Remembering Sri Aurobindo (1872-1950) – Hindu Perspective

சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர்,கல்வியாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆன்மிக ஞானி எனப் பன்முகத் தன்மைகளுடன் பரிமளித்தவர் மகான் ஸ்ரீ அரவிந்தர். சுதந்திரப் போராட்ட வீரராகப் பல்வேறு வீர தீரச் செயல்களுடன்  தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மக்களிடையே ஆன்மிக எழுச்சியையும்  உருவாக்கியவர் ஆவார்.

இவர்  கொல்கத்தா நகரில் 1872, ஆகஸ்ட் மாதம் 15 – ம் நாள் கிருஷ்ண தனகோஷ் – ஸ்வர்ணலதா தேவி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.  பெற்றோர்களால் அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று பெயரிடப்பட்ட அவர்தான், பிற்காலத்தில் ஆன்மீக உலகத்தால் ’அரவிந்தர்’ என அழைக்கப்பட்டார். `அரவிந்தம்’ என்றால் `அன்றலர்ந்த தாமரை’ என்று பொருள். இதனால்தான், அவருடைய முகத்தில் எப்போதும்  புன்னகை தவழ்ந்து வந்தது.

அரவிந்தர் தனது தொடக்கக் கல்வியை டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ கான்வென்டில் பெற்றார். பிறகு, 1879 -ம் ஆண்டு தனது சகோதரர்களுடன் இங்கிலாந்துக்குச் சென்றார்.அங்கு லண்டன்- கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் `இந்திய ஆட்சிப் பணி’ படிப்பில் சேர்ந்தார்.  அவரது தந்தைக்கு அரவிந்தர் இந்திய அரசுத் துறையில் உயர்பதவியில் பணியாற்ற வேண்டும் என்னும் ஆசை இருந்தது. அதன் காரணமாகத்தான்  அவரை லண்டனுக்கு அனுப்பி அவர் படிக்க வைத்தார். ஆனால், கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படித்த காலத்திலேயே அவருடைய மனதில் இந்தியச் சுதந்திரத்தைப் பற்றிய புரட்சிகரமான சிந்தனைகள்  தோன்றின.

அரவிந்தர் 1893 – ம் ஆண்டு லண்டனிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பினார்.அப்போதுதான், விவேகானந்தர்      பாரதத்தின்  ஆன்மிகச் சிறப்பை மேலை நாடுகளில் பரப்புவதற்காக சிகாகோவுக்கு தனது  பயணத்தைத்  தொடங்கினார். இதே வருடத்தில்தான் மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணமும், இந்தியாவை நோக்கி அரவிந்தரின் பயணமும் அமைந்தன.

இந்தியாவிற்கு திரும்பிய  அரவிந்தர் பரோடா சமஸ்தானத்தில் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில்,1905 – ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேயே  வைசிராய் கர்சன் பிரபு இந்தியாவில் வங்கப் பிரிவினையை கொண்டு வந்தார். இந்நிகழ்வுக்கு எதிராக 1906ல் இந்தியாவில் மிகப்பெரிய  கலவரங்கள் வெடித்தன. அப்போது அரவிந்தர் கொல்கத்தா வங்காள தேசியக் கல்லுரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். ஆனால்,காலம் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலக்கச் செய்தது.

கர்சன் பிரபுவின் இந்தப் பிரிவினைக் கொள்கைதான் அரவிந்தர் `வந்தே மாதரம்’ இதழில் ஆங்கிலேய அரசுக்கும், வங்கப் பிரிவினைக்கும் எதிராக இந்திய விடுதலையைத் தூண்டும் பல்வேறு கட்டுரைகளை எழுதச்செய்தது.தன் கட்டுரைகள் மூலம்  மக்களிடையே அவரால் நாட்டு மக்களிடையே நாட்டு  விடுதலைப் பற்றிய விழுப்புணர்ச்சியை   ஏற்படுத்த முடிந்தது. தொடர்ந்து இது சார்ந்து பல போராட்டங்களையும்  இவர் நடத்தினார். இதன் காரணமாக, அரவிந்தர் 1907 மற்றும் 1908 – ம் ஆண்டுகளில் 2 முறை சிறைக்கு அனுப்பப்பட்டார்.இந்நிலையில், இந்தியஇளைஞர்களுக்குச் சுதந்திரப் போராட்டத்துக்கான ஒரு மாபெரும் ஊக்க சக்தியாகவும் அவர் விளங்கினார்.  ஆனால், அவர்மீது  குற்றம் நிரூபிக்கப்படாததால், 1909 -ம் ஆண்டு அவர் சிறையிலிருந்து  விடுவிக்கப்பட்டார் .

பிறகு அரசியலிலிருந்து முழுவதுமாக  விலகிய அரவிந்தர் ஆன்மீக, யோக நெறிகளில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். சிறையில் இருந்த காலத்தில் அவர் படித்த நூல்கள், உபதேசங்கள், கீதை ஆகியவை அவரை ஆன்மீகத்தை நோக்கி மேலும் ஈர்த்தன. தீவிர கிருஷ்ண பக்தராக மாறிய இவர் தான் பார்ப்பதில் எல்லாம்  கிருஷ்ணரையே பார்த்தார்.

இவரின், ’வ(ப)ந்தே மாதரம்’ (1906-1908) பத்திரிக்கை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, முழுமையான சுதந்திரம் கோரும் தீவிரப் போக்குடைய பத்திரிகையாக  விளங்கியது. ’கர்மயோகின்’ 1909

இல் அரவிந்தரால் தொடங்கப்பட்ட ஆங்கில வார இதழாகும். ’தர்ம’1909இல்    தமிழில் வெளிவந்த இவரின் ஓர் அற்புதமான  இதழாகும். மேலும், இவர் இந்தோ பிரகாஷ் (Indu Prakash) பத்திரிகையில், “Old Lamps for New” (பழைய விளக்குகளுக்குப் புதிய திரிகள்) என்ற தொடரை மராத்தி-ஆங்கில இதழில் எழுதினார்.இவைகள் இவரின் ஆன்மீகக் கருத்துகளை மக்களுக்கு கொண்டுசெல்ல மிகவும் உதவியாக இருந்தன. 1906மற்றும் 1910 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலம் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை ஆன்மீக உணர்வுகள் நிறைந்த காலமாக இருந்தது.

ஆங்கிலேயர்களால் அலிபூர் குண்டு வழக்கில், அவர் அலிப்பூர் சிறையில் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்  ’கர்மயோகின்’ பத்திரிக்கைக் கட்டுரை ஒன்றின் தொடர்பாக தேசத்துரோக வழக்கு சிக்கலுக்கும் இவர் உள்ளானார்.இவைகள் அவர் 1910 இல்  பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விட்டு வெளியேற வழிவகுத்தன.

பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்துவதற்கு ஆன்மீக விடுதலை ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்தஅவர் முற்றிலும் ஆன்மிக நெறியால் ஆட்கொள்ளப்பட்டார்.எனினும், அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது. 1910 -ம் ஆண்டில், `ஷாம்சுல் ஆலம்’ கொலை வழக்கில் அரவிந்தர் மீது  ஆங்கில அரசு குற்றம் சாட்டியது. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்னும் நிலை ஏற்பட்டது. அதனால் மாறுவேடமிட்டு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு விரைந்தார் அரவிந்தர்.ஆங்கிலேய அரசுக்கு எதிரான கொந்தளிப்பிலிருந்து முற்றாக விலகிக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு அப்போது கிடைத்தது.அதைத் தொடர்ந்து, யோக நெறியில் தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தத் தொடங்கினார். தன்னைஆன்மீகத்தில் முழுமையாக பக்குவப்படுத்திக் கொண்டார் அரவிந்தர்.

1926 ம் ஆண்டு  புதுச்சேரியில் ஆசிரமம் ஒன்றை நிறுவி,அங்கு தியானத்திலும் யோகத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். ஆன்மீகத்தை மக்களிடையே மேலும் பலருக்குப் பரப்பும் முயற்சியில் தீவிரம் காட்டினார்.இந்நிலையில்தான் அவருக்கு பாரதியுடன் நட்பு ஏற்பட்டது. இந்தக் காலத்தில் அவருக்கு கிடைத்த ஸ்ரீ அன்னையின் தொடர்பு ,அரவிந்தரின்ஆன்மீக சாதனைகளுக்கு உரம் சேர்த்தது. இங்குதான் அரவிந்தர் பல ஆண்டுகள்  தொடர்ந்து எழுதிய `சாவித்ரி காவியம்’ 1950 – ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது.

`ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயலாகும்’ என்று கருணை உள்ளத்தோடு ஆன்மீகத்தைப் பரப்பிய மகான் ஸ்ரீ அரவிந்தர் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் முக்தியடைந்தார். ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மகா யோகியாகவும், ஞானியாகவும், மகானாகவும் வாழ்ந்தவர் ஸ்ரீ அரவிந்தர்.இவரின் வாழ்க்கை இக்கால இளைஞர்களுக்கு சொல்லும் செய்திகள் ஏராளமாகும்.அவரது கருத்துக்களை தற்காலத் தலைமுறையினர்களிடையே  கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடப்பாடாகும்.