டிராக் சூட், கான்வாஸ் ஷூ, வெய்யில் கண்ணாடி அணிந்து காலை நடை பயிற்சிக்கு கிளம்பினார் குருநாதன் கனடா வந்தபிறகு நடைப் பயிற்சி என்பதே இல்லாமல் போய் விட்டது.

நவம்பரில் பனி பொழிய தொடங்கி விட்டால் நடையாவது, பயிற்சியாவது? வீட்டிற்குள்ளேயே ஹாலுக்கும், சமையல் அறைக்கும் குட்டிப் போட்ட பூனை போல நடப்பார். மார்ச் பிறந்து விட்டால் நடக்கலாம். அதுவும் மகனும், மருமகளும், “கேர்ஃபுல், உருகியிருக்கும் பனியில் நடக்கும் பொழுதுதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், வழுக்கி விட்டு விடும்” என்று எச்சரிப்பார்கள். ஏப்ரல், மே யில் கவலை இல்லை, காலை வீசிப்போட்டு நடக்கலாம்.

இத்தனை நாட்களாக குச்சி குச்சியாக நின்ற மொட்டை மரங்கள் பளிச்சென்று துளிர்த்து பரவசமூட்டும். வெய்யிலை அனுபவித்தபடி குருநாதனும் நடக்க ஆரம்பித்து விட்டார்.   

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புது வழியை தேர்ந்தெடுப்பார். இன்றைக்கு சென்ற பகுதியில் நிறைய வீடுகள் சற்று பழைய மோஸ்தரில் பெரிதாக இருந்தன. ஒரு வீட்டின் வாசலில் இருந்த மரம் ஒன்றில் ஒரு அறிவிப்பு பலகையில் என்னவோ எழுதியிருந்தது. அருகில் சென்று வாசித்தார்.

அந்த வீட்டிற்கு 70 வயதாகிறதாம்! பிரிட்டிஷ்காரர் ஒருவரிடமிருந்து வாங்கினார்களாம். அன்றிலிருந்து அதை அப்படியே பராமரித்து, அந்த வீட்டை ஒட்டி இருக்கும் மரத்தைகூட வெட்டாமல், பழமை மாறாமல் பராமரிக்கின்றார்களாம்.

அட சட்! 70 வருட வீட்டிற்கே இவ்வளவு அலட்டலா? கிராமத்தில் இருக்கும் நம் தாத்தா வீட்டிற்கு எத்தனை வயதிருக்கும்? ஈசியாக 200 வருடங்கள் இருக்காது? கொள்ளு தாத்தா காலத்தில் சமையலறையை மாத்திரம் பெரிது படுத்தினார் என்பார்கள். அவர் தன்னுடைய செல்ஃபோனில் அவர் குடும்ப வாட்ஸாப் குழுவைத் திறந்தார். அதன் டி.பி.யாக இருப்பது அந்த தாத்தா வீடுதான்.  

நடை, ரேழி, முற்றம், தாழ்வாரம், கூடம், சமையல் கட்டு, அங்கு கிணறு. அந்த முற்றத்தில் சால் அடிக்கலாம். சால் அடிப்பது என்றால் என்னவென்று இந்தக்கால ஜென் சீ தலைமுறைக்கு தெரியுமா? அந்த முற்றத்தில் நாங்கள் கோகோ விளையாடியிருக்கிறோம். கோடை விடுமுறையில் விளக்கெண்ணெய் அங்குதான் கொடுப்பார்கள். இரவில் பாட்டி எங்களை வட்டமாக உட்கார வைத்து சாதம் பிசைந்து கையில் போடுவாள். கூடத்தில் இரண்டு தேக்கு மரத்தூண்களுக்கு இடையில் தொங்கும் ஊஞ்சல். ஊஞ்சலின் இரண்டு புறங்களிலும் சுவற்றில் இரண்டு அலமாரி்கள் உண்டு. ஒன்றில் மருந்துகள், தலைவலி தைலம் போன்றவை வைக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ அதைத் திறந்தாலே குப்பென்று மருந்து நெடி அடிக்கும்.

இரண்டாம் கட்டில் மாட்டுக் கொட்டில்கள்,  மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காக இரண்டு பெரிய தொட்டிகள், அங்கும் ஒரு முற்றம்,  ஒரு கிணறு, பின்னர் கொல்லைப் புறம் என்று தாராள வீடு. ஊரில் பெரிய வீடு என்பார்கள். குருநாதனுக்கு நினைவுகள் அலை அலையாக புரண்டு வந்தன.

இரண்டு பெரியப்பாக்கள், ஒரு சித்தப்பா, மூன்று அத்தைகள் என்று பெரிய குடும்பம் அவருடையது. எல்லோரும் கோடை விடுமுறைக்கும், பொங்கலுக்கும் தாத்தா வீட்டிற்குத்தான் செல்வார்கள். எத்தனை சந்தோஷமான நினைவுகளை அந்த வீடு சுமந்திருக்கிறது!

தாத்தாவிற்குப் பிறகு அங்கு செல்வது குறைந்து விட்டது. ஒரு முறை பெரியப்பா மகன் தியாகு,” நம்ம தாத்தா வீட்டை புதுப்பிக்கலாமா?”என்றான்.

“புதுப்பிச்சிட்டு?’

வருடம் ஒரு முறை அங்கு எல்லோரும் மீட் பண்ணலாம்”

“புதுப்பிக்கிறேன் பேர்வழினு, அதை மாற்றி விடக் கூடாது. அப்படியே இருக்கணும், கிச்சனில் இருக்கும் ஆட்டுக்கல், அம்மிய கூட மாற்றக் கூடாது” என்றாள்  தங்கை மீனா.

எல்லோரும் சிரித்தார்களேயொழிய யாரும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தூரத்து உறவினர் ஒருவரை வீட்டில் இருந்து கொள்ள சொன்னார்கள்.  வாடகையே கொடுக்க முடியாத அவரால் வீட்டை மெயின்டைன் பண்ண முடியுமா? வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து கொண்டே வருகிறது. யாருக்கும் அதைப் பற்றி அக்கறை இல்லை. அந்தப் பக்கம் செல்ல நேர்ந்தால் எட்டி பார்த்து விட்டு வருவதோடு சரி.

வீட்டு கூடத்தில் மாட்டப்பட்டிருந்த பெரிய பெரிய படங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை.  எத்தனை அலட்சியமாக இருந்திருக்கிறோம்? என்று வெட்கமாக கூட இருந்தது.  அதை அப்படி விடக்கூடாது. ஊருக்குச் சென்றதும் தியாகுவோடு பேசி,வீட்டை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் செல்ஃபோன் ஒலித்தது. தியாகுதான். என்ன ஆச்சர்யம்! இதுதான் டெலிபதியா?

“ஹலோ..” என்று கூவிய இவரை பேச விடாமல் எதிர் முனையில் தியாகு, “என்ன குரு, எப்போ இந்தியா ரிடர்ன்?” என்றார்.

“ரெண்டு மாசமாகும்”

“ப்ரீபோன் பண்ண முடிஞ்சு சீக்கிரம் வர முடியுமா?”

“என்ன விஷயம்?”

“நம்ம தாத்தா வீட்டிற்கு ஒரு நல்ல பார்ட்டி கிடைச்சிருக்கு, பேசி முடிச்சுட்டேன். நல்லவேளை தாத்தா அந்த வீட்டை ஆண் வாரிசுகளுக்கு மட்டும்னு எழுதிட்டார். இப்போ ஆண் வாரிசுன்னா நீ்யும் நானும்தான். பார்ட்டி அடுத்த மாசம் ரிஜிஷ்ட்ரேஷன் வெச்சுக்கலாம்னு சொல்றாங்க. நீ வந்தா சௌகரியம், இல்லன்னா பவர் ஆஃப் அட்டார்னி கொடுக்கணும், அதுல ஏகப்பட்ட ஃபார்மாலடி ”

தியாகு பேசிக் கொண்டே போக தன் டி.பி.யை பார்த்து பெருமூச்சு விட்டார் குருநாதன்.