ரேஷ்மா ரஹீம் தம் ஐந்து வயதான மகள் அயீஷாவைப் பற்றி ஆலோசிக்க வந்தாள். முன்தினம் பள்ளிக் கூட நுழைவு நேர்காணலில், அயீஷா கேட்டது ஏதோ கிடைக்கவில்லை. எப்போதும் போலவே அன்றும் அயீஷா அலறலில் ஆரம்பித்து உச்சஸ்தாயீயில் சஞ்சரித்ததால் கேட்டதைக் கொடுத்தோம், உடனே சமாதானமானாள் என்றார்கள் பெற்றோர்.
பள்ளி நிர்வாகிகள் இதைப் பற்றி மேலும் விசாரித்ததில் அயீஷாவைத் தாம் இவ்வாறே சமாதானம் செய்வதாகக் கூறினார்கள். குழந்தையின் இந்தப் பிடிவாத ஆர்ப்பாட்டங்கள் (tantrums) நடத்தையைப் பள்ளி திறப்பதற்கு முன்பாகச் சரிவரச் சுதாரிப்பதின் அவசியத்தை விளக்கினார்கள் நிர்வாகிகள். ஆகையால் என்னை அணுகியதாகப் பெற்றோர் கூறினார்கள்.
குழந்தைப் பராமரிப்புச் சூழலை விவரிக்கையில் மேலும் தெளிவு பெற்றேன்.
பெற்றோரின் குறிக்கோள், அயீஷா எந்தக் குறையுமே தெரியாமல் வளரவேண்டும் என்று. இப்படி இருக்கையில் ரேஷ்மா-ரஹீம் குழந்தை எதை விருப்பப் பட்டாலும் தாமதமின்றி வழங்கினார்கள். இதுதான் பாசம், நல்ல வளர்ப்பு என எண்ணினார்கள்.
அயீஷா, பெற்ற பொருட்களை ஓரிரு முறை விளையாடிவிட்டுத் தூக்கி எறிவதைப் புத்திசாலித்தனம் என விளக்கினார்கள். ரேஷ்மா-ரஹீம் இது வளரும் குழந்தையின் மனதில் பொருட்கள் மீதான மோகத்தை உருவாக்குவதை உணரவில்லை. அத்துடன், அலட்சியச் சுபாவத்தையும் தூண்டிவிடுகிறது என்றதும் தெரியவில்லை! இதுபோலவே வளர்க்கப் படுபவர்கள் உறவுகளுக்கு என்றுமே முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை உணராமல் இருப்பார்கள்.
ரஹீம்-ரேஷ்மா தங்களது ஜவுளிக் கடை வியாபாரத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்கள். குழந்தை அயீஷா பிறந்ததிலிருந்து, ஒரு பக்கம் குழந்தை மறு பக்கம் வியாபாரம் எனப் பார்த்துக்கொண்டதில் கவனம் சிதறியது. இதனால் வியாபாரம் மந்தமாகியதும் அதைத் தவிர்க்கவே அயீஷாவையும் தங்களுடன் கடைக்கு அழைத்து வந்தார்கள்.
வியாபார நேரத்தில் இடையூறாக அயீஷா இருக்கக்கூடாது என்பதற்காகக் குழந்தை கேட்பதைக் கொடுப்பார்கள். கொடுத்தால் கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பாள். வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பலரும் அயீஷா கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். தவறி தாமதமானால் அவள் அலற ஆரம்பிப்பாள். மீண்டும் பொருளைக் கேட்பாள். தருவது தாமதித்தால் விரித்த துணிகளைக் கசக்கிப் பிழிந்து போடுவாள். கடையில் உள்ளவர்களின் முன்னே குழந்தை செய்வதால் வெட்கம் ஏற்பட, “குழந்தைய அழ விடுகிறீர்களே? தந்து விடுங்கள்” ஆலோசனைக்கு இணங்கி குழந்தை கேட்பதைத் தந்து விட, அயீஷாவின் அலறல் குறையும். இதுதான் சரி வழி என்ற உறுதி அதிகரித்தது.
வீட்டிற்குத் திரும்பியதும் அசதி மேலோங்கி நிற்க, அங்கேயும் அயீஷா கேட்டதைக் கொடுத்தார்கள். இதுவே சரியான வழி என்று அயீஷாவும் வேண்டியதற்கு ஆர்ப்பாட்டம் செய்வதைக் கடைப்பிடித்தாள்.
எளிதாகத் தவிர்க்கக்கூடிய நிலை! குழந்தைகளிடம் எடுத்துக்கூறி, வேறுவழிகளை வகுத்தால் புரிந்துகொண்டு அவ்வாறே செய்வார்கள்.
அயீஷா பொருட்களைத் தூக்கி எறிவதால் நஷ்டம் ஏற்படுத்துகிறாள் என்ற ஆதங்கம் ஆரம்பமாக, அயீஷாவை அடித்தார்கள். அயீஷாவுக்கோ, எதற்காக அடிக்கிறார்கள்? ஏன் கேட்டதைக் கொடுக்க மறுக்கிறார்கள்? இரண்டுமே புரியவில்லை. அவளுடைய Attention-seeking behavior (கவனம்-நாடும் நடத்தை) அடம்பிடிப்பு தொடர்ந்தது, நீடித்தது. பெற்றோர்களே உருவாக்கிய நிலை!
பள்ளிக்கூடம் சேர்க்கும் சூழலில் பாதிப்பை உணர்ந்து, விழித்தெழுந்தார்கள்!
நிலைமையின் மூலகாரணங்களை முழுமையாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இருவரும் வளர்ப்பு முறையை மாற்றி அமைப்பார்கள் என்று செஷன்களை அமைத்தேன்.
அவற்றில், பல முன்நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்து, அதன் அணுகுமுறையை, காரணிகளை, சூழலைப் பல செஷன்களில் வரிசைப்படுத்திப் பகிர்ந்த பின்னரே குழந்தையின் வளர்ப்புக் கோளாரில் தங்களது பங்களிப்பைப் புரிந்துகொண்டார்கள். குறிப்பாக, பெற்றோர் தங்களது அரவணைப்பில் கண்டிப்புடன் கலந்து அன்பு, பாசத்தைக் காட்ட முடியும் என்றதை உணர்ந்தார்கள். அடுத்த பல நாட்களுக்கு இதை நடைமுறையில் செய்ய வைத்து, பொருட்கள் தராமல் குழந்தையின் கவனத்தையும் திசை மாற்றி, அதே சமயம் அமைதியும் பெறமுடியும் என்பதை முதல் முறையாக அனுபவித்தார்கள். இதைச் செய்ய முடிந்தது!
இதுவரை, அயீஷா கூச்சலிட்டதும் அவளை அடிப்பது அவளுடைய எதிர்மறை நடத்தைக்குக் கவனம் செலுத்துவதாகியது. வேறு எப்போதும் கவனம் தராததாலும், கவனம் பெற வேறு அணுகுமுறை அறியாததாலும், இப்படிக் கத்தல் கூச்சல் போடும் குழந்தைகள் அதே எதிர்மறை வழிமுறையைப் பின்பற்றுவார்கள். கத்தல், கூச்சல் போட்டால் அடி, உதை மூலமாவது கவனம் கிடைப்பதால், மீண்டும் மீண்டும் இப்படியே செய்வார்கள்.
இதை மாற்றியமைக்க செஷன்களில் கலந்து உரையாடிய பின்பு ஆக்கப்பூர்வமான வளர்ப்புக்கு ஏற்றவாறு புது வழிமுறைகளை வகுத்தோம். பல செஷன்களில் குழந்தையுடன் கதை படித்து, ஓடியாடி விளையாட, அப்போதெல்லாம் அயீஷா கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையை, முறையாகப் பின்பற்றுதலின் அவசியத்தை நடைமுறையில் செய்து காட்டினார்கள். நாளடைவில், இது அயீஷாவின் எதிர்மறை நடத்தையை மாற்ற உதவியதைப் பார்த்தார்கள்.
இந்த நிலை அடைந்த பின்பு ரேஷ்மா-ரஹீம் இருவரும் குழந்தை கேட்ட பொருளைக் கொடுத்து அவளைப் போகிற போக்கில் விட்டதின் விளைவை உணர்ந்தார்கள். இவர்களின் பராமரிப்பின் முறையால் குழந்தை எதிர்மறை வழியைப் பின்பற்றியது புரிந்தது. கூடவே, அதனால் உறவில் நேர்ந்த விரிசலும்.
இன்னொரு பக்கத்தையும் பார்த்தார்கள் தம்பதியர். மனதிற்குள் தோல்வி உணர்வைச் சுமந்தார்கள். அயீஷாவினால் நேர்கிறது என்ற எண்ணம் மேலோங்கி நின்றிருந்ததால் குழந்தை மேலான பாசம் மங்கியது புரிந்தது. குற்ற உணர்வை உருவாக்கியது. இதைச் சமாளிக்கவே, கேட்டதைச் சடக்கென்று கொடுக்கும் யுக்தியை உபயோகித்தார்கள்.
உறவை மேம்படுத்தத் தெரியாமல், குழப்பத்தைப் பகிர்ந்துகொள்ளாமல், நேர்ந்த நிலையைப் புரிந்து கொண்டார்கள். இதை மையமாக வைத்துப் பல செஷன்கள் சென்றது. தெளிவு பிறந்ததும் ரஹீம்-ரேஷ்மா ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்துக் கொண்டார்கள். அன்பு மேம்பட ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை அதிகமானது!
செஷனில் ரோல்-பிளே மூலம் குழந்தை வளர்ப்பு, பொருட்களைத் தருவது என்ற பல தரப்பான விஷயங்களைப் பகிர்ந்து, நல்ல வழிமுறைகளைத் தீவிரமாகக் கண்டறிந்தார்கள்.
ரேஷ்மா-ரஹீம் சமமான புரிதல் நிலையை அடைந்த பிறகே அயீஷாவின் வயதிற்கு ஏற்ற வளர்ப்புமுறைகளை எடுத்துக்கொண்டேன். குழந்தையின் வயதிற்கு ஏற்றவாறு நடத்தையைப் பற்றிப் பல தகவல்களைப் படிக்க மற்றும் பல சுருக்கப் படங்களைப் பார்க்கச் செய்தேன்.
இவற்றிலிருந்து ரேஷ்மா-ரஹீம் தங்களது வழிகளில் பல மாற்றங்களை அமைத்தார்கள். இருவருக்கும் வெற்றி என் தோன்றியது, அயீஷா அலறிக் கூச்சலிட்டால், முகத்தை ஐந்து வினாடிகளுக்குத் திருப்பிக் கொள்வதும், அயீஷாவிடமிருந்து மூன்று அடி தள்ளி நிற்பதும் பயன்படுத்தப்பட்டது. இருவருமே சமநிலையில் அயீஷாவைப் பார்த்தவாறே இருந்ததும், தானாக அடம்பிடிப்பு குறைந்தது. எப்போதேனும் அயீஷா அடம் பிடிக்காமல் இருந்தபோதெல்லாம் அந்த நடத்தையைப் பாராட்டுவதும் உதவியதைக் கவனித்தார்கள்.
இவற்றுடன் வெவ்வேறு விதத்தில் ரஹீம் ரேஷ்மா தனியாகவும் ஒன்றாகவும் அயீஷாவுடன் விளையாடுவது, ஆடிப்பாடுவது, அசைவுடன் பாடல் கதைகளைச் சொல்வது, வரைபடம் நிரப்புவது இவை ஆரம்பமாயின. இவற்றைச் செய்யத் தொடங்க, முதல் மூன்று வாரங்களுக்கு அயீஷா ஏதேனும் வேண்டுமென்றால் அலறினாள். ஆனால் ரஹீம் ரேஷ்மா இருவருமே இதற்குப் படியாமல் இருந்தார்கள். போகப் போகக் குறைந்தது.
இப்போதெல்லாம் அயீஷாவை கடைக்கு அழைத்துச் சென்றாலும் இவற்றிலிருந்தே ஏதோவொன்றைப் பெற்றோர் உபயோகிக்க, அயீஷா அமைதியாக அதில் மூழ்கியிருந்தாள்!
அயீஷாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதின் அவசியம் சில செஷன்களுக்குப் பிறகு பெற்றோருக்குப் புரிந்தது. குழந்தையும் தம்மைப் போலவே செய்யச் செய்ய, அவர்கள் சரியான செயல்பாட்டைப் பின்பற்றுவதின் அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள். அதேபோல், உபயோகித்த பொருட்களை அதன் இடத்தில் மீண்டும் வைப்பதைப் பெற்றோர் கடைப்பிடிக்க, அயீஷாவும் பின்பற்றினாள்! செய்வதை அயீஷா நகல் செய்வதால், தாம் சொல்லிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டார்கள்.
பள்ளி நிர்வாகிகள் அயீஷாவிடம் மாற்றத்தைப் பார்த்து, ரேஷ்மா-ரஹீம் எடுத்துக் கொண்ட முயற்சியைப் புகழ்ந்தார்கள்! அயீஷா பள்ளியில் சேர்ந்தாள்!
முதன்மைப்படுத்தாதது
கவனத்தைப் பிரித்தது,
கவனமற்ற பராமரிப்பானது!
குழந்தையின் அடம்பிடிப்பாக ஆனது!
குழந்தையுடன் அன்பும்
முழுமையான கவனமுமே
உறவுகளின் பிணைப்பு!
******************************

Thank you Sir
Malathi Swaminathan
*Strength does not come *
*from what *
You can do!
*It comes *
from overcoming
The things you once thought
You could not!
Girly Thoughts
*What Might Have Been *
*”I held a moment in my hand,Brilliant as a star,Fragile as a flower,A
shiny silver out of one hour.I dropped it carelessly.Oh God! I knew notI
held opportunity”.Hazel Lee *
LikeLike