சுக்கா வறுவல் – எஸ் சுந்தரராஜன்
தோழர் பாண்டியன் தனது கட்சி அலுவலகத்தில் அவருடைய அறையில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே மற்ற மாவட்டங்களிலிருந்து சிறப்பு உறுப்பினர்கள் எட்டு பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டிய முக்கியக் கருத்து பற்றி அவர்களுக்குள் காரசாரமான உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது வலுத்து விவாதமாகி, ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாட ஆரம்பித்தனர். பாண்டியன் ஒன்றும் பேசாமல் சில நிமிடங்கள் அவர்களை விருப்பம்போல் பேச விட்டார்.
மனிதர்கள் தர்க்கம் என்று வந்துவிட்டால் தங்கள் நிலைப்பாடுதான் சரி என்று கூறுவதைவிட மற்றவரின் கருத்து தவறானது என்பதை நிரூபிக்கவே முயல்கிறார்கள். அந்த எண்ணம் நினைவுக்கு வந்ததும் பாண்டியன் முகத்தில் அந்த கலவரச் சூழ்நிலையிலும் சிறு புன்னகை உதித்தது. விவாதம் பெரிதாகப் பெரிதாக, பேசும் மனிதர்களின் குரலும் உயர்ந்து கொண்டே வந்தது. இந்த விவாதத்தை அடக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அவர்களின் குரலைவிட பலத்த குரலில் கத்திப் பேசவேண்டும். இல்லையென்றால் ஒன்றும் பேசாமல் ஒவ்வொருவரையும் குறிப்பாக அவர்களின் கண்களை நேருக்கு நேர் கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த இரண்டும் நன்றாகவே வேலை செய்யும் தலைமை ரகசியம் என்பதைப் பாண்டியன் அறிவார். இப்போது இரண்டாவது வழியைக் கையாண்டார்.
பேசிக்கொண்டிருந்த எட்டு பேரையும் தனது கூர்மையான பார்வையால் நேருக்கு நேர் பார்த்துவிட்டு தனக்கு எதிரே இருந்த தோழர் ஜீவாவின் படத்தைப் பார்த்தார்.
அறையில் நடைபெற்ற விவாதம் சட்டென்று நின்றது. தலைவர் நம்மைக் கூர்ந்து கவனிக்கிறார் என்ற எண்ணமும் நம் விவாதத்தைக் குறித்து அவர் தனது எண்ணத்தைத் தெரிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அவர்கள் அனைவரிடமும் இருந்தது. நம்மில் யாருடைய நிலைப்பாட்டை அவர் ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்ற பய உணர்ச்சியும் அவர்களின் வாய்களை கட்டிப்போட்டு, கண்களைத் தாழ்த்தி அமரச் செய்தன.
“உங்களிடம் இரு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஒரு குழு நாம் இதை இப்பொழுதே செய்ய வேண்டும் என்கிறீர்கள். அடுத்த குழு இதை என்றைக்கும் எப்போதும் செய்யக் கூடாது என்கிறீர்கள். இது கொள்கை ரீதியான பிரச்சனையா? அல்லது ‘நான் பெரியவனா நீ பெரியவனா’ என்று தீர்மானிக்கும் பிரச்சனையா? இதற்கு இப்போது நான் உடனடி தீர்வு சொல்கிறேன். இந்த பிரச்சினையை இன்னும் ஒரு மணி நேரத்துக்கு ஒத்திவைப்போமா? இதைவிட ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு நாம் தயாராக வேண்டும்.” என்றார் பாண்டியன்.
இதைவிட, நாம் தற்போது விவாதித்துக் கொண்டு இருந்ததை விட முக்கியமான நிகழ்வு என்னவாக இருக்குமென்று இரண்டு சாரார்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள். அந்த ஒரு நிமிட மௌனம் பாண்டியனுக்கு போதுமானதாக இருந்தது.
“தோழர்களே அந்த முக்கியமான நிகழ்வு என்ன தெரியுமா? சாப்பாடு! நாம் காலையில் ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டு தொடர்ந்து பலமணி நேரம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது என்னையும் சேர்த்து அனைவருக்கும் பசி முற்றிப் போனதால் சாப்பாட்டில் இல்லாத சூடு நம் பேச்சில் ஒட்டிக் கொண்டு விட்டது.”
அனைவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பு வர ஆரம்பித்தது.
“வாருங்கள் நாம் எல்லோரும் பக்கத்தில் இருக்கும் அய்யாக்கண்ணு கையேந்தி நிலையத்தில் சாப்பிட்டுவிட்டு வருவோம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நாம் சாப்பிடும் அந்த ஒரு மணி நேரத்தில் இந்த பிரச்சினையைப் பற்றி யாரும் எதுவும் பேசக் கூடாது. சம்மதமா? “ என்றார் பாண்டியன்.
அனைவரும் அறையிலிருந்து புறப்படத் தயாராகும் போது வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது “வரலாமா தோழரே” என்ற பெண்ணின் குரல்.
தோழியர் தமிழ்மணி கையில் பெரிய சாப்பாட்டு பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார்.
“மாவட்ட செயலாளருக்கு வணக்கங்கள்” என்று அனைவரும் ஒருமித்துக் கூறினார்கள்.
“என் வணக்கத்தையும் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார் பாண்டியன். தமிழ்மணி கட்சியின் மூத்த உறுப்பினர். பாண்டியனை விட மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர். பாண்டியன் வட்டத்திற்கு பொறுப்பாளர். தமிழ்மணி மாவட்ட பொறுப்பாளர்.
“நான் மாவட்டச் செயலாளராக இப்பொழுது வரவில்லை, நம்ம கிளையின் தலைவர் தோழர் பாண்டியனின் மனைவியாக வந்திருக்கிறேன். நம் தோழர்களுக்கு மீன் வருவலும் சுக்கா வறுவலும் எடுத்து வந்திருக்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இதையும் கடை உணவுடன் சேர்த்துக்கொண்டு உண்ணலாம். இது இந்த ஊர் விருந்தோம்பல்” என்றார் தமிழ்மணி சிரித்துக்கொண்டே.
பாண்டியன் அனைவரையும் அழைத்துக்கொண்டு அடுத்த கட்டத்தில் இருக்கும் உணவு விடுதிக்குச் சென்றார். மற்ற தோழர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தமிழ்மணி தானே சாப்பாடு அடுக்கை எடுத்து வந்ததை ஆச்சரியத்துடன் அனைவரும் பார்த்தார்கள்.
கையேந்தி நிலையத்தில் அய்யாக்கண்ணு இவர்கள் அனைவரையும் வரவேற்றார். காலியாக இருந்த மேஜையை சுத்தம் செய்து உட்காரும்படி கேட்டுக் கொண்டார். “பெயர்தான் கையேந்தி நிலையம் உட்கார்ந்தும் சாப்பிடலாம் தப்பில்லை” என்று அவர் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள்.
தமிழ்மணி, சாப்பாட்டு அடுக்கை அய்யாக்கண்ணுவிடம் கொடுத்துவிட்டு “ இதை இவர்களுக்கு மட்டும் அல்ல, இங்க சாப்பிடும் அனைவருக்கும் கொடுங்கள். நிறைய கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்கும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்” என்றாள்.
இது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. அதனால் அய்யாக்கண்ணுக்கும் பாண்டியனுக்கும் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆனால் வெளியூரிலிருந்து வந்த தோழர்களுக்கு இது மிகவும் வித்தியாசமாக இருந்தது.
ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக தட்டில் சோறு குழம்பு அவற்றுடன் தமிழ்மணி கொண்டு வந்ததையும் வைத்துத்தர அனைவரும் வாங்கிக்கொண்டு மேசையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். பாண்டியனும் தமிழ்மணியும் அருகருகே உட்கார்ந்தார்கள். சாப்பாட்டின் மணம் அந்த இடத்தையே தூக்கி நிறுத்தியது. அதற்கு முக்கியக் காரணம் தமிழ்மணியின் கைப்பக்குவம் என்பதை அனைவரும் உண்ண ஆரம்பித்தபோது உணர்ந்தார்கள்.
பாதி சாப்பிடும் போதுதானா அந்தக் கலவரம் நிகழ வேண்டும்?
வாசலில் போலீஸ் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய காவல் அதிகாரி நேராகத் தமிழ்மணியிடம் வந்து “உங்களைக் கைது செய்கிறோம். போன மாதம் கட்டிடத் தொழிலாளர்களைக் கலவரத்தில் ஈடுபடச்சொல்லித் தூண்டியதற்காக” என்று சொல்லி விலங்கை நீட்டினார்.
தட்டிலேயே கைகழுவிவிட்டு சாப்பாட்டைப் பாதியில் நிறுத்தி , விலங்கை ஏற்றுக்கொள்ளக் கையை நீட்டினாள் தமிழ்மணி. தோழர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திக்பிரமையில் இருந்தனர். பாண்டியனும் மற்ற தோழர்களும் அதை எதிர்த்து அங்கேயே போராட்டம் நடத்த எழுந்தனர். அய்யாக்கண்ணு, இன்ஸ்பெக்டரிடம் அவர்கள் சாப்பிடும் வரை பொறுத்திருந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் காவல் அதிகாரி அதற்குச் செவி சாய்க்கவில்லை.
அப்போது அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் “நீங்கள் அவரைக் கைது செய்ய முடியாது. அவருக்கு முன் ஜாமீன் – ஆன்டிசிபேடரி பெயில் இருக்கிறது” என்று கூறி அதை எடுத்துக் காட்டினார். தான் அவர்கள் வக்கீல் என்பதையும் அதற்கான சான்றிதழையும் எடுத்து நீட்டினார்.
இன்ஸ்பெக்டர்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மேலிடத்து உத்தரவு தீவிரமாக இருந்தது. இன்றைக்கு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆனால் இப்படி இங்கேயே வக்கீல் இருப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
வேறு வழி இல்லாமல் கொண்டு வந்த விலங்கை எடுத்துக்கொண்டு “இன்றைக்கு இல்லாவிட்டாலும் விரைவில் நீங்கள் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு வண்டிக்கு விரைந்தார். அவர் அமர்ந்ததும் ஜீப் விரைந்து சென்றது.
தோழர்களுக்கு மறியல், போராட்டம், கைது, சிறை ஒன்றும் புதியதல்ல. வாழ்க்கையில் அவர்கள் அடிக்கடி சந்திக்கும் நிகழ்வுதான். ஆனால் இன்றைக்கு அவர்கள் அதை எதிர்பார்க்காத காரணத்தால் அவர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
நிகழ்வை, நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தவர் தமிழ்மணிதான். “சோறு போட்ட கைகளுக்கு வளையல் போடுகிறேன் என்று தோழர் பாண்டியன் நேற்று வீட்டில் சொன்னார். இப்படி ஒரு பெரிய வளையலுக்கு ஏற்பாடு செய்திருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை” என்றார்.
“ஆமாம் தோழர் பாரி மட்டும் இங்கு வரவில்லையென்றால் உனக்கு இன்றைக்கு இன்னொரு வளைகாப்பு விழா நடந்திருக்கும்” என்று பாண்டியன் கூற அய்யாக்கண்ணு கையேந்தி நிலையம் குலுங்கக் குலுங்கச் சிரித்தது.
“உட்காருங்கம்மா நல்லாவே சாப்பிடுங்க. உங்களுக்கும் பாரி சாருக்கும் புதுத் தட்டு கொண்டு வருகிறேன்” என்று அய்யாக்கண்ணு உள்ளே சென்றார்.
“பாரி நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று தமிழ்மணி கேள்விக்கு விவரமாகப் பதில் தந்தார் பாரி, வக்கீலாயிற்றே!
“அம்மா நான் போனமாதம் ஆளுங்கட்சிக்கு எதிராக நீங்கள் போராட்டத்தைத் துவங்கியபோதே இதை எதிர்பார்த்தேன். உடனே நீங்கள் ஏற்கனவே கொடுத்திருந்த வக்காலத்தை கோர்ட்டில் தாக்கல் செய்து பெயில் வாங்கிவிட்டேன். இப்போது உங்களை இங்கே கைது செய்யப்போவதாக கோர்ட் நண்பர் எனக்குத் ரகசியத் தகவல் தெரிவித்தார். அதனால்தான் நான் போலீஸ் அறியாமல் அவர்கள் ஜீப்பைத் தொடர்ந்து வந்தேன். இன்ஸ்பெக்டர் ஜீப்பை வாசலில் நிறுத்தி மேலதிகாரரிடம் ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த சைக்கிள் கேப்பில் நான் உள்ளே வந்து அமைதியாக உட்கார்ந்திருந்தேன். நீங்கள் உங்கள் சகாக்களுடன் பேசிக்கொண்ட மும்முரத்தில் என்னைக் கவனிக்கவில்லை. பாண்டியன் சார், தமிழ்மணி அம்மா நான் இப்போ அவசரமாகக் கோர்ட்டுக்கு போக வேண்டும், சட்ட வேலை இருக்கிறது. அய்யாக்கண்ணு கிட்டே சொல்லுங்க. எனக்கு சாப்பாடு வேண்டாம். பிறகு உங்களை சந்திக்கிறேன்” என்று கூறி விடைபெற்றுப் போனார்.
பாண்டியனும் தமிழ்மணியும் மற்ற சகாக்களும் உணவு உண்டுவிட்டு திரும்பவும் பாண்டியன் அறைக்குச் சென்றனர். தமிழ்மணி அம்மையார் பாண்டியன் முதலில் அமர்ந்த தலைமை இருக்கையில் அமர பாண்டியன் மற்றவர்களுடன் அமர்ந்தார்.
“இப்போ நாம் தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்” என்று ஆரம்பித்தார் பாண்டியன்.
அதற்கு முன் மாவட்டச் செயலாளரின் ஆலோசனையைக் கேட்போம் என்று தமிழ்மணியிடம் கேட்க “இது உங்கள் இடம். தலைவரும் மற்ற பொதுக்குழு உறுப்பினர்களும் விவாதித்து தீர்மானிக்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறினார்.
வந்திருந்த உறுப்பினர் அனைவரும் “இப்போது விவாதம் முக்கியமல்ல. உங்கள் முடிவு என்ன என்று சொல்லுங்கள், உங்களுக்குத்தான் இந்தத் தொகுதி நிலவரம் நன்றாகத் தெரியும். நம் தொண்டர்களின் மனப்பாங்கும் புரியும். உங்கள் முடிவைக் கேட்டுவிட்டு எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்.” என்றார்கள்.
“சரி! கேளுங்கள்! சென்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சி நமக்கு கொடுத்தது. நம் தோழர் மாணிக்கம் அமோக வெற்றி பெற்றார். நமது கூட்டணிக் கட்சியும் ஆளுங்கட்சி ஆனது. இப்போது நமது தோழர் மாணிக்கம் திடீரென்று மறைந்ததும் வரப்போகிற இடைத் தேர்தலில் இந்த இடத்தைக் கூட்டணியினர் நமக்குத்தான் தர வேண்டும். அதுதான் நியாயம்.
ஆனால் ஆளும் கூட்டணி தன்னுடைய அமைச்சர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைக்கவேண்டும் என்று நம்மிடம் கேட்கிறார்கள். அந்த அமைச்சர் போன தேர்தலில் நமது தோழர் மாணிக்கத்திடம் தோற்றவர், இப்போது கட்சி மாறி ஆளும் கட்சிக்கு வந்து அமைச்சராயிருக்கிறார். இன்னும் நாலு மாதத்தில் அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயம். இதை விட்டுக் கொடுக்க கூடாது என்று ஒரு குழுவும் இதைக் கொடுத்து அதற்குப் பதிலாக ராஜ்யசபா எம்பி கேட்க வேண்டும் என்று மற்றொரு குழுவும் விவாதித்தது. கட்சித்தலைமை, நமது தீர்மானம் என்ன என்பதைப் பற்றிக் கேட்டுவிட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் உங்களைக் களத்தில் விசாரிக்க அனுப்பியுள்ளது.
இப்போது என் கருத்தைக் கூறுகிறேன். நம் கூட்டணிக் கட்சி, ஆளும் கட்சியான பிறகு செய்யும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு அளவே இல்லை. தொழிலாளர்களுக்கு எதிராக அவர்கள் பல சட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். நம்மால் அதைத் தடுக்க முடியவில்லை. நம் குரலுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. ஒரே வழி, நாம் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதுடன் நமது வேட்பாளரை நிறுத்தி, தனித்து நின்று, வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். இது என் கருத்து. தோழியர் தமிழ்மணி இதனை மேலிடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
பாண்டியன் பேசி முடிந்ததும் அறையில் சில நிமிடம் மௌனம் நிலவியது.
“இந்த முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுகிறோம், சகா! மாநிலச் செயலாலரிடமும் தெரிவித்துவிடுகிறோம். என்று அனைவரும் ஒருமித்துக் கூறினார்கள்.
அதற்கானக் குறிப்பு எழுதி அனைவரும் கையெழுத்திட்டுப் பாண்டியனிடம் கொடுத்தார்கள். அதனை மின்னஞ்சலில் தலைமையகத்திற்கு அனுப்பிவைத்தார்கள்.
சிறப்பு உறுப்பினர்கள் விடைபெற்றுச் சென்றதும் தமிழ்மணியும் பாண்டியனும் தனியே அந்த அறையில் அமர்ந்திருந்தனர்.
“தமிழ்! இந்தத் தீர்மானத்தைப் பற்றி உன் கருத்து என்ன?
“மனைவியாக உங்கள் தீர்ப்பை ஆதரிக்கிறேன். மாவட்டத் தலைவியாக இதை எதிர்க்கிறேன்.””
“புரியவில்லையே?”
“கொள்கை அடிப்படையில் இது நம் தொண்டர்களின் மனக்குமுறல். அதை அப்படியே உங்கள் தீர்ப்பும் கொண்டுவந்திருக்கிறது. அதனால் இதனைத் தொண்டர்களுடன் சேர்ந்து நானும் ஆதரிக்கிறேன்.
“அப்பறம் தலைவியாக ஏன் மாற்றுக்கருத்து?”
“மாற்றுக்கருத்து இல்லை நீங்கள் பொதுக்குழு உறுப்பினர்களை இந்த தீர்மானத்திற்கு முடிவு எடுக்கச் சொல்லி இருக்க வேண்டும். பெரும்பான்மை அங்கத்தினர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே முடிவாக அறிவித்திருக்க வேண்டும். இப்போது இதனை உங்கள் தனிப்பட்ட கருத்தாகத்தான் அனைவரும் பார்ப்பார்கள். இதனால் உங்களுக்கு கட்சியிலும் ஆளுங்கட்சி வட்டாரத்திலும் எதிர்ப்பு அதிகரிக்கும்.” என்றாள் தமிழ்மணி.
“ நீ சொல்வது உண்மைதான் தமிழ். அதற்காக நான் சரியான கருத்தை மூடி மறைத்துக்கொள்ள விரும்பவில்லை. அது என் கருத்து மட்டுமல்ல அடித்தளத்தில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனின் கருத்தும் இதுதான். அதைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும். இன்றைக்கு இதைச் செய்யாவிட்டால் என்னை நானே மன்னிக்க மாட்டேன்.” என்றார் பாண்டியன்.
“அது சரி, நம்மைப் பொறுத்த வரையில் இது முடிந்து போன செய்தி! ஆனால் இது வெடிக்கப் போகிறதா இல்லை அப்படியே அடங்கிப் போகிறதா என்பது நாளை தெரியும். எப்படியானாலும் சமாளித்துக் கொள்ளலாம். இனி நம்ம வீட்டு நிலைமையைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?
“அதற்கு கட்சி அலுவலகம் எதற்கு? வீட்டுக்கு போய் பேசலாம்” என்று பாண்டியன் சொல்ல இருவரும் புறப்பட்டார்கள். சகா ஒருவரின் ஆட்டோ அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
அவர்கள் வீட்டுக்கு சென்றதும் தொலைக் காட்சியை இயக்கினார்கள்.
24 மணி நேரமும் செய்தியைத் தரும் சேனல் அது.
ஒரு பெரிய அதிர்ச்சி அவர்களுக்குக் காத்துக்கொண்டிருந்தது.
மாநிலச் செய்தியில் முதலமைச்சர், இவர்கள் கட்சி மாநிலச் செயலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார் – இடைத் தேர்தலில் தோழர் மாணிக்கம் தொகுதியை தங்கள் அமைச்சருக்கு விட்டுக் கொடுத்ததற்காக! மாநிலச் செயலாளரும் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார்.
இந்தச் செய்தி முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து தொலைக்காட்சியில் வந்துகொண்டிருந்தது!

