‘எஸ் மேம், என்ன வேண்டும்?’
படியை துடைத்துக் கொண்டே கேட்டாள் பார்வதி.
‘இந்த ஆபீஸில் இன்டர்வியூ இருக்கிறது’
‘மேம், இன்று ஞாயிற்றுக்கிழமை, யாரும் வரமாட்டார்களே’
‘இல்லை, இன்று தான் என்னை இன்டர்வியூக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள்’
‘அப்படியா, இதுக்காக ஞாயிற்றுக்கிழமை யார் வருவார்கள்?’
‘என்ன செய்வது, ஐயகோ நான் ரொம்ப தொலைவில் இருந்து வருகிறேன்’
‘ஞாயிற்றுக்கிழமை யாரும் வர மாட்டார்கள்’
‘சரி நான் ஏமாந்து தான் போக வேண்டும், நான் போகிறேன், இன்னொரு நாள் வர முடியுமா என்று தெரியவில்லை’
‘நான் என்னம்மா செய்யட்டும், சரி, நான் படிக்காதவள், எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?’
‘என்ன வேண்டும், பணம் எதாவது தேவையா? என்னிடம் பணம் நிறைய கிடையாது’
‘இல்லம்மா, கடவுள் புண்ணியத்தில் இப்ப எனக்கு வேண்டாம், என் பையன் ஊரில் படித்துக் கொண்டிருக்கிறான், அவனுக்குப் பணம் அனுப்ப வேண்டும், உங்கள் ஃபோனில் ஏதோ சொல்லுவார்களே..’
‘ஓ ஜி பேயா?’
‘ஆம் அனுப்ப முடியுமா?’
‘அதற்கென்ன, எவ்வளவு அனுப்ப வேண்டும்?’
‘5000 ரூபாய், இந்தா’
‘இதில் எவ்வளவு இருக்கிறது என்று சொன்னீர்கள்?’
‘ஐயாயிரம்’
‘ஐயாயிரம் இல்லை’
‘அம்மா நன்றாகப் பாருங்கள், வங்கியில்தான் கொடுத்தார்கள்’
‘இல்லை, நான் சொல்ல வந்தது, இதில் 5௦௦௦ இல்லை, 5500 இருக்கிறது’
‘அப்படியா மேம், நான் படிக்காதவள், எனக்கு எண்ணத் தெரியவில்லை’
‘நான் அனுப்பி விடுகிறேன், இந்தாருங்கள் மீதி பணம்’
‘மேம், என் பையன் பெரிய படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான், அவன் எந்த டிகிரி வாங்குவான் என்று தெரியவில்லை, உங்களது பைலை கொஞ்சம் தர முடியுமா, நான் படிக்காதவள், இருந்தாலும் சும்மா பைலை புரட்டிப் பார்த்துவிட்டு தருகிறேன், ஆசையாக இருக்கிறது’
‘அதற்கென்ன, இந்தாருங்கள்’
‘நீங்கள் பெரிய படிப்பு எல்லாம் படித்த மாதிரி இருக்கிறது, என் பையனும் இதே மாதிரி படிக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுங்கள்’
‘கண்டிப்பாக, அவன் நன்றாகப் படிப்பான், சரி நான் கிளம்புகிறேன்’
‘மேம், இன்னொரு உதவியும் செய்ய முடியுமா?’
‘என்ன செய்ய வேண்டும்?’
‘ஏதோ ஒரு பையன் பணம் வேண்டும் என்று இந்த மூணு பேனாக்களை எனக்கு 100 ரூபாய்க்கு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான், படிக்காத எனக்கு இது எதற்கு, நீங்கள் இந்த பேனாக்களை எடுத்துக் கொண்டு எனக்கு 100 ரூபாய் தர முடியுமா, இதை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்’
‘அப்படியா, கொடுங்கள் பார்க்கலாம், 100 ரூபாய் இல்லை, உங்களுக்கு இந்த நாலு பேனாக்களுக்கு 200 ரூபாய் தருகிறேன்’
‘அப்படியா, உங்களுக்கு எதுக்கு மேடம் நஷ்டம்?’
‘நஷ்டம் ஒன்றும் இல்லை, இந்தப் பணத்தை நான் உங்களுக்குக் கொடுத்துவிட்டு இந்த பேனாக்களை நான் 240 ரூபாய்க்கு விற்று விடுவேன், உங்களுக்கு 100 ரூபாய் லாபம், எனக்கு 40 ரூபாய் அதிகம் கிடைக்கும்’
‘அப்படியே செய்யுங்கள் மேம், எனக்கு இன்று நல்ல நாள்’
அப்பொழுது அங்கு வந்த வாட்ச்மேன் துடைத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து, ‘மேடம் நீங்கள் என்ன இப்படி, ஏன் இந்த வேலை செய்கிறீர்கள், என்ன இந்த வேஷம்?’
‘என்ன வாட்ச்மேன், என்ன மேடம்?’
‘அம்மா, இவங்க இந்த கம்பெனிக்கு முதலாளி?’
‘அப்படியா, இது என்ன இந்த வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்? இது என்ன இந்த உடையில் இருக்கிறார்கள்’
‘புவனா நீ வேறு எங்கோ வேலை செய்து கொண்டிருக்கிறாயே, ஏன் இந்த நிறுவனத்தில் வேலைக்கு இன்டர்வியூக்கு வந்திருக்கிறாய்?’
‘எனக்கு ஒரு வயதான அம்மா இருக்கிறார்கள், அவர்களுக்கு உடம்பு சரியில்லை, நான் வாங்கும் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் அவர்களுடைய மருத்துவச் செலவிற்குப் போதவில்லை, மேலும் எனக்கு நீங்கள் இந்த கம்பெனியில் கொடுக்கப் போகும் ப்ராஜெக்ட் திறமை வளர்த்துக் கொள்ள ஏதுவானது’
‘புவனா நீ நாளை முதல் வேலைக்கு வரலாம் உன் சம்பளம் 90 ஆயிரம் ரூபாய்’
‘ஆனால் நீங்கள் என்னை இன்டர்வியூ செய்யவே இல்லையே’
‘எனக்கு ஓர் அறையில் சில கேள்விகள் கேட்பது மட்டும் சரியாகப் படவில்லை, அதனால் இங்கே உனது இன்டர்வியூ நடந்து விட்டது, முதலில் 500 ரூபாய் திருப்பித் தந்ததால் உன்னுடைய நாணயத்தைப் பார்த்தேன், உன்னுடைய பைலில் உன்னுடைய திறமைகளைக் கண்டேன், இந்தப் பேனாவை விற்று நீ உன்னுடைய மார்க்கெட்டிங் திறமையையும் நிரூபித்து விட்டாய், இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த நிறுவனம் மூடி இருக்கும் என்று சொன்னபோது தொலைதூரத்திலிருந்து வருகிறேன் என்று சொன்னாயேத் தவிர இந்த நிறுவனத்தை குறை சொல்லவில்லை, என்னை மதித்து பேசியதிலிருந்து நீ சக மனிதர்களை நடத்தும் விதம் அறிந்து கொண்டேன், நீ உடலாலும் உள்ளத்தாலும் அன்பு என்கிற சிவப்பு வர்ணத்தை பூசிக் கொண்டிருக்கிறாய், நீ ஒரு குருதிப்பூ!’

