஆர் செய்தி வந்தது. சென்னை பதிப்பில் மட்டும் அந்தப் பக்கங்களை உருவி எடுத்துட்டு எம் ஜி ஆரின் ஒரு பக்க போட்டோவும் செய்தியும் போட்டோம்” என்றார்.
அடுத்த வாரம் சென்னை பதிப்பில் மாணவ மாணவிகள் பற்றிய ‘சிக்கல்‘ கட்டுரையும் வெளியூர்ப் பதிப்பில் எம் ஜி ஆர் பற்றிய கட்டுரையும் இடம் பெற்றன.
அது முதல் யாருக்கும் நாங்கள் எந்தத் தேதியில் பிரசுரமாகும் என்று சொல்லி மாட்டிக்கொள்வதே இல்லை. விளம்பரங்கள் வந்துவிட்டால் அவற்றிற்குத்தான் முதலிடம். வருமானமாயிற்றே.
இன்னும் வரும்…
